தட் நூடுல்ஸ் ஃபார்முலா…

வனாந்தரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் தாகத்தில் தவித்தபோது கர்த்தர் மாராவின் கசப்பான தண்ணீரை மதுரமாக மாற்றினார். அந்த மாராவைப் போல இன்று உன் வாழ்க்கையும் கசப்பாகிப் போனதே என கலங்குகிறாயா? மனம் கலங்காதிரு மகனே, மகளே.. அன்று மாராவின் தண்ணீரை மதுரமாக்கிய அதே தேவன்…
இஸ்ரவேல் ஜனங்கள் கானானுக்குச் செல்லும் வழியில் தடையாக நின்ற எரிகோ மதிலை உடைத்து தேவன் வழியை உண்டு பண்ணினார். இன்று உன் வாழ்க்கையிலும் முன்னேற முடியாமல் தடைகள் காணப்படுகிறதோ? அன்று எரிகோ மதிலை நிர்மூலமாக்கிய அதே தேவன்…
மரித்து நான்கு நாளான பிறகு லாசருவை கல்லறையிலிருந்து கர்த்தர் எழுப்பினார். இன்று உன் வாழ்க்கையிலும் இனி நம்பிக்கையே இல்லை என்ற சூழல் காணப்படுகிறதா? அன்று மரித்துப்போன லாசருவைக் கல்லறையிலிருந்து எழுப்பிய அதே தேவன்…
“வேதாகமக் காலங்களில் ஒரு கடினமான சூழலில் அற்புதம் செய்த தேவனால் இன்றும் அதே போல அற்புதம் செய்ய முடியும்” இந்த ஒரே சிம்பிளான ஃபார்முலாவைப் பயன்படுத்தி வெவ்வேறு flavour-களில் சமைக்கப்பட்ட பிரசங்கங்கள்தான் நீங்கள் மேலே கண்டவை. நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால் இதே ஃபார்முலாவைக் கொண்ட பல்லாயிரம் பிரசங்கங்களைக் கேட்டிருப்பீர்கள், கட்டுரைகளைப் படித்திருப்பீர்கள்,ஆடியோ, யூடியூம் செய்திகள், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வரை பார்த்திருப்பீர்கள்.
இந்த ஃபார்முலாவிலோ அல்லது செய்தியிலோ தவறு இல்லை. ஏனெனில் நம்முடைய தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்(எபி 13:8) என்பது உண்மைதான். புதிதாக கிறிஸ்துவைக் கேட்பவர்களுக்கு இது புரிந்துகொள்ள எளிதாகவும், மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. நான் உட்பட பிரசங்கிக்கும் எல்லோருமே ஏதோ ஒரு சூழலில், எப்பொழுதோ ஒரு முறை, தேவைப்படும்போது, தேவநடத்துதலின்படி இந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தியிருப்போம், அதில் தவறும் இல்லை.
ஆனால் சமைக்கத் தெரியாதவர்களின் கையில் கிடைத்த இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் போல இந்த ஃபார்முலா பல திடீர் ஊழியர்களின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாவதுதான் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. இந்த திடீர் ஊழியர்கள் நூறு செய்திகள் கொடுக்கிறார்களென்றால் அந்த நூறு செய்திகளுமே இதே ஃபார்முலாவில்தான் சமைக்கப்பட்டிருக்கும். காரணம் என்னவென்றால் கர்த்தரிடத்தில் காத்திருந்து ஒரு புதிய செய்தியைப் பெற்றுத்தர அவர்களுக்குத் தெரியவில்லை அல்லது அதைச் செய்ய நேரமில்லை என்பதுதான் உண்மை. இது கர்த்தருடைய வேலையை செய்த லாபக் கணக்கில் சேராது, கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்த(எரே 48:10) சாபக் கணக்கில் சேரும்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். முதல் நூற்றாண்டு யூதர்களிடம் பழைய ஏற்பாடு கையில் இருந்தது. ஆனால் யோவான் ஸ்நானகனோ, கர்த்தராகிய இயேசுவோ, பவுலோ, பேதுருவோ, யோவானோ இந்த இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் ஃபார்முலாவைப் பயன்படுத்தவே இல்லை. புதிய ஏற்பாட்டில் எங்காவது பேதுருவோ, பவுலோ “அன்று இஸ்ரவேலரை காடையைக் கொண்டு போஷித்த அதே தேவன்…” என்று பிரசங்கித்துப் பார்த்திருக்கிறீர்களா? ஒருவேளை அன்று அவர்கள் அப்படிச் செய்திருந்தால் இன்று நம் கையில் புதிய ஏற்பாடே இருந்திருக்காது. அவர்கள் பேசிய, எழுதிய ஒவ்வொன்றும் புத்தம் புதியவைகளாக இருந்தன, செய்தவைகளெல்லாம் தரமான சம்பவங்களாக இருந்தன.
வேதாகமத்துக்கு மட்டுமல்ல, எல்லா மத நூல்களுக்கும் இந்த ஃபார்முலா பொருந்தும். அன்று அஸ்தினாபுர அரண்மனையில் திரௌபதியின் துயிலுரியப்படும்போது, அவளது துகிலை தொடர்ந்து வளரச் செய்து, திரௌபதியின் மானம் காத்தார் கிருஷ்ண பரமாத்மா… இன்று உன்னை அவமானப்படுத்தும்படி உன்னைச் சுற்றிலும் அநேகர் எழும்பியிருக்கிறார்களா? அன்று திரௌபதியின் மானம் காத்த அதே கிருஷ்ண பரமாத்மா…
இஸ்மாயீலைக் கூட்டிக்கொண்டு ஹஜாரா(அலை) அவர்கள் பாரஹான் பெருவெளியில் அலைந்தபோது அவர்கள் மீது இரக்கமுற்ற இறைவன் அவர்களுக்கு ஸம்ஸம் என்ற நீரூற்றைக் கொடுத்து அவர்கள் தாகத்தை தீர்த்தான். இன்று நீங்களும் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறீர்களா? ஹஜரா அவர்களுக்கு உதவிய அதே இறைவன்… இப்படி எல்லா மதத்தவரும் தங்கள் தங்கள் புனித நூல்களிலுள்ள சம்பவங்களை எடுத்து இதே ஃபார்முலாவைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான பிரசங்கங்களையும், கட்டுரைகளையும் உருவாக்க முடியும்.
ஆனால் இதற்குத்தான் தேவன் நம்மை அபிஷேகித்தாரா? இந்த அரைத்த மாவையே அரைக்கத்தான் ஆவிக்குரிய வரங்களை நமக்குத் தந்தாரா? இதற்குத்தான் நம் முன்னோர்கள் உயிரைக் கொடுத்து, இரத்தம் சிந்தி வேதாகமத்தை நமக்கு நம்முடைய மொழிகளில் மொழிபெயர்த்துத் தந்தார்களா? அவர் நமக்குத் தந்த ஊழியம் எனும் மாபெரும் பொறுப்பை நிறைவேற்றும் அழகா இது? ஒரு தேவபிள்ளை எந்த சூழலிலும் உயிர்வாழும், ஆனால் வசனமாகிய ஞானப்பால் இல்லாவிட்டால் தொய்ந்து, தளர்ந்து போய்விடும் என்பது உங்களுக்குத் தெரியாதா?
குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள், அவர்களுக்குக் கொடுப்பாரில்லை (புலம்பல் 4:4)
ஒரு தேவமனிதன் பிரசங்கிக்கிறவனாக அல்ல, பிரசவிக்கிறவனாக இருக்க வேண்டும். அவன் பிரசங்கிக்கும் ஒவ்வொரு பிரசங்கமும், அவன் எழுதும் ஒவ்வொரு கட்டுரைகளும் ஒரு பிள்ளைப்பேறாக இருக்க வேண்டும். அந்தப் பிரசங்கம் பரிசுத்த ஆவியினால் அவனுக்குள் சூல் கொண்டு, அவன் எலும்புகளுக்குள் அடைபட்ட அக்கினியாகப் பற்றி வளர்ந்து, எஜமானர் கட்டளையிடும்வரை காத்திருந்து, அந்தப் பிரசங்கப் பிள்ளையை அவன் பிரசவிக்க வேண்டும். அந்தப் பிரசங்கம்தான் உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பிக்கும், குருட்டுக் கண்களை திறக்கும், சில நேரங்களில் உயிர்மீட்சியையும், வேறு சில நேரங்களில் கலகங்களையும் பிறப்பிக்கும்.
ஆசாரியர்கள் எப்போதும் இஸ்ரவேலிலே இருந்தார்கள். வேதபாரகர்களும் போதித்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் மாபெரும் தீர்க்கதரிசிகள் எப்பொழுதோ ஒருமுறைதான் தேவனால் எழுப்பப்பட்டர்கள். அவர்கள் தங்கள் பிரசங்கம் எனும் சம்மட்டியைக் கொண்டு மலைகளைப் பிளந்துவிடுவார்கள். அவர்களது பிரசங்கங்கள் அரசர்களின் தூக்கத்தைக் கெடுத்துவிடும், மதவாதிகளை பொறாமையில் அலற வைக்கும், தேசத்தையே இரட்டுடுத்தி சாம்பலில் உட்கார வைத்துவிடும், மங்கி எரியும் திரிகளை பிரகாசமாக்கிவிடும், மொத்தத்தில் தேசத்தின் போக்கையே மாற்றிவிடும். நம்முடைய பிரசங்கங்களும், எழுத்துக்களும் அப்படி இருக்க வேண்டாமா?
தேவன் உங்களைக் கொண்டு பேசும் நேரத்தில் நீங்களும் பேசுங்கள், மற்ற நேரத்தில் சும்மா இருங்கள். கர்த்தராகிய இயேசுவின் பிரசங்கத்தைக் கேட்க ஜனங்கள் காத்திருந்தார்கள் என்று வாசிக்கிறோம். உங்களிடமிருந்து வருவது தேவவார்த்தையானால் அது வரும்போதுதான் வரும். அதுவரை ஜனங்கள் காத்திருப்பார்கள், காத்திருக்கட்டும்! அது அவர்கள் உங்களுக்குச் செய்யும் மரியாதையுமல்ல, நீங்கள் அவர்களுக்குச் செய்யும் அவமரியாதையுமல்ல. நீங்களும் அவர்களும் சேர்ந்து கர்த்தருடைய வார்த்தைக்குச் செய்யும் மரியாதை!
“நீங்கள் சொல்வது சரிதான் பிரதர், ஆனால் குறைந்தது வாரத்துக்கு இரண்டு மூன்று பிரசஙகங்களைச் செய்ய வேண்டிய சபை மேய்ப்பர்களாகிய நாங்கள் என்ன செய்வது?” என்று பலர் கேட்பது நியாயம்தான். அதுமட்டுமல்ல, ஒரு மேய்ப்பனாக பிரசங்கிப்பது மட்டும் அவர்கள் வேலையல்ல, அவர்கள் பல குடும்பங்களின் பாரத்தை தங்கள் தோளில் சுமக்க வேண்டும், அதோடு சேர்த்து வாரத்துக்கு குறைந்தது இரண்டு பிரசங்கங்களாவது செய்ய வேண்டும். இது சாதாரண பணியல்ல, அவர்கள் சுமக்கும் பல சுமைகளை நம்மால் கைகளால்கூட தொடமுடியாது, மறுப்பதற்கில்லை…
ஆனால் அதற்கும் ஆதி அப்போஸ்தலர்களின் உதாரணமுள்ளது. அப்போஸ்தலர் 6:2-4 வசனங்களை வாசித்துப் பாருங்கள். அப்பொழுது பன்னிருவரும் சீஷர்கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவ வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல. ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
ஒரு தாயார் வீட்டில் அத்தனை வேலைகளையும் தானே பார்க்க வேண்டும், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், வீட்டைப் பெருக்குதல் இன்னும் பல வேலைகளையும் செய்துவிட்டு மொத்த வேலைகளையும் தானே செய்ய வேண்டும் என்பதால் என் பிள்ளைகளுக்கு மூன்று நேரமும் வெறும் ஓட்ஸ் கஞ்சி மாத்திரமே கொடுப்பேன் என்றால் அந்தப் பிள்ளைகளின் உடல் நிலை என்னவாகும்? கணவரிடமும், பிள்ளைகளிடமும் வேலைகளைப் பிரித்துக் கொடுத்துவிட்டு சரியான ஊட்டச்சத்துள்ள உணவை தன் குடும்பத்தினருக்கு தயார் செய்து கொடுக்கவேண்டியது அந்தத் தாயாரின் கடைமை அல்லவா? அதுதானே முக்கியம்? அதைத்தான் அன்று ஆதி அப்போஸ்தலர்களும் செய்தார்கள்.
ஒரு வாரத்துக்கு மூன்று கட்டுரைகள் வெளியிட வேண்டும், மூன்று வீடியோக்கள் போட வேண்டும், இரண்டு ரீல்ஸ் போடவேண்டும் இல்லாவிட்டால் வியூவர்ஸ் எண்ணிக்கை குறைந்துவிடும் இதுபோன்ற நிர்பந்தங்களுக்குள் உங்களை நீங்களே ஆட்படுத்திகொண்டு அவசரகதியில் பிரசங்கங்களைத் தயார் செய்வீர்களானால் உங்களையும் அறியாமல் இஸ்டண்ட் நூடுல்ஸ் ஃபார்முலாவை கையில் எடுத்துவிடுவீர்கள். ஜீவ அப்பத்தைப் பகிர்ந்து கொடுப்பதே நமது பணி, உப்புமா கிண்டி கொடுப்பதல்ல… அந்த உப்புமாவைத் தின்று ஒரு அடிகூட சபையால் முன்னுக்கு நகர முடியாது.