ஜீவன் – சேஷ்டபுத்திரன்

ஜீவன் – சேஷ்டபுத்திரன்

ஒரு அரசர் அவசரமாக வெளிநாடு செல்லவேண்டியிருந்ததால் தனது அமைச்சர்களிடம் தனது இரு மகன்களில் மூத்தவனுக்கு பட்டாபிஷேகம் நடத்தி அவன் கையில் நாட்டை ஒப்படைக்கும்படி சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார். பட்டத்துக்குரிய மூத்தவன் பெயர் ஜீவன். அமைச்சர்களுக்கு அவன் ஒரு புரியாத புதிர். எனவே அவனை அரியாசனத்தில் அமரவைத்துவிட்டு என்ன செய்வதென்று அவர்களுக்குப் புரியவில்லை. எனவே அவர்களது பார்வை இளைய மகன் “தேவநீதி”-யின் பக்கம் சென்றது.

தேவநீதியை அவர்கள் புரிந்து கொண்டதலோ அல்லது அவனை நேசித்ததாலோ அல்ல, அவனை அப்படியே உரித்து வைத்ததுபோல உருவமுடைய “சுயநீதி” என்பவன் அவர்களிடம் இருந்ததால், தேவநீதியை சிறையில் அடைத்துவிட்டு, அல்லது அவனை துரத்திவிட்டு சுயநீதிக்கு “தேவநீதி” என்ற பெயரில் பட்டாபிஷேகம் நடத்தி, அவனை சிங்காசனத்தில் அமர்த்தி, தாங்கள் நினைத்ததை சாதித்துக்கொள்ள விரும்பினார்கள்.

இதுவேதான் இன்றைய கிறிஸ்தவத்திலும் நடக்கிறது. வேதம் மீட்பைப் பற்றிப் பேசும்பொழுதெல்லாம் பிரதானமாக ஜீவனைப் பற்றித்தான் பேசுகிறது.

ஜீவனுக்குப் போகிற வாசல் (மத் 7:14)
ஜீவதண்ணீர் (யோவா 4:10)
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன் மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்(யோவா 5:24)
ஜீவஅப்பம் நானே (யோவா 6:48)
என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் (யோவா 8:12)
நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் (யோவா 10:10)
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் (யோவா 11:25)
அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறது(யோவா 12:50)
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் (யோவா 14:6)
ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர் (அப் 2:28)
ஜீவாதிபதி (அப் 3:15)
ஜீவவார்த்தை(அப் 5:20)
ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதல்(அப் 11:8)
ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம் (ரோமர் 8:6)
கிறிஸ்து நமக்கு ஜீவன் (கொலோ 3:4)
ஜீவனைப்பற்றிய வாக்குத்தத்தத்தம் (2 தீமோ 1:1)
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜீவகிரீடம் (யாக் 1:12)
ஜீவனுள்ள கற்கள் (1 பேதுரு 2:5)
குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன் (1 யோவா 5:12)
ஜீவவிருட்சம் (வெளி 22:2)

இப்படி மீட்பானது பிரதானமாக மரணம் – ஜீவனுடன் சம்பந்தப்பட்டிருக்க, இன்றைய கிறிஸ்தவ மதமானது மீட்புடன் பாவம் – பரிசுத்தத்தையே பிரதானமாக தொடர்புபடுத்தி பிரசங்கிப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. இதற்குக் காரணம் இவர்களுக்கு பரிசுத்தத்தின் மீது உள்ள வாஞ்சை அல்ல. “ஜீவன்” என்பது மதத்துக்கு புரியாத புதிராக இருக்கிறது என்பதுதான் உண்மை.

மாறாக பரிசுத்தத்தை புரிந்துகொண்டார்களா என்றால் அதுவும் இல்லை. ஆனால் பரிசுத்தத்தை மாம்சரீதியாக “கிரியை”-யுடன் தொடர்புபடுத்தி பிரசங்கிப்பது எளிது. இதன் மூலம் ஜனங்களை குற்றப்படுத்தலாம், பயமுறுத்தலாம், அடிமைப்படுத்தலாம், அக்கால ரோமச்சபை பாவமன்னிப்பு சீட்டு விற்றதைப்போல பரிசுத்தத்தை வைத்து வியாபாரமும் செய்யலாம்.

பரிசுத்தமும் தேவநீதியும் மகா முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வேதம் மீட்பின் முதற்பலனாக எல்லாவற்றுக்கும் மேலாக ஜீவனையே தூக்கிப்பிடிக்கிறது. மரணத்தை பரிகரிக்கப்பட வேண்டிய கடைசி சத்துரு என்று அடையாளம் காட்டுகிறது. எனவே சத்தியத்தை அறிந்தவர்களின் கடமை முன் எப்போதையும்விட அதிகமாக ஜீவனைக் குறித்து தியானிப்பதும், பிரசங்கிப்பதும் ஆகும். ஏனெனில் கிறிஸ்தவத்தில் அந்த பிரசங்கத்துக்குத்தான் பஞ்சம் இருக்கிறது. ஜீவனைக் குறித்து அதிகம் பேசுங்கள், அதுதான் ஜீவாதிபதியின் மனதைக் குளிர்விக்கும்.

Leave a Comment