விழிப்புணர்வு

கூட்டுக் குற்றவாளி

By Vijaykumar Jayaraj

March 17, 2019

நிர்பயா, ஆசிஃபா, மற்றும் இப்பொழுது பொள்ளாச்சி வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் ஏதோ பாதாளத்துக்குப் போய் சாத்தானிடம் விசேஷ பயிற்சி பெற்று வந்து குற்றம் செய்தவர்களல்ல, நாம் வாழும் சமூகத்தால் உருவாக்கப்பட்டவர்கள்தான். நாம் பார்க்கும் சினிமா, டிவி சேனல்களையும், நாம் படிக்கும் பத்திரிகைகளையும், வார இதழ்களையும், இணையதளங்களையும் படித்து வளர்ந்தவர்கள்தான். அவர்களது சந்தர்ப்ப சூழல்களும் அவர்களுக்கு அமைந்த தொடர்புகளும் அவர்களைக் கொடூர குற்றவாளிகளாக்கிவிட்டன. செய்த குற்றத்துக்காக அவர்கள் நிச்சயம் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இதன் வேரை நாம் கண்டறிந்து களையும் வரை குற்றங்களை நீக்காமல் குற்றவாளிகளை மட்டும் சமூகத்திலிருந்து நீக்கிக் கொண்டிருப்பவர்களாகத்தான் இருப்போம்.

இதுபோன்ற பாலியல் குற்றவாளிகள் உருவாக யார் காரணம்? இன்று குற்றவாளிகளுக்கு எதிராக பொங்கும் பத்திரிக்கைகளில் எந்தப் பத்திரிக்கை தனது நடுப்பக்கத்தில் கவர்ச்சி நடிகையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்தது? பல செய்தி சேனல்கள், மியூஸிக் சேனலையும் நடத்துகின்றன, அந்த நிறுவனத்தின் செய்திச் சேனல் குற்றவாளிகளின் குற்றத்தை தொண்டைகிழிய கத்தி அம்பலப்படுத்தி கொண்டிருக்கும் அதே நேரத்தில் அந்த நிறுவனத்தின் மியூஸிக் சேனலை கொஞ்சம் திருப்பிப் பாருங்கள், அங்கே ஒரு இரட்டை அர்த்தப் பாடலுக்கு ஒரு நடிகை ஆபாசமாக நடனமாடிக்கொண்டிருப்பார். இவ்வளவுதான் இவர்களது சமூக அக்கறை! பொள்ளாச்சி குற்றத்துக்கு எதிராக கொதிக்கும் சினிமா நாயகர்கள் தங்கள் படங்களில் பெண்களை காட்டிய விதங்கள் ஏற்புடையதா? அவர்களது மனசாட்சி அவர்களை உறுத்தாதா?

பெண்களை ஆபாசமாக படமெடுத்து இணையத்தில் விற்கும் ஒரு கயவன் பிடிபடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். உலகமே அவனுக்கு விரோதமாக கொதிக்கிறது. நல்லதுதான்! ஆனால் அனைவருமே அதை எதிர்க்கும் அளவுக்கு நல்லவர்கள் என்றால் அந்த கேடுகெட்ட தொழில் வளர்ந்து செழித்துக் கொண்டிருப்பது யாரால்? அந்த வீடியோக்களுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் இருப்பது எப்படி? அவர்களெல்லாம் எங்கிருக்கிறார்கள்? வேற்றுக் கிரகத்திலா?

ஒவ்வொரு குற்றத்துக்கும் பிரதான குற்றவாளி என்று ஒருவன் இருந்தால், இந்த சமூகம் அதற்கு கூட்டுக் குற்றவாளி. பிரதான குற்றவாளி பிடிபடும்போது அவனை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டு கூட்டுக் குற்றவாளியான சமூகம் போய் நீதிபதி சீட்டில் அமர்ந்து கொள்ளுகிறது. இதுதான் சகிக்க முடியாத அவலம். இந்தக் குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படட்டும், ஆனால் மேலும் மேலும் குற்றங்கள் நடக்காமல் இருக்க வேண்டுமானால் சமூகம் தன்னை தற்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சமூகம் என்பது நீங்களும் நானும்தான். நமது பொழுதுபோக்கு இன்னொருவனுக்கு பிசினஸ். டிமாண்ட் என்னவோ அதற்கேற்ற விதத்தில்தான் சப்ளை இருக்கும். நமது டிமாண்ட் சரியான இருந்தால்தான் சப்ளையும் சரியாக இருக்கும். இனியாவது நமது பொழுதுபோக்குகள் தரமானவையாக மாறட்டும். நமக்குள் மோசமான இச்சையை தூண்டும் படைப்புகளை வெறுத்து ஒதுக்குவோம் நமது எதிர்கால சந்ததிகளின் நலனுக்காக!