தம்முடைய பிள்ளையாக எதையும் உரிமையாக விசுவாசித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நம்மைக் குறித்த தேவனுடைய சித்தமாக இருக்கிறது. கர்த்தரிடத்திலிருந்து ஏதேனும் ஒரு நன்மையைப் பெற்றுக்கொள்வதற்காக கண்ணீர்விட்டு, கதறி அழுது, உருண்டு புரண்டு, உபவாசம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை. ஆனால் அதுதான் ஒரே வழி என்பது போல ஒருகாலத்தில் சபைகளில் பிரசங்கங்கள் இருந்து வந்தன. அது இன்று ஓரளவுக்கு மாறிவிட்டது, விசுவாசம் அதிகமாக பிரசங்கிக்கப்படுகிறது. ஆனால் இன்றும்கூட சிலர் அதே பழைய பல்லவியைதான் பிரசங்கித்து கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயம். உண்மையில் உங்களுக்கான நன்மைகளை விசுவாசித்துப் பெற்றுக்கொள்வதுதான் சிங்கப்பாதை.
ஆனால் ‘விசுவாசத்தில் பெலவீனமுள்ளவர்கள்’ என்று ஒரு கூட்டத்தாரைக் குறித்து ரோமர் 14:1 கூறுகிறது. அப்படிப்பட்டவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய காரியங்களை சாதித்துக்கொள்ள மனிதர்களை நம்பி, அல்லது சுயபெலத்தை நம்பி போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களை ஏதேனும் பெரிய சிக்கலில் மாட்டிவைத்து விடுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் ஆவிக்குரிய வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு மிகப்பெரும் தடையாக இருக்கிறது. அவர்களிடம் விசுவாசத்தைக் குறித்து பேசினால் “உங்களைப் போல எனக்கு பைபிள் தெரியாது, உங்களை போல எனக்கு ஜெபிக்கத் தெரியாது, உங்களைப் போல எனக்கு விசுவாசிக்கத் தெரியாது, நான் என்ன செய்வது?” என்று நம்மிடமே புலம்புகிறார்கள்.
அவர்களுக்கு விசுவாசத்தைத்தான் கற்றுத்தர வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் உடனடித் தேவை என்ற பதட்டத்தில் இருக்கும் ஒரு மனிதனை உட்கார வைத்து அவனுக்கு விசுவாசத்தையும், விசுவாச அறிக்கையையும் கற்றுத்தர முடியாது. இதுபோன்ற சூழலில் நீங்கள் அப்படிப்பட்டவர்களுக்கு என்ன ஆலோசனை தருவீர்கள்?
தனக்கு பொம்மை வேண்டும் என்று குழந்தை ஏன் அப்பாவிடம் அழுகிறது தெரியுமா? தனக்கு பொம்மை கிடைக்காது என்ற அவநம்பிக்கையில் அது அழவில்லை. நான் அழுதால் என் அப்பா எனக்கு வாங்கித்தருவார் என்ற நம்பிக்கையில்தான் அது அழுகிறது. எந்தக் குழந்தையாவது தனக்கு பொம்மை வேண்டும் என்று பக்கத்து வீட்டு அங்கிளிடம் போய் அழுது அடம்பிடிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? தன் சொந்த தகப்பனிடம்தான் போய் அழும். தனக்கு ஒத்தாசை வரும் பர்வதம் எதுவென்று அதற்குத் தெரிந்திருக்கிறது. இதுவும் ஒருவகை விசுவாசம்தான், குழந்தைகளின் விசுவாசம்.
இங்கு மூன்று உதாரணங்களைப் பார்க்கப்போகிறோம். அன்னாள்(1 சாமு 1), கானானிய ஸ்திரீ(மாற்கு 7:25-30), பர்திமேயு(மாற்கு 10:46-52). இவர்கள் மூவருமே தங்களது அத்தியாவசிய தேவைக்காக தேவனிடத்தில் வந்து விழுந்தார்கள். அவர்கள் தேவனிடத்தில் இரக்கத்தை வேண்டினார்களேயன்றி விசுவாச அறிக்கை செய்யவில்லை. இந்த மூவருக்குமே முதலாவது கிடைத்தது புறக்கணிப்புதான். அன்னாள் குடித்திருப்பதாக நினைத்து ஆசாரியனாகிய ஏலியால் கடிந்து கொள்ளப்பட்டாள்(1 சாமு 1:13,14), கர்த்தராகிய இயேசுவே கானானிய ஸ்திரீயின் விண்ணப்பத்தை முதலில் நிராகரிப்பதுபோல பேசினார்(மாற்கு 7:27), பர்திமேயு பேசாமல் இருக்கும்படி சுற்றியிருந்த அநேகரால் கடிந்துகொள்ளப்பட்டான்(மாற்கு 10:48).
பிரியமானவர்களே, வேதாகமம் வெறும் தத்துவ நூலோ அல்லது வரலாற்றுப் புத்தகமோ அல்ல. அது ஆவிக்குரிய பிரமாணங்களையும், இரகசியங்களையும் நமக்குக் கற்றுக்கொடுக்கும் வழிகாட்டி. இது இப்படித்தான் வேலை செய்யும் என்ற அறிவியலை அது நமக்குக் கற்றுத்தருகிறது. பாருங்கள் மேற்கண்ட மூவருமே அந்த புறக்கணிப்பை புறக்கணித்து, அடுத்த கட்டத்துக்கு முன்னேறினார்கள். தேவனை விடாமல் பற்றிக்கொண்டு தொடர்ந்து போராடினார்கள். அதன் விளைவு எங்கிருந்து புறக்கணிப்பு வந்ததோ அதே இடத்திலிருந்து ஆறுதலான பதில் வருகிறது.
அன்னாளைக் கடிந்துகொண்ட அதே ஏலி, “நீ சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்று கூறியதை 1 சாமு 1:13,17-இலும். கர்த்தராகிய இயேசு கானானிய ஸ்திரீயிடம், “நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று” என்று கூறியதை மாற்கு 7:29-இலும், பர்திமேயுவை பேசாமலிருக்கும்படி அதட்டிய அதே நபர்கள் அவனை அழைத்து, “திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்று கூறியதை மாற்கு 10:49-இலும் நாம் காணலாம். இதைத் தொடர்ந்து மூவருமே தங்களுக்கான அற்புதத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
தேவனை அறியாத ஒரு மனிதன் அவரிடத்தில் இரக்கத்துக்காக கெஞ்சும்போது “என் கூக்குரல் அவருக்கு கேட்கிறதா? அவர் கேட்டாரா இல்லையா என்பதை நான் எப்படி அறிந்துகொள்ள முடியும்” என்கின்ற கேள்வி அவனுக்குள் இருக்கும். “நீ அவருக்கு தூரமானவன், அல்லது அவர் உனக்கு தூரமானவர்” என்கிற ஒரு புறக்கணிப்பு உணர்வு முதலாவதாக ஏற்படும். அந்த உணர்வு தேவனிடத்திலிருந்து வருவது அல்ல. அந்த உணர்வு நம்முடைய மாம்சத்திலிருந்தோ அல்லது உலகத்திலிருந்தோ வரக்கூடும்.
கர்த்தராகிய இயேசு அந்த கானானிய ஸ்திரீயிடம் ஏன் அப்படி கடினமாகப் பேசினார் என்ற கேள்வி எனக்கு வெகுநாட்களாக இருந்து வந்தது. அதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. ஒரு விசுவாசத்தில் பெலவீனமான மனிதன், அல்லது தேவனை அறியாத ஒரு மனிதன் தேவனிடம் ஒரு அற்புதத்துக்காக நாடி வரும்போது சிஸ்டம் இப்படித்தான் வேலை செய்யும் என்பதை நமக்குக் காட்டுவதற்காகவும் ஒருவேளை அவர் அப்படிப் பேசியிருக்கலாம். உண்மையில் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்யத்தான் அவர் கப்பர்நகூமிலிருந்து தீரு, சீதோன் பட்டிணங்களின் எல்லைக்கு சுமார் 90 கிலோமீட்டர்கள் அவளைத் தேடி கால்நடையாக நடந்து வந்திருந்தார். அந்த இடத்தில் அவர் வேறெதுவும் செய்ததாக வேதத்தில் பதிவு இல்லை. அந்தப் பெண்ணை சந்தித்தவுடனே அவர் மறுபடியும் கிளம்பி கலிலேயா கடற்கரைப் பகுதிக்கு வந்துவிட்டதாக வேதம் கூறுகிறது.
நீங்கள் தேவனிடத்தில் ஒரு விஷயத்துக்காக விண்ணப்பித்து அழும்போது முதல் கட்டமாக ஒருவிதமான எதிர்மறை உணர்வு தோன்றுவது இயல்பு. ஆனால் அதுதான் உங்கள் விண்ணப்பம் கேட்கப்பட்டுவிட்டது என்பதற்கான முதல் அடையாளம். இது ஒரு சின்ன விசுவாசப் பரீட்சைதான். அந்த எதிர்மறை உணர்வை புறக்கணித்துவிட்டு நீங்கள் தொடர்ந்து வேண்டும்போது இரண்டாம் கட்டமாக உங்களுக்குள் ஒரு ஆறுதல் உணர்வு ஏற்படும். அதுதான் உங்களுக்கு கதவு திறந்துவிட்டது என்பதற்கான அடையாளம். அதற்குப்பின் நீங்கள் அழ வேண்டியதில்லை. முன்றாம் கட்டமாக உங்கள் அற்புதத்தைப் பெற்றுக்கொள்ள நன்றியோடு ஆயத்தமாகுங்கள். உங்கள் அற்புதம் உங்களுக்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது.
அன்னாள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு வெளியேயும் அழுதாள். அங்கு எல்கானா அவளை ஆறுதல்படுத்தினான். அவனால் அணைக்கத்தான் முடியுமேயன்றி அற்புதங்கள் செய்ய முடியாது. அவள் தேவனுடைய கூடாரத்துக்குள் போய் அழுதபோது அவள் ஆறுதலோடு அற்புதத்தையும் பெற்றுக்கொண்டாள். நீங்கள் உங்கள் எந்த தேவைக்காகவும் உலக மனிதர்களிடம் போய் அழாதீர்கள். உங்களுக்கு விசுவாசிக்கத் தெரியாது, அறிக்கை செய்யத் தெரியாது, அழத்தான் தெரியுமென்றால் கூடாரத்துக்குள் வந்து அழுங்கள். நீங்கள் அற்புதத்தோடு திரும்பிச் செல்வது நிச்சயம்.