கழுகைப்போல்…

நாம் அனுதினமும் உடையணிகிறோம். அது அழுக்கானதும் அதைத் துவைக்கிறோம், மீண்டும் அணிகிறோம். ஒருவேளை ஒரு மனிதன் தன் உடையை துவைக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் அது அழுக்காகி நாளுக்குநாள் மோசமாகி ஒருநாள் கிழிந்து கந்தலாகிவிடும். உடை தன்னைத்தானே துவைத்துக் கொள்ளாது, அதைத் துவைக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை உடை அணிபவர்தான் முடிவுசெய்ய வேண்டும்.
உடல் உடை, ஆன்மா அதை அணிபவர். உங்களை நீங்கள் யாராக உணர்கிறீர்கள்? உங்களை நீங்கள் உடையாக உணர்வீர்களானால் உடையின் வாழ்வுதான் உங்கள் ஆயுள். நீங்கள் உடையை அணியும் ஆன்மாவாக உங்களை உணர்வீர்களானால் உங்கள் உடையை உங்களால் புதுப்பித்துக்கொள்ள முடியும். இந்த சூட்சுமத்தை உணர்ந்த ஒரே உயிரினம் கழுகு. ஒரு கழுகுக்கு 40 வயதான பிறகு அதற்கு முன் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்படும். ஒன்று மரித்து மண்ணோடு மண்ணாவது, இன்னொன்று வெறும் 150 நாட்கள் மட்டும் ஒரு கடினமான பாதை வழியாக பயணித்து, மீண்டும் தனது உடலை முற்றிலும் புதுப்பித்துக்கொண்டு மேலும் ஒரு 30 ஆண்டுகள் உயிர்வாழ்வது.
கழுகைத் தவிர அதே கிருபையைப் பெற்ற இன்னொரு உயிரினம் மனிதன். ஆதி மனிதர்கள் என்றவுடன் குகையில் வாழ்ந்த நாகரீகமற்ற கற்கால மனிதர்கள்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் ஜலப்பிரளயத்துக்கு முன்பும் அதற்குப் பின்பும் இந்தப் பிரபஞ்ச இயங்கியலை நன்கு அறிந்த, நாகரீகமான மனிதர்கள் நகரங்களைக் கட்டி வாழ்ந்ததை நாம் வேதாகமச் சான்றுகள் மூலம் அறியலாம். பக்தனாகிய யோபுவுடன் வானியல் சார்ந்த ஏகப்பட்ட விஷயங்களை தேவன் பேசுகிறார், யோபுவும் அதைப் புரிந்துகொள்ளுகிறார். பாவம் பிரவேசித்த பின்பும்கூட ஜலப்பிரளயத்துக்கு முந்தைய மனிதர்கள் 900 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழக் காரணம் அக்காலச் சூழ்நிலை மட்டுமல்ல அவர்கள் கொண்டிருந்த அறிவும்தான்.
மனம் புதிதாகிறதினால் மறுரூபமடைவது என்று வேதம் சொல்வது சுபாவ மாற்றத்தை மட்டுமல்ல, ஆன்மாவும், உடலும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தது. ஆன்மாவில் ஏற்படும் மாற்றம் உடலையும் பாதித்தே தீரும். ஆன்மாவில் நுழைந்த பாவம் முதுமையையும் மரணத்தையும் உடலுக்கு வருவிக்குமானால், ஆன்மாவில் நுழையும் கிறிஸ்துவின் நீதியும் இளமையையும், ஜீவனையும் உடலுக்கு வருவிக்க முடியும்.
இன்றைய கிறிஸ்தவர்களின் பிரச்சனை என்னவென்றால் அவர்களும் உலகத்தாரைப் போலவே தன்னை அவர்கள் உடலாக உணர்கிறார்களேயன்றி ஆன்மாவாக உணர இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. எனவேதான் இன்னும் மாம்சத்துக்குரியவர்களாகவும்,மதத்துக்கு அடிமைகளாகவும் இருந்து, நியாயப்பிரமாணத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்(கலா 2:20)” என்ற வசனத்தின் அர்த்தத்தை சரியாகப் புரிந்துகொண்டால், இந்த வசனத்தை ஒரு உணவைப்போல உட்கொண்டு அது மட்டும் நமது ஆன்மாவுக்குள் செரிமானமாகிவிட்டால் அது நம் உடலில் செய்யும் மாயம் உண்மையிலேயே உலகம் காணாத அற்புதமாக இருக்கும்.