சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள்.(அப் 15:2)
சில யூதக் கிறிஸ்தவர்கள் சபைக்குள் யூதக் கலாச்சாரத்தைப் புகுத்த முயன்றாலும் முயன்றார்கள் உடனே பவுலும் பர்னபாவும் அவர்கள் மீது புலிகளைப் போல பாய்ந்துவிட்டார்கள், பின்னே என்ன அவர்கள் நம்மைப் போலவா? எந்தக் கள்ளத்தீர்க்கனும் வந்து வாலாட்டிவிட்டுப் போகட்டும் என்று காலாட்டிக் கொண்டு அமர்ந்து வேடிக்கை பார்க்க! தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று ஒரு பழமொழி உண்டு. நீங்கள் அவருடைய இரத்தத்துக்கு இரத்தமான சதைக்குச் சதையான உடன்பிறப்புக்களாக இருப்பீர்களானால் அப்பா வீடு சீரழிவது கண்டு நீங்கள் ஆடாவிட்டாலும் உங்கள் சதை ஆடும், இரத்தம் கொதிக்கும்.
அன்று பவுலும் பர்னபாவும் கலகம் பண்ணாதிருந்திருந்தால் நியாயப்பிரமாணம் மறுபடியும் சபையை ஆக்கிரமித்து கிறிஸ்துவின் மரணத்தை அர்த்தமற்றதாக மாற்றியிருந்திருக்கும். புதிய ஏற்பாட்டு சபையை ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் ஆக்கிரமிப்பதை எந்த தேவமனிதனும் பொறுத்துக் கொள்ளமாட்டான். அது யூதக்கலாச்சாரமாக இருந்தாலும் சரி, மேற்கத்திய கலாச்சாரமாக இருந்தாலும் சரி. காரணம் சபை என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கானது. வெவ்வேறு இன, நிற, மொழிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி ஒரே சரீரமாக மாறும் அதிசயம்தான் சபை. சபைக்கு உள்ள தெய்வீக அழகே இந்த வேற்றுமையில் ஒருமைதான். இந்த ஒருமைக்குள் நம்மை கிறிஸ்துவின் அன்பு என்ற காருண்யக் கயிறுதான் கட்டிவைக்க வேண்டுமே தவிர ஒரு கலாச்சாரக் கயிறல்ல.
பல்வேறு மக்கள் கூட்டத்தை ஒரே கலாச்சாரத்துக்குள் அடக்கி எல்லோருக்கும் ஒரே ஆராதனை மொழி, ஒரே வேதமொழி, ஒரே பழக்க வழக்கம் என்று திணித்து அதை ஒரு மதமாகவோ அல்லது ஒரு இயக்கமாகவோ கட்டி எழுப்புவது ஒரு பெரிய காரியமல்ல. அப்படி எழுப்பினால் அது முழுக்க முழுக்க மாம்சம்! ஆவியானவரோ நம்மை வேற்றுமைகளின் மத்தியிலும் சகோதர அன்பு எனும் அலங்காரக் கயிறால் நம்மை ஒன்றாகக் கட்டி அழகு பார்ப்பவர். இந்தக் கட்டுக்குள் வந்தபிறகு இனம், நிறம், மொழி எல்லாவற்றிற்கும் மரித்தவர்களாகிவிடுகிறோம்.
பிரியமானவர்களே! இந்தக் கட்டுரை எதைப் பற்றியதென்றால் நாம் ஆவிக்குரிய காரியங்களுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பது பற்றியதுதான். குதிரைகளைக் குறித்தும் இரதங்களைக் குறித்தும் மேன்மை பாராட்டுபவர்கள் பாராட்டிக் கொண்டே இருக்கட்டும். நாமோ கர்த்தரைக் குறித்து மாத்திரமே மேன்மை பாராட்ட அழைக்கப்பட்டவர்கள்.
மாம்சக் கண்களை முற்றிலும் மூடிவிட்டு, ஆவியின் கண்களை அகலத்திறந்து பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சீர்கேடுக்கும் கிழவிகள் பேச்சுக்கும் செவிகளை மூடி, தேவசத்தத்துக்கு செவிகளைத் திறந்து வைப்போம். பாத்திரத்தின் வெளிப்புறமல்ல உட்புறமே தேவனுக்கு முக்கியம். கலாச்சாரமல்ல, கிறிஸ்துவின் சாரமானது உப்பாகிய நமக்குள் இருக்கிறதா என்பதே பரலோகத்துக்கு நம்மீது உள்ள கரிசனை.
நம்மை ஆவிக்குரிய வளர்ச்சியில் முழுமையாக கவனம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்றுதான் பாரமான வேறு எந்த சுமையையும் நம்மீது சுமத்தப் போவதில்லை என்று ஆவியானவரும் அப்போஸ்தலரும் கலந்து முடிவெடுத்தார்கள். (அப் 15:29) எவ்வளவு நல்ல தேவன் பாருங்கள்! நீங்கள் ஆவிக்குரியவர்களாக வாழும்படி கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள் ஆகவே மனுஷருக்கு அவர்தம் பழக்கவழக்கங்களுக்கு அடிமைகளாகாதிருங்கள் என்று வேதம் சொல்லுகிறது.
அப்போஸ்தலர் 15க்காக தேவனைத் துதிக்கிறேன்! நல்லவேளை விருத்தசேதன முறை அன்றே வேரறுக்கப்பட்டுவிட்டது. இல்லாவிட்டால் கத்தி சுவிசேஷம் சொல்லும் நாம் கத்தியோடும் செல்லவேண்டியதாயிருந்திருக்கும். கத்தியும் கையுமாக வரும் நம்மைக் கண்டு ஜனங்கள் காததூரம் ஓடியிருக்க மாட்டார்களா? இருதயத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே விருத்தசேதனம் என்று அன்றே அப்போஸ்தலர் அறுதியிட்டுக் கூறிவிட்டனர் (ரோமர் 2:29)
நல்லவேளை (பழைய ஏற்பாட்டு) வேதகலாச்சாரத்தின்படிதான் உடையணிய வேண்டும் என்ற அவசியம் புது உடன்படிக்கை கிறிஸ்தவருக்கு இல்லை. தமிழகத் தெருக்களில் யூத உடையணிந்து நானும் என் மற்ற சகோதரர்களும் வலம் வருவதை என்னால் கற்பனை செய்து கூடப்பார்க்க முடியவில்லை. இவ்வித பாரத்தை நம் மீது சுமத்தாத ஆதிஅப்போஸ்தலருக்கு நன்றிகள்(அப் 15:29). மாம்சீக விழிகளுக்கு புலப்படும் வெண்ணாடைதான் அணியவேண்டும் என்றும் வேதம் சொல்லவில்லை. நீங்கள் உங்கள் கலாச்சார உடையை தாராளமாக அணியலாம். ஆனால் ஆன்மீக விழிகளுக்குப் புலப்படும் ஒரு வெண்ணாடையை நாம் இயேசுவிடமிருந்து வாங்கி அணியவேண்டும்(வெளி 3:18). மாத்திரமல்ல அந்த ஆடையை அசுசிப்படாமல் கடைசிவரை காத்துக் கொள்ளவேண்டும்(வெளி 3:4). அந்த ஆடையற்றவன் புறம்பான இருளில் தள்ளப்படுவான் என்று வேதம் எச்சரிக்கிறது(மத்22:11-13). வேதக்கலாச்சாரத்தை அல்ல வேதவார்த்தையாகிய இயேசுவின் சாரத்தை உங்களில் ஏற்றுக்கொள்ளுங்கள்.
திருமணத்தில் நீங்கள் தாலி வேண்டுமானாலும் கட்டுங்கள், மோதிரம் வேண்டுமானாலும் மாற்றுங்கள் வேதம் இதைத்தான் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தவில்லை. ஆனால் கிறிஸ்து சபையை நேசிப்பதுபோல கணவன் மனைவியை நேசிக்கவேண்டும் என்றும், சபை கிறிஸ்துவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தது போல மனைவி தன்னைக் கணவருக்கு ஒப்புவிக்கவேண்டுமென்றும் வேதம் திட்டவட்டமாக போதிக்கிறது(எபே 5), மாத்திரமல்ல நாமே கிறிஸ்துவுக்கு கறைதிரையற்ற மணவாட்டிகளாக வாழும்படி நம்மை அது அறிவுறுத்துகிறது. திருமணம் செய்யும் முறையல்ல திருமணத்துக்குப் பின் ஒரே மாம்சமாய் வாழும் வாழ்க்கையே முக்கியம். உலகத்துக்கு உப்பான நமது குடும்பங்களே சாரமற்று சாட்சியற்று வாழ்ந்தால் உலகத்துக்கு வேறு என்ன நம்பிக்கை இருக்கிறது?
நல்லவேளை அடக்க ஆராதனை முறைமைகள் சபைப் புத்தகங்களில்தான் காணப்படுகிறது வேதபுத்தகத்தில் அல்ல. மரித்தோரை புதைக்க வேண்டுமானாலும் புதையுங்கள் புதைக்க முடியாத பட்சத்தில் எரிக்க வேண்டுமானாலும் எரியுங்கள் ஆனால் சுயத்தை வென்று, கொன்று புதைக்க வேண்டுமென்று வேதம் சொல்லுகிறது (ரோமர் 6). சுயத்துக்கு மரிக்காத ஆத்துமாவை ஆயிரம் பிஷப்புகள் கூடி ஆராதனை நடத்திக்கூட பரலோகத்துக்குள் தள்ளிவிட முடியாது. கிறிஸ்தவக் கலாச்சாரமல்ல, கிறிஸ்துவின் சாரமே முக்கியம்.
தேவன் நமக்கு இவ்வித விடுதலை அளித்திருக்கும் வேளையில் நாம் கலாச்சாரம் என்ற பெயரில் விக்கிரக அடையாளங்களை மட்டும் சுமந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம் பிள்ளைகளுக்கு அர்த்தமுள்ள வேதப்பெயர்களைச் சூட்டலாம் அல்லது அழகான தமிழ்ப்பெயரைக் கூட சூட்டலாம். வேதப்பெயரைத்தான் சூட்டவேண்டுமென்று வேதமே நமக்குச் சொல்லவில்லை. ஆனால் அவர்களை வேதத்தின்படி வளர்க்கவேண்டும் என்பதே மகா மகா முக்கியம். அப்படியில்லாததால்தான் போத்திபார் மனைவி மடியில் தூங்கும் யோசேப்புகளாலும், வயதானாலும் கர்த்தர் உரக்கக் கத்திக் கூப்பிட்டாலும் கூட காது கேட்காத செவிட்டு சாமுவேல்களாலும், ஞானம் எந்தக் கடையில் கிடைக்கும் என்று கேட்கும் சாலமோன்களாலும், மூன்று முறையல்ல மூன்று லட்சம் முறை மறுதலித்துக் கொண்டே இருக்கும் பீட்டர்களாலும் இன்றைய கிறிஸ்தவம் நிறைந்து காணப்படுகிறது.
எனக்கன்பானவர்களே கலாச்சாரமல்ல..சாரமே முக்கியம். யூதம் அல்ல வேதமே முக்கியம். பாத்திரத்தின் வெளிப்புறமல்ல உட்புறமே முக்கியம்.
உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள் (மாற்கு 9:50)