ஒரு முக்கியமான முடிவு

ஒரு முக்கியமான முடிவு

நான் வாலிபர் கூட்டங்களுக்கு பிரசங்கிக்கச் செல்லும்பொழுதெல்லாம் என்னுடைய பிரசங்கங்கள் ஒரே ஒரு காரியத்தைச் சுற்றியே இருக்கும். அது என்னவென்றால் ஒரு வாலிபன் தன் வாலிபப் பருவத்தில் எடுக்க வேண்டிய மிக மிக முக்கியமான ஒரே ஒரு முடிவு. “ஆண்டவரே என்னுடைய வாழ்வில் அவ்வப்போது எடுக்க வேண்டிய சின்ன முடிவுகளோ, அல்லது வேலை, திருமணம் போன்ற மிகப்பெரிய முடிவுகளோ அவை என்னுடைய விருப்பத்தின்படியல்ல, உம்முடைய சித்தப்படியே இருக்கட்டும்” என்பதே.

ஏனெனில் ஏசாயா 35:8 சொல்லும் பெரும்பாதையான வழியும், பரிசுத்த வழியும் அதுதான். அவ்வழியே நடக்கிறவன் பேதையானாலும் அவன் திசைகெட்டுப் போவதில்லை. சத்தியத்தை தெளிவாக அறிந்து கொள்ள இயலாவிட்டாலும், ஆண்டவர் மீது கொண்ட அன்பினால் மட்டுமே 1996-ஆம் ஆண்டு என் வாழ்வை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்த புதிதில் நான் எடுத்த முடிவு அது.

அந்த முடிவின் விளைவாக அப்போது முதல் என் வாழ்க்கை நான் முற்றிலும் எதிர்பாராத திசையில் பயணித்தது, என்னைப் பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, எனக்கே என்னுடைய வாழ்க்கை புரியாத புதிராக இருந்தது. பலருடைய கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது மட்டுமன்றி, அடைந்த ஏமாற்றங்களுக்கும் தோல்விகளுக்கும் அளவில்லை. தவறான முடிவை எடுத்து விட்டோமோ என்று பலமுறை வருந்தியதும், முற்றிலும் வெளியே வந்து மற்ற மனிதர்களைப் போல வாழ வேண்டும் என்று நினைத்த நாட்களும் உண்டு. ஆனால் நினைத்தால் இஷ்டத்துக்கு முடிவை மாற்றிக்கொள்வதெல்லாம் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு தேவபிள்ளையின் வாழ்க்கையில் சாத்தியம் இல்லையென்று பின்னர்தான் புரிந்தது. இது ஒரு நுகத்தில் கழுத்தைக் கொடுப்பது போன்றதுதான்.

ஆனாலும் இது ஆசீர்வாதமான நுகமென்று ஒரு காலத்துக்குப் பின்புதான் புரியும், இந்த நுகத்தில் கழுத்தைக் கொடுத்ததன் மூலமோ, அல்லது தேவ சித்தத்துக்கு வாழ்வை ஒப்புக்கொடுத்ததன் மூலமோ நாம் ஒன்றும் பெரிய சாதனையை செய்துவிடவில்லை, நாம் ஒன்றும் சரித்திரப் புருஷருமில்லை. தகுதியற்ற நம்மீது இரக்கம் வைத்து, நம்மை கிருபையாய் தெரிந்துகொண்ட தேவன், நமக்குள் அருளியிருக்கிற பரிசுத்த ஆவியானவர் மூலம் இந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறார் என்பதை உணரும்போது இதில் நாம் மேன்மை பாராட்ட ஒன்றும் இல்லை என்பது தானாய் விளங்கும். நமது ஆவிக்குரிய மமதைகளும் அடங்கிப் போகும்.

கால் நூற்றாண்டுகள் கடந்த பிறகு இப்பொழுது திரும்பிப் பார்க்கிறேன். வாழ்க்கை ஒரு தேர்ந்த கதாசிரியரால் எழுதப்பட்ட ஒரு அற்புதமான கதைபோல இருக்கிறது. கதையை அவர் non linear style-இல் எழுயிருந்ததால் அது ஆரம்பத்தில் புரியாமலும், புதிராகவும் இருந்ததை இப்போது உணர்கிறேன். வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த வெவ்வேறு சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையாக நேர்த்தியாக பின்னப்பட்டுள்ளதை இப்போது ஆச்சரியமாகப் பார்க்கிறேன். இவையெல்லாம் எதேச்சையாக நடந்திருக்க சாத்தியமே இல்லை.

வேதாகமத்தில் எழுதப்பட்ட குறிப்பிட்ட சில சம்பவங்கள், முக்கியமாக யாக்கோபு, எலியா, யோசேப்பு ஆகியோருடைய வாழ்வில் நடந்த சில குறிப்பிட்ட சம்பவங்கள் அப்படியே வரிசைக் கிரமமாக ஒரு template போல என் வாழ்வில் நடந்ததையும், நடப்பதையும், அவர்கள் சந்தித்த அதே போன்ற மனிதர்களை நானும் சந்திப்பதைப் பார்க்கிறேன். கர்த்தருக்கு வாழ்வை ஒப்புக்கொடுத்த சிலர் இதே போல தங்கள் வாழ்க்கையிலும் நடந்ததாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள், ஆனால் அவர்களுடைய அனுபவங்கள் வேறு. எலியா வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் அப்படியே யோவான் ஸ்நானகன் வாழ்வில் பிரதிபலித்ததை நாம் வேதத்தில் காண முடியும்.

இதை ஒருவர் தன் வாழ்வில் அனுபவிக்க அவர் சூப்பர் ஸ்பிரிச்சுவலாக இருக்க வேண்டும் என்பதெலாம் அவசியமில்லை, கர்த்தருக்கு வாழ்வை ஒப்புக்கொடுத்த ஒரு எளிய மனிதனாகவோ மனுஷியாகவோ இருந்தால் போதும். “முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை” என்று சாலமோன் பிரசங்கி 1:9-இல் சொன்னதன் அர்த்தம் இப்போது விளங்குகிறது. பிரசங்கி 1:1-11 வரை வாசித்துப் பாருங்கள். நடந்தவைகள்தான் இந்தப் பிரபஞ்சத்தில் திரும்ப திரும்ப நடந்து கொண்டிருக்கிறது. பாத்திரங்கள்தான் மாறுகின்றன.

வாழ்க்கை ஒரு வட்டமென்று அதனால்தான் சொல்லியிருக்கிறார்கள். அது வெறும் வட்டமல்ல அது ஒரு spiral. ஒரு கீழ் வட்டத்திலிருந்து மேன்மையான அடுத்த வட்டத்துக்குள் நீங்கள் செல்ல வேண்டும். அல்லது திரும்பத் திரும்ப வாழ்க்கை முழுவதும் ஒரே வட்டத்துக்குள் செக்கு மாடு போல சுற்றிக்கொண்டிருக்க வேண்டும். தேவன் ஏன் வேதத்தை புத்தகமாக எழுதி மனிதர் கையில் தந்திருக்கிறார் என்பது ஒரு புதிய கோணத்தில் இப்போது விளங்குகிறது.

Career success என்ற உலகம் காட்டும் பொய்யான மாயைக்குப் பின்னால் ஓடிக் களைத்தவர்களுக்கும், அர்த்தமுள்ள ஒரு வாழ்வை வாழவேண்டும் என்ற விருப்பத்தில் படைத்தவருக்கு தன்னை அர்ப்பணித்து இளம் பிராயத்தில் தன் நுகத்தை சுமந்தவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம் இதுதான். இப்போது என் பிள்ளைகளுக்கு சொல்ல என்னிடம் நிறைய இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாத ஆச்சரியமான சம்பவங்கள் இருக்கின்றன. “அப்பா உங்க வாழ்கையையே ஒரு அருமையான நாவலாக எழுதலாம் போல..” என்று என் மகன் சமீபத்தில் என்னிடம் சொன்னபோது என் மனதில் ஓடிய விஷயங்களைத்தான் கர்த்தர் மீது பொங்கி வழியும் நன்றியோடு இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறேன். ஏனென்றால் என்னுடைய கதை நான் எழுதியதல்ல, அது இந்தப் பிரபஞ்சத்தின் மாபெரும் படைப்பாளியால் எழுதப்பட்டது, எழுதப்பட்டுக் கொண்டிருப்பது…

இளைஞர் மத்தியில் ஊழியம் செய்யும் ஊழியர்களுக்கு எனது வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். இதைச் செய், இதைச் செய்யாதே என்று அவர்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கற்றுத்தராதீர்கள். “என் விருப்பமல்ல கர்த்தாவே, உமது சித்தமே என் வாழ்வில் நடக்கட்டும்” என்ற ஒரே ஒரு முடிவை மட்டும் அவர்கள் உளப்பூர்வமாக எடுத்துவிட அவர்களை வழிநடத்திவிடுங்கள். அது ஒன்று மட்டுமே போதும். அவர்கள் வாழ்வின் மிச்சத்தை தேவன் பொறுப்பெடுத்துக்கொள்வார். அவர்களது வாழ்க்கை ஒரு வரலாறாக எழுதப்படும்.

Leave a Comment