வீட்டு வேலைகள் செய்யும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும், பயணம் செய்யும்போதும் நம்மில் பலருக்கு ஏதாவது கம்பேனி வேண்டும். சிலருக்கு இளையராஜாவோ அல்லது ரஹ்மானோ கூட இருக்க வேண்டும், வேறு சிலருக்கு தங்களுக்குப் பிடித்த பிரசங்கியார்கள் வேண்டும். காரணம் என்னவென்றால் நம் மனதைப் பேச அனுமதித்தால் அது நாளை கட்ட வேண்டிய பில்லை நினைவுபடுத்தும், அல்லது கடந்தகால தோல்வியையோ அவமானங்களையோ ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கும். எனவேதான் அதைத் தவிர்க்க தனிமையில் நமக்கு YouTube, Spotify, சமூக வலைதளங்கள் அல்லது FM ரேடியோக்களெல்லாம் தேவைப்படுகிறது.
“நானே எனக்கு நண்பன் இல்லையே..” என்ற ஒரு பழைய பாடலின் வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது. விஷயம் என்னவென்றால் நம்மை சந்திக்க நமக்கே தைரியம் இல்லை என்பதுதான் உண்மை. பொழுதுபோக்கு என்ற ஒரு விஷயம் உருவானதற்குக் காரணமே தன்னுடைய சொந்த கம்பேனி மனிதனுக்கு செட் ஆகவில்லை என்பதால்தான். நம் மனதை இப்படி பழக்கப்படுத்தியது நாம்தான். நம் கவனத்தை எதிர்மறையானவற்றின் மீதே குவித்து பழகிவிட்டோம். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் மற்றவர்களோடு செலவிடும் நேரத்தைவிட அவன் தன்னோடு செலவிடும் நேரம்தான் அதிகம், மனதில் தனக்குத்தானே பேசிக்கொள்வதுதான் அதிகம். அப்படியிருக்கும்போது அவன் அவனுக்கே நண்பனாக இராவிட்டால் அந்த நேரங்களெல்லாம் நரகமாகிவிடும்.
உங்கள் இருதயம் தேவனுடைய வார்த்தையோடு இசைந்திருந்தால் நீங்கள் உங்களுக்கு நண்பனாக இருப்பீர்கள். உலகத்தோடும், மாம்சத்தோடும் இசைந்திருந்தால் நீங்களே உங்களுக்கு எதிரியாகிவிடுவீர்கள் இதுதான் சிம்பிள் லாஜிக். உங்கள் மாம்சம் “நீங்கள் சரியில்லை” என்று உங்களையே குற்றப்படுத்திக்கொண்டு இருக்கும், இந்த உலகம் “உங்களுக்கு நேரம் சரியில்லை, அல்லது உங்கள் சூழ்நிலை சரியில்லை, அது இன்னும் மோசமாகப்போகிறது…” என்று பயமுறுத்திக் கொண்டிருக்கும். அவை இரண்டுக்கும் அதைத் தவிர வேறொன்றும் தெரியாது.
ஆனால் தேவனுடைய வார்த்தையோ நம்மைக் குறித்த நலமானவைகளை மட்டுமே பேசுகிறது. நாம் தேவனுக்கு எவ்வளவு முக்கியமானவர்கள், அவருக்கு எவ்வளவு பிரியமானவர்கள் என்பதைப் பேசுகிறது. அவர் நமக்காக வைத்திருக்கும் மேன்மையான திட்டங்களைப் பற்றி பேசுகிறது, அது எவ்வளவு நிச்சயமாய் நிறைவேறப்போகிறது என்ற எதிர்பார்ப்பை நமக்குக் கொடுக்கிறது. இதுமாதிரி சிந்தைகளால் உங்கள் உள்ளம் நிறைந்திருந்தால் நீங்கள் உங்களுக்கு ஒரு ஆகச்சிறந்த நண்பனைக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான் என்று ஆதி 49:21 கூறுகிறது. அப்போஸ்தலனாகிய யோவானை வேதம் திவ்ய வாசகன் என்று அழைக்கிறது. உங்களுக்கு நீங்களே இன்பமான வசனங்களை வசனித்துப் பாருங்கள், உங்களுக்கு நீங்களே திவ்ய வாசகனாக இருந்து பாருங்கள். உங்கள் கம்பேனி உங்களுக்கே இனித்துவிடும்!
நான் வேலை செய்யும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும், பயணம் செய்யும்போதும் எனக்கு தேவன் என்னை அதிசயமாக நடத்தி வந்த பாதைகளையும், அவர் எனக்கு செய்வதாக வாக்குப் பண்ணியிருக்கும் மாபெரும் நன்மைகளையும் எண்ணி அவைகளில் மூழ்கிப் போகிறேன். அந்த எதிர்காலக் கனவுகள் எனக்கு புத்துயிர் அளிக்கின்றன. முதுமை என்னை மேற்கொள்ளாதபடி தடை செய்கின்றன. என் உடலை அது மீண்டும் 20-களுக்கு நேராக இழுத்துச் செல்கின்றன.
இவ்வளவு அருமையான நண்பனை இத்தனை காலம் மிஸ் பண்ணி விட்டேனே என்று வருந்துகிறேன். என் நண்பனாகிய ‘நான்’ தேவனை அறிந்தவன். தேவன் என்னோடு பிரத்யேட்சமாக பேச முடியாததால் அவர் அவனை எனக்குக் கொடுத்திருக்கிறார். அவனுடைய குரலா அல்லது ஆவியாயவருடைய குரலா என்று நான் பிரித்தறியக்கூடாதபடிக்கு அவன் தேவ வார்த்தையை என்னோடு பேசுகிறான். அவர் இதற்கு முன்பாக செய்த அற்புதங்களை எனக்கு நினைவுபடுத்தி “நீ எதைக் குறித்தும் கவலைப்பட வேண்டியதில்லை” என்று என்னை உற்சாகப்படுத்துகிறான், முன்னேறும்படி உந்தித் தள்ளுகிறான், அவனோடு நான் செலவிடும் தருணங்களில் ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்த அனுபவத்தை உணர்கிறேன். இந்த நண்பன் என் வாழ்நாளெல்லாம் என்னோடிருப்பான் என்பது எனக்கு மகிழ்ச்சியே!