சீஷத்துவம்

எனக்கு நல்லா பைபிள் தெரியும்

By Vijaykumar Jayaraj

May 31, 2022

ஒரு மனிதன் உங்களிடம் வந்து “எனக்கு நல்லா பைபிள் தெரியும்” என்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த மனிதனை நீங்கள் எப்படிப் பார்ப்பீர்கள்? அவரை ஒரு ஆவிக்குரிய பெருமை பிடித்த முட்டாளாகப் பார்ப்பீர்கள் அல்லவா? நம்மில் பலர் “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, வேதம் என்பது கடல் போன்றது. அதை நன்றாகத் தெரிந்தவர் யாருமே கிடையாது. கற்றது கைமண்ணளவுதான், வேதத்தில் நமக்குத் தெரியாத காரியங்கள் உலகளவு உள்ளது” என்று அந்த நபருக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுவோம்.

அதே நாம்தான் “எல்லாவற்றையும் வேத வசனங்களைக் கொண்டு நிதானிக்க வேண்டும்” என்று அறிவுறுத்துகிறவர்களாகவும், அறிவுறுத்தப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். நமக்கு முழுமையாகத் தெரியாத ஒரு விஷயத்தைக் கொண்டு எல்லாவற்றையும் எப்படி நிதானிக்க முடியும்? இது முரணாக இல்லையா?

நமது வேத அறிவு மிகக் குறுகினது, ஒரு எல்லைக்குட்பட்டது. ஒரு விஷயத்தைக் குறித்து கடந்த ஆண்டு நமக்கு இருந்த ஆவிக்குரிய புரிதல் இந்த ஆண்டு மேம்பட்டிருக்கிறது அல்லது முற்றிலும் மாறியிருக்கிறது. அது இன்னும் மாறிக்கொண்டேதான் இருக்கும். அதே நேரத்தில் வேதமோ மகாப் பெரிய சமுத்திரம் போன்றது. அதைக் கற்று முடிக்க கோடி ஆண்டுகள் ஆனாலும் போதாது. அப்படியிருக்கும்போது வேதத்தை அறிதலும், அதை அறிந்ததால் கிடைத்த அறிவைக்கொண்டு ஒரு காரியத்தை நிதானித்தலும் சாத்தியமாகுமா?

அப்படியானால் வசனத்தைக் கொண்டு ஒரு விஷயத்தை நிதானிக்கவே முடியாதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அடிப்படை விசுவாசம் தொடர்பான விஷயங்களை நமது வேத அறிவு கொண்டு நிதானிக்கலாம். அது வெறும் 1%-தான். மீதமுள்ள 99% விஷயங்களை நீங்கள் எப்படி நிதானிப்பீர்கள்?

அதற்குத்தான் நமக்கு பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் நமக்குள் உரீம் தும்மீம் போல செயல்படுகிறார். ஆனால் அவர் நமக்கு கொடுக்கப்பட்டிருப்பதால் மாத்திரம் நம்மால் எல்லாவற்றையும் நிதானிக்க முடியும் என்று அர்த்தமல்ல. எல்லா விசுவாசிகளுக்குள்ளும்தான் ஆவியானவர் கொடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர்களில் அறுதிப் பெரும்பான்மையினர் எளிதாக வஞ்சிக்கப்படக்கூடிய பலவீனமான நிலையில்தான் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன?

ஆவியானவரைப் பெற்றிருப்பது மட்டும் போதாது. நாம் அவரோடு தொடர்புள்ளவர்களாக இருக்க வேண்டும். நமக்கும் அவருக்குமுள்ளதான தொடர்பு இருவழித் தொடர்பாக இருக்க வேண்டும். அவருடைய குரலுக்கு நாம் எப்பொழுதும் சென்சிட்டிவ்வாக இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்குள் ஆவிக்குரிய நிதானிப்பு சரியாக செயல்படும். அதுமட்டுமல்ல, நாம் இதுவரை கற்றறிந்த வசனங்களைக் கொண்டு ஆவியானவர் நமக்குள் பேசும்போதுதான் நாம் கற்ற வேதமும் நமக்கு பிரயோஜனமுள்ளதாக மாறுகிறது. சுருங்கச் சொன்னால் நீங்கள் கற்ற வேத வசனத்தை நீங்களே எடுத்து ஒரு விஷயத்தை நிதானிக்க அல்லது புரிந்துகொள்ள முயற்சி செய்வீர்களானால் அது தவறாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் நீங்கள் கற்ற வேத வசனத்தை ஆவியானவர் எடுத்து உங்களுக்குக் கொடுத்து ஒருவிஷயத்தை உங்களுக்கு புரியவைப்பாரானால் அது தவறாக இருக்க வாய்ப்பே இல்லை.

வேதத்தைக் கற்பதும் தியானிப்பதும் முக்கியம்தான். ஆனால் அதைமட்டுமே முக்கியப்படுத்துவோமானால் வெறும் தலையறிவினால் நிறைந்த பலவீனமான கிறிஸ்தவர்களாகவே இருப்போம். நாம் கற்ற வேதம் நமக்கு பயன்பட வேண்டுமானால் ஆவியானவருடன் தொடர்பில் இருப்பதும், அவருடைய குரலுக்கு சென்சிட்டிவாக இருப்பதும் அவசியம் ஆகும்.