இஸ்ரவேலர் வனாந்திரத்தில் அடிக்கடி தேவனுக்கு விரோதமாகவும், மோசேக்கு விரோதமாகவும் முறுமுறுத்தார்கள். ஏன் தெரியுமா? வனாந்திரத்தில் விதைப்புமில்லை, அறுப்புமில்லை. வேலை செய்து பிழைக்கவும் முடியாது. எல்லா தேவைகளுக்கும் தேவனையே முற்றிலும் முழுதும் சார்ந்திருக்க வேண்டிய நிலைமை. எனவே அந்த தேவைகளில் பிரச்சனை எழும்பும்போது அவர்கள் மோசேக்கு எதிராக போராடினார்கள், தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள்.
ஆனால் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு அதுபோன்ற பிரச்சனை இல்லை. நாம் தேவைகள் அனைத்துக்கும் உலகக் கட்டமைப்பைச் சார்ந்திருக்கிறோம். தேவனுடைய இடத்தை உலகக்கட்டமைப்பில் உள்ள அரசாங்கங்களும், வணிக நிறுவனங்களும் எடுத்துக்கொண்டுள்ளன. எனவே நம்முடைய தேவைகளில் பிரச்சனைகள் எழும்பும்போது நாம் சார்ந்துள்ள நிறுவனங்களுக்கும், நமது உயரதிகாரிகளுக்கும் எதிராகத்தான் நம்முடைய முறுமுறுப்புகள் இருக்கின்றன. தேவனுக்கு விரோதமாக அவ்வளவாக யாரும் முறுமுறுப்பதில்லை.
முறுமுறுப்பை தேவன் விரும்புவதும் இல்லை. வனாந்திரத்தில் முறுமுறுத்த இஸ்ரவேலர் தேவகோபத்தினால் அழிக்கப்பட்டார்கள். ஆனால் இஸ்ரவேலர் மட்டுமல்ல, தேவனுக்குப் பிரியமான பல வேதாகமப் புருஷர்களும்கூட முறுமுறுத்திருக்கிறார்கள், ஆற்றாமையில் ஏதேதோ பிதற்றியிருக்கிறார்கள் அல்லது தேவனோடு போராடியிருக்கிறார்கள் அவர்களையெல்லாம் தேவன் அழிக்கவில்லை, மாறாக அவர்களுக்காக அவர் அங்கலாய்ப்பதைத்தான் நாம் வேதத்தில் வாசிக்கிறோம். இஸ்ரவேலரின் முறுமுறுப்பு தேவனுக்கு கோபமூட்டியதற்குக் காரணம் அவர் செய்த பிரம்மாண்ட அற்புதங்களைக் கண்டபிறகும் அவர்கள் தேவனை விசுவாசிக்காமல் முறுமுறுத்தார்கள். அவர்களது பிரச்சனை “அவிசுவாசம்”. ஆனால் நான் முன்னே குறிப்பிட்ட தேவமனிதர்களின் பிரச்சனை “ஏமாற்றம்”.
தேவனுடைய வார்த்தையை ஆழமாக நம்பி, விசுவாசித்து தாங்கள் எதிர்பார்த்ததற்கு முரணான காரியங்கள் நடக்கும்போது ஏமாற்றத்தில் உடைந்து போய் புலம்புகிறார்கள், அழுகிறார்கள், முறுமுறுக்கிறார்கள். இது சரியா என்றால் சரியில்லைதான். இது முதிர்ச்சியின்மையின் அடையாளம், இது மனித பெலவீனம். ஆனால் தண்டனைக்குரிய குற்றம் அல்ல. ஒரு பாடுள்ள, பெலவீனமுள்ள மனிதனும் சர்வஞானமுள்ள, சர்வ வல்லமையுள்ள தேவனும் ஒன்றாய் இணைந்து பணியாற்றும்போது இப்படிப்பட்ட உரசல்கள் நிகழ்வதுதான் இயல்பு. நீங்கள் கிறிஸ்துவைப்போல பூரண புருஷனாக இருந்து, பிதாவோடு இணைந்து பணியாற்றினால் மட்டுமே ஏமாற்றங்களும் உரசல்களும் இல்லாத சுமூகமான பயணம் இருப்பது சாத்தியம். மற்றபடி தேவனோடு போராடும் யாப்போக்கு அனுபவம் ஒவ்வொரு தேவபிள்ளையின் பயணத்திலும் தவிர்க்கப்பட முடியாதது.
தான் நினைத்தது நடக்காதபோது பேதுரு வலையைத் தூக்கிக்கொண்டு பழையபடி மீன்பிடிக்கக் கிளம்பிவிட்டார்; காரணம் அவருக்கு சார்ந்துகொள்ள அவருக்கு வேறு ஒரு ஆதாரம் இருந்தது. ஆனால் தான் நினைத்தபடி நடவாதபோது எலியா சோர்ந்து போய் சாவை விரும்பினார், எரேமியாவும், யோனாவும் தேவனோடு வாதாடுகிறார்கள், போராடுகிறார்கள்; காரணம் என்ன? இவர்கள் தங்கள் வழியைக் காணக்கூடாதபடிக்கு தேவனால் வளைந்து கொள்ளப்பட்டவர்கள்(யோபு 2:23). இவர்களுக்கு தேவனை விட்டால் வேறு ஆதாரம் இல்லை, போக்கிடமும் இல்லை.
கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்(எரே 20:7) என்று எரேமியா புலம்புகிறார்.
என்னுடைய வாழ்வில் நான் தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்த தருணங்கள் எண்ணிலடங்காதவை. கோபத்தில் வேதாகமத்தை காலின் கீழே போட்டு மிதித்திருக்கிறேன். தேவனை மரியாதையே இல்லாமல் திட்டியிருக்கிறேன். அவரை மிகக் கொடூரமான sadist என்றுகூட அழைத்திருக்கிறேன். இவையெல்லாம் மிகப்பெரிய பாவம் என்பதை மனதார ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதெற்கெல்லாம் பதிலாக நான் அவரிடம் கண்டது இரக்கத்தைத்தான். என் விரல் அவரைக் குற்றம்சாட்ட நீட்டப்பட்டிருந்தபோது அவரது கரங்கள் என்னை அணைத்துக்கொள்ள விரிக்கப்பட்டிருந்தன.
“உன் பிராணன் இரும்பில் அடைபட்டிருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். உனக்கொரு காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது. அதுவரை காத்திரு…” என்பது மட்டுமே அவரது பதிலாக இருந்திருக்கிறது. உண்மையில் நாம் அவரிடம் அழுவதாலும் பலனில்லை, முரண்டு பிடிப்பதாலும் பலனில்லை, முறுமுறுப்பதாலும் பலனில்லை. நாம் முறுமுறுப்பதால் அவர் கோபப்பட்டு நம்மை தண்டிப்பதுமில்லை, கதறி அழுவதால் பதறிப்போய் நமக்கு நியமித்த நன்மைகளை துரிதப்படுத்தித் தருவதுமில்லை. இதுபோன்ற தருணங்களில் அவர் நமக்குத் தருவது ஆறுதலும், அரவணைப்பும் மட்டுமே. நம்மை தேற்றி, உற்சாகபடுத்தி, மறுபடியும் எழுந்து ஓட உதவி செய்வாரேயன்றி நம்மைக் குறித்த தமது அநாதி தீர்மானங்களை அவர் மறுபரிசீலனை செய்வதே இல்லை. அவரிடம் Plan B என்பதே இல்லை.
நீங்கள் தேவனோடு போராடுகிற நபராக இருந்தால், இது உங்களின் அனுபவமாகவும் இருந்தால் இந்தப் பாதைக்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். நீங்கள் அவரை மட்டுமே சார்ந்திருக்கும்படி தேவன் உங்கள் வாழ்க்கையை வடிவமத்திருக்கிறார் என்பதைத்தான் இது காட்டுகிறது. காரணமில்லாமல் இந்த வழியில் அவர் உங்களை நடத்தவில்லை என்பதை அவர் உங்களை பயன்படுத்தும் நாட்களில் அறிந்துகொள்வீர்கள்.
நான் தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்ததே இல்லை, அவரைவிட்டு பின்வாங்கியதே இல்லை, அவரோடு போராடியதே இல்லை என்பதல்லாம் பெருமை அல்ல. எனக்கு காயமே இல்லை என்பதன் பொருள் நீங்கள் களத்தில் இறங்கியதே இல்லை என்பதாகவும் இருக்கலாம். ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கும் கணவன் மனைவிதான் உறவாடவும் செய்வார்கள், ஒருவருக்கு எதிராக ஒருவர் போராடவும் செய்வார்கள். கணவன் இந்தியாவிலும், மனைவி இங்கிலாந்திலும் இருந்து கொண்டு எங்களுக்குள் சண்டையே ஏற்பட்டதில்லை என்று மார்தட்டிக் கொள்வதில் பெருமை ஒன்றுமில்லை..
எப்படி பாசமுள்ள பிதா தான் நேசிக்கிற மகனைத்தான் சிட்சிப்பாரோ அதுபோலத்தான் அவரை முழுவதுமாக சார்ந்துகொண்ட மகனும் தான் உறவாடுகிற தகப்பனோடுதான் போராடவும் செய்வான்.