ஞானம்

உன்னதமான அரசியல், தெய்வீக வணிகம், கேடுகெட்ட மதம்

By Vijaykumar Jayaraj

February 07, 2023

ஏதோ மதத்தை நல்லது போலவும், அரசியலைக் கெட்டது போலவும் கருதிக்கொண்டு “மதத்தை அரசியலாக்காதீர்கள்” என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அரசியல் இன்றியமையாதது. மதம்தான் தேவையற்றது. மதம் இல்லாமல் ஒரு தனிமனிதன் வாழமுடியும், ஒரு சமுதாயம் இயங்க முடியும். ஆனால் அரசியல் இன்றி மனிதன் வாழவே முடியாது, எந்த சமுதாயமும் இயங்க முடியாது. கிறிஸ்து ஒரு மதத்தை நிறுவ வரவில்லை. “பரலோக ராஜ்ஜியம்” என்ற அரசைத்தான் பூமியில் நிறுவ வந்தார். சுவிசேஷம் ஒரு ஆவிக்குரிய அரசியலைத்தான் பேசுகிறது…உன்னதமான அரசியல்!

நாம் காணும் எங்கும், எதிலும் அரசியல் இருக்கிறது. மனிதன் உருவாக்கிய கோணல்மாணலான, தோல்வியுற்ற அரசியலுக்கு மாற்றாக கர்த்தர் வழங்கியதுதான் “பரலோக ராஜ்ஜியம்” எனும் அன்பும், சமத்துவமும் மிகுந்த அரசியல் கட்டமைப்பு. இந்த அரசியலை மதமாக்காதீர்கள்!!

பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் (லூக் 3:4)

ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம்பண்ணுவார் (வெளி 11:15)

ஒரு உன்னதமான அரசியல் முறையை மட்டுமல்ல, ஒரு நீதியான கொடுக்கல் வாங்கல் முறையையும் சுவிசேஷம் பேசுகிறது. அதாவது “வணிகம்”.

ஏதோ மதத்தை நல்லது போலவும், வணிகத்தை கெட்டது போலவும் கருதிக்கொண்டு “மதத்தை வியாபாரமாக்காதீர்கள்” என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் வணிகம் இன்றியமையாதது, மதம்தான் தேவையற்றது. மதம் இல்லாமல் ஒரு தனிமனிதன் வாழமுடியும், ஒரு சமுதாயம் இயங்க முடியும். ஆனால் கொடுக்கல் வாங்கல் இன்றி மனிதன் வாழவே முடியாது, எந்த சமுதாயமும் இயங்க முடியாது. கிறிஸ்து ஒரு மதத்தை நிறுவ வரவில்லை. “பரலோக ராஜ்ஜியம்” என்ற நீதியின் அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல் முறையைத்தான் பூமியில் நிறுவ வந்தார். சுவிசேஷம் ஒரு மேலான வணிகத்தைத்தான் பேசுகிறது…தெய்வீக வணிகம்!

நாம் காணும் எங்கும், எதிலும் வணிகம் இருக்கிறது. மனிதன் உண்டாகிய சுயநலம் சார்ந்த, தோல்வியுற்ற வணிகமுறைக்கு மாற்றாக கர்த்தர் வழங்கியதுதான் “பரலோக ராஜ்ஜியம்” எனும் நீதியும், சமத்துவமும் மிகுந்த வணிகக் கட்டமைப்பு. இந்த வணிகத்தை மதமாக்காதீர்கள்!!

இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் (லூக் 3:11)

அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக(2 கொரி 8:15)

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் (லூக்கா 6:38)

ஆக, சுவிசேஷம் அரசியலைப் பேசுகிறது, வணிகத்தையும் பேசுகிறது. ஆனால் மதத்தைப் பற்றி அது பேசவே இல்லை.

சரி மதம் என்பதுதான் என்ன? மதம் என்பது ஒரு குறிப்பிட்ட இறைவழிபாட்டு முறை, அதையொட்டிய சடங்குகள், அவை சார்ந்த அடையாளங்கள், அதைக் காப்பாற்றும் சமூகக் கட்டுப்பாடுகள், நெறிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது ஒரு ஓப்பியம். இது மனிதனுக்கு போதையைத்தான் தருமேயன்றி தெளிவைத் தராது. ஆனால் சுவிசேஷம் ஒரு மதத்தையல்ல, ஒரு உறவு முறையைத்தான் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. தேவனையும் மனிதனையும் அது ஒப்புரவாக்கி அப்பா-பிள்ளை என்ற ஒரு குடும்ப உறவுக்குள்ளாக இணைக்கிறது. தேவனையும் மனிதனையும் மட்டுமல்ல, மனிதனையும் மனிதனையும் சகோதர உறவுக்குள் வைத்து, சகல மனிதரையும் அன்பின் கயிறுகளால் கட்டுகிறது.

நீங்கள் சத்தியத்தை நன்கு தியானித்துப் பாருங்கள் அதில் பக்கத்துக்குப் பக்கம் “ராஜா, ராஜ்ஜியம், சிங்காசனம், செங்கோல், ஆளுகை, அதிகாரம்” என அரசியலை நிறைய பேசுகிறது. அல்லது “விதைப்பு அறுப்பு, கொடுத்தல், சமநிலைப் பிரமாணம்” என நிறையவே வணிகத்தையும் பேசுகிறது. அல்லது “சுயத்துக்கு மரித்தல், பரிசுத்தம், ஐக்கியம்” என உறவு சார்ந்த தெளிவான ஆன்மீகத்தை இன்னும் நிறையவே பேசுகிறது. ஆனால் கொஞ்சம்கூட மதத்தைப் பற்றிப் பேசவில்லை.

வேதத்தை சுருங்கக் கூறுக. முதல் ஆதாம் தன்னுடைய தவறால் தன்னுடைய ஒட்டுமொத்த சொத்துக்களையும் சாத்தானுக்கு விற்றுப்போட்டான். ஆளவேண்டிய அவன் சந்ததி அடிமையானது. இரண்டாம் ஆதாம் வந்து ஒரு ஒப்பற்ற பணையத்தைக் கொடுத்து அடிமைகளை மீட்டு மீண்டும் அவர்களை அரசாள வைக்கிறார். இதில் ஒரு புனிதமான அரசியலும், தெய்வீக வணிகமும் மட்டுமே இருக்கிறது. மதம் இதில் எங்கே இருக்கிறது?

மனுக்குலம் உயிர்வாழ ஒரு புனிதமான அரசியல் கட்டமைப்பும், தெய்வீக வணிகமுறையும் தேவை. மதமோ அம்மஞ்சல்லிக்குப் பிரயோஜனமில்லாதது.