இந்தப் பதிவை சபை இன்றிருக்கும் நிலையை மனதில் கொண்டு வாசித்தால் உங்களால் ஜீரணிக்க முடியாது. சபை எப்படி இருக்க வேண்டுமோ அந்த நிலையில் நின்று வாசித்துப் பாருங்கள். அந்த நிலையை நாம் விரைவில் அடையத்தான் போகிறோம். நமது பெலத்தால் அல்ல, தேவ பெலத்தால்!
நான் இந்த பூமியில் பிரிவினையை உண்டாக்க வந்தேன் (லூக்கா 12:51) என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொன்னார். இங்கு பிரிவினை என்பதன் பொருள் பகையை ஏற்படுத்துதல் என்பதல்ல. ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்திடமிருந்து ஏதேனும் ஒரு காரணியின் (factor) அடிப்படையில் வேறு பிரிந்திருப்பது. இத்தகைய பிரிவினையை ஏற்படுத்துவது சாமானியர்களால் நடக்கக்கூடிய காரியமல்ல, யாரால் இந்த சமுதாயத்தில் ஒரு பெரிய தாக்கத்தை(influence) ஏற்படுத்த முடியுமோ அவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது. கர்த்தராகிய இயேசு தன் வாழ்நாளில் அப்படிப்பட்ட தாக்கத்தைத்தான் ஏற்படுத்தியிருந்தார், நம்மையும் அப்படிப்பட்ட தாக்கத்தை உண்டாக்கும்படிக்கே அழைத்திருக்கிறார் (மத்தேயு 5:13,14).
ஊழல் கட்சியாக இருந்தால்கூடப் பரவாயில்லை என்று சகித்துக்கொண்டு இன்று அரசியலில் ஏதேனும் ஒரு கட்சியை சார்ந்து கொண்டு நிற்கும் நிலையில் இன்று சபை உள்ளது. ஆனால் இதுவல்ல தேவதிட்டம்! கட்சிகளைச் சார்ந்து சபையல்ல, சபையைச் சார்ந்தே கட்சிகள் என்ற நிலைக்கு தேசத்தின் அரசியல் களம் தலைகீழாகப் புரளவேண்டும். சபையின் பக்கம் நிற்கும் கட்சிகள், சபைக்கு எதிராக நிற்கும் கட்சிகள் என்று அரசியல் உலகமானது சபையை மையமாகக் கொண்டு பிரியும் சூழல் ஏற்பட வேண்டும். இது எப்படி சாத்தியம்? நாம் ஆத்தும ஆதாயத்தையும், தேவனை ஆராதிப்பதையும் விட்டுவிட்டு அரசியல் செய்ய வேண்டுமா? நிச்சயமாக இல்லை… தேவ ராஜ்ஜியத்தின் தாக்கம் சமுதாயத்தின் தேசத்தின் கல்வி, கலை, வணிகம், அரசியல், பண்பாடு அனைத்து மட்டங்களிலும் வலுவாகப் பிரதிபலிக்கும் நிலை வரும்போது இம்மாற்றம் தானாக நிகழும். அதற்கான வாய்க்காலாக நம்மைத்தான் தேவன் வைத்திருக்கிறார்.
விசுவாசிகள் என்றால்; ஏதோ பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு, இந்த உலகை விட்டு பிரிந்து ஏதோ ஒரு மூலையில் கூனிக் குறுகி வாழ்ந்துவிட்டு மரணம் வந்தவுடன் பரலோகம் சென்று சேரும் மந்தையல்ல, பரலோக அரசரின் பூலோக அலுவலகமே சபை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆளுகை சட்டப்படி நம்மிடம் திரும்பி 2000 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாம் இன்னும் (அறிவில்) குழந்தைகளாக இருப்பது மட்டுமே இங்கு பிரச்சனை. அரச குடும்பத்துக் குழந்தை வளர்ந்து இளைஞனாகும்போது அவன் தானே சென்று அரியணையை சுதந்தரித்துக் கொள்வான். வேத வசனமாகிய ஞானப்பாலைக் கொடுத்து குழந்தைகளை குமரர்களாக வளர்த்தெடுக்கும் பொறுப்பே இன்றைய போதகர்களுக்கு பிரதானமாக கையளிக்கப்பட்டிருக்கிறது.
“உன் எதிரி உன் தேசத்தை ஆள்கிறான்” என்று ஒரு அரச குடும்பத்துப் பிள்ளைக்கு அறிவிப்பது “அவன் ஆளுகையை ஏற்றுக்கொள்” என்று கற்றுக் கொடுப்பதற்காக அல்ல, அவனிடமிருந்து உன் உரிமைச் சொத்தாகிய இராஜ்ஜியத்தைப் பிடுங்கிக்கொள் என்று உலுக்கி விடுவதற்கே! அப்படித்தான் “இந்த உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது” என்ற வசனமும் “உனக்குரிய ஆளுகை அந்தகார அதிபதிக்குப் போய் விட்டது எனவே நீ ஒதுங்கி வாழு” என்று அமர்த்தி வைக்கும் நோக்கில் அல்ல, “தூசியை உதறிவிட்டு எழும்பு!” என்று தூக்கிவிடும்படிக்கே எழுதப்பட்டிருக்கிறது!
நாம் ஆராதனை செய்யமட்டுமல்ல, ஆளுகை செய்யவும் அழைக்கப்பட்டவர்கள்! இதன்மூலம் கர்த்தருடைய பிள்ளைகள் அரசியலில் இறங்க வேண்டும், அல்லது பதவிகளுக்கு வர வேண்டும் என்று கூறவில்லை என்பதை மறுபடியும் கூறுகிறேன், அரசியலில் ஆர்வமுள்ள தேவபிள்ளைகள் தேவ பெலத்தோடு அதில் இறங்கினால் நல்லதுதான், அப்படி அநேகரை கர்த்தர் எழுப்புவாராக! ஆனால் இக்கட்டுரையின் மையப்பொருள் நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக சபை மாற வேண்டும் என்பது மாத்திரமே. சினிமாவுக்கும், அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? இந்த தேசத்தில் சினிமா எப்படி அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகிறது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! தேசத்தை ஆளும் தலைவர்களும் அதிகாரிகளும் சபையிடம் ஆலோசனை பெற்ற பிறகே சட்டங்களை நிறைவேற்றும் நிலை வர வேண்டும். வேதாகமத்தின் நியாயாதிபதிகளும், தீர்க்கதரிசிகளும், இவ்வளவு ஏன், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்கூட ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பியூரிட்டன்கள் என்கிற பக்தர்களின் கூட்டம் அப்படித்தான் அரசியலில் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியிருந்தார்கள்.
தேவன் சபையைப் பிரகாசிப்பிக்கும் நாள் ஒன்று வரும், அப்போது நாமும் மோசே போல நிமிர்ந்து நின்று உலகத்தை நோக்கிப் பார்த்து “கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் எம்மிடத்தில் சேரக்கடவர்கள் (யாத் 32:26)” என்று வைராக்கியமாக அறிவிக்கும் நாளில் நல்லொதொரு பிரிவினையை உலகில் உண்டாக்கும் மாபெரும் காரணியாக இருப்போம். ஏழை எளியவர்களின் நியாயம் புரட்டப்படுவதையும், நீதி மரித்துப் போனதையும், நயவஞ்சகர்களும் அடிமைகளும் நாட்டை ஆள்வதை எத்தனை நாள்தான் பொறுத்துக் கொள்வது?
நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது (ஆமோஸ் 5:24 )
சகோ.ஜெயராஜ் விஜய்குமார்