சகோ.விஜய்
ஆதாம் – ஏவாள்: கனி புசித்தால் கண் திறக்கும் என்றது சர்ப்பம் உடனடியாக கண் திறந்ததா? “ஆம்” – ஆனால் முடிவில் மனுக்குலம் பெற்றது சாபமே! தேவன் விலக்கியதை வைராக்கியமாய் விலக்குக!
நோவா: அழிவு வருகிறது பேழை செய் என்றார் உடனடியாக அழிவு வந்ததா? “இல்லை” – ஆனால் முடிவில் மனுவர்க்கம் காக்கப்பட்டது! தாமதம் ஏற்படினும் அவர் இட்டபணி முடித்திடுக!
ஏசா: புத்திர பாகத்தைவிட பயற்றங்கூழ் இனித்தது. உடனடியாகப் பெற்றானா? “ஆம்” – ஆனால் முடிவில் ஆகாதவனென்று தள்ளப்பட்டான்! ஆசிகள் அற்பமானவை அல்லவென்று அறிக!
யோசேப்பு: தேவன் எதிர்கால தரிசனங்கள் கொடுத்தார். உடனடியாக அவை நிறைவேறிற்றா? “இல்லை” – ஆனால் முடிவில் யோசேப்பு பெற்றது கிரீடம்! தேவன் தரும் தரிசனத்தை தயங்காமல் தொடர்க!
இஸ்ரவேலர்: நியாயாதிபதியல்ல ராஜாவே தேவையென வாதிட்டனர். உடனடியாகப் பெற்றார்களா? “ஆம்” – ஆனால் முடிவில் அதே ராஜாக்களால் வழிகெடுக்கப்பட்டார்கள்! தேவன் தருவதே உகந்ததெனக் கொள்க!
எரிகோ கோட்டை: ஏழுநாள் சுற்றிவந்து எக்காளம் ஊதச் சொன்னார் உடனடியாக இடிந்ததா? “இல்லை” – ஆனால் முடிவில் தகர்க்கவியலாக் கோட்டை தரைமட்டமானது! எதிர்மறைச் சூழலிலும் விசுவாசம் காக்க!
தாவீது: அதிகார போதையில் பத்சேபாளை இச்சித்தான்! உடனடியாகக் கிடைத்தாளா? “ஆம்” – ஆனால் முடிவில் துதி வீரன் வாழ்வில் கரும்புள்ளி விழுந்தது! பிறன்மனை நோக்கா பேராண்மை காக்க!
சிம்சோன்: பரிசுத்தப் பாதை துணிகரமாய் விலகினான் உடனடியாக வீழ்ந்தானா? “இல்லை” – ஆனால் முடிவில் இகழப்பட்டு இழிவைச் சுமந்து மரித்தான்! எவ்விலை கொடுத்தேனும் பரிசுத்தம் காக்க!