அற்புதம் = பலம்

ஒரு ஆத்துமாவை ஆதாயம் பண்ணுவதற்கு சுவிசேஷம் மட்டுமே போதுமானது. அற்புத அடையாளங்கள் தேவையில்லை என்று பலர் பிரசங்கிப்பதைக் கேட்டிருப்போம். சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது(ரோமர் 1:16) என்பது உண்மைதான். அது ஆத்துமாக்களை வார்த்தையினால் கீழ்ப்படியப்பண்ணுவது. ஆனால் ஒரு மனிதனை செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ண வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார்.
புறஜாதியாரை “வார்த்தையினாலும், செய்கையினாலும்” கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை (ரோமர் 15:18)
அற்புத அடையாளங்களை பலம் என்று பவுல் குறிப்பிடுகிறார். சுவிசேஷமும் பிரசங்கிக்கப்பட வேண்டும், அற்புத அடையாளங்களும் நடக்க வேண்டும். அதே நேரத்தில் அந்தப் பிரசங்கியார் தன்னைக் கொண்டு தேவன் நடப்பித்தவைகளை சாட்சியாக அறிவிக்கவும் வேண்டுமாம். இதை யாராவது செய்தால் சுயவிளம்பரம் என்று குற்றம் சாட்டுகிறோம். ஆனால் இந்த மூன்றும் நடந்தால்தான் சுவிசேஷம் பூரணமாக அறிவிக்கப்பட்டதாக அர்த்தம் என்று பவுல் சொல்லுகிறார்.
…இப்படி(முந்தய வசனத்தில் சொன்ன விதமாக) எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் “பூரணமாய்” பிரசங்கித்திருக்கிறேன் (ரோமர் 15:19).
சிலர் போலியான அற்புதங்களைச் செய்து மக்களை வஞ்சிக்கிறார்கள் என்பதற்காக நாம் அற்புத அடையாளங்களை விட்டு ஓடக்கூடாது. சிலர் தங்களை மகிமைப்படுத்திக் கொள்வதற்காக தங்கள் ஊழியத்தில் நடந்த காரியங்களை மிகைப்படுத்தி சுயதம்பட்டம் அடிக்கிறார்கள் என்பதற்காக நாம் தாழ்மை என்ற பெயரில் சாட்சி சொல்லாமல் இருக்கக்கூடாது.
சிலர் ஒரு காரியத்தை தவறாக செய்கிறார்கள் என்பதற்காக நாம் அதை தவிர்க்கக்கூடாது. நாம் அதை சரியாகச் செய்து காட்ட வேண்டும். அதையே தேவன் விரும்புகிறார்