கர்த்தராகிய தேவன் தன்னுடைய எகிப்தில் அடிமையாயிருந்த தன்னுடைய ஜனங்களை விடுவிக்கும்படி எகிப்தில் பத்து வாதைகளை அனுப்பினார். ஆனாலும் அந்த வாதைகளில் ஒன்றும் அதே நாட்டுக்குள் தேவபிள்ளைகள் வசித்த கோசேனை அணுகாதபடி பாதுகாத்தார்.
எகிப்தின் மந்திரவாதிகளும் அதில் சிலவற்றை தங்கள் மந்திர அறிவால் செய்துகாட்டினர். ஆனால் அவர்களால் எகிப்தை அந்த வாதைகளுக்கு விலக்கி கோசேனை மட்டும் அவை தாக்கும்படி செய்யமுடியவில்லை.
எகிப்திய மந்திரவாதிகளுக்கு இருந்த பில்லி சூனிய சக்தி ஒருவித அறிவுதான். Occult என்ற வார்த்தைக்கு மறைக்கப்பட்ட அறிவு(knowledge of the hidden) என்றுதான் பொருள். வாதைகளை உருவாக்க அறிவு போதும், ஆனால் அதை ஒரு பகுதியை மட்டும் சேதப்படுத்தி இன்னொரு பகுதியை அண்டவிடாமல் தடுக்க “அதிகாரம்” வேண்டும். அவர்களிடம் அறிவு இருந்தது, அதிகாரம் இல்லை.
நம்முடைய தேவனிடம் வண்டுகளையும், வெட்டுக்கிளிகளையும், தவளைகளையும் பிறப்பிக்கும் அறிவும், அதை கோசேனை மட்டும் அண்டவிடாமல் தடுக்கும் அதிகாரமும் இருந்தது. அவர் கோள்களும், நட்சத்திரங்களும் சுற்றிவரும் பாதைகளை வகுக்கிறவர், கடலின் அலைகளுக்கு எல்லைகளைக் குறிக்கிறவர் அல்லவா? அவர் கட்டளையிட்ட பாதைகளில் கோள்கள் சுற்றிவரும், அவர் சொன்ன இடத்தில் அலைகள் அடங்கித் திரும்பிச்செல்லும்.
அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும் (சங்கீதம் 33:9)
உலக மக்கள் அறிவின் பின்னால் மயங்கிச் செல்லுகிறார்கள். அதிகாரமில்லா அறிவு ஆபத்தானது. அதனால்தான் பிசாசுகளை வைத்து பில்லி சூனியம் செய்கிறவர்கள் அந்தப் பிசாசுகளின் கைகளிலேயே மடிகிறார்கள். நம்மை விசாரித்து, நம்மைப் பாதுகாக்கிற தேவனோ அளவற்ற அறிவும், எல்லையில்லா அதிகாரமும் கொண்டவர். எனவே அவரது பலத்த கைகளில் நாம் நிம்மதியாக இளைப்பாறலாம்.