விஜய்குமார் ஜெயராஜ்

அப்போஸ்தலர்களிடம் மோதிய பொய்

இந்த முப்பரிமாண உலகம் தீமையானது. அதை உன்னதமான நல்ல கடவுள் படைக்கவில்லை. நல்ல கடவுள் தீமையான உலகை எப்படி படைத்திருக்க முடியும்? உன்னதமான கடவுள் ஏயோன்கள்(Aones) என்னும் இடைநிலைக் கடவுள்களைத்தான் படைத்தார். அந்த ஏயோன்கள் ப்ளெரொமா(Pleroma) என்ற கடவுளின் ஆவிக்குரிய மண்டலத்தில் வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட ஏயோன்களில் ஒன்றுதான் அறிவுக்கடவுளாக சோஃபியா.

அறிவுக்கடவுளாக இருந்தாலும் சோஃபியா ஆர்வக்கோளாறில் சில தவறுகள் செய்ய, அது ப்ளெரொமாவில் இருந்து வெளியேற்றப்படுகிறது. அதற்குப் பின் அது தன்னிடமுள்ள அறிவைப் பயன்படுத்தி டெமியர்ஜ்(Demiurge) என்ற உபகடவுளைப் படைக்கிறது. அந்த உபகடவுள் அறிவற்றது, பேராசை கொண்டது, ஆணவம் மிக்கது. அந்த உபகடவுளுக்கு உன்னதமான நல்ல கடவுளைப் பற்றியோ, ஏயோன்கள் வசிக்கும் ப்ளெரொமா பற்றியோ தெரியாது. எனவே அது தானே சர்வ வல்லமையுள்ள ஒரே கடவுள் என்ற மமதையில் தனக்கென ஆர்கன்கள்(Archons) சேவகர் கூட்டத்தைப் படைக்கிறது. பின்னர் ஆர்க்கன்களின் உதவியோடு நாம் காணும் இந்த முப்பரிமாண உலகையும் படைக்கிறது.

தீமையான இந்த முப்பரிமாண உலகில் மனிதர்களும் உருவாக்கப்படுகிறார்கள். தீமையான மனிதர்களாக அவர்கள் இருந்தாலும் அவர்கள் ஆவியில் ஒரு தெய்வீகத் தீச்சுடர் உள்ளது. அவர்களில் நன்மையானது அது மட்டுமே. அந்த தெய்வீகத் தீச்சுடரை தூண்டி அதற்கு விழிப்புண்டாக்கினால் மட்டுமே மனிதன் இரட்சிப்பைக் கண்டடைய முடியும்.

டெமியர்ஜைப் படைத்ததினால் தான் பெரிய தவறு செய்துவிட்டதாக சோஃபியா உணர்கிறது. எனவே தான் செய்த தவறுக்கு பரிகாரம் தேடும் வகையில் மனிதர்களின் தெய்வீகத் தீச்சுடரை தனது மறைக்கப்பட்ட ஞானத்தினால் தூண்டி, அவர்களை இரட்சிப்படைய வைக்க சோஃபியா இன்றுவரை முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

சோஃபியா மட்டுமன்றி ப்ளெரோமாவில் வாழும் பல ஏயோன்களும் பூமிக்கு வந்து மனிதர்களுக்கு மறைக்கப்பட்ட ஞானத்தை போதித்து அவர்களை மீட்புக்குள் நடத்த முயன்றுவருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இயேசுகிறிஸ்து. பரிசுத்தமான எந்த ஏயோனும் அசுத்தமான, தீமையான மனித உடலைத் தரித்துக்கொள்ள முடியாது. எனவே இயேசுகிறிஸ்துவும் மனித உடலைத் தரித்துக்கொள்ளவில்லை. மனித உடலாக அவரிடம் மக்கள் கண்டது ஒரு மாயத்தோற்றம் மட்டுமே. அது உண்மையான உடல் அல்ல. மக்களோடு மக்களாக தன்னைக் காட்டிக்கொள்ள அந்த மாயமான உடலோடு அவர் காணப்பட்டார். எனவே அவர் சிலுவைப் பாடுகளும், உயிர்தெழுதலும்கூட மாயக்காட்சிகளே!

என்ன தலை சுற்றுகிறதா?…

முதல் நூற்றாண்டு திருச்சபை ஒவ்வொருநாளும் இந்த அந்தகார உபதேசத்துடன்தான் ஆக்ரோஷமாக மோத வேண்டியிருந்தது. அந்தக் காலத்து ஆசியா மைனரில் இதுதான் பெரும்பான்மை மதம். இதன் பெயர் Gnosticism, தமிழில் இதை ஞானவாதம் என்று கூறுவார்கள்.

அதுமட்டுமல்ல சோஃபியாவால் உருவாக்கப்பட்ட டெமியர்ஜ்தான் பழைய ஏற்பாட்டின் கர்த்தர் என்பது இம்மதத்தின் வாதம். கி.பி மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் அரசியல் உலகில் கிறிஸ்தவத்தின் கை ஓங்கியபின்பு அது இந்த ஞானவாதத்தை தேடித்தேடி வேட்டையாடி அழித்துவிட்டது. ஆனால் இன்று மீண்டும் பல புதிய கூறுகளுடன் நியூ-ஏஜ் ஞானம் என்ற பெயரில் அது மீண்டும் உலகில் தழைக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்த ஞானவாதம் ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்ட மதம் அல்ல, இது பண்டைய கிரேக்க-ரோமானிய பாரம்பரியங்களை உள்ளடக்கியது. இது தனது சமகாலத்திய நம்பிக்கைகள் அனைத்தையும் தனக்குள் உள்வாங்கி செரித்துவிடும். அப்படித்தான் அக்காலத்தில் வேகமாக பரவிவந்த கிறிஸ்தவத்தை உள்வாங்கி, கிறிஸ்துவையும் ஒரு ஏயோனாக ஏற்றுக்கொண்டது. ஆனால் மாம்சத்தில் வந்த கிறிஸ்துவை மறுதலித்தது. அவர் உடல் ஒரு மாயத்தோற்றம் என்றது. எனவேதான் யோவான் தனது நிருபத்தை ஆரம்பிக்கும்போதே “எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம் (1 யோவா 1:1) என்று எழுதுகிறார்.

அதுமட்டுமல்ல, “மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே” என்று 1 யோவா 4:3-இல் எழுதியிருக்கிறார். ஏன் அந்திகிறிஸ்துவானவன் மாம்சத்தில் வந்த கிறிஸ்துவை ஜனங்களின் கண்களுக்கு மறைக்க முயற்சிக்கிறான்? அவன் எதை நம்முடைய கண்களுக்கு மறைக்க முயற்சிக்கிறானோ அதில்தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

நமது எதிரியாகிய அந்திகிறிஸ்து மாம்சத்தில் வந்த கிறிஸ்துவை நம்மிடமிருந்து மறைக்க இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, மாம்சதேகத்தில் அவர் வந்து அடைந்த பாடு மரணத்தை விசுவாசிப்பதில்தான் இரட்சிப்பு அடங்கியிருக்கிறது. எனவே குமாரன் மாம்சத்தில் வெளிப்பட்ட உண்மையை மறைப்பதன் மூலம் மனிதன் இரட்சிப்படைவதையே தடுக்க முடியும்.

இரண்டாவதாக பிதாவானவர் திரித்துவத்தில் இரண்டாமானவரான தம்முடைய குமாரனை மாம்ச தேகத்தில் இந்த பூமிக்கு அனுப்பி, அவரை பாடு மரணத்தின் வழியாக நடத்தி, அவரை உயிர்தெழச்செய்து, பரமேற்றி தம்முடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் அமரவைத்துக்கொண்டார். அவர் இப்போது மனிதர்களின் பிரதிநிதியாகத்தான் மறுரூபமாக்கப்பட்ட மனித தேகத்தோடு சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். அதாவது இப்போது திரித்துவத்தில் இரண்டாமானவராக மனிதர்களின் பிரதிநிதி இருக்கிறார். அவர் மற்ற மனிதர்களையும் தன்னுடன் இணைத்துக்கொள்ளப்போகிறார். இந்த உண்மையை மட்டும் மனிதர்கள் புரிந்துகொண்டால்???…

அதனால்தான் அந்திகிறிஸ்துவும் அவன் உருவாக்கிய மதங்களும், தத்துவங்களும் மனிதனையும் தேவத்துவத்தோடு இணையவிடாமல் தடுத்து வைத்திருக்கின்றன. மனித தேகம் தீட்டுள்ளது, தீமையானது என்று போதிக்கின்றன. “தொடாதே, ருசிபாராதே…” என துறவரத்தை போதிக்கின்றன. தேவனுக்கும் மனிதனுக்குமிடையே தொங்கிய அந்தத் திரைச்சீலையைத்தான் கல்வாரி சிலுவை மேலிருந்து கீழாக கிழித்து எறிந்தது. மாம்சமான மனிதன் தேவத்துவத்தோடு இணையவேண்டுமானால் அவன் மாம்சமாக வந்த தேவகுமாரனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவேதான் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை மட்டுமே பிரசங்கிப்பதில்(1 கொரி 2:2) அப்போஸ்தலர்கள் உறுதியாக இருந்தனர். சத்துரு எதை நம்முடைய கண்களுக்கு மறைக்க நினைக்கிறானோ அதை தியானிப்பதில்தான் நம்முடைய வெற்றி இருக்கிறது. நம்முடைய தியானம் மாம்சத்தில் வந்து, சிலுவையில் அறையப்பட்ட தேவகுமாரன் மீதே, அவர்மீது மட்டுமே இருக்கட்டும்! அந்திகிறிஸ்து உண்டாக்கிய இந்த உலகக் கட்டமைப்பின் மீது சபை அடையப்போகும் மாபெரும் வெற்றி அந்த தியானத்தில்தான் ஆரம்பிக்கிறது.

Exit mobile version