சபை

அது பேழை, இதெல்லாம் பிழை (பாகம்-2)

By Vijaykumar Jayaraj

June 29, 2011

முதல் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்

என்ன சொல்கிறீர் நண்பரே! வேறு பேழையா?

ஆம்!, ஆச்சரியப்படாதீர்கள். ஜலப்பிரளயம் வரப்போகிறது கர்த்தரிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறவர்களும் அவரை ஆராதிக்கிறவர்களும் பேழைக்குள் அடைக்கலம் புகுந்து அழிவுக்குத் தப்புவிக்கப்படுவார்கள், கர்த்தரை புறக்கணிக்கிறவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதுதானே விஷயம்?

ஆமா! நண்பர்கள் தலையாட்டினார்கள்.

அப்ப இதை நோவா செய்தால் என்ன நம்ம செய்தால் என்ன? போற போக்கைப்பார்த்தால் நோவா சொதப்பப் போகிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. கர்த்தருக்கு ஆத்துமாக்கள் தேவை, நோவாவின் பிரசங்கத்தால் ஒருவனும் இரட்சிக்கப்படப்போவதில்லை. நாம் நோவாவின் கடினப்பிரசங்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லையானால் கடைசியில் நம்மையும் கூட பேழைக்குள் சேர்க்கமாட்டார், நாம் குடும்பத்தோடு சாகவேண்டியதுதான். நோவாவால் செய்யமுடியாததை நாம் செய்தாக வேண்டும். நம்மையும் காப்பாற்றி முடிந்தவரை ஜனங்களையும் காப்பாற்றவேண்டும்.

ஆறு நண்பர்களும் ஒருவர் கைமீது ஒருவர் கைவைத்து சத்தியம் செய்து கொண்டார்கள். பின்னர் வட்டமாக முழங்கால்ப்படியிட்டு ஜெபித்தார்கள்.

உடனடியாக புதிய பேழைக்கான வேலைகள் ஆரம்பமானது. நண்பர்கள் பக்கத்து ஊர்களில் இருக்கும் தங்கள் பணக்கார நண்பர்களுக்கு கடிதம் எழுதினார்கள் அக்கடிதத்தில் உலக அழிவைப்பற்றியும் தாங்கள் பேழை கட்டப்போவதைப் பற்றியும் எழுதி பணத்துக்கான வேண்டுகோளையும் மறைமுகமாக விடுத்திருந்தார்கள். ஆனால்  அக்கடிதத்துக்கு சில பணக்கார நண்பர்களிடமிருந்து மாத்திரம் உங்கள் பணிக்காக ஜெபிக்கிறேன்! என்று பதில் வந்தது. இதனால் இவர்களுக்கு பெருத்த ஏமாற்றமானது, உடனடியாக ஒரு உபவாசக் கூட்டத்தை ஆயத்தம் பண்ணினார்கள்..

போஸ்டர்கள், விளம்பரங்களோடு ஒரு அனல் பறக்கும் உபவாசக்கூட்டம் ஆரம்பமானது. கைகளைத் தட்டி பாடல்கள் உரத்த சத்தத்தோடு பாடப்பட்டன, நண்பர்கள் அறுவரில் மூத்தவர் ஒரு வைராக்கியமான செய்தியைப் பகிர்ந்து கொண்டார். செய்தியைத் தொடர்ந்து மூன்று மணி நேரம் தொடர் ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. கண்ணீரோடும் உரத்த சத்ததோடும் நண்பர்களும் அவர்கள் குடும்பத்தாரும் ஜெபித்தார்கள். இந்த மூன்று மணிநேர ஜெபத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் முழுக்க முழுக்க புதிய பேழை கட்டும் வேலைக்காக மாத்திரமே ஜெபிக்கப்பட்டது. பணத்தேவைகள் சந்திக்கப்படவேண்டும், போதுமான மரம், மற்ற உபகரணங்கள் கிடைக்கவேண்டும், குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைக்க வேண்டும் இப்படியொரு நீண்ட பட்டியல் வாசிக்கப்பட்டு ஜெபிக்கப்பட்டது. ஆனால் இதே நோக்கத்துக்காக ஏற்கனவே தியாகத்தோடு பேழையைக் கட்டிக்கொண்டிருக்கும் நோவாவுக்காகவோ, அவரது பேழைக்காகவோ ஒரு சிறு ஜெபம் கூட ஏறெடுக்கப்படவில்லை. அழியப்போகும் ஆத்துமாக்களுக்காக உள்ளத்தின் ஆழத்தில் வெடித்துக் கிளம்பும் கதறலும் இல்லை.

இறுதியில் நண்பர்களில் மூத்தவர் எழுந்தார். நண்பர்களே! ஜெபவேளையில் ஆவியானவர் என்னோடு இடைப்பட்டார். அவர் சொன்ன காரியமாவது. என் பிள்ளைகளே நீங்கள் ஆறு பேராய் இவ்வளவு பெரிய பாரத்தைச் சுமக்கலாகாது எனவே உங்களுக்கு ஊழிய பங்காளரைத் தருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்தப் பேழை கட்டிமுடிக்க ஆகும் செலவு ரூபாய் 5 லட்சம். இதற்கு ரூபாய் 25000 கொடுக்கும் 20 பங்காளர்களை ஏற்படுத்தித் தருவேன். நானே அவர்களது இருதயத்தை ஏவுவேன் என்றும் எனது பணிக்குக் கொடுப்பதன் நிமித்தம் அவர்களது தொழில்கள் 100 மடங்கு ஆசீர்வதிக்கப்படும் என்றும் கர்த்தர் எனக்கு வெளிப்படுத்தினார். அல்லேலூயா!! கரங்களைத்தட்டி கர்த்தரை  மகிமைப்படுத்துவோமா! என்றவுடன் அனைவரும் உற்சாகமாக கரங்களைத்தட்டி அல்லேலூயா!! என்று ஆர்ப்பரித்தார்கள்.

இதே வேளையில் நோவா வீட்டிலும் ஒரு உபவாசஜெபம் நடைபெற்றது அவர்கள் உபவாசமிருந்தது வீட்டுக்கு வெளியில் பேழை கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்குக் கூடத் தெரியாது. அவர்களுக்கெல்லாம் நல்ல உணவைச் சமைத்துக் கொடுத்துவிட்டு நோவாவின் மனைவி பசியுடன் அமைதியாக வந்து ஜெபத்தில் உட்கார்ந்து கொண்டார், அழியப்போகும் உலகிலிருந்து தங்களை தெரிந்தெடுத்த கிருபைக்காக நன்றி சொல்லியும், உணர்வின்றி அழியும் பிற மானிடருக்கு தேவன் கிருபையளித்து அவர்களையும் காக்கக் கோரியும் நோவாவின் வீட்டார் கண்ணீருடன் ஜெபித்தார்கள்.

இப்போது புதிய பேழையைக் கட்டும் நண்பர்கள் தங்களது பணக்கார நண்பர்களுக்கு தங்கள் அடுத்த கடிதத்தை அனுப்பினார்கள். அது வழக்கமான கடிதம்போல இல்லாமல் ஒரு விளம்பரம் போல வடிவமைக்கப்பட்டது. கடிதத்தின் தலைப்பு “விதைத்தலும் அறுத்தலும்” என்பதாகும். முன்னுரையில் விதைப்பின் மேன்மை என்பது என்ன என்றும், விதைத்ததை எப்படி பலமடங்கு அறுவடை செய்வது என்றும் விளக்கப்பட்டது. முடிவில் கர்த்தர் உங்களைக் அழிவுக்கு விலக்கிக் காக்கும்படியும், பன்மடங்கு ஆசீர்வதிக்கும்படியும் ஒரு திட்டத்தை எங்களுக்குத் தந்துள்ளார். அத்திட்டத்தின் பெயர் “ஆசீர்வாதப் பேழை” என்பதாகும். இத்திட்டத்தின்படி பேழைகட்ட ஆகும் செலவாகிய 5 இலட்சத்தைத் தாங்கும் 20 பங்காளர்களைக் கர்த்தர் எழுப்புகிறார். இத்திட்டத்தில் விதைப்பவர்கள் 100 மடங்கு ஆசீர்வாதத்தை தங்கள் தொழிலில் அறுவடை செய்வார்கள். அது மாத்திரமல்ல! வரப்போகும் பேரழிவுக்கு அவர்களும் தப்பி பல ஆத்துமாக்களை காப்பாற்றும் மாபெரும் பரலோகத்தின் பணியிலும் இணைவார்கள். நீங்களும் அந்தப் பங்காளராக முடியும். கர்த்தர் உங்கள் இருதயத்தை ஏவுவாரானால் இன்றே ரூபாய் 25,000-ஐ அனுப்பி பங்காளராக இணையுங்கள். அப்போது நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பாக்கியவான்களாய் இருப்பீர்கள்! என்று பேழையின் வரைபடத்துடன் கூடிய அட்டகாசமாக வடிவமைக்கப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டது.

இரண்டு வாரங்களுக்குள் 35 பங்காளர்கள் இணைந்தனர். நண்பர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை! ஆம்! கர்த்தர் நிச்சயமாகவே நம்முடைய ஊழியத்தை ஆசீர்வதித்திருக்கிறார் என்று சொல்லி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். பணம் கொடுத்த பணக்காரர்களில் ஒருவர் கொப்பேர் மரம் கிடைப்பது சற்றுக் கடினம். அதை விட தேக்குமரமே நல்லது. நான் மிகப்பெரிய தேக்குமரக்காட்டுக்குச் சொந்தக்காரன் எனவே எனது சார்பில் உங்களுக்கு தேவையான தேக்குமரத்தைப் இலவசமாகவே கொடுக்கிறேன் என்று கடிதம் அனுப்பியிருந்தார், கடிதத்தைக் கண்டு நண்பர்களுக்கு தங்கள் கண்களைத் தங்களாலேயே நம்பமுடியவில்லை! தேவனுடைய அதிசயமான கிரியைகளைப் பாருங்கள்! என்று சென்ற இடங்களிலெல்லாம் சாட்சி சொன்னார்கள். தங்களுக்கு வழிகள் திறப்பதையும் தேவைகள் சந்திக்கப்படுவதையும் பார்த்து தேவன் நோவாவின் பேழையை அல்ல, தங்கள் பேழையைத்தான் அங்கீகரித்திருக்கிறார் என்று நம்பத்துவங்கினார்கள்.

பேழைக் கட்டுவதில் மும்மரம் காட்டினாலும் நண்பர்கள் அவ்வப்போது வெளியேபோய். வரப்போகும் பேரழிவு குறித்தும், பேழை கட்டுவதன் அவசியம் குறித்தும் பேழை கட்டும்போது அதிசயவிதமாக வழிகள் திறந்தது குறித்தும் பெருமையாகப் பிரசங்கித்தார்கள். தேவன் பேரழிவைக் குறித்து தங்களுக்கு வெளிப்படுத்தியதாகக் பொய் கூறினார்கள் நோவாவின் பெயர் அவர்களது பிரசங்கங்களில் மறைக்கப்பட்டது. அதுமட்டுமன்றி பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும் பேசுவது கணிசமாகக் குறைக்கப்பட்டது. பேழைக்குள் சேரவேண்டுமென்றால் கர்த்தரை தெய்வமென்று வாயால் அறிக்கையிட்டு பின்னர் குடும்பத்தில் ஒருவருக்கு தலைக்கு 100 ரூபாய் மாதச் சந்தாவாகச் செலுத்தினால் போதும் என்றும், ஜலப்பிரளயம் வரும் வரை வாரத்துக்கு ஒருமுறை பேழையில் வந்து கூடி கர்த்தரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நண்பர்களின் செயல் நோவாவை ரொம்பவே துக்கப்படுத்தியது. நண்பர்களைச் சந்தித்து அவர்களை எச்சரிக்கும்படியாக நோவா அவர்கள் வீடுகளுக்குப்போன போதெல்லாம் ஐயா ஜெபித்துக் கொண்டிருக்கிறார், வெளியூர்ப்பயணம் போயிருக்கிறார் என்று சொல்லிச் சொல்லி அவரை சந்திப்பதை அவரது நண்பர்கள் சாமர்த்தியமாகத் தவிர்த்தார்கள். அதுமாத்திரமல்ல நண்பர்கள் நோவாவிடம் வேலைசெய்யும் தொழிலாளர்களை கவர்ச்சிகரமான சம்பளத்தைக்காட்டி இழுத்துக் கொள்ளவே. நோவாவின் ஊழியர்களின் எண்ணிக்கை கால்வாசியாகக் குறைந்துவிட்டது. எனவே அவரது பேழை கட்டுமானப்பணி ஆமைவேகத்தில் நகர்ந்தது.

நோவாவின் தொழிலாளர்களில் சிலர் வந்து “ஐயா! நமது ஊரில் கொப்பேர் மரம்  இனி இல்லை, வெளியூரிலிருந்துதான் வரவழைக்க வேண்டும் அதற்கு அதிகமான செலவு பிடிக்கும் என்றார்கள். நோவா ”சரி! நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றார். நோவாவிடமிருந்த கையிருப்பு அப்போது கணிசமாகக் கரைந்து விட்டிருந்தது. அடுத்ததாக நிலத்தில் ஒரு பகுதியை விற்றுத்தான் கட்டுமானப்பணியைத் தொடரவேண்டும். தொழிலாளர்களை மேற்பார்வை செய்யும் ஊழியன் ஒருவன் வந்து ஐயா இப்போதிருக்கும் நிலையில் பேழையின் திட்டமிடப்பட்ட அளவைக்குறைத்துக்கொண்டு, கொப்பேருக்குப் பதிலாக சந்தையில் எளிதாகக் கிடைக்கும் வேறொரு மரத்தைக் கொண்டு கட்டினால் வேலையைத் தடைப்படாமல் நகர்த்தலாம் என்றான். நோவா அவனை நோக்கி. ”தம்பி! தேவன் கொடுத்த திட்டத்தை மாற்ற நாம் யார்? அவர் கொடுத்தது கொடுத்ததுதான். அவர் இந்த நாளைக்குள் கட்டிமுடிக்க வேண்டும் என்று எந்த காலகட்டத்தையும் நியமிக்கவில்லை. எனவே தாமதமானாலும் பரவாயில்லை. தேவைகளை அவர் அறிவார் அதை அவர் சந்திப்பார். கீழ்ப்படிவது மட்டுமே நம் வேலை” என்றார். பேழையின் கட்டுமானம் சில மாதங்கள் முற்றிலும் தடைப்பட்டது.

ஆசீர்வாதப் பேழையில் பங்காளராகச் சேர்ந்தவர்கள் சிலரது தொழிலில் எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கவே. தாங்கள் பங்காளராக இணைந்ததால் தேவன் தாம் வாக்கருளியபடியே 100 மடங்கு ஆசீர்வதித்துவிட்டார் என்று சாட்சி எழுதினார்கள். இது நண்பர்களால் அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டது. மற்ற பங்காளர்களுக்கோ தங்களுக்கு ஏன் இன்னும் அற்புதம் நடக்கவில்லை என்ற ஏக்கம் வாட்டியது. நண்பர்களிடம் வந்து அவர்கள் காரணம் கேட்கவே அவர்கள் அதற்கு அவர்களது விசுவாசக் குறைவே காரணம் என்று சொல்லி ”எப்படி விசுவாசத்தைப் பெருகச்செய்வது?” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு வகுப்பு தொடங்கி அதற்கும் அதிகமான பணத்தைக் கட்டணமாக வசூலித்தார்கள்.

இதற்கிடையில் ஒன்றரை வருடங்களுக்குள் ”ஆசீர்வாதப்பேழை” அற்புதமாகக் கட்டிமுடிக்கப்பட்டு அட்டகாசமான திறப்பு விழாவைக் கண்டது, பேழைக்கு அழகாக வர்ணம் பூசப்பட்டிருந்தது. நூறு மடங்கு ஆசீர்வதிக்கப்பட்டதாக சாட்சி எழுதியவர்களின் புகைப்படங்களும் கடிதங்களும் பிரேம் போடப்பட்டு பேழைக்கு வெளியில் அலங்காரமாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. பங்காளர்களின் எண்ணிகை அதிகமானது ஆனால் ஏனோ பேழைக்குள் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லை. அதன் காரணம் என்ன என்று நண்பர்களால் ஆராயப்பட்டு சில முக்கியக் காரணங்கள் கண்டறியப்பட்டன. ஜனங்களில் பெரும்பாலோனாருக்கு தேவன் மீதோ வரப்போகும் பேரழிவு பற்றியோ நம்பிக்கை இல்லை என்பது ஒரு காரணம். இன்னொன்று தாங்கள் விரும்பும் ஜனரஞ்சக அம்சங்கள் பேழையில் இல்லை என்பது அடுத்த காரணம். இதைக் களையும் வகையில் பேரழிவைக் குறித்து பேசுவதை முற்றிலும் குறைத்துக் கொள்ளவேண்டுமென்றும், ஜனங்களைக் கவர்ந்திழுக்க பேழைக்குள் இசைக்கச்சேரிகள், மேடைவித்தைகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை வாரந்தோறும் அரங்கேற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன் விளைவாகக் பேழையில் சேர இப்போது கூட்டம் அலைமோத ஆரம்பித்துவிட்டது.

ஆசீர்வாதப்பேழை நிறைந்து அடுத்ததாக இன்னொரு பேழை கட்டும் திட்டம் உருவானது. இரண்டாவது பேழைக்குப் பெயர் ”அடைக்கலப்பேழை”. இதற்கும் கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. விசேஷமாக பங்காளர்களுக்கு மரத்தால் செய்யப்பட்ட சிறிய பேழை ஒன்று தரப்பட்டது அந்தப் பேழைக்குள் தங்களது வீட்டுப்பத்திரம், தொழில் சம்பந்தமான ஆவணங்களை வைத்தால் அது கர்த்தரால் 100 மடங்கு ஆசீர்வதிக்கப்படும் என்ற பலே திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குள் ”அடைக்கலப்பேழை” திறப்புவிழாக்கண்டது. ஆசீர்வாதப்பேழைக்கு தலைவராக உள்ள மூத்த நண்பர் அடைக்கலப் பேழையைத் திறந்து வைத்துப் பேசினார். அடைக்கலப்பேழைக்கு தங்களில் ஒருவரைத்தலைவராக நியமிப்பார் என்று மற்ற நண்பர்கள் ஐவரும் ஆவலாய் எதிர்பார்த்திருக்க மூத்த நண்பரோ எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் தனது மூத்த மகனைத் பேழைத்தலைவராக நியமித்தார். நண்பர்கள் கொந்தளித்து விட்டார்கள். நாங்கள் இருக்கையில் உங்கள் மகனை எப்படித் தலைவராக நியமிக்கலாம்? இது அக்கிரமம்! அநியாயம்! சொத்துக்களைக் குடும்பமாக அபகரிக்கப் பார்க்கிறீர்கள்! என்று போர்க்கொடி தூக்கவே. மூத்த நண்பரோ ஆவியானவர் சொன்னதைத்தான் செய்தேன் என்று அமைதியாகப் பதில் கூறினார், மற்றவர்கள் அவர் சட்டையைப் பிடித்து ஆவியானவர் எப்படி உன்னிடம் பேசுவார் என்று எங்களுக்குத் தெரியாதா? எங்கள் படத்தை எங்களிடமே ஓட்டுகிறாயா? என்று எகிறினர்! விளைவாக நண்பர்கள் குழு இரண்டாக உடைந்தது.

நாளடைவில் நண்பர்கள் தங்களுக்குள் இனி சண்டை வேண்டாம் அவரவர் தனித்தனியாகப் பிரிந்து பேழை கட்டுவோம் என்று கூறி பிரிந்தனர் விளைவாக ஆரோக்கியப்பேழை, அற்புதப்பேழை, சமாதானப்பேழை, வல்லமையின் பேழை, செழிப்பின் பேழை என்று ஐந்து பேழைகள் பிறந்தன. அவரவர் தங்கள் தங்கள் பேழைகளுக்காக மிகக் கடினமாக உழைத்தனர். அவரவர் சம்பாதித்த பேழைகள் அவர்களது குடும்ப சொத்தானது. அவரவர் கட்டும் கிளைப்பேழைகளை அவரவர்களது பிள்ளைகளும் உறவினர்களும் பொறுப்பெடுத்துக் கொண்டனர்.

நோவா பேழையின் கட்டுமானப்பணியோ மிக மெதுவாக ஆனால் நேர்த்தியாக நடந்தது. இப்படியாக ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது. நோவா இப்போது முன்னைவிட இன்னும் தீவிரமாகப் பிரசங்கித்தார். போலிப்பேழைகளை நம்பாதீர்கள் அவை உங்களைக் கரைசேர்க்காது என்று கூறினார். மற்றவர்கள் பொறாமையில் சொல்கிறான் என்று அவரை இகழ்ந்தனர். நோவாவின் பேழை கட்டிமுடிக்கப்பட்டு உள்ளும் புறம்ப்பும் கீழ் பூசப்பட்டுக்கொண்டிருந்தது. அதற்குள் மற்ற பேழைகள் நூற்றுக்கணக்கில் பெருகிவிட்டன. பேழை கட்டும் பணிக்காக வங்கிகள் கடன் கொடுக்கத் துவங்கின. எனவே பலர் தங்கள் தொழிலைக் கைவிட்டுவிட்டு கடன் வாங்கி பேழைகட்ட தொடங்கினர். கடன் வாங்கிக்கட்டிவிட்டு வட்டியைக் கட்டமுடியாமல் பேழையில் வந்து சேருவோரிடம் உங்கள் வருமானத்தில் ஒருபங்கைப் கர்த்தருக்குத் தாருங்கள் என்று சொல்லி வசூலித்து வட்டியைக் கட்டினர், இப்படியாக உலகம் பேழைகளால் நிறைந்தது. பத்து மாடி இருபதுமாடி கொண்ட பெரிய மெகாப்பேழைகள் கூட உருவாக்கப்பட்டன. ஒரு பேழைக்காரர்கள் இன்னொரு பேழையில் இருப்பவரைத் தங்கள் பேழைக்கு இழுக்க முயன்றனர். இதனால் அவர்களுக்குள் கசப்பும், வெறுப்பும், போட்டிகளும் உருவானது.

நூற்றியிருபது வருட முடிவில் நோவாவின் பேழை முழுவதுமாகக் கட்டப்பட்டு வெகு எளிமையாக நன்றி ஜெபம் குடும்பத்தினரால் செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் உள்ளம் அமைதியாக இல்லை, காரணம் 120 வருடப் பிரசங்கத்தில் ஒருவர் கூட இரட்சிக்கப்படவில்லை. நோவாவின் குடும்பத்தாரும் கூட நோவாவுடைய பிரசங்கத்தைக் கேட்டு அல்ல அவரது சாட்சியுள்ள வாழ்க்கையைப் பார்த்தே தொடப்பட்டார்கள்.நோவாவின் பேழையைக் கட்டிய தொழிலாளர்களுக்குக் கூட அவர் கொடுத்த சம்பளம் இனித்தது ஆனால் அவரது பிரசங்கமோ கசந்தது.

நோவா தாமதமின்றி அசுத்தமான மற்றும் சுத்தமான மிருகங்களைப் ஜோடுஜோடாகப் பேழையில் ஏற்றினார். வானத்தில் மேகங்கள் கூட ஆரம்பித்தன. அவ்வப்போது இடி இடித்தது. மற்ற பேழைகளில் உள்ளோரும் தயாரானார்கள். அவரவர் அந்தந்தப் பேழைக்குள் அடைக்கலம் புகுந்தார்கள். அசுத்தமான பிராணிகள் அவர்களது பேழைகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. செல்லப்பிராணிகளை மட்டுமே பேழைக்குள் கொண்டு செல்லலாம் ஆனால் அதற்கும் தனிக்கட்டணம் செலுத்த வேண்டும்.

வரலாற்றில் முதன் முதலாய் சூரியன் தன் முகத்தை பூமிக்கு மறைத்தது. பூமியைக் காரிருள் கவ்வத்தொடங்கியது,….

கர்த்தர் நோவாவை நோக்கி ”நோவா! எல்லாம் சரியாக இருக்கிறது, நீயும் உன் வீட்டாரும் தாமதமின்றி பேழைக்குள் செல்லுங்கள்!” என்று சொல்ல அனைவரும் ஓடிப் பேழைக்குள் புகுந்தார்கள். நோவா கதவை அடைக்க முற்பட கர்த்தர், “நோவா உன்வேலை முடிந்துவிட்டது, இனி என்வேலை ஆரம்பம், என்று சொல்லி கதவை அடைத்து வெளியே தாழிட்டு சீல் வைத்தார். இனி நோவா நினைத்தால் கூட கதவைத்திறக்கமுடியாது.

சற்று நேரத்தில் மழை வெளுத்து வாங்கத் துவங்கியது. ஆங்காங்கே பயங்கரமான பூகம்பங்கள் தோன்றின, கடல் கொந்தளித்து பனைமர உயரத்துக்கு அலைகளை எழுப்பியது. ஆழத்தின் ஊற்றுக்கண்கள் திறந்தன. தண்ணீர் மட்டம் பூமியில் உயர உயர நோவாவின் பேழையும் தண்ணீரில் மிதக்கத்துவங்கியது. ஆசீர்வாதப்பேழையிலிருந்து மற்ற எல்லாப்பேழைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. காரணம் கர்த்தருடைய வார்த்தைப்படி அவற்றில் கீழ் பூசப்படவில்லை. தண்ணீர் உட்புகாமல் இருக்க தலையறிவின்படி ஏதேதோ செய்திருந்தார்கள், வர்ணம் பூசி பேழையை அழகாய்க் காட்டுவதில் இருந்த ஆர்வத்தை பேழையின் பாதுகாப்பில் காட்டவில்லை. பேழைக்குள் தண்ணீர் புகுந்ததால் எல்லோரும் பேழையின் மேல்தளங்களுக்கு ஓடினார்கள்.

நோவாவின் பேழைக்கு அருகில் ”ஆராதனைகோபுரம்” என்ற ஒரு அடுக்குமாடி பேழை இருந்தது அது அந்தப் பேழைத்தலைவர் உட்பட பேழைக்குள் இருந்தவர்கள் எல்லோரும் எட்டாவது மாடிக்கு ஓடினர் அங்கிருந்து நோவாவின் பேழையைப் பார்க்கும்போது அது அலைகளுக்குள் அழகாக நடனமாடுவது போல மிதந்து கொண்டிருந்தது. இவர்களெல்லோரும் ஆராதனைகோபுரப் பேழைத்தலைவரைப் பிடித்து உலுக்கினர். “ஏன் இப்படி நடந்தது? நோவாவின் பேழையைத்தவிர வேறு யாருடைய பேழையும் காப்பாற்றப்படவில்லையே ஏன்?? நாம் மொத்தமாய் சாகப்போகிறோமே! கத்தை கத்தையாய்ப் பணம் வாங்கினீர்களே பதில் சொல்லுங்கள்?? என்று கூக்குரலிட்டார்கள்.

தாம் வஞ்சிக்கப்பட்டதை வெகுதாமதமாக உணர்ந்த பேழைத்தலைவர் மார்பில் அடித்துக்கொண்டவாறே கதறி அழுதபடி ஒரே ஒரு வாக்கியத்தை பதிலாகச் சொன்னார்:

அது பேழை….இதெல்ல்ல்ல்ல்ல்லாம் பிழை!!! ஐயோ!..நாம் மோசம் போனோமே…பெருமழையின் சத்தத்தை அவரது கதறலின் சத்தம் மேற்க்கொண்டது.

சில நாட்களுக்குள் நோவாவின் பேழைக்குள்ளிருந்து கேட்கும் ஆராதனைச் சத்தத்தைத் தவிர மற்ற எல்லாச் சத்தங்களும் அடங்கின. பூமியைத் தண்ணீர் மூடிக்கொண்டது. கிட்டத்தட்ட 120 பனைமர உயரத்துக்கு தண்ணீர் நின்றது. பேழையோ மத்திய ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தது. மணவாளனுடைய மகிமைப் பேழையை மூடியிருந்தது.