விசுவாசம்

அது ஒரு அழகிய நிலாக்காலம்…

By Vijaykumar Jayaraj

October 23, 2024

கடந்த காலத்தை நினைத்து நாஸ்டால்ஜியாவில் மூழ்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? சீருடையுடன் சுற்றித் திரிந்த இனிமையான பள்ளி நாட்கள், தென்னை மட்டை வைத்து கிரிக்கெட் விளையாடிய அனுபவங்கள், 90-களின் தின்பண்டங்கள், ஆல்-இந்திய ரேடியோ, துர்தர்ஷன், ரூபவாஹினி, முதல் காதல், பழைய நண்பர்கள், கல்லூரி சேட்டைகள் அத்தனையையும் நினைத்தால் மனதுக்குள் ஒருவித மழைச்சாரல் அடிப்பதை உணராதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதைப் பற்றி நினைப்பதும், பேசிக்கொண்டிருப்பதும்கூட அலாதி சுகம்தான். சிறைப்பட்டுப்போன யூத ஜனங்கள் பாபிலோனின் ஆறுகள் அருகே அமர்ந்து சீயோனின் ஞாபங்களில் மூழ்கி அழுததை வேதம் ஒரு சங்கீதப் பாடலாகவே வடித்து வைத்திருக்கிறது. அதாவது அந்த மக்களின் உணர்வை அப்படியே பதிவு செய்து வைத்திருக்கிறது.

ஆனால் அதே வேதம்தான் “இந்நாட்களைப்பார்க்கிலும் முன்நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே(பிரசங்கி 7:10)” என்று நமக்குக் கட்டளையிடுகிறது. இந்த வசனத்தைப் படிக்கும்போது எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. நம்முடைய பழைய, இனிய நினைவுகளை அசைபோடுவது தவறு என்று வேதம் சொல்லுகிறதா என்றால் அப்படியில்லை, ஆனால் இந்நாட்களைப்பார்க்கிலும் முன்நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே என்று கூறுகிறது.

ஏன் வேதம் அப்படிக் கூறுகிறது?

நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சில விஷயங்களில் தேவன் கொஞ்சம் சீரியஸாக இருக்கிறார் என்பது இதில் விளங்குகிறது. நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் ‘அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற’ சூரியப்பிரகாசம் போலிருக்கும் என்று நீதிமொழிகள் 4:18 கூறுகிறதல்லவா? தேவபிள்ளைகளாகிய நம்மைக் குறித்த தேவதிட்டம் என்னவென்றால் வரவர விருத்தி(ஆதி 26:13), பலத்தின்மேல் பலம்(சங் 84,7), மகிமையின்மேல் மகிமை(2 கொரி 3:18), நீதியின்மேல் நீதி, பரிசுத்தத்தின்மேல் பரிசுத்தம்(வெளி 22:11) என்பதுதான். அதாவது நாம் தேவனுடைய வித்தாக இருந்தால் நமக்கு இறங்குமுகமே இல்லை என்பதுதான் நம்மைக்குறித்த தேவதிட்டம்.

நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால் நம் முன்நாட்களைவிட இந்நாட்கள் நன்றாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும். அவ்வப்போது ஏற்படும் தொய்வுகளும், தேக்கங்களும்கூட நம்முடைய ஏற்றத்துக்கு ஏதுவாகத்தான் என்று வேதம் கூறுகிறது. எனவே இந்நாட்களைப்பார்க்கிலும் முன்நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லுவது நம்மைக் குறித்த தேவ திட்டத்துக்கு முரணானது ஆகும். அதுமட்டுமல்ல, இதுவரை நம்மை நடத்தி வந்த கிருபையை புரிந்துகொள்ளாததும், அவமதிப்பதும் ஆகும்.

உண்மையில் நாஸ்டால்ஜியாவுக்கு ஒரு குணமுண்டு. அது பழைய நாட்களில் நடந்த நல்லவைகளை மட்டும்தான் நினைவில் வைத்திருக்கும். கெட்டவைகளை மறந்துவிடும். நீங்கள் பள்ளி இன்பச்சுற்றுலாவுக்கு சென்றதை பசுமையாக நினைவில் வைத்திருக்கும். ஆனால் அதற்கு முந்தைய நாள் வீட்டில் சேட்டை பண்ணி அம்மாவிடம் தோசைக் கரண்டியில் அடிவாங்கியதையோ, அப்பா பெல்ட்டை கழற்றி அடித்ததையோ மறந்துவிட்டிருக்கும். அதாவது இன்று நீங்கள் சந்திக்கும் அதே போன்ற சவால்களை அந்நாட்களிலும் அந்த வயதுக்கு ஏற்றவிதத்தில் சந்தித்திருப்பீர்கள். ஆனால் நாஸ்டால்ஜியா அதை மறந்துவிட்டு நல்லவைகளை மட்டும் நினைவில் வைத்திருப்பதால் இந்நாட்களைவிட அந்நாட்கள் உங்களுக்கு இனிமையாகத் தோன்றுகிறது. நாஸ்டால்ஜியாவே ஒரு மாயைதான்.

அந்நாட்களில் தேவன் உங்களைப் பாதுகாத்து, மகிழ்ச்சியான குடும்பம், அருமையான நண்பர்கள், இனிமையான பள்ளி – கல்லூரி வாழ்க்கையை தந்ததற்காக அவரைத் துதியுங்கள். அதே தேவன் இன்றும் ஜீவனோடிருக்கிறார், அதே அன்போடு உங்களை இன்றும் நேசிக்கிறார். கடந்த நாட்களின் கஷ்டங்களை மறக்கடித்து, நன்மைகளை மட்டும் காட்டியது போலவே, இந்த நாட்களில் நடக்கும் நல்லவைகளை மறக்கடித்து, கஷ்டங்களை மட்டும் பெரிதுபடுத்திக் காட்டி நீங்கள் ஏதோ ஒரு நரகத்தில் இருப்பது போன்ற உணர்வைக் கொடுப்பது இருதயத்தின் திருக்கு.

பொய்யுரையாத தேவ வார்த்தை கூறுவதுபோலவே கடந்த நாட்களைவிட இந்த நாட்கள் நன்மையானவையே, எதிர்காலமோ இன்னும் இதைவிட மேன்மையாக இருக்கப்போகிறது. ஆம் அதுதான் நடுப்பகல்வரைக்கும் ‘அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற’ சூரியப்பிரகாசம். எனவே இனிமையான கடந்த காலத்தைத் தந்ததற்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள். அதே நேரத்தில் இந்நாட்களில் அவர் செய்துவரும் நன்மைகளுக்காக நன்றியுடனும் இருங்கள், எதிர்கால உயர்வுகளை விசுவாசியுங்கள்.