அடுத்த சபை அன்பர்களைப் பார்த்தால்…

அடுத்த சபை
அன்பர்களைப் பார்த்தால்
நமக்கு
உடனே தோன்றும்
உணர்வு என்ன?
அந்தச் சபையின் நினைவு
வருகிறதா அல்லது
சகோதர உணர்வு
வருகிறதா?
ஒதுங்கிச் செல்ல
நினைப்போமா?
அல்லது
உறவு சொல்லி
அணைப்போமா?
குறைகள் (வி)வாதித்து
பிரிவோமா?
அல்லது
கூடி ஆராதித்து
மகிழ்வோமா?
பகடி செய்யத்
தோணுமா?
அல்லது
பணிவிடை செய்யத்
தோணுமா?
சபைப் பிரிவுகள்
தவிர்க்க இயலாதது
ஆனால்…
சபையால் பிரிவுகள்
சகிக்க இயலாதது!
பிரசங்கப் பித்தத்தால்
பிணக்கம் வந்திருக்க
சிலுவை இரத்தத்தால்
இணக்கம் வாராதோ?
ஞானஸ்நானத் தண்ணீரால்
பிரிந்தோமே!
நேசரின் கண்ணீரால்
இணைவோமா?
தெளிப்பா? முழுக்கா?
வாதஞ் செய்தே
தெளிவுக்கு முழுக்குப்போட்ட
பேதமை உணர்ந்தோமா?
நாம் கண்ட
எழுப்புதல்கள்
சொற்பம்
அவற்றின் ஆயுளும்
அற்பம்
ஆனால்
நம் தகறாறுகளுக்கு
உண்டு
நூற்றாண்டு
வரலாறு!
வாரத்தில் ஒருநாள்
ஓய்ந்திருக்கக் கற்றோமே?
அந்த ஓய்வுநாள் எதுவென்ற
தர்க்கம் விட்டு ஓய்ந்தோமா?
ஆவியின் நிறைவு குறித்த
விந்தையான சர்ச்சைகள்
ஆவியில் நிறைந்திருந்தால்
சிந்தையில்தான் தோன்றுமோ?
இறைமகனுக்குள்ளும்
இறையியல்
பார்த்தோமே
இறையியலுள்
இறைமகனைப்
பார்த்தோமா?
உபதேசங்களுக்குள்
ஓரம்(extreme) போனோம்,
உறவிலே மொத்தமாய்
சோரம் போனோம்!
உபதேச பேதங்கள்
உள்ளொளி பெருக்கவோ?
அல்லது
உறவுகள் முறிக்கவோ?
முரண்களை
முறித்து விட்டுத்தான்
அன்பு செய்தல்
கூடுமோ?
ஏன்
அன்பு
செய்துகொண்டே
முரண்களை
முறிக்கலாமே?