“எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அந்நியன் அந்நியனே” என்ற அரசியல் முழக்கத்தை கொஞ்ச நாட்களாக கேட்டிருப்பீர்கள். நாம் அந்த கோஷத்துக்குப் பின்னால் இருக்கும் அரசியல் பற்றி ஆராயப்போவதில்லை. ஆனால் இதைப்போலவே ஆவிக்குரிய உலகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் இருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னால் என் உறவினர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக பார்க்கும்படி என்னை அழைத்தார்கள். அவர் என் தூரத்து உறவினர் என்பதால் எனக்கு அவரையோ, அவருக்கு என்னையோ முன்பின் தெரியாது. முதல் முறையாக அவரை சந்திக்கப் போகிறேன். அன்று மாலை அவரை சந்திக்க இருந்ததால் காலை முதல் அவருக்காக சின்சியராக ஜெபித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஆண்டவருடைய குரல் எனக்குள் திட்டமும் தெளிவுமாக உரைத்தது. “அந்த நபருக்காக ஜெபிக்காதே, அவரை யாரென்றே எனக்குத் தெரியாது”.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, இது நிச்சயமாக ஆண்டவருடைய குரலாக இருக்க முடியாது என்று நினைத்தேன். ஒருவனும் கெட்டுப்போகாமல் எல்லோரும் இரட்சிக்கப்படவேண்டும் என விரும்பும் ஆண்டவர், எல்லோருக்காகவும் ஜீவனைக் கொடுத்த கர்த்தர் எப்படி இதுபோல பேச முடியும்? எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது, அந்தக் குரலை அலட்சியப்படுத்திவிட்டு தொடர்ந்து ஜெபித்தால் சுத்தமாக ஜெபத்திலும், மனதிலும் சமாதானமில்லை. அந்த அனுபவம் எனக்கு புதிதாக இருந்தது.
அன்று மாலை அவரை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தபோது என் குழப்பத்துக்கு விடை கிடைத்தது. அவர் மிகவும் உருக்குலைந்த நிலையில் இருந்தார். அவரிடம் நலம் விசாரித்துவிட்டு கிளம்பும் முன் அவரிடம் தாழ்மையாக “உங்களுக்காக ஜெபிக்கலாமா?” என்று கேட்டேன். அதுவரை நன்றாக பேசிக்கொண்டிருந்தவரது முகம் சட்டென மாறியது. முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு, “எனக்கு கடவுளை யாரென்றே எனக்குத் தெரியாது, அவர்மீது எனக்கு நம்பிக்கையும் இல்லை. எனக்கு இதிலெல்லாம் விருப்பமும் இல்லை. I am a free thinker” என்று சட்டென முகத்தில் அடித்தது போல சொன்னார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் சமீபத்தில் அவர் மரித்தபிறகு இதை எழுதுகிறேன். அவர் கடைசிவரை இயேசுவை ஏற்றுக்கொள்ளவே இல்லை.
இந்த நிகழ்வு எனக்கு ஒரு பாடத்தைக் கற்றுத்தந்தது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் (1 தீமோ 2:4) என்று சொல்லும் அதே வேதம்தான், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை (யோவா 6:37) என்று சொல்லுகிற அதே வேதம்தான் தேவன் யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தார்(ரோம 9:13) என்றும் சொல்லுகிறது. தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனை உண்டாக்கினார்(நீதி 16:4) என்றும் சொல்லுகிறது.
வேதம் மனிதர்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கிறது கோதுமை – களை, செம்மறியாடு – வெள்ளாடு, தேவனால் உண்டானவர்கள் – பிசாசினால் உண்டானவர்கள், இருளின் பிள்ளைகள் – வெளிச்சத்தின் பிள்ளைகள், நீதிமான்கள் – துன்மார்க்கர், நல்ல மரம் – கெட்ட மரம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த இருபிரிவைச் சேர்ந்தவர்களும் பூமியில் கலந்தே வாழ்கிறார்கள். இந்த இருவரையும் வேறுபிரிப்பதே ஆவிக்குரிய அரசியல். அதனால்தான் கர்த்தராகிய இயேசு சொன்னார் “பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன் (மத் 10:34,35).
தேவனுடைய வித்து கடைசி வரை தேவனுடைய வித்துதான், பிசாசின் வித்து கடைசிவரை பிசாசின் வித்துதான். தேவனுடைய வித்து பிசாசின் முகாமிலும், பிசாசின் வித்து தேவனுடைய முகாமிலும் இருக்க முடியும். தேவனுடைய வித்தாக இருந்த அப்போஸ்தலனாகிய பவுல் பரிசேயருடைய கூடாரத்திலும், உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாய் இருக்கிறான் என்று கர்த்தராகிய இயேசுவால் சுட்டிக்காட்டப்பட்ட யூதாஸ்காரியோத் கர்த்தருடைய கூடாரத்திலும் இருந்ததை நினைவுகூருங்கள். ஆனால் இந்த பூமியில் ஆண்டவர் செய்யும் ஆவிக்குரிய அரசியல் கடைசியில் அந்தந்த வித்தை அந்தந்த முகாமில் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
ஒரு மனிதனைப் பார்க்கும்போது இவன் தேவனுடைய வித்தா, சர்ப்பத்தின் வித்தா என்று கண்டறிய முடியுமா?
இது உண்மையில் மிகமிக விவகாரமான கேள்வி. இந்தக் கேள்விக்கு “ஆம்” மற்றும் “இல்லை” என்ற இரு பதில்களையும் கூறமுடியும்.
கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய அனுபவத்தில் முதிர்ந்த ஒரு விசுவாசியால் ஒருவன் தேவனுடைய வித்தா, சர்ப்பத்தின் வித்தா என்று கண்டறிய முடியும், கண்டறிந்தபின் அவர்களை எப்படி கையாள வேண்டுமோ அப்படி கையாளவும் அவர்களுக்குத் தெரியும், ஏனென்றால் கிறிஸ்துவால் அது எளிதாக முடிந்தது. நாசரேத்தூரில் இருந்து வந்த இவரா கிறிஸ்து? என்று சந்தேகத்தோடு அணுகிய நாத்தான்வேலை “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று கர்த்தராகிய இயேசு அழைத்ததையும், தங்களை ஆன்மீகவாதிகளாக எண்ணிக்கொண்ட வேறு சிலரைப் பார்த்து “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்” என்று சொன்னதையும் நினைவுகூருங்கள். நாத்தான்வேல் கடைசிவரை நல்ல மரம்தான், “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்” என்று கர்த்தராகிய இயேசுவால் சுட்டிக்காட்டப்பட்டவர்கள் கடைசிவரை கெட்டமரம்தான். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது (மத்தேயு 7:18 )
ஆனால் நம்மைப்போன்ற வளர்ந்துவரும் விசுவாசிகளுக்கு யார் பிதாவின் வித்து, யார் சர்ப்பத்தின் வித்து என்று கண்டறிவது சாத்தியமில்லை. கனிகளால் அறியலாம் என்றாலும் அது கள்ளத்தீர்க்கதரிசிகளைக் கண்டறிய கர்த்தர் கற்றுக்கொடுத்த முறைமை (மத் 7:15-20). அதை எல்லா மனிதருக்கும் நாம் பொருத்திப் பார்க்கக்கூடாது. உதாரணத்துக்கு புதிய ஏற்பாட்டைக் கொளுத்தி அந்த சமயத்தில் தன் கனி கெட்டது என்று வெளிப்படுத்திய சாது சுந்தர்சிங் இந்தியாவின் அப்போஸ்தலராக உயர்த்தப்படவில்லையா? அதுமட்டுமன்றி நாம் வேறுபாடின்றி எல்லோரையும் நேசிக்கவும், எல்லோருக்கும் ஊழியம் செய்யவும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
ஆனால், அதே நேரத்தில் “சர்ப்பத்தைப் போல வினா உள்ளவர்களாக இருக்கும்படி” மத்தேயு 10:16 நமக்கு ஆலோசனை சொல்லுகிறது. எனவேதான் பரிசுத்த ஆவியானவர் சில நேரங்களில் சிலரைக் குறித்து நமக்கு வெளிப்படுத்துகிறார்.
நான் இந்தக் கட்டுரையை எழுதியதன் நோக்கமே இதுதான். ஒருவேளை உங்களுக்கு இதுபோன்ற ஒரு வெளிப்பாட்டை ஒரு குறிப்பிட்ட நபரைக் குறித்து ஆவியானவர் கொடுப்பாரானால் அந்த வெளிப்பாட்டை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை ஒரு மனிதனை/மனுஷியை “தேவனுடைய வித்து” என்று அடையாளம் காட்டுவாரானால், அவன் அப்போது எந்த சூழ்நிலையில் இருந்தாலும், எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அந்த மனிதனை விட்டுவிடாதீர்கள். அந்த நபரைக் கொண்டு தேவன் நிச்சயம் உங்கள் வாழ்விலும், உலகத்திலும் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்வார்.
அல்லது ஒரு மனிதனை/மனுஷியை “சர்ப்பத்தின் வித்து” என்று ஆவியானவர் அடையாளம் காட்டினால் அந்த நபர் எவ்வளவு ஆவிக்குரிய நபராகத் தோற்றமளித்தாலும் அவனை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவனை உங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். அவர்கள் விஷயத்தில் நீங்கள் சர்ப்பத்தைப்போல வினாவுள்ளவர்களாக இல்லாவிட்டால் வாழ்க்கைக்கும் மறக்காத வலியை உங்களுக்கு தந்துவிட்டுப் போய்விடுவார்கள்.
ஆவியானவர் ஒவ்வொரு மனிதனையும் குறித்து இவன் தேவனுடைய வித்து, இவன் பிசாசின் வித்து என்று தன் பிள்ளைகளிடம் சொல்லிக்கொண்டிருப்பதில்லை. ஆனால் அதையும் மீறி சிலரைக் குறித்து நமக்கு சொல்லுவாரானால் நாம் அந்த வெளிப்பாட்டை மிகுந்த ஜாக்கிரதையுடன் அணுகவேண்டும்.