யோசேப்பும் சிம்சோனும்

கர்த்தர் தீமையைப் பார்க்க மாட்டாத சுத்தக் கண்ணர் (ஆபகூக் 1:13) என்பதை ஊழியக்காரர்களே மறந்துபோன ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வேதத்தில் இரண்டு ஊழியக்காரர்களைப் பார்க்கிறோம். ஒருவர் யோசேப்பு, மற்றொருவர் சிம்சோன். இருவரையும் கர்த்தர் பயன்படுத்தினார். யோசேப்பு வேசித்தனத்துக்கு விலகியோடினார், சிம்சோன் வேசியின் வீட்டிலேயே படுத்துக் கிடந்தார்.

தேவன் இருவரையுமே பயன்படுத்தினாலும் இருவரிடமும் அவர் இடைப்பட்ட விதம் வேறு… கர்த்தர் யோசேப்போடே இருந்தார் (ஆதி 39:2) என்றும், கர்த்தருடைய ஆவியானவர் சிம்சோனை ஏவத்துவங்கினார் (நியா 13:25) என்றும் வேதம் சொல்லுகிறது. அதற்கு இருவருடைய நடத்தைதான் காரணம். கர்த்தர் யோசேப்பை தன்னுடைய ஊழியத்தின் உடன் பங்காளி(partner) போல நடத்தியதையும். சிம்சோனை அவர் ஒரு கருவி (instrument) போல பாவித்ததையும் அவர்களது வரலாற்றை வாசித்தால் தெளிவாக உணரலாம்.

கர்த்தருடைய வேலை சிறப்பாக நடக்கிறது. எனவே நாம் திரைமறைவில் செய்யும் காரியங்களை கர்த்தர் கண்டுகொள்ளவில்லை என்று நினைத்தால் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டவர்களாக இருப்போம். கர்த்தர் நீதியுள்ள நியாயாதிபதி. அவர் பாவத்தை கண்சாடையாய் விடுவதில்லை. கர்த்தருடைய வேலை அவர் திட்டப்படியே முடிந்தது. ஆனால் அந்த ஊழியக்காரர்களின் நிலை என்ன? சிந்தையில் பரிசுத்தமாயிருந்த யோசேப்பின் தலைக்கு கிரீடம் தேடி வந்தது, சிம்சோனின் தலைமுடியோ சிரைக்கப்பட்டது.

அது பழைய ஏற்பாடு என்போமானால், பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் நிழலாட்டம் என்பதை மறந்து போக வேண்டாம். “கிறிஸ்துவின் நீதி எனக்குள் இருக்கிறது” என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவும் வேண்டாம். சட்டியில் இருந்தால் அகப்பையிலும் அது வந்தே தீரவேண்டும். அகப்பையில் வரவில்லையெனில் தேவநீதி சட்டியில் இல்லை என்றே பொருள். எனக்கும் சேர்த்தே இந்த எச்சரிப்பு! கர்த்தர் நம்மை நடத்துவாராக!

Leave a Reply