முதல் கோணல் முற்றும் கோணல்

 

நமக்காக தம்மைத்தாமே வெறுமையாக்கிய ஆண்டவர் இயேசுவின் நாமத்துக்கு மகிமை உண்டாவதாக!

அது நான் சபையின் இளைஞர் ஊழியத்தில் ஆர்வமாக ஈடுபட்டிருந்த காலம். வாலிபச் சகோதரர்களெல்லாரும் சபையிலேயே கிடையாய்க் கிடப்போம். நாங்கள் அனைவருமே ஊழியத்துக் கென்று வைராக்கியமாய் ஒப்புக்கொடுத்தவர்கள். இரவில் கூட ஒன்றாக உண்டு ஆலயத்தின் மொட்டை மாடியில் படுத்து உறங்குவது அவ்வளவு ஆனந்தம்! இனிப்பான நினைவுகள்! அன்பான சகோதரர்கள்! மறக்க முடியாத காலங்கள்!! ஒருமுறை நாங்களெல்லாரும் இணைந்து கொரியாவிலிருந்து சென்னைக்கு இசை நிகழ்ச்சி நடத்த வந்த பிரபலமான ஆராதனைக் குழுவினரின் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த ஊழியக்காரரின் அறிமுகம் தமிழ்ப்பட சூப்பர்ஸ்டாரின் அறிமுகம் போலவே இருந்தது. அவர் கருப்பு கோட் அணிந்து விமானத்திலிருந்து இறங்கி கம்பீரமாக நடந்து வருகிறார், அவருக்குப் பின்னால் அவரது உடன் ஊழியர்கள் அவரைப்போலவே கருப்புக் கோட் அவருக்குப் பின்னால் வருகிறார்கள். சுற்றிலும் ஆரவாரிக்கும் கூட்டம், பளிச் பளிச் என்று மின்னும் கேமராக்களின் ஃப்ளாஷ்.

எங்களோடு இணைந்து வீடியொ பார்த்துக் கொண்டிருந்த ஒரு சகோதரன் உணர்ச்சிவசப்பட்டு தன்னையும் மறந்து உரக்கச் சொன்ன ஒரு வாக்கியம்:

“வாவ்! நம்ம என்னைக்கு பிரதர் இப்படியெல்லாம் ஆகப் போறோம்?!!!”

அன்று அதே மனநிலையில் இருந்த நாங்கள் எல்லோரும் அதை ஏக்கத்துடன் ஆமோதித்தோம். அந்த மனநிலை தவறு என்பது கூட அன்று எனக்கு தெரியவில்லை. காலங்கள் உருண்டு சென்றது, இன்றைய கிறிஸ்தவம் இவ்வளவு அவலநிலையில் இருப்பதற்கு தவறான மனநிலையோடும் எதிர்பார்ப்புக்களோடும் ஊழியத்துக்கு வருபவர்களும் ஒரு காரணம் என்பதை கர்த்தர் கிருபையால் கற்றுக் கொண்டேன். நாம் எதை எதிர்பார்த்து, மனதில் விரும்பி தேவனுடைய பணியில் காலடி எடுத்து வைக்கிறோமோ நமது மனம் அதைத் தொடர்ந்துதான் செல்லுகிறது. நமது பிரசங்கங்களும் நாம் வகுக்கும் திட்டங்களும் அதை மையப்படுத்தியே செயல்படுகின்றன. விளைவாக நாம் விரும்பிய அனைத்தையும் ஒருவேளை பெற்றுக்கொள்ளக்கூடும். ஆனால் கடைசியில் தேவனுடைய சிங்காசனத்துக்கு முன் நின்று கணக்கொப்புவிக்கும் நாளில் நமக்கு மாபெரும் அதிர்ச்சியும்  ஏமாற்றமுமே காத்திருக்கும் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை.

தமிழில் ”முதல் கோணல் முற்றும் கோணல்” என்ற பழமொழி உண்டு. நாம் ஆரம்பிக்கும் காரியம் ஒன்று ஆரம்பத்திலேயே தவறாக இருந்தால் அது முழுவதும் தவறாகத்தான் முடியும் என்பதே அதன் அர்த்தம்.

இந்தியாவின் மிகப் பிரபலமான ஊழியக்காரர் ஒருவர் மரித்த பின்பு அவரோடு தொடக்க காலத்தில் ஊழியம் செய்தவரும் பின்பு அவரது ஊழியத்தை இன்றுவரை கடினமாக விமர்ச்சிப்பவருமான மற்றொரு ஊழியர் தனது பத்திரிக்கையில் அந்த பிரபலத்தைப் பற்றி எழுதிய குறிப்பு என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது,

அந்தப் பிரபல ஊழியர் தனது ஆரம்ப காலங்களில் பில்லி கிரகாம், வில்லியன் மரியன் பிரன்ஹாம் போன்றோரின் ஊழியங்களில் ஆழமாகக் கவரப்பட்டு அவர்களது புகழ் பற்றியும் அவர்களுக்குக் கூடும் கூட்டம் பற்றியுமே சிலாகித்துப் பேசிக்கொண்டிருப்பாராம். அவரது பேச்சு சிந்தனை எல்லாம் புகழ், பெருங்கூட்டம்,அற்புத அடையாளங்கள் என்றே இருக்குமாம். இதுவே முதல் கோணல் என்பது. அவரும் தான் விரும்பினதை சீக்கிரமே அடைந்தார். புகழ் ஏணியின் உச்சிக்குச் சென்றார். ஆனால் இன்று பல ஊழியர்கள் அவரைப் பின்பற்றி சோரம் போவதற்க்கான மோசமான பல முன்மாதிரிகளை இந்திய கிறிஸ்தவத்துக்கு விட்டுச் சென்றிருக்கிறார்,

இன்று ஊழியத்துக்கு வரும் இளைஞர்கள் எவைகளிலெல்லாம் கவர்ச்சிக்கப்பட்டு தாங்களும் ஊழியத்துக்கு வர விரும்புகிறார்கள் என்று பார்க்கலாம்

மனிதரால் வரும் மகிமை:

அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள். (யோவா 12:43)

இன்று சுவிசேஷகர்களுக்கும், போதகர்களுக்கும் கிறிஸ்தவ வட்டாரத்தில் இருக்கும் செல்வாக்கைப் பார்த்தும், சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக போஸ்டரில் போஸ் கொடுப்பதைப் பார்த்தும் அநேகர் வஞ்சிக்கப்படுகிறார்கள். “In the Name of Jesus” என்று கர்ஜித்துக் கொண்டு மேடையில் அங்குமிங்கும் வலம் வருவதையும் அவர் கையை நீட்டியவுடன் பலர் தடதடவென சரிவதையும்,”பாஸ்டர்! பாஸ்டர்!” என்று அநேகர் அவர்களைச் சுற்றிச் சுற்றி வருவதை கண்ட இளம் விசுவாசியும் தன்னை அவரைப் போல கற்பனை செய்து கொண்டு கனவில் மிதக்கிறான். ”ஊழியம் என்றால் இதுதான் போல, நாம் ஊழியம் செய்தால் நமக்கும் இப்படிப்பட்ட புகழும் கனமும் கிடைக்கும்” என்ற ஆசை அவன் மனதை நிரப்புகிறது.

ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார் (யோவா 12:26) என்ற வாக்குத்தத்ததை தவறாகப் புரிந்து கொள்ளுகிறார்கள். அந்த வசனத்தை முழுவதும் படித்துப் பாருங்கள்:

ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.”

ஆம், இயேசு எங்கே இருந்தாரோ அதே நிலையில் தன்னை நிறுத்திக் கொள்ளுகிறவனே சீஷன். சாத்தான் பூமியின் சகல ராஜ்ஜியங்களையும் அவற்றின் மகிமையையும் காண்பித்து இயேசுவுக்கு ஆசை காட்டியபோது ”அப்பாலே போ” என்று சீறினார் (மத் 4:8-10). சிலர் அவரை ராஜாவாக்க முயன்றபோது உடனடியாக அவர்களை விட்டு விலகினார் (யோவா 6:15). ”நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை (யோவா 5:41) என்று முழங்கினார். அவரைப் பின்பற்றுபவனும் அவர் இருந்த இடத்தில் இருப்பவனுமே பிதாவால் கனப்படுத்தப்படுவான். அவரைப் பின்பற்றாத ஊழியர்கள் அடையும் கனமெல்லாம் சாத்தான் கொடுக்கும் மிக ஆபத்தான கனம்.(மத் 4:9)

சிங்கபூரில் ஒரு பாஸ்டர் ஆராதனை வேளையில் தான் சபைக்குள் நடந்துவரும்போது Theme Song போல தனக்கென ஒரு இசையை இசைக்கச் செய்வதாக கேள்விப்பட்டேன். அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. தங்கள் சினிமா மோகத்தை எப்படியெல்லாமோ தீர்த்துக் கொள்ளுகிறார்கள். இப்படிப்பட்டவர்களைப் பார்த்து ஊழியத்துக்கு வருகிறவர்களும் அவர்களைப் போலவேதான் இருப்பார்கள்.

ஆராதனை ஊழியம் என்ற பெயரில் பளபளக்கும் ஆடை அணிந்துகொண்டு டி.வியில் சிலர் அடிக்கும் கொட்டம் தாங்கமுடியவில்லை. பாடும் திறனிருந்தால் யார் வேண்டுமானாலும் கிறஸ்தவத்தில் புகழ் பெறலாம் என்ற நிலை இன்று உருவாகி வருகிறது. இன்றைய நாளில் எளிதில் புகழ் தரும் ஊழியம் இதுதான். இதன் விளைவாக இன்று ஒருநாளில் தமிழ்நாட்டில் இரட்சிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையை விட வெளியிடப்படும் பாடல் ஆல்பங்களின் எண்ணிக்கை அதிகமாயிருக்குமோ என்று தோன்றும் அளவுக்கு எண்ணிக்கையில்லாத (ஜீவனும் இல்லாத) ஆல்பங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆராதனை ஊழியம் என்பது ஊழியங்களிலெல்லாம் மகிமையானது அதில் புகழுக்கு ஆசைப்பட்டு இறங்குவது என்பது தேவனுடைய பெட்டியில் ஊசா கைவைத்தது போன்றது. ஆகவே எச்சரிக்கை!

பிரியமானவனே! மனிதரால் வரும் மகிமையால் கவர்ச்சிக்கப்பட்டு ஊழியத்துக்குள் நுழைவது முதல் கோணல். முடிவில் ஏரோது போல “இது தேவசப்தம்! இது தேவசப்தம்!” என்று ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் சத்தத்தில் மயங்கி தேவகோபாக்கினைக்கு ஆளாவாய் என்பதை மறக்காதே.

”ஏரோது தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான். (அப் 12:23)” என்று வேதம் கூறுகிறது.

பணமும் வாழ்க்கைத் தரமும்:

அந்த ஊழியக்காரர் சொந்தமாக விமானம் வைத்திருக்கிறார் என்பதே சில ஊழியக்காரர்களை பலர் அறிமுகப்படுத்தும் விதமாகும். ஏழ்மையில் ஊழியத்தை துவங்கியவர் இன்று ஐசுவரியத்தின் உச்சியிலிருக்கிறார் என்று பலரால் புகழப்படுபவர்களின் வாழ்க்கையையும் பிரசங்கங்களையும் ஆராய்ந்து பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ”வெறும் பத்து ரூபாயோடு ஊழியத்தைத் துவங்கினேன் ஆனால் இன்று தேவன் இத்தனை கட்டிடங்களையும் வாகனங்களையும் தந்தார்” என்பது தேவனை மகிமைப் படுத்தும் சாட்சியல்ல. மாறாக ”பல ஆவிக்குரிய பெலவீங்களோடுதான் என் ஊழியத்தைத் துவங்கினேன் இன்றோ எனக்குள் கிறிஸ்துவின் சுபாவங்கள் ஏராளம் வளர்ந்திருக்கக் காண்கிறேன், அநேக சீஷரை உருவாக்கியிருக்கிறேன்” என்பதே தேவனை மகிமைப்படுத்தும் சாட்சியாகும்.

பிரியமானவனே! ஊழியர்களின் பகட்டு வாழ்க்கை உன்னை ஊழியஞ்செய்யக் கவர்ச்சிக்குமானால் அது முதல் கோணல். பிரார்த்தனைக் கோபுரங்களையும், விசுவாசிகளிடம் யாசித்து அதில் கட்டப்பட்ட கல்லூரிகளையும், சொகுசுக் கார்களையும், கலர்க் கலர் கோட்டு சூட்டுகளையும், ஐந்து நட்சத்திர வாழ்க்கைத் தரத்தையும், வெளிநாட்டுப் பயணங்களையும், போஸ்டர்களையும் பார்த்து அதே போல நமக்கும் கிடைக்குமென்று இச்சித்து ஊழியத்துக்குள் நுழைபவர்களுக்கு ஐயோ! இது பிலேயாமின் ஆவி! கேயாசியின் ஆவி! இறையரசு அல்ல என்றைக்கும் உள்ள காரிருளே உனக்கு வைக்கப்பட்டிருக்கிறது. (2 பேதுரு 2:17)

 கூடும் கூட்டங்கள்:

ஒரு ஊழியரின் வெற்றி அவருக்குக் கூடும் கூட்டத்தை வைத்தே கணக்கிடப்படுகிறது. சில இளம் ஊழியர்கள் தங்களது புகைப்படங்களை இலட்சக்கணக்கான மக்கள் ஆராதிப்பது போன்ற படத்துடன் கிராபிக்ஸ் செய்து ஒட்டவைத்து அதைத் தானே பார்த்துப்பார்த்து கனவுகண்டு, புளங்காகிதமடைந்து தன்னைத் தானே வஞ்சித்துக் கொள்ளுகிறார்கள். தேவன் பார்க்கும் பார்வை அதுவல்ல, அவர் மோசேயைப் புகழ்ந்தது அவன் இலட்சங்களை வழிநடத்தியவன் என்பதற்காக அல்ல அவன் உண்மையுள்ளவன் என்பதற்காகவே! (எண் 12:7).

பெருங்கூட்டம் கூட்டி வெற்றி பெற்ற ஊழியங்களெல்லாம் தேவன் அங்கீகரித்த ஊழியங்கள் அல்ல. எரேமியாவின் ஊழியம் மனிதர் கணக்கின்படி படுதோல்வியடைந்த ஊழியம். ஏனெனில் ”பாபிலோனின் நுகத்துக்கு உட்படுங்கள்”. என்பதே அவன் 40 ஆண்டுகளாக சொன்ன செய்தி. அவனுக்கு ஒருவனும் செவிகொடுக்கவுமில்லை. ஏற்றுக் கொள்ளவுமில்லை. இகழ்ந்தார்கள், இருளுக்குள் தள்ளினார்கள், காயப்படுத்தினார்கள். மனுஷர் பார்வையில் அவன் ஊழியம் படுதோல்வி ஆனால் தேவன் பார்வையில் அவன் ஒரு இணையற்ற தீர்க்கதரிசி.

ஒருகாலத்தில் மெகாபோன்களை வைத்து தெருவில் முழங்கியவர்களும், தெருத்தெருவாகச் சுற்றி கைப்பிரதி கொடுத்தவர்களும் தங்களுக்கென்று ஒரு கூட்டம் கூடியவுடன் இன்று ராஜாக்களைப் போல தங்களைக் காட்டிக் கொள்ளக் காரணமென்ன? அவர்கள் தேவராஜ்ஜ்யம் கட்டப்பட பிரயாசப்படவில்லை. தங்களுக்கென்று ஒரு ராஜ்ஜியம் கட்டிக்கொள்ள கடினமாய் உழைத்தார்கள், தியாகமாய் பாடுபட்டார்கள். அது அமைந்தவுடன் இதோ! இன்று அநாயசமாக உட்கார்ந்து விட்டார்கள். நாம் தியாகங்களைக் கண்டு வாயைப் பிளக்கிறோம், தேவனோ இருதயத்தின் ஆழங்களை ஆராய்ந்து அறிகிறார்.

பிரியமானவனே! சென்னை சீரணி அரங்கில் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கனவோடு கலப்பையில் கைவைப்பாயானால் அது முதல் கோணல். பத்து லட்சம் பேரோ, வெறும் பத்துப் பேரோ தேவன் கொடுத்த மந்தையில் திருப்தியடைந்து அதை உண்மையாய் விசாரிப்பதே உத்தம ஊழியம்.

அற்புத அடையாளங்கள்:

இன்று ஊழியத்தில் காலடி எடுத்து வைக்கும் பலர் 40 நாட்கள் உபவாசம் போட்டு ஆண்டவரிடம் எதைக் கேட்கிறார்கள்? கனிகளையா? கிறிஸ்துவின் சுபாவத்தையா? வரங்களைத்தானே! பெயர் சொல்லி அழைக்கும் வரத்துக்காகவே 40 நாள் உபவாசம் போட்ட ஊழியர்களையெல்லாம் எனக்குத் தெரியும். போஸ்டரில் பெயருக்குப் பின்னால் ”வரம்பெற்ற தேவஊழியர்” என்று போட்டுக் கொள்ளலாமல்லவா!

அற்புத அடையாளங்கள் ஊழியத்தில் அவசியம்தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது இருந்தால்தான் ஊழியமே செய்யமுடியும் என்ற மனநிலைதான் தவறு. பெயர் சொல்லி அழைத்து அற்புதங்கள் நடத்தும் ஊழியர்களுக்கு கூட்டம் வருகிறது, அவர்கள் ஹீரோக்களாகப் பார்க்கப்படுகிறார்கள், பலநாடுகளுக்கும் சுற்றுகிறார்கள் என்பதால் பலரது குறி வரங்களைப் பெற்றுக் கொள்வதிலேயே இருக்கிறது.

மாபெரும் தீர்க்கனான யோவான்ஸ்நானகன் ஒரு அற்புதமும் செய்யவில்லை. பல உண்மையான தேவதாசர்களும் அற்புதங்கள் செய்தாலும் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. பிரியமான இளம் ஊழியனே! நீ பணிவிடைக்காரனாக ஆக விரும்பாமல் வரத்தின் பின்னால் சென்று Celebrity ஆக விரும்புவாயானால் அது முதல் கோணல். இதோ! அதே பாதையில் உனக்கு முன்பாகச் சென்று படு பாதாளத்தில் விழுந்த அநேகர் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்!

மீடியா புகழ்:

இன்று டி.வியில் ஊழியம் செய்தால்தான்  பெரிய ஊழியர் என்ற நிலை வந்துவிட்டது. இன்று பாஸ்டர்மார்களும், சுவிசேஷகர்களும் தொலைக்காட்சிகளை ஆக்கிரமிக்கத் துவங்கிவிட்டார்கள். தேவனுடைய வார்த்தை மீடியாவில் பரவுவது நல்லதுதானே என்று பார்த்தால் அந்த நிகழ்ச்சிகளில் பிரசங்கத்துக்கு முன் அவர்கள் தங்களுக்குத் தாங்களே செய்துகொள்ளும் அறிமுகம் இருக்கிறதே! சிலருக்கு ஜெபித்து அவர்கள் கீழே விழும் வீடியோக்களையும் திரள் கூட்டத்துக்குச் செய்தி கொடுக்கும் வீடியோக்களையும் காட்டி ”இவர் இந்த நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசி(!), தேவனால் வரம் பெற்றவர்” என்றெல்லாம் அவர்கள் கொடுக்கும் Build up- களிலேயே தெரிந்துவிடும் இவர் எப்படிப்பட்டவரென்று. இயேசுவோ பவுலோ தன்னை இப்படி அறிமுகம் செய்திருப்பார்கள் என்று நினைத்துக் கூட பார்க்கமுடியாது.

டி.வி ஊழியம் பாவமல்ல ஆனால் அது தேவன் திறக்கும் வழியாக இருக்க வேண்டும். அப்படி தேவன் வழிதிறப்பது டிவியில் தோன்றி உண்டியல் குலுக்க அல்ல. தீர்க்கதரிசன வார்த்தைகள் மூலம் தேசங்களைக் குலுக்க. அப்படிச் செய்பவர்கள் புகழை அல்ல எதிர்ப்புகளையே சந்திப்பார்கள். அவர்களுக்குக் கிடைத்த டி.வி வாய்ப்பும் விரைவில் பறிபோகும். அப்படிப்பட்ட ஊழியத்துக்கு நீ தயாரா?

பிரியமானவனே! டிவியில் முகம் தெரியவேண்டும், பிரபலம் அடைய வேண்டும் என்ற வாஞ்சை உனக்குள் இருக்குமானால் அது முதல் கோணல். தேவன் உனக்கு வைத்திருக்கும் ஊழியம் எதுவோ அதில் அகமகிழ்வதே கர்த்தருக்கும் பிரியமானது.

வெளிநாட்டுப் பயணங்கள்:

இன்றைய கிறிஸ்தவ ஊழியர்களிடையே உள்ள இன்னொரு நம்பிக்கை “என்று எனக்கு முதல் வெளிநாட்டுப் பயண வாய்ப்பு கிடைக்கிறதோ அன்றுதான் தேவனுடைய ஆசியும் அங்கீகாரமும் எனக்குக் கிடைக்கத் துவங்கியிருக்கிறது என்பதாகும்.” நானும் ஊழியம் செய்தால் கர்த்தர் என்னையும் பல நாடுகளுக்கு கொண்டுசெல்வார் என்ற ஆசையே பலரை ஊழியத்துக்கு உந்தித் தள்ளுகிறது.” பிரியமானவர்களே! கர்த்தர் என்னைப் பல நாடுகளுக்கு அழைத்துச் சென்றார். ஆசீர்வதித்தார் என்று இவர்கள் விடும் சரடுகளை நம்பாதிருங்கள். உண்மையிலேயே தரித்திரர் வாழும் சோமாலியாவுக்கோ, கம்போடியாவுகோ, மியான்மருக்கோ இவர்கள் யாரும் செல்லுவதில்லை. அங்கெல்லாம் விசுவாசிகள் இல்லையா? அவர்களுக்கு உங்கள் ஆசீர்வாதங்களும், ஜெபங்களும், செய்திகளும் தேவையில்லையா? இவர்களை தேவன் அனுப்பவில்லை பாலாக்குகளைத் தேடித்தேடி ஓடும் பிலேயாம்கள் இவர்கள். உள்ளூரில் பத்தாயிரம் பேருக்குக் குறைவான கூட்டத்தில் பேசமாட்டேன் என்று முரண்டு பிடிப்பார்கள் ஆனால் பிரிட்டனுக்குப் போய் வெறும் பத்துப் பேருக்குப் பிரசங்கித்துவிட்டு வருவார்கள்.ஏனென்றால் அங்குள்ளவர்களெல்லாம் காஸ்ட்லி ஆத்துமாக்கள்!

பிரியமானவனே! ஊழியக்காரனானால் விண்ணூர்தியில் ஏறி லண்டன், அமெரிக்கா, சுவிஸ் என்று உலகம் சுற்றலாம் என்று நீ நினைத்தால் அது முதல் கோணல். இயேசு எளியவர்களையும் தரித்திரரையும் தேடிப் போகிற தேவன். இதற்காக கர்த்தர் யாரையும் பணக்கார நாடுகளுக்கே அனுப்பமாட்டார் என்று சொல்லவில்லை. அங்கே போய் முகதாட்சிணியம் இல்லாமல் தேவனுடைய வார்த்தையை உள்ளது உள்ளபடி பிரசங்கித்துவிட்டு, யாரிடமும் கையேந்தாமல் திரும்பிவருவது என்பது வேறு. அப்படிப்பட்டவர்களையே தேவன் அனுப்புகிறார். ஆனால் நம்முடைய ஊழியக்காரர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள மரியாதையை அங்கு போய்க் கேட்டுப்பார்த்தால்தான் விளங்கும்.

வரதட்சணை:

தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் மிகுந்துள்ள சில மாவட்டங்களில் உள்ள கேவலமான நிலைதான் இது. மருத்துவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் கிடைக்கும் வரதட்சணையை விட பாஸ்டர்களுக்குக் கிடைக்கும் வரதட்சணை அதிகம். அதனால் வீட்டுக்கு ஒருவரை பாஸ்டருக்குப் படிக்க அனுப்புகிறார்கள். இறையியல் கல்லூரிகளை இந்த மாவட்டங்களைச் சேர்ந்தோரே ஆக்கிரமித்துள்ளனர். நானும் கூட இறையியல் கல்லூரியில் சேர்ந்தபோது எங்கு பார்த்தாலும் மலையாளம் கலந்த தமிழைக் கேட்டு ஒருவேளை அந்த மாவட்டங்களில் எழுப்புதல் தீ பற்றி எரிகிறதோ என்று விசாரித்த போது கிடைத்த தகவல்தான் இது. வரதட்சணைக்காகவும் குடும்ப கவுரவத்துக்காகவும் தன் மகனை ஊழியக்காரனாகும் படி உற்சாகப்படுத்துபவர்கள் தங்கள் தலைமுறைக்கு சாபத்தைத் தாங்களே வருந்தியழைக்கிறார்கள். ரிங்கல் தோபே போன்ற மாசற்ற மாணிக்கங்கள் பெற்றெடுத்த விசுவாசக் குடும்பத்தாரே! தேவனுடைய பீடத்தில்  ஊனமானதையும் நசல் கொண்டதையும் படைப்பானேன்??

பிரியமானவனே! நீ பாஸ்டரானால் சந்தையில் நல்ல விலைக்குப் போகலாம் என்ற கணிப்பில் கர்த்தரின் பணிக்கு வருவாயானால் அது முதல் கோணல். ராஜ்ஜியத்தின் பணியை திருமணச் சந்தையில் வைத்து ஏலம் விடும் உனக்கு ஐயோ!

கடைசியாக சகோதரரே! உண்மை ஊழியம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

”ஊழியம் செய்தால் பூமியில் பெருத்த லாபமிருக்கிறது! எல்லாரும் ஊழியத்துக்கு ஓடியாங்கோ!” என்று இயேசு கூவி அழைக்கவில்லை. மாறாக விரும்பி வந்தவர்களையும் “சற்று பொறு!” எனக்கு சீஷனானால் செல்லுஞ்செலவைக் கணக்குப் பார்த்துவிட்டு, தீர்க்கமான முடிவெடுத்துவிட்டு பின்னர் வா!” ஒழுங்காக யோசிக்காமல் கலப்பையில் கைவைத்து விட்டு பின்னால் வருத்தப்படாதே! என்கிறார். லூக்கா 14:25-35 தயவுசெய்து ஒருமுறை வாசித்துப் பாருங்கள். 30-ஆம் வசனம் சொல்லுகிறபடி ஊழியம் என்பது ”வரவு அல்ல செலவு” பற்றியது.

சேவை கொள்வதல்ல சேவை செய்வதே ஊழியம். (மத் 20:26)

பெற்றுக் கொள்வதல்ல விட்டுக் கொடுப்பதே ஊழியம். (லூக்கா 14:33)

ஐசுவரியத்தில் பெருகுவதல்ல தாழ்மையின் சிந்தையில் பெருகுவதே ஊழியம்.(மத் 11:29)

அடிப்பொடிகளை அல்ல சீஷர்களைச் சம்பாதிப்பதே ஊழியம்.(மத் 28:19)

சத்தியத்தை விற்று சம்போகமாய் வாழ்வதல்ல சத்தியத்தைச் சொல்லி பலருக்கும் சத்துருவாய் மாறிவிடுவதே ஊழியம். (கலா 4:16)

தனக்கு ரசிகர்களைச் சேர்ப்பவன் ஊழியனல்ல. எல்லோருக்கும் அடிமையாய் மாறுபவனே ஊழியன். (1 கொரி 9:19)

கரன்ஸியில் திளைப்பவனல்ல, கர்ப்ப வேதனைப்படுபவனே ஊழியன் (கலா 4:19)

மாலைகளுக்குக் கழுத்தைக் கொடுப்பவனல்ல, பட்டயத்துக்குக் கழுத்தைக் கொடுப்பவனே ஊழியன்.(ரோமர் 16:4)

பிரபலத்தையல்ல பிறர் நலத்தை நாடுபவனே ஊழியன்.(எபி 11:24,25)

பிறர் தோளில் அமர்ந்து பவனி வருபவன் ஊழியன் அல்ல. தன் தோளில் சிலுவை சுமப்பவனே ஊழியன்.(லூக் 14:27)

ஊழியன் என்பவன் விசுவாசிகள் பணத்தில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்குபவன் அல்ல. அநேகரை நீதிக்குட்படுத்தி ஆகாய நட்சத்திரமாகப் பிரகாசிப்பவன்.(தானி 12:3)

ஊழியம் செய்ய விரும்பும் யாரும் தயவு செய்து இன்றைய பிரபல ஊழியக்காரர்களைப் பார்க்காதிருங்கள். பார்த்தால் அவர்கள் சிக்கிய கண்ணிகளிலேயே நீங்களும் சிக்கிக் கொள்வீர்கள். நீங்கள் யாரையாகிலும் உதாரணமாகக் காண விரும்பினால் வில்லியம் கேரி, ஜான்வெஸ்லி, ஒயிட்ஃபீல்ட், வில்லியம் பூத், ஹட்சன் டெய்லர், டேவிட் லிவிங்ஸ்டன், சாது சுந்தர்சிங், டி.எல்.மூடி, ஜார்ஜ் முல்லர் போன்ற தேவமனிதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். இன்றைக்கு நல்ல ஊழியர்களே இல்லை என்று சொல்ல வரவில்லை. இருக்கிறார்கள் ஆனால் அவர்களில் பலர் பிரபலமாக இல்லை.

எல்லாவற்றையும் விட ஆண்டவர் இயேசுவை நோக்கிப்பாருங்கள். அவரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு மகத்தான பாடம் இருக்கிறது.

 “அவர் தம்மைத் தாமே வெறுமையாக்கினார் (பிலி 2:7)”

 கர்த்தர் தாமே உங்கள் இருதயங்களில் பேசுவாராக! அவருக்கே சதாகாலங்களிலும் மகிமை உண்டாகட்டும்.

13 thoughts on “முதல் கோணல் முற்றும் கோணல்”

 1. Praise the Lord பிரதர் இந்த கால இளைஞர்களுக்கு மிகவும் அவசியமான கருத்துக்கள். கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்துவாராக. நான் இப்படி பட்ட செய்திகளை பல வாலிப கூட்டங்களில் பிரசங்கித்து என்னை அழைத்தவர்களின் ஆத்திரத்தை பெற்றாலும் பிறகு உணர்வடைந்து நன்றி கூறியுள்ளனர். எனவே தொடர்ந்து செயல்படுங்கள். கர்த்தர் உங்களோடு இருப்பாராக.

  1. அன்பு சகோதரரே!

   தங்கள் வரவுக்கும், பின்னூட்டத்துக்கும் அளித்த உற்சாகத்துக்கும் நன்றிகள்! கர்த்தருக்கே மகிமையுண்டாகட்டும்!!

 2. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெய்க்கும்.முதல் கோணல் முற்றும் கோணல் நல்ல தலைப்பு பிரதர்.இரவு நேரத்தில் சத்துருவினால் கள்ளத்தனமாக விதைக்கபட்ட களைகள்.அன்று சபை இவர்களை அடையாளம் கண்டும் காணாதவர்களை போல இருந்தது தான் இன்று இவ்வாறான தலைவர்கள் உருவாக காரணம்.அன்று அவர்கள் (சபை தலைவர்கள்)களை எடுக்க தவறியதால் இன்று இவர்கள் மேய்ப்பர்கள் ஆனார்கள்.

  1. ஆம் சகோதரரே! நாம் விழித்துக் கொள்ள இதுவே தருணம், நாம் இந்த பூமியில் கண்களை மூடுவதற்க்குள் மறுபடியும் ஆதித் திருச்சபையின் காலங்கள் திரும்புவதைக் காண கர்த்தர் அருள் செய்வாராக! தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் அடிமையின் நன்றிகள்!

 3. Dear brother,
  The above article is definitely help to those who are having wrong mind about the ministry, especially for youth. Nice message….. So pls keep writing these type of revival messages. May god bless you!!!

 4. Praise God !!! I can see the zeal in your writings. If Paul, Peter or James live in this century, they will say the same brother. pls keep writing and stay in touch.

 5. Happen to read the above message in the english translation. Truly meaning words. God has gave you the knowledge on what He wants to convey to His people. Atleast let this message be an eyeopener for the people who longs to serve God.

 6. நண்பரே, தமிழ் கிறிஸ்தவ உலகில் என்னவெல்லாம் நடந்தால் நன்றாயிருக்குமென்று நினைத்தோமோ அத்தனையும் உங்களின் பேனவிலிருந்து ஊற்றெடுக்கிறது. ஆண்டவருக்கே மகிமை உண்டவதாக.

 7. “இன்று ஊழியத்தில் காலடி எடுத்து வைக்கும் பலர் 40 நாட்கள் உபவாசம் போட்டு ஆண்டவரிடம் எதைக் கேட்கிறார்கள்? கனிகளையா? கிறிஸ்துவின் சுபாவத்தையா ? ”

  Good point brother ! GBU !

Leave a Reply