நம்மை கருவிலிருந்து சுமந்துவந்த கர்த்தராகிய அன்பின் நாமத்தில் வாழ்த்துக்கள்! கடந்த இரண்டு நாட்களாக புத்தாண்டு வாழ்த்துக்கள் முகதள உள்டப்பியிலும் (inbox), அலைபேசி குறுஞ்செய்திகளிலும் வந்து குவிந்தவண்ணம் இருக்கிறது. எல்லா செய்திகளுக்கும் நன்றி தெரிவித்து பதில் வாழ்த்துக்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். இன்று சபையில் நடக்கும் காலை ஆராதனைக்கும் செல்ல வேண்டும். நான் செல்லும் சபையில் புத்தாண்டு வாக்குத்தத்தம், தீர்க்கதரிசனம் போன்றவைகளுக்கு இடமில்லை, இம்மட்டும் நடத்திவந்த தேவனுக்கு நன்றி செலுத்தும் ஆராதனையாக மட்டும் நடத்தப்படுகிறது. ஆராதனைக்கு செல்லும் முன் புத்தாண்டு குறித்து என் மனதில் அலைமோதிவந்த சில சிந்தனைகளை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
எனது சிறுவயதில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிந்தபின் எற்படும் சோகத்தையும் வெறுமையையும் போக்கும் அருமருந்தாக புத்தாண்டு இருந்திருக்கிறது. ஆஹா! இன்னும் ஒரு வாரத்தில் இன்னொரு பண்டிகை வருகிறது அதுவரை ஸ்டார், குடில் எதையும் கழற்ற வேண்டியதில்லை என்கிற ஆறுதல்! என் பெற்றோரிடம் நாம் ஏன் புத்தாண்டை கொண்டாடவேண்டும் என்று கேட்டதற்கு “ஆண்டவர் பிறந்த நாளிலிருந்து (டிச 25) எட்டாம் நாளான இது இயேசு சுவாமிக்கு பேர் வைத்த நாள்!” என்று சொல்லிக்கொடுத்த ஞாபகம் இன்றும் இருக்கிறது (லூக்கா 2:21). ஆக அந்தக் காலங்களில் ஜனவரி முதல்தேதி என்னைப் பொறுத்தவரை இயேசு சுவாமிக்கு பேர் வைத்த நாள். பின்னர் விபரம் அறிந்த நாட்களில் ஆண்டவர் பிறந்தது சரியாக டிசம்பர் 25 அல்ல என்பதும் ஜனவரி-1 என்பது ஆண்டவர் விருத்தசேதனம் பெற்ற நாள் அல்ல என்று அறிந்து கொண்டது வேறு விஷயம். அதன் பின்னர் ஜனவரி-1 ஆம் தேதியை வெறும் புத்தாண்டாக மாத்திரம் பார்க்கப் பழகிக்கொண்டேன்.
2007- ஆம் ஆண்டுக்கு பின்னர் கர்த்தருடைய கிருபையால் சபைகளில் நடக்கும் வேதத்துக்கு புறம்பான கிரியைகளை கவனித்து எச்சரிக்கத் தொடங்கிய பின்னர் எனது கண்களை அதிகம் உறுத்தியது புத்தாண்டுக்கான தீர்க்கதரிசனம் என்ற பெயரில் கள்ளத் தீர்க்கதரிசிகள் ஜனங்களை ஏமாற்றுவதும், புத்தாண்டு ஆராதனைகளில் குலுக்கி எடுக்கப்படும் வாக்குத்தத்த சீட்டுகளுமாகும். இதன் மூலத்தை ஆராய்ந்தபோது இந்த கிரிகோரியன் காலண்டரை ஏதோ ஆண்டவர் தந்த காலண்டர்போல கிறிஸ்தவம் தனக்குள் உள்வாங்கிக் கொண்டதுதான் காரணம் என்று புலப்பட்டது. உலகம் முழுவதும் பொதுவாக பயன்படுத்தப்படும் காலண்டர் என்பதால் நாம் இதை பயன்படுத்துவது தவிர்க்கமுடியாதது. ஆனால் வாக்குத்தத்தம், தீர்க்கதரிசனம் என்று இந்தக் காலண்டருக்கு ஆவிக்குரிய அந்தஸ்து கொடுக்கவேண்டியது அவசியமா என்ற கேள்வி எழுகிறது. இது பல தவறான உபதேசங்களும், பழக்கவழக்கங்களும் சபைக்குள் நுழைய காரணமாய் இருக்கிறதல்லவா?
ஏன் தமிழ் புத்தாண்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று தமிழ் கிறிஸ்தவர்கள் பலரிடமும் கேட்டபோது எல்லோருமே ஒருமித்த குரலில் சொல்லும் பதில் “தமிழ் காலண்டர் இந்து மதத்துடன் சம்பந்தப்பட்டது” என்பதாகும். விக்கிபீடியாவும் தமிழ் மாதங்களின் பகுப்பு சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டது என்றே சொல்லுகிறது. அதாவது சூரியன் மேஷ இராசியில் பயணம் செய்யும்போது நடைபெறும் மாதம் சித்திரையாகும். இவ்வாறே அடுத்தடுத்த ஒவ்வொரு இராசியிலும் சூரியன் பயணம் செய்யும்போது 12 மாதங்களும் ஏற்படுகின்றன. இதுபற்றி முற்போக்கு தமிழ் உணர்வாளார்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம், ஆனால் நான் மேலே சொன்னது பொதுவான ஒர் நம்பிக்கையாகும். எனவே தமிழ் காலண்டரை பயன்படுத்தும் கிறிஸ்தவர்களை சகவிசுவாசிகள் ஏதோ விக்கிரக ஆராதனைக்காரரை பார்ப்பது போல பார்ப்பது வழக்கமாகிவிட்டது.
ஆனால் உண்மை என்னவெனில் தமிழ் நாட்காட்டி மட்டுமன்றி உலகில் உள்ள எல்லா காலண்டர்களுமே அந்தந்த பிராந்திய மதங்களின் தாக்கத்தில் உருவானவையே. நாம் பயன்படுத்தும் கிரிகோரியன் காலண்டர் கூட ரோமானிய மன்னன் ஜூலியஸ் சீசர் பயன்படுத்திய “ஜூலியன் காலண்டரின்” திருத்தப்பட்ட வடிவமாகும். இது பின்னர் பதிமூன்றாம் கிரிகோரி எந்ற கத்தோலிக்க குருவால் மறுசீரமைப்பு செய்யப்பட்டு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பிறந்ததாக கணிக்கபட்ட ஆண்டிலிருந்து கணக்கிடப்பட்டது. கிறிஸ்துவின் பிறப்பினை அடிப்படையாக கொண்டு கிறிஸ்துவிற்கு முன் (கி.மு) என்றும் கிறிஸ்துவிற்குபின் (கி.பி) என்று காலம் பகுக்கப்பட்டபின் இக்காலண்டருக்கு கிறிஸ்தவ நாட்காட்டி என்ற அந்தஸ்து வாட்டிகனால் தரப்பட்டது. பழைய நாட்காட்டியில் 10 மாதங்களே இருந்தன பின்னர் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இருமாதங்கள் சேர்க்கபட்டன. ஆனால் மாதங்களின், நாட்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் மாதங்களின் பெயர்களில் மாற்றங்கள் இல்லை.
இந்த நாட்காட்டியின் மாதங்களுக்கு பெயர் உண்டான விதம்:
ஜனவரி : ரோமானியர்களின் மிக முக்கியமான கடவுளின் பெயர் ‘ ஜானஸ் ‘. எனவே, ஆண்டின் முதல் மாதத்திற்கு ஜனவரி எனப்பெயர் வைக்கபட்டது.
பிப்ரவரி : ரோமானியர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளை நீக்க கொண்டாடும் பண்டிகை ‘ப்ருவா’ இவ்வகையில் பிப்ரவரி மாதம் தோன்றியது.
மார்ச் : ரோமானியர்கள் போர்களில் வெற்றி பெறுவதற்காக ‘மார்ஸ்’ என்ற கடவுளை வணங்குவார்கள். அது மார்ச் மாதமாயிற்று.
ஏப்ரல் : ரோமானியர்கள் விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் காலத்தில் ‘ஏபிரோ’ என்ற தெய்வத்தை வழிப்படுவார்கள். எனவே, அந்த மாதம் ‘ஏப்ரல்’ என்றாயிற்று.
மே : உலகத்தை மேம்படுத்தும் ரோமானியத் தேவதையின் பெயர் ‘மேயா’. அதனால் ஏற்பட்டது ‘மே’ மாதம்.
ஜுன் : ரோமானியர்களின் சொர்க்கத்தின் கடவுள் ‘ஜோனா’ அது ஜுன் மாதம்.
ஜுலை : ஜுலியஸ் பிறந்த மாதம் எனவே அவர் நினைவாக அதற்கு ‘ஜுலை’ எனப்பெயர் வைக்கபட்டது.
ஆகஸ்டு : ரோமானியர் சாம்ராஜ்யத்தை நிறுவியவர் ‘ அகஸ்டஸ்’. அவர் நினைவாகப் பிறந்தது ஆகஸ்டு மாதம்.
செப்டம்பர் : மார்ச் முதல் மாத மாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில் செப்டம் என்றனர். ஆனால், புதிய அமைப்பின்படி ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழைய பெயரே நிலைத்து விட்டது.
அக்டோபர் : அக்ட்டோ என்றால் எட்டு, ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது. இதுவும் பெயர் மாற்றம் செய்யப்படாமல் பத்தாவது மாதமாகி விட்டது.
நவம்பர் : நவம் என்றால் ஒன்பது. ஒன்பதாம் மாதமாக ஆரம்பதில் இதைத் கணித்தனர். 11ம் மாதமாக மாறிய பிறகும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.
டிசம்பர் : டிசம் என்றால் பத்து. பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், 12ம் மாதமான பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப்பட்டது.
ஆக இந்த நாட்காட்டி ரோமானிய மத சடங்குகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கபட்டு, பின்னர் வாட்டிகனால் கிறிஸ்தவ காலண்டராக சீர்திருத்தப்பட்ட ஒன்றாகும். எனவே இது ஏதோ பரலோகத்தில் இருந்து அருளப்பட்டது போல நாம் இதை தூக்கிக் கொண்டாடவேண்டியதில்லை. அதே வேளையில் புறக்கணிக்கவும் வேண்டியதில்லை. காரணம் நாட்காட்டி என்பது சமூக, சமய, வணிக, நிர்வாக நோக்கங்களுக்காக நாட்களை ஒழுங்கு படுத்தும் ஒரு முறை ஆகும். எனவே நாம் இதை தவிர்க்க முடியாது. இதைப் புறக்கணித்தால் நீங்கள் உங்கள் பிறந்தநாள் திருமணநாள், அத்தனையையும் சேர்த்து புறக்கணிக்க வேண்டியதிருக்கும். அப்படி புறக்கணிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம், ஆனால் நாம் அந்த ஓரக்கொள்கைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அதேவேளையில் தமிழ் மாதங்களுக்கும் கிரிகோரியன் மாதங்களுக்கும் ஆன்மீகரீதியில் பெரிய வித்தியாசம் இல்லை என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
நாம் அனுதினமும் ஆண்டவருக்கு நன்றி சொல்வது போல ஆண்டு இறுதியில் ஆண்டவருக்கு நன்றி சொல்வது தவறல்ல, அதை தமிழ் வருடப்பிறப்பின்போது செய்தாலும் தவறல்ல, ஆனால் கர்த்தரை பொறுத்தவரையில் அவர் கிரிகோரியன் காலண்டரையோ தமிழ் காலண்டரையோ கையில் வைத்துக்கொண்டு திட்டங்களை வகுப்பதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பலர் புத்தாண்டு வாழ்த்து சொல்லும்போது “இந்தப் புதிய ஆண்டு உங்கள் வாழ்வில் நன்மைகளையும் வளத்தையும் கொண்டு வந்து சேர்ப்பதாக!” என்று வாழ்த்துகிறார்கள். புத்தாண்டு நம்மிடம் எந்த ஆசீர்வாதத்தையும் கொண்டுவந்து சேர்ப்பதில்லை கர்த்தரே வருடத்தின் எல்லா நாட்களிலும் நம்மீது தம் கண்ணை வைத்து நம்மை ஆசீர்வதிக்கிறார். பிதாவானவர் காலண்டரைப் பார்த்து நம்மை ஆசீர்வதிப்பதில்லை. அவர் ஆண்டவராகிய இயேசுவின் திருமுகத்தைப் பார்த்தே நம்மை ஆசீர்வதிக்கிறார். எனவே புத்தாண்டு தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்கள் தங்கள் சொந்தத்தில் இருந்து எடுத்து பேசுகிறார்கள். வாக்குத்தத்தம் தருபவர்கள் ஏற்கனவே எழுதப்பட்ட வசனங்களில் இருந்து தமக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்து எடுத்து தருகிறார்கள்.
நாம் காலண்டரை புறக்கணிக்க வேண்டியதில்லை, ஆனால் அந்த காலண்டர் மூலம் சபைக்குள் நுழையும் மூடப்பழக்கவழக்கங்களை எதிர்த்து நிற்கவேண்டும். ஏனெனில் இந்த கிரிகோரியன் காலண்டருக்கு எந்த ஆவிக்குரிய முக்கியத்துவமும் இல்லை.
மூட நம்பிக்கைக்கு கிறிஸ்தவர்களும் சற்றேனும் சளைத்தவர்கள் அல்ல. புத்தாண்டு அதிகாலை ‘கலைக்ஷனை’ சபைகளுக்கு விட மனது வராதவரை, அந்த “கலைக்ஷனை” அமுக்கிகொள்ளும் பிஷப்புகளும், போதகர்களும் விசுவாசியின் கண்களுக்கும் தெரிவதில்லை. எல்லாமே இங்கு வணிகம்தான்.
மாதங்களின் பெயர்கள் எப்படி வந்தது என்பதை படித்தது எனக்கு புதிதாக இருந்தது. நன்றி
பலர் புத்தாண்டு வாழ்த்து சொல்லும்போது “இந்தப் புதிய ஆண்டு உங்கள் வாழ்வில் நன்மைகளையும் வளத்தையும் கொண்டு வந்து சேர்ப்பதாக!” என்று வாழ்த்துகிறார்கள். புத்தாண்டு நம்மிடம் எந்த ஆசீர்வாதத்தையும் கொண்டுவந்து சேர்ப்பதில்லை கர்த்தரே வருடத்தின் எல்லா நாட்களிலும் நம்மீது தம் கண்ணை வைத்து நம்மை ஆசீர்வதிக்கிறார். பிதாவானவர் காலண்டரைப் பார்த்து நம்மை ஆசீர்வதிப்பதில்லை. அவர் ஆண்டவராகிய இயேசுவின் திருமுகத்தைப் பார்த்தே நம்மை ஆசீர்வதிக்கிறார்.
Really True Dear Brother.. Hallalujah..