பாதாம் சொல்லும் இரகசியம்

பாதாம்(Almond) என்று வழக்குச் சொல்லால் அழைக்கப்படும் வாதுமைக்கு வேதத்தில் ஒரு சிறப்பான இடம் உண்டு. வனாந்திரத்தில் இஸ்ரவேல் புத்திரரில் ஒரு கூட்டத்தார் ஆரோனின் ஆசாரியத்துவத்தையும், அழைப்பையும் குறித்து கேள்வி எழுப்பி கலகம் பண்ணினார்கள். காரணம் அவர்களுக்கு ஆரோனுடைய ஆசாரியப் பட்டத்தின் மேல் ஒரு கண் இருந்தது (எண் 16:10).

அப்போது கர்த்தர் ஆரோனின் ஆசாரிய அழைப்பை அவர்களுக்கு உறுதிப்படுத்திக் காண்பிக்க ஒரு சோதனை வைத்தார். இஸ்ரவேலின் ஒவ்வொரு வம்சத்தின் பிரபுக்களிடத்திலும் ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பேரை எழுதச் சொன்னார். லேவியின் கோலின்மேல் ஆரோனின் பெயர் எழுதப்பட்டது. அவை அனைத்தும் ஆசரிப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் வைக்கப்பட்டன. மறுநாளில் லேவியின் குடும்பத்தார் சார்பாக வைக்கப்பட்டிருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப்பழங்களைக் கொடுத்தது என்று எண்ணாகமம் 17-ஆம் அதிகாரம் சொல்லுகிறது.

அதுமட்டுமல்ல, ஆசரிப்புக் கூடாரத்தின் அங்கங்களில் ஒன்றான மெனோரா என்று அழைக்கப்படும் விளக்குத் தண்டில் முழுக்க முழுக்க வாதுமையின் மொட்டு, பூ, பழம் ஆகிய டிசைன்களை தேவன் வடிக்கச் சொல்லியிருந்தார். அந்த விளக்கு “நானே உலகத்துக்கு ஒளி(யோவா 8:12)” என்று சொன்ன கர்த்தர் இயேசுவுக்கு அடையாளமாக இருக்கிறது. அது சரி, அந்த விளக்கில் ஏன் வாதுமை டிசைன்கள்? வாதுமைக்கும் இயேசுவுக்கும் என்ன சம்பந்தம்?

எல்லாக் காலங்களிலும் பரபரப்பாக இயங்கும் உலகம் குளிர் காலங்களில் முடங்கிப் போகிறது. எனவே குளிர் என்பது மரணத்துக்கு அடையாளமாகக் கருதப்படுகிறது. குளிர்காலத்துக்குப்பின் வரும் வசந்தகாலத்தில் மரங்கள் பூப்பூத்து கனிகொடுத்து அனைவரையும் மகிழ்விக்கின்றன. குளிர்காலம் முடிந்ததும் மற்ற மரங்களுக்கு முன்னால் முதலில் பூப்பூக்கும் மரம் வாதுமை மரம் ஆகும். அதாவது மரித்தோரிலிருந்து முதற்பலன் என்று அதைக் குறிப்பிடலாம். அதாவது மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறானவராகிய கிறிஸ்துவுக்கு(கொலோ 1:18) அது அடையாளமாக இருக்கிறது.

ஆரோனின் கோலில் பூத்திருக்கும் வாதுமை கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமைக்கு அடையாளமாக இருக்கிறது. அந்தக் கோலைப் பயன்படுத்தி ஆரோன் செய்த அற்புதங்கள் அனைத்தும் கிறிஸ்து செய்தவையே! ஆம், பழைய ஏற்பாட்டில் எங்கு கைவைத்தாலும் அங்கு கிறிஸ்துவைத்தான் நாம் காணமுடியும்.

அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது(கொலோ 2:17)

Leave a Reply