பரலோக ராஜ்ஜியம் – மேய்ப்பனின் குரலும் ஆட்டின் செவியும் (பாகம் -2)

உம் அரசு வருக- பாகம் 6

இத்தொடரின் முந்தைய பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும்
இத்தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும்

கர்த்தர் தன் பிள்ளைகளுக்குக் கொடுத்துள்ள மகத்துவமான பரிசுகளில் ஒன்று அவருடைய வேதம் ஆகும். கர்த்தருடைய வேதம் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது கருப்பு அட்டையில் வெள்ளைத்தாளில் சிறு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு பெரிய புத்தகம். கர்த்தருடைய வேதம் என்பது என்ன?அது ஒரு தோல்சுருளா? ஒரு பெரிய புத்தகமா? அல்லது இக்கால ஹைடெக் மொபைல் அப்ளிகேஷனா?

கர்த்தருடைய வேதம் என்பது அவரது கற்பனைகளும் போதனைகளும் ஆகும். அதை அவர் கற்பலகையிலோ, காகிதத்திலோ, மென்பொருளிலோ மாத்திரம் அல்ல. மிக மிக மிகப் பிரதானமாக பிதா அதை ஒவ்வொரு பிள்ளையுடைய  இருதயத்திலும் பரிசுத்த ஆவியானவர் மூலமாக எழுதுகிறார்.  கீழ்கண்ட ஆணித்தரமான வாக்குத்தங்களைப் பாருங்கள்!

அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை (எபிரெயர் 8:10,11).

நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. (1 யோவான் 2:27)

ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது… அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.ழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே. ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்? (2 கொரி 3: 3-8)

ஆக…அச்சடிக்கபட்ட வேதத்தை யார்வேண்டுமானாலும் கையில் வைத்துக்கொள்ளலாம். பிசாசுக்கு எல்லா மொழிபெயற்ப்புகளிலிருக்கும் எல்லா வசனங்களும் அத்துப்படி. ஆனால் யாருடைய இருதயத்தில் உடன்படிக்கையின் வார்த்தை எழுதப்பட்டிருக்கிறதோ அவர்களே வேதத்தைப்பெற்ற தேவபுத்திரர் ஆவார்.

தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க..என்று யோவான் 10:35-இல் இயேசுவே சொல்லுகிறார்.

மோசே மூலமாய் அருளப்பட்ட பழைய உடன்படிக்கையானது கற்பலகையிலும் தோல்சுருளிலும் எழுதப்பட்டு அபிஷேகம் பண்ணப்பட்ட இறைப்பணியாளர்கள் வழியாக மக்களுக்கு கொடுக்கபட்டது. ஆத்மமீட்பு பெறாத மனிதனின் பரிதாப நிலை அதுதான். அவனால் தேவனிடத்திலிருந்து எதையுமே நேரடியாகப் பெற இயலாது. அவனுக்கு ஒரு மத்தியஸ்தன் தேவை. ஆனால் புதிய ஏற்பாட்டிலோ திரைச்சீலை இரண்டாகக் கிழிக்கபட்டு பிரிவினையாய் இருந்த நடுச்சுவர் தகர்க்கப்பட்டு, நாம் “அப்பா பிதாவே…” என்று கூப்பிடத்தக்க புத்திர சுவீகாரத்துக்குள் நுழைந்துவிட்டோம். இனி மத்தியஸ்தன் தேவையில்லை..

ஆனால்…துரதிர்ஷ்டவசமாக இன்றைய நவீன கிறிஸ்தவம் சோரம்போய் தேவமகிமையை இழந்து நிற்கக் காரணம். மேய்ப்பருக்கு தன் செவியை விலக்கியதே! அவரது நுகத்தை ஏற்றுக்கொண்டு அவரிடம் கற்றிருந்திருப்போமானால் அவர் யார், அவருக்குள் நாம் யார் என்ற இரகசியம் விளங்கியிருந்திருக்கும்.

“இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன் (எபே 5:32)” என்று பவுல் சொல்லுகிறார்.

அது என்ன இரகசியம்?

நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புக்கும் உரியவர்களாயும் இருக்கிறோமாம். கர்த்தர் தமது சொந்த சரீரத்தை தாமே போஷித்துக் காப்பாற்றுகிறாராம். ஆனால் கிறிஸ்து இரத்தம் சிந்தி சம்பாதித்த இந்த உன்னதமான வாழ்க்கையை புறம்பே தள்ளிவிட்டு இன்றைய கிறிஸ்தவம் இன்று மீண்டும் எழுத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. மணவாட்டி கண்கள் கட்டப்பட்டவளாய் கல்வாரி மலையிலிருந்து மறுபடியும் சீனாய் மலைக்கு இழுத்துச் செல்லப்படுகிறாள். இது மாபெரும் அவலம்! அநியாயம்!!!

இங்கு நான் மிக மிக முக்கியமானதொரு கேள்வியை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். சற்றே சிந்தித்துப் பாருங்கள்!! நாம் அனைவருக்கும் ஆதித்திருச்சபையை நன்றாகத் தெரியும். இந்த 20 நூற்றாண்டு வரலாற்றில் சிறப்பான, சாட்சியான சபை ஆதித்திருச்சபையே !

உங்களுக்குத் தெரியுமா? அவர்களிடம் நம்மிடம் உள்ளதுபோல அச்சடிக்கபட்ட வேதாகமம் இல்லை. சுவிசேஷங்கள் மற்றும் நிருபங்கள் எழுதி தொகுக்கப்படவில்லை. விசுவாசிகள் கையில் நிருபங்களும் சுவிசேஷங்களும் தொகுக்கப்பட்டு தரப்பட்டது இரண்டாம் நூற்றாண்டில்தான். ஆனால் அந்த முதல் நூற்றாண்டு விசுவாசிகளின் சாட்சியைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது தெரியுமா?

அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார். (அப் 2: 2-47)

உங்களாலும் என்னாலும் இந்த வாழ்வைக் கனவேனும் காண இயலுமா? நொண்டிச் சாக்குகள் சொல்லாமல், மாய்மாலம் பண்ணாமல் குறைந்த பட்சம் உண்மைகளையாவது திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளலாமே!

சுவிசேஷங்களும் நிருபங்களும் எழுதப்படாத காலத்தில், அச்சிடப்பட்ட வேதாகமம் இல்லாத காலத்தில் வேதத்தின்படி வாழ்கிற, உலகத்தைக் கலக்குகிற சிறு கூட்டம் ஒன்று வாழ்ந்தது என்ற வரலாற்று உண்மையை நான் உணர்ந்த நாளில் யாரோ என்னை ஓங்கி செவுளில் அறைந்தது போல இருந்தது. நூற்றுக்கணக்கணக்கான வேதாகம மொழிபெயற்ப்புகளை வைத்துக் கொண்டு, ஆயிரக்கணக்கான விளக்கவுரைகளை வைத்துக்கொண்டு நான் ஏன் இன்னும் தோற்றுக் கொண்டிருக்கிறேன்!!?? அப்படியானால் அவர்களை முடுக்கியது எது? என்னை முடக்குவது எது? அந்த அதிஉன்னத வாழ்வை அவர்களுக்கு சாத்தியமாக்கித் தந்தது எது? அது எனக்கோ கானல்நீராகிப் போனதன் மர்மம் என்ன? பரிசுத்த ஆவியானவர் மூலம் வேதமானது அவர்களது இருதயத்தில் எழுதப்பட்டிருந்ததால் அல்லவோ அது அவர்களுக்கு சாத்தியமானது?  பிரதான மேய்ப்பருக்கு செவிகொடுத்தலின் மேன்மையை இன்று நாம் வெறும் வரலாறாகப் படித்துக் கொண்டிருக்கிறோம், அவர்களோ அதில் வாழ்ந்தார்கள்.

என்னையும் உங்களையும் முடக்கியது எது தெரியுமா?

வேதத்தை பட்டயம் என்றும், அக்கினி என்றும் வேதமே வருணிப்பது மகாப் பெரிய உண்மையாகும். பட்டயமும் சரி, தீயும் சரி சரியாகப் பாவித்தால் நன்மைதரும், தவறாகக் கையாண்டாலோ காயமும்  மரணமும் ஏற்படும். நான்காம் நூற்றாண்டுக்குப் பின் ஒரு மாபெரும் இருள் சபையைக் கவ்விப்பிடித்தது. ஜனங்கள் வேதமுமின்றி, பரிசுத்த ஆவியுமின்றி “ஆவிக்குரிய பாபிலோனுக்கு” அடிமையாய்ப் போனார்கள். பாபிலோன் சொல்வதே வேதம் என்றாகிப் போனது. இந்நிலை மாற 15 ஆம் நூற்றாண்டுகளில் ஜான்விக்ளிப் போன்ற விசுவாச வீரர்கள் தம் உயிரையும் பணையம் வைத்து இருளுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட வேதபுத்தகத்தை மறுபடியும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தார்கள். பின்னர் உலகின் பல மொழிகளிலும் வேதாகமம் அச்சிடப்பட்டு எல்லோர் கைக்கும் வந்து சேர்ந்து விட்டது. இருளில் மூழ்கியிருந்த உலகத்துக்கு இது தேவனும் அவரது உண்மை ஊழியர்களும் சேர்ந்து கொடுத்த மாபெரும் பரிசாகும்.

அந்த பரிசு கிடைத்தவுடன் இருள் விலகியிருக்க வேண்டும், சபையின் காயம் ஆறியிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? இன்னும் ஆழ்ந்த இருள் சபையைக் கவ்விப்பிடித்துவிட்டது. காயமானது இன்னும் உக்கிரமாகி சீழ்பிடித்துவிட்டது. இதற்க்குக் காரணம் என்ன பரிசில் ஏதேனும் குறையா? அல்லது பரிசு கொடுத்தவர்களிடம் குறையா? இரண்டுமே இல்லை. பரிசு பெற்ற நம்மிடமே குறை.

தேவனுடைய பிரமாணம் நம்மை கிருபைக்குள் வழிநடத்தும் ஆசிரியர் என்று வேதம் சொல்லுகிறது. 1 யோவான் 2:27 சொல்லுவது போல பரிசுத்த ஆவியானவர் துணையுடன் வேத புத்தகத்தை வாசித்து அவரைப் பற்றிக்கொண்டு அவரிடம் கற்று இருந்திருப்போமானால் வேதத்தை மொழிபெயற்ப்பதற்காக ஜான் ஹஸும், வில்லியம் டிண்டேலும் உயிரோடு எரிக்கப்பட்டு மரணித்ததற்கும், வில்லியம் கேரி எல்லாவற்றையும் இழந்ததோடு தனது தலைப்பிள்ளையையும் தன் சொந்தக் கைகளால் குழிதோண்டி புதைத்துவிட்டு ஊழியம் செய்ததற்க்கும் அர்த்தம் இருந்திருக்கும். ஒரே ஆவியானவர் உதவியுடன் சத்தியத்தை வாசித்து ஒரே விதமாகப் புரிந்துகொண்ட ஒருமனமுள்ள சந்ததி ஒன்று எழும்பியிருக்கும்.

விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.(அப் 4:32)என்ற வரலாறு மீண்டும் திரும்பியிருந்திருக்கும். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன் (யோவான் 17:21) என்ற இயேசுவின் ஜெபத்துக்கு பதில் கிடைத்திருந்திருக்கும்.

ஆனால் நாம் செய்தது என்ன?

நமக்கு தலைக்கு மேல் ஏகப்பட்ட பூமிக்குரிய அலுவல்கள் இருக்கிறபடியாலும் பரிசுத்த ஆவியானவரின் சத்தம் கேட்பதற்க்கு நேரமும் பொறுமையும் இல்லாதிருப்பதாலும் “நமக்கு நாமே” திட்டம்போல நாமே ஒரு அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பில் வேதாகமக் கல்லூரி என்பதை ஓர் அங்கமாக்கி அதற்க்கு சிலரை அனுப்பி அவர்களுக்குத் தேவையான சம்பளத்தையும் கொடுத்து “எங்கள் சார்பாக நீங்கள் வேதத்தை முழுமையும் கற்று எங்களுக்குப் போதியுங்கள்…” என்ற பொறுப்பை அவர்கள் தலையின் மீது சுமத்திவிட்டோம். அவர்களும் அதைப் பரிசுத்த ஆவியானவரிடம் அல்லவா கற்கவேண்டும்! அவர்கள் பரிசுத்த ஆவிக்கு எங்கே போவார்கள்? கொடுக்கப்பட்ட நான்கு வருடத்துக்குள் கோர்ஸை முடிக்கவேண்டுமல்லவா? ஆவியானவரிடம் எங்கே கற்பது? அவர் நம் இழுவைக்கு வரமாட்டாரல்லவா? எனவே ஒரே வழி புத்தகத்தில் கற்று அறிவைப் பெருக்கிக் கொண்டு அவர்கள் தாம் தலையில் ஏற்றிய அறிவை நம் தலைக்குள் இறக்குவது. ஆக இறுதியில் இயற்பியல், வேதியல், விலங்கியல், தாவரவியல் போல வேதம் “ஆன்மஇயல்” என்ற ஒரு சாதாரண ஏட்டுச்சுரைக்காய் ஆகிப்போனது. ஆன்மஇயலுடன் வணிகவியலைச் சேர்த்து இன்று பலர் அருமையாகக் கல்லாக் கட்டுகிறார்கள்.

இதுதான் தன் தலைமகனை தரைக்குத் தாரைவார்த்துவிட்டு கண்ணும் கருத்துமாக சொந்தமொழி வேதத்தை நம் கையில் வடித்துத் தந்த வில்லியம் கேரி போன்றோருக்கு நாம் செய்த மரியாதை. அச்சடிக்கபட்ட வேதம் கையில் இருக்கிறபடியால் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பதுபோல இன்று ஆளாளுக்கு தங்கள் இஷ்டத்துக்கு வேதத்தைப் போதிக்கிறார்கள். குறைந்த பட்சம் பெரேயா விசுவாசிகளைப் போல கேட்கும் வசனத்தை ஒப்பிட்டு சரிபார்த்துத் கொள்ளும் உரைகல்லாகக் கூட நம்மில் யாரும் இன்று வேதபுத்தகத்தைப் பயன்படுத்துவதில்லை. உபதேச மாறுபாடுகளின் விளைவாக புற்றீசல்போல சபைப் பிரிவுகள் இன்று பெருகிவிட்டன. ஒருவர் சொல்வதை இன்னொருவர் ஏற்றுகொள்வதில்லை. கசப்பு, வெறுப்பு, போட்டி பொறாமை, அரசியல் எல்லாம் இன்று கிறிஸ்தவத்தில் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டன. இந்த அவலம் இன்று கிறிஸ்தவத்தாலேயே சரி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. இது அச்சடிக்கப்பட்ட வேதம் இல்லாதிருந்த முந்தின கால எத்தைப் பார்க்கிலும் மிகக் கொடிதான எத்தாகும். அறிவில்லாமையால் சங்காரமாவதென்பது இதுதான்! எழுத்து எத்தனை கொடுமையாகக் கொல்லுகிறது பாருங்கள்!!!!

உயிர்ப்பிக்கும் ஆவி எங்கே? அதன் விளைவாக விளையும் ஒருமனம் எங்கே??

இன்று நாங்கள் அனுதினமும் அநேக விசுவாசிகளை சந்திக்கிறோம். ஒருவர் ஆவிக்குரிய காரியத்தைக் குறித்துப் பேசுவாரென்றால் அவர் பேச ஆரம்பித்து சில நிமிடங்களுக்குள் அவர் எந்த கிறிஸ்தவ ஆசிரியரின் வாசகர் என்பதை எளிதில் கண்டுகொள்ள முடிகிறது.

ஏ.டபிள்யூ.டோசர், வாட்ச்மேன்நீ, லியோனார்ட் ரேவன்ஹில், சகரியாபூணன் போன்ற ஆரோக்கியமான உபதேசங்களை (Sound Doctrins) எழுதும் ஆசிரியர்களுக்கு ஒரு வாசகர்  கூட்டம்.

டெரிக்பிரின்ஸ், பீட்டர் வேக்னர், சகரியா டேனிபார்ம் போன்ற பிசாசுஇயல் மற்றும் ஆவிக்குரிய போராட்டம் (Spiritual Warefare) பற்றி எழுதும் ஆசிரியர்களுக்கு ஒரு வாசகர் கூட்டம்.

ஜாய்ஸ் மேயர், கென்னத் ஹேகின், ஜோயல் ஒஸ்டீன், ஜோசப் பிரின்ஸ், சாம்.பி.செல்லதுரை போன்ற செழிப்பு உபதேச(Prosperity Gospel) எழுத்தாளர்களுக்கு ஒரு பெரும் வாசகர் கூட்டம்.

ரெய்னார்ட் போங்கே, பில்லி கிரஹாம், டி,ஜி,எஸ் தினகரன், மோகன்.சி.லாசரஸ் போன்ற சுவிசேஷ எழுத்தாளர்களுக்கு ஒரு வாசகர் கூட்டம்.

கேதரின் பாக்ஸ்டர், ரொனால்ட் பக் போன்ற மோட்சம், நரகம், தேவதூதர் தரிசனங்களை எழுதும் ஆசிரியருக்கு ஒரு வாசகர் கூட்டம் என கூட்டம் கூட்டமாகப் பிரிந்து நிற்கிறோம். இதில் பிரதான மேய்பரின் சத்தத்தைக் கேட்டு அவருக்கு அந்தரங்கத்தில் செவிகொடுக்கும் ஆடுகள் எத்தனை பேர் இருக்கிறோம்? இதுதான் தன் சரீரத்தைக் குறித்த கிறிஸ்துவின் சித்தமா?

நாம் வாயைத் திறந்தால் நமது ஆஸ்தான எழுத்தாளரின் சிந்தனைதான் வெளியே கொட்டுகிறதே தவிர ஆவியானவர் நம்முடன் அனுதினமும் பேசுகிறார் என்பதற்கான அறிகுறியே எள்ளளவும் இல்லையே!

கடைசி நாளில் ஒரு பெருங்கூட்ட ஜனத்தைப் பார்த்து “நான் உங்களை அறியேன்!” என்று சொல்லப் போகிறாராம்.

ஆரோக்கிய உபதேச எழுத்தாளரின் வாசகராக இருப்பவர்கள், செழிப்பு உபதேச எழுத்தாளரின் வாசகருக்கு உங்கள் நம்பிக்கை தவறு என்று அறிவுரை வழங்குகிறோம். ஆரோக்கிய உபதேசம் பேசுவது சரிதான்!! ஆனால் வெறும் ஆரோக்கிய உபதேசத்தை ஏட்டளவில் கற்று என்ன பயன்??? நாம் மேய்ப்பரின் சத்தத்தை தனிப்பட்ட விதத்தில் கேட்கிறோமா அல்லது வெறும் புத்தகத்திலும் இணையத்திலும் படிக்கும் ஆரோக்கிய உபதேசம் மாத்திரமே நம் உணவாயிருக்கிறதா? அப்படியானால் நாமும் புறக்கணிக்கப்படும் ஆபத்திலிருக்கிறோம் என்பதை அறிவோமாக.

 வேதம் சபைக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவை தலைக்கும் உடல் உறுப்புகளுக்கும் ஒப்பிட்டிருக்கிறது. உடலின் ஒவ்வொரு உறுப்பும் தலையோடு நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்புக்கும் மூளை நேரடியாகவே செய்தி அனுப்ப இயலும். கால் பெருவிரலை அசைக்க வேண்டுமானால் மூளைக்கு வாயின் உதவி தேவையில்லை. மூளை நேரடியாக செய்தி அனுப்ப கால் பெருவிரல் தன்னால் அசையும். அதுதான், அவன்தான் உண்மையான விசுவாசி, தேவபுத்திரன்….

 கடந்த பாகத்தில் எழுதியதை மறுபடியும் நினைப்பூட்டி முடிக்கிறோம். நல்ல மேய்ப்பனானவர் தன் ஒவ்வொரு ஆட்டுடனும் பேசுகிறார். நீங்கள் அவருடைய ஆடுதானா?

2 thoughts on “பரலோக ராஜ்ஜியம் – மேய்ப்பனின் குரலும் ஆட்டின் செவியும் (பாகம் -2)”

  1. அப்படியானால் அவர்களை முடுக்கியது எது? என்னை முடக்குவது எது?
    நல்ல சாட்டை அடி.

  2. //ஆரோக்கிய உபதேச எழுத்தாளரின் வாசகராக இருப்பவர்கள், செழிப்பு உபதேச எழுத்தாளரின் வாசகருக்கு உங்கள் நம்பிக்கை தவறு என்று அறிவுரை வழங்குகிறோம். ஆரோக்கிய உபதேசம் பேசுவது சரிதான்!! ஆனால் வெறும் ஆரோக்கிய உபதேசத்தை ஏட்டளவில் கற்று என்ன பயன்??? நாம் மேய்ப்பரின் சத்தத்தை தனிப்பட்ட விதத்தில் கேட்கிறோமா அல்லது வெறும் புத்தகத்திலும் இணையத்திலும் படிக்கும் ஆரோக்கிய உபதேசம் மாத்திரமே நம் உணவாயிருக்கிறதா? அப்படியானால் நாமும் புறக்கணிக்கப்படும் ஆபத்திலிருக்கிறோம் என்பதை அறிவோமாக.//

    நூற்றுக்கு நூறு உண்மை சகோதரனே!

    நான் ஆரோக்கிய உபதேசத்தை ஏற்று செழிப்பின் உபதேசத்தை வெறுப்பவன். ஆரோக்கிய உபதேசிகளை பெரிதும் மதிப்பவன். கடந்த சில காலமாக, ஆரோக்கிய உபதேசிகளிடமிருந்து கற்றுக்கொள்வதை விடுத்து நானே தேவனிடமிருந்து ஜீவனைப் பெற வேண்டுமேன்ற உணர்வை கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறேன். இதனால் நான் வாங்கி வைத்த சில நல்ல புத்தகங்கள் என் வீட்டில் தூங்குகின்றன.
    தங்களது நடுநிலை போற்றுதற்குரியது. கர்த்தர் உம்மை தொடர்ந்து தம் கிருபையில் நடத்துவாராக!

Leave a Reply