ஒரு தேவமனிதன் இரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில் பல கோழைகளின் தொடை நடுக்கம் இருக்கிறது.
முதலாவதாக சாத்தான் என்கிற தொடைநடுங்கி, தேவனுடைய மனிதர்களைக் கண்டு மட்டுமல்ல அவர்களுடைய வித்தைக் கண்டுகூட நடுங்குகிறவன். எகிப்திலே யூத குழந்தைகள் கொல்லப்பட்டது, ஆண்டராகிய இயேசு பிறப்பின்போது யூதேயாவின் குழந்தைகள் அழிக்கப்பட்டது, இப்படி கிரகாம் ஸ்டெயின்ஸின் பிஞ்சுப் புதல்வர்கள் பொசுக்கப்பட்டது வரை சரித்திரம் நீள்கிறது. தனது அதிகாரத்தை ஆட்டங்காணச் செய்யும் வல்லமை தேவனோடு இணைந்த ஒரே ஒரு சாதாரண தனி மனிதனுக்குக்கூட உண்டு என்பதை அவன் அறிந்திருக்கிறான். அந்த பயம் இருக்கட்டும்!
அடுத்ததாக மிருகம் போட்ட அதிகாரப் பிச்சையில் கோலோச்சிக்கொண்டிருக்கும் ஏரோது போன்ற கோழைகள். அதிகாரம் பறிபோய்விடுமோ என்று தங்கள் எஜமானனுக்கு இருக்கும் அதே பயம்! தேவமனிதன் பேசும் சத்தியத்துக்கு நிகரான ஆயுதம் ஏதுமற்ற வெறுங்கையர்கள். இவர்களுக்கு சத்தியம் புரிகிறதோ இல்லையோ ஆனால் தங்கள் ஆளுகைக்கு முற்றிலும் முரணான இறையரசின் தொனி இது என்பது மட்டும் அவர்களுக்குப் புரியும். தனக்கு ஆளுகையைத் தந்த மத அதிகாரத்துக்கு முரணாக இருக்கும் விசுவாசத்தை வளரவிட்டால் தனது அரியணை பறிபோகும் என்ற பயம்! அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கொலை செய்வது மாத்திரமே! கோழைத்தனத்தின் உச்சம்!
அடுத்ததாக கொலையை நிகழ்த்தும் ஏவலாளிகள், தங்கள் எஜமானனின் கையசைவுக்கு கட்டுப்பட்டு ஓடிப்போய் எதிரியை குதறிவிட்டு வரும் வேட்டை நாய்கள். அதிகார யெசெபேல்கள் கண்ணசைத்தால் அப்பாவி நாபோத்தின் குடும்பத்தைக்கூட பீறிப்போடுவார்கள். இது பிழைப்பிற்கான வழி, இல்லாவிட்டால் அடுத்த வேளை அப்பம் கிடைக்காதோவென்ற பயம்! நேர்மையான வழியில் வாழ்க்கையை சந்திக்க துணிவற்றவர்கள்! கேடுகெட்ட பிழைப்பு!
பயமற்றவன் தேவமனிதன்!
பிழைப்பைக் குறித்து பயமில்லை, போஷிக்கிறவர் கர்த்தர்
இழப்பைக் குறித்து பயமில்லை, மீட்டுத் தருகிறவர் கர்த்தர்
ரணத்தைக் குறித்து பயமில்லை, குணமாக்குகிறவர் கர்த்தர்
மரணத்தைக் குறித்தும் பயமில்லை, உயிர்ப்பிக்கிறவர் கர்த்தர்
இவனை பயமுறுத்தவோ, பிடித்து வைக்கவோ எதுவுமில்லை!
பயம் இவ்வுலகுக்குரியது, இவன் உலகுக்குரியவனில்லை!