வெளியே ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் இங்கே அரசியலை வைத்து கொஞ்சம் ஆன்மீகம் செய்வோம் வாருங்கள்!
மக்களை திசை திருப்புவதற்காகவே பணியமர்த்தப்பட்டுள்ள சில அரசியல் கோமாளிகள் அவ்வப்போது தேவையற்ற கருத்துக்களைப் பேசி அதை வேண்டுமென்றே பிரச்சனையாக்கி ஊடகங்களையும், சமூகவலைதளங்களில் இருக்கிற அரசியல் நோக்கர்களையும் அந்தப் பிரச்சனையிலேயே பிசியாக வைத்திருக்கிறார்களென்றால் அந்த நாடகம் நடந்து கொண்டிருக்கும் திரைக்குப் பின்னால் நாட்டின் வளம் இரகசியமாக சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
நம்முடைய வாழ்க்கையிலும் உலகப்பிரகாரமான ஒன்று மாற்றி ஒன்று பணிச்சுமையோ அல்லது தொடர்ச்சியான பிரச்சனைகளோ வந்து அதிலேயே நம்மை அழுத்தி வைத்திருக்கிறதென்றால் அந்த நாடகம் நடந்து கொண்டிருக்கும் திரைக்குப் பின்னால் இரகசியமாக சுரண்டப்படுவது நமது “நேரம்”
எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம். (சங்கீதம் 90:10)
ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக எபிரேயர் 9:27 சொல்லுகிறது. அந்த மரணம் வரை காலத்தை வீணடிக்க வைப்பது எப்படி என்ற கலையில் நம்முடைய சத்துருவுக்கு 6000 வருட அனுபவம் இருக்கிறது. பல இன, மொழி கலாச்சாரத்தைச் சேர்ந்த ட்ரில்லியன்கணக்கான மனிதர்களிடம் அவன் அதை பயிற்சித்துப் பார்த்தும் இருக்கிறான். எனவே என்னையும், உங்களையும் அதே வழியில் ஏமாற்றுவது அவனுக்கு ஒன்றும் கடினமல்ல.
எனவே நாம் எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும் இன்றே நமது முழு focus-ஐயும் ஆவிக்குரிய வாழ்வின் பக்கம் திருப்புவோம். கர்த்தரோடு ஒப்புவாகுவோம். பாழடைந்து கிடக்கும் நமது ஜெபவாழ்வாகிய பலிபீடத்தை சீரமைப்போம். பிரச்சனைகள் சூரியனைக் கண்ட பனிபோல தானாக விலகும்! உலகப் பிரச்சனைகளை சரிசெய்வதிலேயே காலத்தை வீணடித்துக் கொண்டிருப்போமானால் திடீரென்று மரணத்தை சந்திக்கும் நிலையில் நித்தியத்தை இழப்பது உறுதி…எனவே உணர்வுள்ளவர்களாக எச்சரிக்கையுடன் இருப்போம்!
நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் (எபேசியர் 5:16)