நீங்க நல்லவரா, கெட்டவரா? – பாகம் 1

மனிதன் இருமைத் தன்மை கொண்ட பெளதிக உலகில் வாழ்பவன். அவனுடைய அகராதியில் நல்லவன், கெட்டவன் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. ஒருவன் நல்ல செயல்களைச் செய்தால் அவன் நல்லவன், கெட்ட செயல்களைச் செய்தால் கெட்டவன் என்பதே அந்த இயல்பான வரையறையாக இருக்கிறது. அதாவது, ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பது அவன் செய்த செயல்களைக் கொண்டு வரையறுக்கப்படுகிறது. “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் (மத் 7:16) என்ற வசனத்திலிருந்து வேதமும் இந்த வரையறையை அடிப்படையில் சரியென்றே ஒத்துக்கொள்கிறது.

வேதாகமம் தேவனை “நல்லவர்” என்று சொல்லுகிறது. அவர் எப்படி நல்லவர்? நன்மை செய்தால் அவர் நல்லவர், தீமை செய்தால் அவர் தீயவர் என்ற நமது அடிப்படை புரிதலைக் கொண்டு தேவனை ஆராய்ந்தால் குழம்பிப் போவோம். ஏனெனில் பழைய ஏற்பாடு மட்டுமல்ல, வேதாகமம் முழுவதிலும் தேவனை பயங்கரமானவராகக் காட்டும் சம்பவங்களும், வசனங்களும் நிறைய உண்டு. அவரை கோபக்காரராகவும், கொல்லுகிறவராகவும், இன அழிப்பை செய்தவராகவும், மனிதர்கள் மீது பொல்லாத ஆவிகளை ஏவி விடுகிறவராகவும், மனிதர்களை குருட்டாட்டத்தில் வைக்கிறவராகவும், எரி நரகத்தில் தள்ளி தண்டிக்கிறவராகவும் காட்டும் ஏகப்பட்ட வசனங்கள் வேதாகமத்தில் உண்டு. இவைகளை வாசித்த பின்னும் தேவனை எப்படி நல்லவர் என்று நம்புவது?

வேதாகமம் நமக்கு அடிப்படைக் கல்வியை வழங்குகிறது, அதே வேதாகமம் நமக்கு உயர்நிலைக் கல்வியையும் வழங்குகிறது. இரண்டும் சில நேரங்களில் முரண் போல தோன்றினாலும் அது முரணாகாது. உயர்நிலைக் கல்வி நம்மை சத்தியத்தின் ஆழங்களுக்குள் அழைத்துச் செல்கிறது. ஆழங்களுக்குள் செல்லச் செல்ல அந்த முரண் போன்ற தோற்றங்கள் நீங்கி தெளிவு தானாகப் பிறந்துவிடும்.

வேதாகமத்தைப் பொறுத்தமட்டில் “நல்லவன்” என்பதும் “தீயவன்” என்பதும் ஒரு “நிலை(State)”. தேவனும் சரி, சாத்தானும் சரி இருவருமே நம்மைப்போல பெளதிக உலகத்தில் வாழும் இருமைத் தன்மை கொண்டவர்கள் அல்ல. பரிமாண ரீதியில் அவர்கள் இருவருமே நம்மைவிட உயர் பரிமாணமாகிய ஆவிக்குரிய பரிமாணத்தில் வாழ்பவர்கள். அந்தப் பரிமாணம் இருமைத் தன்மையைக் கடந்தது. அதாவது தேவன் நன்மை, தீமை என இரண்டையும் கடந்த நல்லவர். சாத்தான் நன்மை தீமை இரண்டையும் கடந்த தீயவன். இதுவும் ஒரு விதத்தில் இருமைத் தன்மை போல தோன்றினாலும் இந்த இருவரும் நம்மைப்போல் தமக்குள் இருமைத் தன்மை கொண்டவரல்லர். எனவேதான் எந்த சூழ்நிலையிலும் தேவன் வில்லனாக மாற வாய்ப்பே இல்லை. சாத்தானும் மனந்திரும்ப வாய்ப்பே இல்லை. ஆகவேதான் இந்த இருவரையுமே “நன்மை, தீமை” என செயல்களின் செயல்களின் அடிப்படையில் வகையறுக்க முயன்றால் குழம்பிவிடுவோம், அல்லது ஏமாந்து விடுவோம்.

கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்பண்ணுகிறவர். கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர் (1 சாமு 2: 6,7). தேவன் கொல்லுகிறவராகவும், பாதாளத்தில் இறங்கப்பண்ணுகிறவராகவும், தரித்திரம் அடையச் செய்கிறவராகவும், தாழ்த்துகிறவராகவும் இருந்தாலும் அவர் நல்லவர்தான். அவருடைய செயல்கள் எதுவாக இருந்தாலும் அவரது நிலையின்படி(State) அவர் நல்லவரே. அவர் நல்லவர் என்பதால் அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் நன்மையாக இருக்கிறது. காரணம் அவரது நோக்கங்கள் நன்மையானதாகவே இருக்கிறது. இதை எப்படி புரிந்துகொள்வது என்பதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் விளக்குகிறேன்.

அதே நேரத்தில் பிசாசு நம்மை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் நமக்குக் காண்பித்து: இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உனக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்…. இவை எல்லாம் உன்னுடையதாகும் என்று காதுகுளிர கொஞ்சினாலும் அவன் தீயவன்தான். பிசாசு சொன்ன வார்த்தையின்படி கொடுப்பானா? நிச்சயம் கொடுப்பான். அவனிடமிருந்து பெற்ற புகழ், அதிகாரம், செல்வத்தைக் கொண்டுதான் இன்று உலகில் அநேகர் பிரபலங்களாய் இருக்கிறார்கள். அவர்கள் பார்வைக்கு அவன் நல்லவனாகத் தோன்றினாலும் அவனது நிலையின்படி(State) அவன் தீயவன்தான். அவன் தீயவன் என்பதால் அவன் செய்யும் செயல்கள் நன்மையாகத் தெரிந்தாலும் அவை தீயவையே, அவனது நோக்கங்களும் தீயவையே! அவன் ஆதிமுதல் மனுஷ கொலைபாதகன்தான். இதை சரியாகப் புரிந்துகொண்டால் நமக்கு குழப்பங்கள் இருக்காது.

அதை விடுத்து, “என்னது தேவன் கொல்லுகிறவரா? அது அந்நாளில் அன்னாள் அறியாமையில் அரற்றியது, இந்நாளில் இயேசு என்ன இயம்புகிறார் பாருங்கள்!” என்றெல்லாம் உருட்டக்கூடாது. உண்மையில் வேதாகமம் முழுவதுமே இறைவார்த்தை இல்லை என்பதையும், அதில் தேவன் பேசினது, மனிதன் அறியாமையில் பேசியது, அதே மனிதன் ஆவியாவனவரால் ஏவப்பட்டு பேசினது, பிசாசு பேசியது, தேவதூதர்கள் பேசியது, மிருகங்கள் பேசியது என அத்தனையும் இருக்கிறது என்பதையும் நான் ஒத்துக்கொள்கிறேன். அந்த புரிதலின் அடிப்படையில்தான் வேதத்தை ஆராய வேண்டும் என்பதும் உண்மை. ஆனால் அந்த ஒரு காரணத்தைப் பிடித்துக்கொண்டு நமக்கு சாதகமாக தோன்றுபவைகளை தேவன் பேசியது என்றும், பாதகமாகத் தோன்றுபவைகளை இது தேவ வார்த்தையல்ல என்றும் உருட்டுவது சரியல்ல.

தேவன் நல்லவர் என்பதால் அவர் மனிதரின் அகராதியில் “நல்லவை” என்று அறியப்பட்டவைகளை மட்டுமே செய்கிறார் என்று நிறுவ முயலும்போது அது கேட்பவர்களுக்கு வேண்டுமானால் மயிலிறகால் காதுகளை வருடுவது போல இருக்கலாம், ஆனால் அப்படியொரு புரிதலை ஏற்படுத்த முயலும்போது நம்மையும் அறியாமல் தேவனுடைய இறையாண்மையில் கை வைத்துவிடுகிறோம். அவர் பேரரசர் என்பதை மறந்தோ அல்லது மறைத்தோ விடுகிறோம், அரசாங்கம், அரசாட்சி போன்ற விஷயங்களை நாமும் புரிந்துகொள்ளாமல், மற்றவர்களையும் புரிந்துகொள்ள விடாமல் தடை செய்துவிடுகிறோம். அவரை நீங்கள் அரசராகப் புரிந்துகொண்டால்தான் நாமும் அவரைப்போல அரசாட்சி செய்ய முடியும். அது இல்லாமல் அவரை கிறிஸ்துமஸ் தாத்தா போல உருவகப்படுத்தினால் எல்லோரும் மொத்தமாக குழந்தைகளாகவே நர்சரிப் பள்ளியில் செட்டில் ஆக வேண்டியதுதான்.

ஆனால் கெடுவாய்ப்பாக இன்று அநேக நல்ல போதகர்கள்கூட அதைத்தான் செய்கிறார்கள். ஒருவனுக்கு அடிப்படைக் கல்விதான் தெரியும் என்பதற்காக, அவன் இடறிவிடுவான் என்ற பயத்தில் உயர்நிலை சத்தியத்தை அவனுக்கு மறுக்கவோ, அல்லது அதை அவனிடமிருந்து மறைக்கவோ கூடாது. அதை அவனுடைய புரிதலுக்கு ஏதுவாக வளைக்கவும் கூடாது. சரியான சத்தியத்தை சரியான விதத்தில் அவனுக்கு கற்றுக்கொடுப்போம். புரிந்தால் புரியட்டும், அல்லது புரியும்வரை அவன் குழப்பத்திலேயே இருக்கட்டும். குழம்பிய குட்டை ஒருநாள் நிச்சயம் தெளியத்தான் செய்யும். தெளியும்போது தெளியட்டும்! கனி கனியும்போது கனியட்டும்.. அதை அவசரமாக கனிய வைக்க வேறு முறைகளைப் பின்பற்றினால் அது விபரீதத்தில்தான் முடியும்.

அது சரி, கொல்லுகிறவராகவும், பாதாளத்தில் இறங்கப்பண்ணுகிறவராகவும், தரித்திரம் அடையச் செய்கிறவராகவும், தாழ்த்துகிறவராகவும் இருப்பவர் எப்படி நல்லவராகவும் இருக்க முடியும்? இதை எப்படி புரிந்துகொள்வது?

(தொடர்ந்து தியானிப்போம்)

Leave a Reply