நாங்க வேறமாரி ப்ரோ…Secret vs Bible

ரோண்டா பைர்ன் எழுதிய சீக்ரெட் என்ற பிரபல புத்தகம் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்களில் பலரும் படித்திருப்பீர்கள், நானும் படித்திருக்கிறேன். புத்தகத்தின் தொடக்கத்திலேயே பல காலங்களாக மறைக்கப்பட்ட பிரபஞ்ச ஞானத்தைத் தான் கண்டுபிடித்ததாக ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார். நூலின் பல இடங்களில் வேதாகம மேற்கோளும் காட்டப்பட்டிருக்கும். பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதிலும் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களில் இதுவும் ஒன்று.

“நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்களோ அதையே பெற்றுக்கொள்ளுகிறீர்கள்” என்ற அடிப்படை வேதாகம சத்தியமே இந்த நூல் சொல்லும் ஆதார உண்மை. ரோண்டா பைர்ன் எழுதிய “சக்தி” என்ற இன்னொரு நூலையும் வாசித்திருக்கிறேன். உங்கள் இருதயம் அன்பினால் நிறைந்திருக்கும்போது நீங்கள் உயர் அலைவரிசியில் வாழ்கிறீர்கள். அப்போது நீங்கள் இயல்பாகவே ஆசீர்வாதங்களை உங்கள்வசம் ஈர்த்துக்கொள்வீர்கள் என்று இந்த நூல் சொல்லுகிறது. இதுவும் வசனத்தின்படி உண்மைதான். இவையெல்லாம் நல்ல புத்தகங்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

சீக்ரெட் போன்ற சுயமுன்னேற்ற நூல்களை கிறிஸ்தவர்கள் வாசிக்கலாமா என்றால் நிச்சயமாக வாசிக்கலாம். அவை நல்ல விஷயங்களைத்தான் கற்றுத்தருகின்றன. ஆனால் பல கிறிஸ்தவர்கள் வேதாகமத்தைக் கீழே வைத்துவிட்டு சுயமுன்னேற்ற நூல்களைக் கையில் வைத்து ஏதோ அதுதான் “மகா ஞானம்” என்பதுபோல கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உலக ஞானத்துக்கும், தேவசித்தத்துக்குமான வித்தியாசத்தைக் கற்றுத்தருவது நம் கடைமை.

சுயமுன்னேற்ற நூல்கள் நம்மைக் கனவு காண ஊக்குவிக்கின்றன. உங்கள் கனவின் உயரம் எவ்வளவோ அவ்வளவுதான் உங்கள் முன்னேற்றமும் என்பது அந்நூல்களின் அடிப்படை போதனை. அதாவது “வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு” என்று குறள் சொல்வதுபோல ஒரு குளத்தில் இருக்கும் நீரின் உயரம்தான் அந்தக் குளத்தில் பூத்திருக்கும் தாமரையின் உயரமும் ஆகும், அதுபோலவே உங்கள் உள்ளத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையின் உயரம் எவ்வளவோ அவ்வளவே உங்கள் வாழ்வின் உயர்வும் இருக்கும் என்பது கருத்து. இது பிரபஞ்சவிதிகளின்படி நூறு சதவிகிதம் உண்மையும்கூட…

ஆனால் கர்த்தரோ தம்முடைய பிள்ளைகளை அவ்விதம் கனவு காண அனுமதிப்பதில்லை. அவர் நம்மை வேறுபிரித்து வைத்திருக்கிறார். அதாவது நம் எதிர்காலம் குறித்த பெரிய கனவை அவர் வைத்திருக்கிறார். தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை என்று 1 கொரி 2:9 கூறுகிறது. நாம் அவரை நோக்கிக் கூப்பிடும்போது “நாம் அறியாததும், நமக்கு எட்டாததுமான” பெரிய காரியங்களை அறிவிப்பதே (எரே 33:3) அவரது விருப்பம். நமக்கான ஆசீர்வாதங்களை நமது சின்னக் கைகளில் அள்ளிக்கொள்வதை அல்ல, தமது பெரிய கைகளில் அள்ளித்தர அவர் விரும்புகிறார்.

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் போக்கில் போனால் பிரபஞ்ச விதிகள் உங்கள் வாழ்வில் பலிக்கும். ஆனால் கிறிஸ்துவின் அரசுக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டீர்களானால் இப்பிரபஞ்ச விதிகளல்ல, தேவசித்தம் உங்களுக்குள் செயல்பட ஆரம்பிக்கும். அது உங்கள் சின்ன மூளையில் நீங்கள் காணும் கனவுகள் போன்றதல்ல… உலகத்தோற்றத்துக்கு முன்னரே, தாயின் கர்ப்பத்தில் நீங்கள் உருவாக்கப்படும் முன்னரே உங்களைக் குறித்து தேவன் கண்ட மகத்தான கனவு. அதுபோன்ற பிரம்மாண்டக் கனவை உங்களால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது.

யோசேப்பு ஒருவேளை பிரபஞ்சவிதிகளை நம்பி, சுயமாக தன்னுடைய வாழ்வைக் குறித்த கனவைக் கண்டிருந்தால் சிறையிலிருந்து விடுதலையாகி ஒருவேளை போத்திபாரின் வீட்டில் தான் இழந்த வேலையைப் பெற்றிருப்பான். ஆனால் கர்த்தருடைய கனவோ அந்த போத்திபாருக்கும் ஆண்டவனாக, முழு எகிப்திற்கும் அதிபதியாக, பார்வோனுக்குத் தகப்பனாக, தவிர்க்கமுடியாத சரித்திர புருஷனாக அவனை உயர்த்தியது.

இந்தப் பிரபஞ்ச ஞானம் உங்களையும், நீங்கள் கண்ட கனவையும் நம்ப உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது. ஆனால் சத்தியமோ தேவனை விசுவாசிக்க நமக்குக் கற்றுத்தருகிறது. பிரபஞ்ச ஞானம் வெற்றியாளர்களை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தேவனோ தம்மை விசுவாசிப்பவர்களைக் கொண்டு சகாப்தங்களைப் படைக்கிறார்.

நீங்கள் ஒருவேளை உலக ஞானத்தில் மூழ்கியிருப்பீர்களானால் அதைக் கொஞ்சம் மூடிவைத்துவிட்டு, உங்கள் அலமாரியில் இருக்கும் வேதாகமத்தை எடுத்து, தூசுதட்டி, திறந்து வாசியுங்கள். சீக்ரெட்டுகளுக்கெல்லாம் மகத்தான சீக்ரெட்டை அது கற்றுத்தருகிறது. “கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே…” அந்த மகத்தான இரகசியம் (கொலோ 1:27).

Leave a Reply