நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்

கிறிஸ்தவர்களையும் சபையையும், ஊழியக்காரர்களையும் இழிவுபடுத்தி பேசும் மதவாதிகள் பெரும்பாலும் கிரிமினல் பின்னனி கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களது கிரிமினல் குற்றங்கள் பற்றி செய்தித்தாள்களில் வந்த செய்திகளை எடுத்து அவற்றை சமூகவலைதளங்களில் பரப்புவதன் மூலம் நாம் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதாக நினைக்கிறோம். இதன்மூலம் நாம் அவர்களுக்கு கடுகளவுகூட ஒரு அவமானத்தையோ, மனஉறுத்தலையோ ஏற்படுத்த இயலாது. அவர்கள் மான,அவமானங்களைக் கடந்தவர்கள். அவர்களுக்கு அது ஒரு எறும்பு கடித்த அளவு வலியைக் கூட ஏற்படுத்தாது.

மாறாக நாம்தான் நமது நேரத்தையும், சக்தியையும் விரயம் செய்து கொண்டிருக்கிறோம். இவர்களெல்லாம் நமக்கு சமமான எதிரிகள் அல்ல. இவர்களோடு நாம் போராடுவது நமது தளபதியாகிய ஆவியானவருக்கு அவமானம். “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு (எபே 6:12)”. அந்தப் போராட்டத்தை ஒழுங்காகப் போராடினால் இந்தப் போராட்டங்களெல்லாம் தன்னால் அடங்கிவிடும்.

நாம் ஏன் இவர்களை நமக்கு சமமான எதிரிகளாக பாவித்து பதறுகிறோமென்றால் நாம் எலிசாவின் வேலைக்காரனைப் போல பிரச்சனைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எலிசாவைப் போல கர்த்தருடைய முகத்தை மாத்திரம் பார்த்துக் கொண்டிருந்தால் நம்மைச் சுற்றிலும் அக்கினிமயமான இரதங்களும் குதிரைகளும் பாளயமிறங்கியிருப்பதை நம்மால் காணமுடியும்.

பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் (2 இராஜா 6:16)

Leave a Reply