தேவ பிரசன்னமே…

தேவபிரசன்னத்தை உணர வேண்டுமென்றால் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட இடத்துக்குப் போகவேண்டும், பலருக்கு ஜெபமோ, ஆராதனையோ தேவைப்படுகிறது. அதிலும் சிலருக்கு தேவபிரசன்னத்தை உணரவைக்க ஒரு குறிப்பிட்ட ஊழியரின் உதவியோ அல்லது பாடல்களின் உதவியோ தேவைப்படுகிறது. உண்மையில் தேவபிரசன்னத்தை உணர, அதிலேயே லயித்து இருக்க மேற்கண்ட எந்த உபகரணங்களும் தேவையில்லை.

தேவாலயம் என்பது பரிசுத்தமான இடம், எனவே அங்கு மட்டுமே தேவபிரசன்னத்தை உணரமுடியும் என்பது மதம் நமக்குக் கற்றுக் கொடுத்ததது. நாம் கூடி ஆராதிக்கும் இடம் பரிசுத்தமானது என்பதில் எந்த ஐயமும் இல்லை, ஆனால் இயேசு சிலுவையில் ஜீவனைக் கொடுத்தது ஒரு கட்டிடத்தைப் பரிசுத்தமாக்க அல்ல, மனிதர்களைப் பரிசுத்தமாக்க. புதிய ஏற்பாட்டின்படி நாம்தானே ஆவியானவர் வசிக்கும் ஆலயம் (1 கொரி 3:16,17)

திருச்சபைக் கட்டிடங்கள் நல்லது, ஜெபம் நல்லது, ஆராதனையும் நல்லது, ஆராதனை நடத்தும் ஊழியர்களுக்காக கர்த்தருக்கு நன்றி, ஆராதனைப் பாடல்களும் பொக்கிஷங்கள்தான். இவை யாவும் நமக்கு தேவன் தந்த ஆசீர்வாதங்கள். இவற்றுக்கான தேவைகளை ஒருபோதும் மறுக்க இயலாது, ஆனால் இவற்றை மதரீதியான உபகரணங்களாக மாற்றி உங்கள் ஆவிக்குரிய அனுபவங்களைக் கடினமாக்கிக் கொள்ளாதீர்கள்.

பர்வதங்கள் எருசலேமைச் சூழ்ந்திருப்பது போல கர்த்தர் எப்போதும் நம்மைச் சுற்றிலும் சூழ்ந்தும் இருக்கிறார் (சங் 125:2). அவர் நமக்கு உள்ளேயும், புறம்பேயும் இருக்கிறார். இதை விசுவாசிக்கும் அந்த வினாடியில்தானே அவரது உன்னத பிரசன்னத்தை நம்மால் உணர முடியும். அந்த அனுபவத்தை நமக்குக் கொடுக்கத்தானே வார்த்தை மாம்சமானார்!?

தேவபிரசன்னத்தில் இருக்கும் பாக்கியம் என்பது கர்த்தராகிய இயேசு தமது பாடு மரணத்தின் மூலம் நமக்குப் பெற்றுத் தந்த உரிமை. அந்த உரிமைச் சொத்தை நன்றியோடு அனுபவிப்பதை விட்டுவிட்டு, தேவபிரசன்னத்தை அனுபவிக்க ஏதோ ஒரு உபகரணத்தைத் தேடுவது வீட்டுக்குள் இருந்துகொண்டே சாவியைத் தேடிக்கொண்டிருப்பது போலாகும்.

நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், அது எந்த நேரமானாலும் உன்னைவிட்டு விலகவே மாட்டேன் என்று வாக்கருளினவர் உங்களுக்கு உள்ளேயும், சுற்றிலும் சூழ்ந்தும் இருக்கிறார் என்று உணருங்கள். அந்த வேளையில்தானே அவரது வஸ்திரத் தொங்கல் உங்கள் மீது உரசும் அளவுக்கு அவர் உங்கள் அருகாமையில் இருப்பதை ஆவியில் உணர்வீர்கள்! அந்த உணர்விலேயே லயித்து இருப்பதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை!!

நான் தேவாலயத்தில் அமர்ந்திருக்கும்போது மட்டுந்தான் பரிசுத்தமாக உணர்கிறேன், ஜெப, ஆராதனை நேரங்களை விட்டு வெளியே வந்தவுடன் மனதை உலகத்துக்குரிய எண்ணங்கள் ஆக்கிரமித்துவிடுகின்றன, பாவமும் செய்துவிடுகிறேன் எனவேதான் என்னால் தேவபிரசன்னத்தை உணரமுடியவில்லை . மீண்டும் தேவபிரசன்னத்தை உணரவைக்க எனக்கு ஏதோ ஒரு உதவி தேவைப்படுகிறது என்பீர்களாகில் ஒரு முக்கியமான உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள்.

தேவபிரசன்னத்தில் தங்கும் பாக்கியம் நமக்கு ஆண்டவர் இயேசு சிலுவையில் பெற்றுத் தந்த உறவின் வழியாக வருகிறது. நீங்கள் இயேசுவின் இரத்தத்தினால் ஏற்கனவே பரிசுத்தமாக்கப்பட்டவர்கள். எனவே பிதாவின் பிரசன்னத்துக்குள் தங்கியிருக்க சகல உரிமையும் பெற்றவர்கள். இது உங்களால் உண்டானது அல்ல, தேவனுடைய ஈவு. முதலில் தேவபிரசன்னத்தை உணருங்கள். பரிசுத்த சிந்தை ஊற்றெடுக்கும் பர்வதம் அதுதான்! பாவத்தை மேற்கொள்ளும் கிருபையும் வலிமையும் அங்குதான் உங்களுக்கு கிடைக்கும்.

ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com

Leave a Reply