தேவபயம் – கிலோ என்ன விலை?

முழு மனுக்குலமும் பாவச்சாக்கடையில் புழுக்களாய் உழன்று கொண்டிருந்த நிலைமையில் தனியொருவனாய் பளிச்சென்று தேவனுடைய கண்களில் பட்ட நல்முத்துதான் நம் தகப்பன் ஆபிரகாம். தேவனுடைய ஒரே ஒரு வார்த்தைக்கு இணங்கி எங்கே போகிறோம் என்று தெரியாமலேயே குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்றவன். (ஆதி12:1-4), பொருள் இழப்பு வந்தால் கூட பொங்கி எழாத பொறுமைக்காரன்.(ஆதி 13:7-9), போன இடமெல்லாம் பரமனுக்கு பீடம் கட்டிய தொழுகைவீரன்.(ஆதி 13:4,18; 21:33), மாற்றான் பொருளுக்கு மயங்காத மாசற்ற மனசுக்காரன் (ஆதி 14:22), இலவசங்களை இச்சித்து இடறிப்போகாத இரும்பு இதயக்காரன் (ஆதி 23), விருந்தோம்பும் குணத்தில் தங்கம் (ஆதி 18:2-8), விசுவாசப் போரில் சிங்கம் (ஆதி 15:6). பாழாய்ப் போன உலகில் பரமன் பார்வைக்கு சிறந்தவனாக இந்த ஒருவனே, ஒரே ஒருவனே மிஞ்சியிருந்தான்.

 ஆனால்…, ஆனால்…

 தேவன். அவனையும் விடவில்லை. ஒரு கடுமையிலும் கடுமையான பரிசோதனைக்கு அவனை உட்படுத்தத் தயாரானார். 

ஆண்டவரே! ஆபிரகாம்தான் எல்லாவற்றிலும் சிறந்த சாட்சியாயிருக்கிறானே? பின்னும் எதற்காக இந்தக் விஷப்பரீட்சை? 

”உண்மைதான், ஆனாலும் இவையெல்லாவற்றைக் காட்டிலும் மேலான ஒரு குணாதிசயம் அவனுக்குள் இருக்கிறதா என்று அவனைப் பரிசோதிக்கப் போகிறேன்.”

 இந்த முழு பூமியிலும் உமக்காய் நிற்பவன் இந்த ஒரே ஒருவன்தான், இந்தச் சோதனையில் நிற்க முடியாமல் அவனும் உம்மை விட்டு ஓடிவிட்டால்? (நாங்களெல்லாம் கடிந்து ஒரு பிரசங்கம் செய்தால் கூட அடுத்தவாரம் ஜனங்கள் ஆலயத்துக்கு வரமாட்டார்கள் என்று சொல்லி மயில்தோகை கொண்டு அவர்கள் காதுகளை வருடித்தான் கொடுப்போம். இந்தச் சின்ன தந்திரம் கூட உமக்குத் தெரியவில்லையே ஆண்டவரே!) 

ஆனாலும் அவனுக்குள் நான் தேடும் “அந்த” பிரதான குணம் இருக்கிறதா என்பதை கண்டறிந்தே தீருவேன்.

 பரீட்சையும் நடந்தது, தேர்வு முடிவும் வந்தது. (ஆதி 22: 1-18)

 விசுவாசச் சிங்கம் 100/100 மதிப்பெண்கள் பெற்று தன்னை நிரூபித்தது. பரீட்சை வைத்தவர் ஆபிரகாமைக் கட்டியணைத்து அவன் கழுத்தில் ஒரு பதக்கத்தை அணிவித்து (ஆதி 22:16-18) “நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் (ஆதி 22:12)” என்றார்.

 ஆம், புதையல் தேடுகிற ஒரு மனிதன் நிலத்தைத் ஆழமாக ஆவலாகத் தோண்டிப் பார்ப்பது போல கர்த்தரும் நமக்குள் தேவபயத்தை ஆவலாகத் தேடிப்பார்க்கிறார். தோண்டியபின் புதையல் கிடைத்தால் அது பொக்கிஷபூமி, இல்லாவிட்டால் கருமையும் வெறுமையும் நிறைந்த ஆழமான படுகுழி அவ்வளவே! 

இறைஞானத்துக்கு அகரமுதலெழுத்து தேவபயமே என்கிறது நீதிமொழிகள்1:7. தேவபயத்தால் நிறைந்த கிறிஸ்தவனுக்கும் தேவபயம் “கிலோ என்ன விலை?” என்று கேட்கும் கிறிஸ்தவனுக்கும் இடையே உள்ள மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தை அவர்களது அனுதின வாழ்விலேயே அவர்களது ஒவ்வொரு செயல்களிலும் பார்க்கலாம். 

எது அல்ல தேவன் விரும்பும் தேவபயம்:

 1.தண்டணை பயம்:

”உம்மாச்சி கண்ண குத்திரும்” என்று சொல்லி நமது ஊரில் பிள்ளைகளைப் பயமுறுத்துவார்கள். அது போல இன்று சில சபைகளில் தேவனுடைய சாபங்களையும் நியாயத்தீர்ப்புகளையுமே சொல்லிச் சொல்லி ஜனங்களை கொடூர பயத்துக்குள் ஆட்படுத்தி வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்களால் சுட்டுப்போட்டால் கூட தேவனை அப்பாவாகப் பார்க்க முடியாது.

 ”தேவன் என்னைக் காயப்படுத்தி விடுவார்” என்ற பயம் தேவன் விரும்பும் பயமல்ல. ”தேவனை நான் காயப்படுத்தி விடுவேனோ” என்ற பயமே தேவன் விரும்பும் பயமாகும். ”தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வது எப்படி?” என்று யோசேப்பைப் பதறி ஓடச்செய்தது இந்த பயமே (ஆதி39:1-12). தேவனை ஒரு நீதிபதியாக கண்டு நடுங்குவது உலகத்தாருக்கு வர வேண்டிய பயம். ஆனால் மகாப்பரிசுத்தத் தகப்பனுடைய பிரசன்னத்தின் மகிமையைக் கண்டதால் ஏற்படும் பரிசுத்த நடுக்கமே நாம் கொள்ள வேண்டிய நடுக்கம். ஏசாயா 6:1-5 இல் தீர்க்கன் கொண்டது இவ்வித நடுக்கமே!

 2.குருட்டு பயம்:

 இன்னொருவகைத் தவறான தேவபயமும் உண்டு. கால்தவறித் தெரியாமல் வேதபுத்தகத்தை மிதித்ததற்க்கே தோப்புக்கரணம், குட்டிக்கரணமெல்லாம் அடிக்கும் அளவுக்கு ரியாக்‌ஷன் கொடுக்கும் கிறிஸ்தவர்களைப் பார்த்திருக்கிறேன். பார்வைக்கு பெரிய பக்திமான் போல தோன்றும். ஆனால் தங்கள் அனுதின வாழ்வில் ஆண்டவரின் கட்டளைகளைக் காலில் போட்டு மிதி மிதியென்று மிதிப்பார்கள்.

 பரிசுத்த ஆலயத்துக்குள் பாதரட்சையோடு செல்வதா? என்று புரட்சி செய்வார்கள் ஆனால் பரிசுத்த ஆலயத்தின் பிரசங்கப்பீடத்திலிருந்து ஆண்டவருடைய வார்த்தை வரும்போது  குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருப்பார்கள். ஆண்டவரைக் கனப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு மணிக்கணக்கில் நெடுமுழங்காலில் நின்று இரு கைகளையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து தனக்காக மட்டுமே சுயநலமாக ஜெபித்துக் கொண்டிருப்பார்கள். பவ்யமாகத் திருவிருந்தை வாங்குவார்கள், பக்கத்தில் முழந்தாளிட்டிருக்கும் சகோதரனோடு மாதக்கணக்கில் பகை வைத்திருப்பார்கள். பாஸ்டருக்குப் பயப்படுவார்கள் பரமனுக்கு பயப்படமாட்டார்கள். சபைக் கட்டிடங்களை கொளுத்தும் கூட்டத்தோடு ஆக்ரோஷமாய் மோதுவார்கள் சபையையே பட்சிக்கும் ஓநாய்களைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.

 இப்படிப்பட்டவர்களுக்கு ஆண்டவர் இட்ட பெயர் ”கொசு இல்லாதபடி வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறவர்கள்” என்பதாகும். பிரியமானவர்களே! இதற்குப் பெயர் தேவபயமல்ல, மாய்மாலம். இவர்களைக் ”குருடர்” என்று ஆண்டவர் அழைக்கிறார். உலகத்துக்கு வெளிச்சமான நாம் குருடராய் இருக்கலாமா?

 இதை உன் அதிபதிக்குச் செலுத்து:

 ஒருநாள் எனது தனிஜெபநேரத்தில், ஜெபநிலையிலிருந்தேன் ஆனால் என் மனம் எங்கேயோ அலைந்து கொண்டிருந்தது. நேரமும் ஓடிக் கொண்டிருந்தது, வாய் வழக்கமான துதிகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. சிந்தனைகள் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தன. திடீரென்று இந்த வசனம் எனக்கு நினைவுபடுத்தப்பட்டது.

 ”இதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார் (மல்கியா 1:8).

 அடுத்த வினாடியே என் சப்தநாடியும் ஒடுங்கி சுயநினைவுக்குத் திரும்பினேன். வெட்கமாகவும் துக்கமாகவும் இருந்தது. உடனே மனந்திரும்பினேன். அன்றிலிருந்து தேவனுடைய பிரசன்னத்தை மதிக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

 சற்று சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் இயக்குநர். உங்களைத் தனது அறைக்கு பேசும்படி அழைக்கிறார். அவர் உங்களிடம் 100 கோடி ரூபாய் ப்ராஜக்ட் குறித்து சீரியஸாக பேசிக் கொண்டிருக்கையில். நீங்களோ அவர் அங்கு இருப்பதையே சட்டை செய்யாமல் ”மொட்டை மாடியில துணி காயப்போட்டிருந்தேனே, மழைவேற வர்ர மாதிரி இருக்கே!” என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதை அவர் கண்டுபிடித்தாரானால் அந்த சூழ்நிலை எப்படி இருக்கும் என்பதை உணர முடிகிறதா? முதலாளியை விட்டுத்தள்ளுங்கள், நண்பர்களிடமே இப்படி நடந்துகொண்டால் எரிச்சல் அடையமாட்டார்களா? பின்பு நம்மைச் சந்திப்பதையே தவிர்த்து விடுவார்களல்லவா?

 உயரதிகாரியோடு பேசும்பொழுது செல்போனை அணைத்துவிட்டுத்தான் அவர் அறைக்குள்ளேயே போகிறோம். உன்னதமானவரோடு பேசும்பொழுதோ SMS வந்தால் கூட ஜெபத்தை நிறுத்திவிட்டு செல்போனை ஆராயத்துவங்கி விடுகிறோம்.

 கடந்தவார ஆலய ஆராதனையில் பாடிய எல்லாப் பாடல்களையும் உணர்ந்துதான் பாடினீர்களா? உங்கள் கரகோஷம் விண்ணைப் பிளந்தது, இருதயம் எங்கே இருந்தது?? எதற்காக ஆலயம் போனீர்கள்? நானும் ஆலயத்துக்குச் சென்று வந்துவிட்டேன் என்ற சுயதிருப்திக்காகவா?

 நான் இதுவரை நூற்றுக்கணக்கான ஆராதனைகளில் பங்கு கொண்டிருக்கிறேன், பல ஆராதனைகளை நடத்தியும் இருக்கிறேன். இதுவரை ஆராதனை நடத்தும் யாரும் கரங்களை தட்டவும், அசைக்கவும், ஆடவும் உற்சாகப்படுத்துகிறார்களே தவிர ஜனங்களுடைய சிந்தையை தேவனை நோக்கித் ஒருமுகப்படுத்தவும், பாடல்களை உணர்ந்து பாடும்படி வலியுறுத்தவும் பெரும்பாலும் தவறி விடுகிறார்கள். வெளிப்புறமாக எல்லாம் நன்றாக இருந்தால் போதும்!, இசை சிறப்பாக இருந்தால் போதும்! வெற்றுப் பரவசம் கிடைத்தால் போதும். இதையெல்லாம் யாருக்காகச் செய்கிறோம்?

 “உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.” (ஆமோஸ் 5:23) ஆம், இருதயத்திலிருந்து பொங்கிவராத ஆராதனை என்ன ஆராதனை? சர்வ வல்லவரின் மகிமையைக் கண்டு அவரை ஆவியில் தாழப் பணிந்து கொள்ளாமல் வெற்றுப்பரவசத்துக்காகவும், சுயதிருப்திக்காகவும் செய்யும் ஆராதனை ஆவியானவருக்கு அருவெறுப்பு.

 யாராகிலும் ஒருவர் ஜெபித்துக் கொண்டிருக்கிற போது கற்பனைக் குதிரையேறி பவனி சென்றுவிட்டு அவர் என்ன ஜெபித்தார் என்றே தெரியாமல் அவர் ஆமேன் சொல்லும்போது நாமும் சத்தமாக ஆமேன் போட்டு முடிக்கிறோமே, ஆமேன் என்பது ஜெபத்தை முடிக்கப் போடும் கோஷமா என்ன? ஆமேன் என்றால் ”அப்படியே ஆகட்டும்” என்று பொருள். ”அது அப்படியே ஆகட்டும்” என்று சொன்னாயே ”எது எப்படியே ஆகட்டும்?” என்று ஆண்டவர் நம்மிடம் திருப்பிக் கேட்டால் என்ன பதில் சொல்வது? சகல மாட்சிமையும் கனமும் பொருந்திய கர்த்தாதி கர்த்தருடைய பிரசன்னத்தில் நாம் இப்படியா நடந்துகொள்வது!

 ”குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே?”(மல்கியா 1:6).

 அவர் யாரென்று கேரூபீன்களையும் சேராபீன்களையும் கேட்டுப்பாருங்கள்! அவர் மகிமை விளங்கும் வானாதி வானங்களைக் கேட்டுப்பாருங்கள். அவர் கிழித்த கோட்டைத் தாண்டாத சமுத்திரத்தைக் கேட்டுப் பாருங்கள்! (ஏசா 6:2-4; சங் 99:1; சங் 148:4; யோபு 38:11)

 அவர் அலைகள் கொந்தளிக்க சமுத்திரம் குலுக்குகிறவர் விண்மீன்களையெல்லாம் செல்லப்பெயரால் அழைக்கிறவர். வானங்களைக் கிழித்து இறங்குகிறவர்,  வலுங்காற்றை சிறகுகளாக்கிப் பறக்கிறவர். அவர் யுத்தங்கண்டால் செங்கடல் பிரியும், சத்தம் கேட்டால் காதேஸ் அதிரும். (ஏசா 51:15; சங் 147:4; ஏசா 64:2; சங் 18:10; யாத் 14:14-28; சங்29:8)

 தகிக்கும் சூளைக்குள்ளும் தோழனாய்க் கடந்து வருவார். தென்திசைச் சுழல்காற்றுகளோடே புயலாக நடந்து வருவார்.( தானி 3:25; சக 9:14)

 தன் முகம் தேடுவோருக்கு வானந்திறக்க அழகுமுகம் காட்டுவார், முரட்டாட்டம் பண்ணுவோருக்கு வானத்தைத் திறந்து அக்கினியைக் கொட்டுவார். அவர் கண்களின் அக்கினி ஆயிரம் சூரியனிலும் வெளிச்சம், அவர் நாசியின் தட்பம் ஆயிரம் அணுகுண்டுகளிலும் வெப்பம். (அப் 7:56; ஆதி 19; வெளி 19:12; 2சாமு 22:9)

 அவர் திருமுன் பேல் பணியும் நோபோ குனியும், தாகோன் துண்டு துண்டாய்ச் சிதறிப்போகும். அவர் புயத்தின் வில்லுக்கு முன் சத்துருக்கள் அதோ கதி! அவர் வாயின் சொல்லுக்கு அண்டசராசரமும் சரணாகதி! (ஏசா 46:1; 1 சாமு 5:4; சக 9:13,14; சங்33:9)

 அவரைத்தான், அப்படிப்பட்டவரைத்தான் “பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது?” என்று சொல்லி ஒரு ரோமச்சேவகன் கன்னத்தில் அறைந்தான் (யோவா 18:22). மகிமையின் ராஜாவிடம் மண்ணுலகம் இப்படித்தான் நடந்து கொள்ளுகிறது. உலகம் கிடக்கட்டும் நமது நிலை என்ன? இன்றைய நவீன செழிப்பின் உபதேசமும் கிருபையின் உபதேசமும் பிரசங்கிக்கப்படும் சபைகளின் நிலை என்ன? ஆண்டவரின் தோளில் கைபோட்டு “வாங்க பாஸூ! எப்டி இருக்கீங்க?” என்று கேட்பதுபோல இருக்கிறது அவர்களது கிறிஸ்தவம். அவர்களிடம் போய் ”தேவபயம்” என்றெல்லாம் பேசினால்”

 “வந்துட்டாருப்பா பரிசேயனுக்கு பக்கத்து வீட்டுக்காரரு!,

 பிரதர்! நாம இப்ப கிருபையின் காலத்தில் வாழ்கிறோம் அதப் புரிஞ்சுக்கங்க மொதல்ல!, ஆண்டவர்தான் தேவாலயத்துச் திரைச்சீலையைத்தான் ஏற்கனவே ரெண்டாக் கிழிச்சிட்டாருல்ல” என்பார்கள். கிருபையின் காலத்தில் தேவனுக்கு அவருடைய மகிமை குறைந்துவிட்டது என்று நினைக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.

 தேவபயம் கற்றுக் கொள்வோம்: 

யூதர்கள் தங்கள் பிள்ளைகளை அவர்கள் பிறந்ததிலிருந்தே தாய்ப்பாலோடு தேவபயத்தையும் ஊட்டி ஊட்டி வளர்ப்பார்கள். ஒரு யூதனுக்கு அவன் வளரும்போதே தேவபயமும் உடன் வளரும். அப்படிப்பட்டவர்களுக்கு கிறிஸ்துவின் மூலம் கிருபை அறிமுகப்படுத்தப்பட்டபோது அது அவர்களுக்கு தேனாக இனித்தது. கிருபையின் அருமையை அறிந்து கொண்டார்கள் (இங்கு கிறிஸ்துவராக மாறிய யூதர்களைக் குறிப்பிட்டிருக்கிறேனே தவிர. பொதுவான யூத சமுதாயத்தைக் குறிப்பிடவில்லை. அவர்கள் அன்பின் ஆண்டவரை சிலுவவையில் அறைந்தவர்களாயிற்றே!). நாமோ தேவபயத்தைக் கற்றுக் கொள்ளாமல் கிருபையை நேரடியாகக் கற்றுக்கொள்ளுகிறபடியால் நமக்கு கிருபையின் அருமை தெரிவதில்லை போலும்.

 தேவசமூகத்துக்கு மட்டற்ற மரியாதை கொடுத்து, ஜெபத்திலும் ஆராதனையிலும் இருக்கும்போது முழு கவனத்தையும் அவர் மீது வைத்து அவரை ஆராதிப்பதும் அவர் சத்தம் கேட்பதுமே ஆவிக்குரிய வளர்ச்சியின் முதற்படி. இங்கே ஓட்டை இருப்பதால்தான் இன்னும் நாம் L.K.G யிலேயே சீட்டைத் தேய்த்துக் கொண்டிருக்கிறோம்.

 அவரை இன்னும் அறிய அறிய அவர்மீது அன்பும், பரிசுத்த பயமும் நம்மில் பெருகட்டும் கிறிஸ்து தேவனிடத்தில் பயபக்தியாயிருந்தார் அதன் நிமித்தமே அவருடைய ஜெபம் கேட்கப்பட்டது என்று எபிரேயர் 5:7 சொல்லுகிறது. கர்த்தருக்குப் பயப்படுதலே அவருக்கு உகந்த வாசனையாகும்(ஏசா11:3) மற்றதெல்லாம் வெறும் துர்நாற்றமே! 

பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம் (II கொரிந்தியர் 7:1)

6 thoughts on “தேவபயம் – கிலோ என்ன விலை?”

  1. Hi Vijay
    This article is really very meaningful. Thanks for highlighting important words in different colors, quoting more bible verses which inturn makes the article more meaningful. I ll also use this sermon in mine…Thank you

  2. \ ”தேவன் என்னைக் காயப்படுத்தி விடுவார்” என்ற பயம் தேவன் விரும்பும் பயமல்ல. ”தேவனை நான் காயப்படுத்தி விடுவேனோ” என்ற பயமே தேவன் விரும்பும் பயமாகும். // மிக நன்று…….

  3. It is really good. We people are encouraged and sanctified by the articles. God bless you. You will be used as a tool of God for the nations.

Leave a Reply