திருச்சபைகளுக்கு ஆவியானவர் பற்றிய 7 கேள்விகள்:

கேள்வி #1:

அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன். (I கொரிந்தியர் 14:13)

ஆவிக்குரிய வரங்களில் அந்நியபாஷை வரத்துக்காக ஜெபிக்கச்சொல்லி வேதத்தில் எங்குமே கட்டளை காணப்படவில்லை. ஆனால் அந்நியபாஷை வரம் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஜெபங்களும், உபவாசங்களும் எல்லா ஆவிக்குரிய சபைகளிலும் நடைபெறுகிறது. அந்நியபாஷை பேசும்படி ஜனங்கள் உற்சாகப்படுத்தவும் சில இடங்களில் வற்புறுத்தவும் படுகிறார்கள். 

ஆனால் வரங்கள் விஷயத்தில் வேதம் கொடுக்கும் கட்டளை என்ன? 

வியாக்கியான வரத்துக்காக விண்ணப்பம்பண்ணும்படி கட்டளை இருக்கிறது. இன்றைய ஆவிக்குரிய சபைகளில் வியாக்கியான வரத்தை வேண்டி மன்றாடும் ஜெபக்கூட்டங்கள் ஏன் இல்லை? விசுவாசிகள் அந்நியபாஷைகளுக்கு அர்த்தம் சொல்லும்படி ஏன் உற்சாகப்படுத்தப்படுவதில்லை?

அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன் (1 கொரி 14:28)

அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால் சபையில் அந்நியபாஷை யாரும் பேசக்கூடாது என்ற வரங்களின் தலைவருடைய கட்டளை இன்று மீறப்படுவது ஏன்?

கேள்வி #2:

அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார். (அப்போஸ்தலர் 13:2)

ஊழியர்களை சீட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் முறை பெந்தேகொஸ்தே நாளுக்கு முன்பு வரை சீஷர்களால் பின்பற்றப்பட்டது. பெந்தேகொஸ்தே நாளில் ஆவியானவர் ஊற்றப்பட்டு சபை வரலாறு தொடங்கியபின்னர் ஆவியானவரே சபைகளை நடத்தும் ஊழியர்களை தெரிந்து கொண்டார். இதற்கு மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள அப் 13:2 ஒரு உதாரணமாகும்.

எங்கள் சபைகளின் ஆராதனை வேளைகளில் ஆவியானவர் அசைவாடுகிறார் என்று சொல்லுகிறீர்கள், பிரசங்க பீடத்திலிருந்து ஆவியானவர் பேசுகிறார் என்று சொல்லுகிறீர்கள். ஆனால் சபைத்தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வேளைகளில் அந்த ஆவியானவர் எங்கே??? 

ஒழிந்துபோகும் மகிமையுள்ள பழைய உடன்படிக்கை காலத்திலேயே மோசேக்குப்பின் யோசுவாவையும், நியாயாதிபதிகளையும், அரசர்களையும் நியமித்த ஆவியானவரால். ஒழியாத மகிமையுள்ள மணவாட்டி சபைக்கு தலைவர்களை தேர்ந்தெடுத்து நியமிக்க முடியாதா?

ஒரு பதவிக்கு பலர் போட்டியிடுவதும், தேர்தல் வைத்து ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பதும் ஏன்? இதுதான் ஆவியானவர் கற்றுக்கொடுத்த முறையா? அல்லது மேய்ப்பர் தனது சொந்த விருப்பத்தின்படி தனது மகனையோ அல்லது மருமகனையோ பிற உறவினர்களையோ பதவியில் அமர்த்துவது ஏன்? ஆராதனை வேளைகளில் அசைவாடும் ஆவியானவர், ஜெபநேரங்களில் தீர்க்கதரிசனம் சொல்லும் ஆவியானவர், பிரசங்கபீடங்களிலிருந்து உபதேசிக்கும் “உங்கள் ஆவியானவர்” இப்போது மட்டும் எங்கே போனார்?

கேள்வி #3:

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன். (வெளி 2:7)

ஆவியானவர் சபைகளுக்கு யோவான் மூலம் வெளிப்படுத்தின விசேஷங்களில் பேசிய காரியங்களாகட்டும். பவுல், பேதுரு போன்ற அப்போஸ்தலரின் நிருபங்களாகட்டும். அது சபை மக்களிடமும், மேய்ப்பர்களிடமும், மூப்பர்களிடமும் பேசும் ஆவியானவரின் குரலாகவே இருந்திருக்கிறது. அதிலும் விசேஷமாக வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆவியானவர் 7 சபைகளுக்கு பேசிய காரியங்களில் அவர் சபையிலிருக்கும் சாதாரண விசுவாசிகளுக்கு பேசியதை விட சபை மூப்பர்களை பாராட்டியும், கண்டித்தும், கடிந்துகொண்டும் பேசியதே அதிகம்.

இப்படியிருக்க…

இன்று பிரசங்க பீடங்களில் பேசும் “உங்கள் ஆவியானவர்” சபை மக்களுக்கு மட்டும் பிரசங்கிப்பதும் அவர்களது குற்றங்களை மாத்திரம் கடிந்து போதிப்பதும் ஏன்? சபை மக்கள் செய்யும் சிறிய தவறுகளுக்காகக்கூட சீறிப்பாயும் “உங்கள் ஆவியானவர்” சபைப்போதகர் மற்றும் அவர் குடும்பத்தினர் செய்யும் அக்கிரமங்களையும், மாபாதகங்களையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? 

சபைத்தலைவர்களிடம் பேசும் ஆவியானவரின் குரல் இன்று எங்கே?…அல்லது …

எந்த போதனையும் தேவையில்லாத அளவுக்கு இன்றைய அத்தனை மூப்பர்களும், போதகர்களும் அவ்வளவு மாசற்ற பொன்னாக விளங்குகிறார்களா?

கேள்வி #4:

ஆவியானவர் அருளும் வரங்களில் தீர்க்கதரிசன வரம் மிக முக்கியமானது. தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள் (1 கொரி 14:29).

இன்று சபைகளின் ஆராதனை வேளைகளில் மைக்கைப் பிடித்து தீர்க்கதரிசனம் கூறுவது பெரும்பாலும் அந்தச் சபையின் போதகராவார். வேறுயாரும் அனுமதிக்கப்படுவதில்லை. போதகர் தீர்க்கதரிசனம் சொல்லுவது பிரச்சனையில்லை. ஆனால் 1 கொரி 14:29-படி அவர் சொல்லும் தீர்க்கதரிசனங்களை நிதானிக்க சபைமக்கள் அல்லது இரண்டாம், மூன்றாம் நிலை சபைத்தலைவர்கள் அனுமதிக்கப்படுவார்களா?

ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் (பவுல்) உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன் (1 கொரி 14:37).

ஆனானப்பட்ட அப்போஸ்தலன் பவுலின் பிரசங்கங்களையே பெரேயா மக்கள் பரிசோதித்துப் பார்த்ததும், அதனால் அவர்கள் நற்குணசாலிகளாக இருந்தார்கள் என்று பாராட்டப்பெற்ற வரலாறும் வேதாகமத்தில் உண்டு.

ஆனால் இன்று தாம் சொல்லும் தீர்க்கதரிசனங்களை ஜனங்கள் நிதானிக்க அனுமதிக்கப்படாமல். தீர்க்கதரிசனம் என்ற பெயரில் தாம் எது சொன்னாலும் ஜனங்கள் அதை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளும்படி ஜனங்களிடம் பாஸ்டர்கள் எதிர்பார்ப்பது ஏன்?

ஒருவேளை தம் சபை விசுவாசிகள் தீர்க்கதரிசனங்களை நிதானிக்குமளவுக்கு முதிர்ச்சி பெற்றவர்கள் இல்லை என்று பாஸ்டர் சொல்வாரானால் அவர்களை அவ்வளவு பேதைகளாக வளர்த்து வைத்திருப்பது யார் குற்றம்?

கேள்வி #5:

நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம் (I கொரிந்தியர் 12:13)

இன்றைய சபைப்போதகர்கள் எல்லோரும் தாங்கள் ஆவியானவரால் நிரப்பப்பட்டுள்ளதாகவும், தங்கள் சபையில் ஆவியானவர் அசைவாடுவதாகவும் சொல்லுகிறார்கள். ஆனால் அதே ஊரில் உள்ள அதே ஆவியானவரால் நிரப்பபட்ட இன்னொரு போதகரையும், அவரது ஆவியானவர் அசைவாடும் சபையையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளாதது ஏன்?

மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது என்று ரோமர் 5:5 சொல்லியிருக்க அவரது ஆவியைப் பெற்றதாக சொல்லும் உங்களுக்குள் பிணக்குகளும், பொறாமைகளும், புறங்கூறுதலும் ஏன்? உங்கள் சபையிலிருக்கும் ஒரு விசுவாசி வேறொரு சபைப் போதகரின் கூட்டத்துக்கோ, ஆராதனைக்கோ சென்றால் அதை மன்னிக்க முடியாத குற்றமாக நீங்கள் பாவிப்பது ஏன்? 

போதனைகளும், ஆராதனை முறைமைகளும், அந்நியபாஷையும் எல்லாம் உங்கள் இரு சபைகளிலும் ஒன்று போலிருக்க அந்தப்போதகரை ஏன் உங்கள் சபைக்கு அழைப்பதில்லை? அந்த சபை வளர்ச்சிக்காக நீங்கள் ஏன் ஜெபிப்பதில்லை?

அந்தப் போதகரை தவறான ஆவியுடையவர், அந்த சபையில் இருப்பது பரிசுத்த ஆவியில்லை என்றும் நீங்களும் உங்கள் சபையும்தான் உண்மையானது என்பதை எதைக்கொண்டு நிரூபிப்பீர்கள்?

சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்ளுவதற்கு நீங்கள் ஏன் அக்கறை காட்டுவதில்லை?  (எபேசியர் 4:3)

கேள்வி #6:

சபையில் எப்படிப்பட்டவர்களை கண்காணிகளாகவும் (பிஷப்), உதவிக்காரராகவும் நியமிக்க வேண்டும் என்று ஆவியானவர் 1 தீமோத்தேயு 3-ஆம் அதிகாரத்தில் தெளிவாக எழுதிக் கொடுத்திருக்கிறார். இது சகல சபைகளுக்கும் பொருந்தும். எல்லாவற்றிற்கும் ஆவியானவர், ஆவியானவர் என்று அவரைத் தூக்கிப்பிடிக்கும் சபைகள் இந்தக் காரியத்தில் அவருக்கு கீழ்ப்படிகின்றனவா?

சபை ஊழியர்கள் நியமனத்தில் 1 தீமோத்தேயு 3 ஆம் அதிகாரத்தின் நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? அந்த நிபந்தனைகளுக்கு ஒத்துவரும் சீஷர்கள்தான் ஊழியக்காரராக நியமிக்கப்படுகிறார்களா?

இல்லை..இல்லை…நிச்சயமாக இல்லை. 

ஆவியானவரின் கட்டளையையை தூக்கி தூர எறிந்துவிட்டு மனிதர்களால் மனித அறிவைக்கொண்டு நடத்தப்படும் ஒரு இறையியல் கல்லூரி அல்லது ஒரு வேதாகமக் கல்லூரியின் சான்றிதழுக்கே அதிக மதிப்பும் முக்கியத்துவமும் தரப்படுகிறது. 

ஒரு மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட சபையில், குறிப்பிட்டதொரு ஊழியத்தை செய்யும் தேவ அழைப்பு இருக்கிறதென்பதை எப்படி அறிந்துகொள்ளுவீர்கள்? அவன் வைத்திருக்கும் இறையியல் கல்லூரி சான்றிதழைக்கொண்டா? 

எது முக்கியம் வெற்றுக் காகிதச் சான்றிதழா அல்லது ஆவியானவரின் கட்டளையா? அப்படி ஊழியக்காரனாக தெரிந்தெடுக்கபட்ட வேதம் எதிர்பார்க்கும் எந்தத் தகுதியுமில்லாத ஒருவனை ஆவியானவர் தனது ஸ்தானாதிபதியாக ஏற்றுக்கொள்வாரா? அந்த சபையில் அந்த மனிதன் மூலம் ஆவியானவர் கிரியை செய்வாரா? கர்த்தருடைய நாளில் இந்த சபை கரை சேருமா?

கேள்வி #7:

“ஆவியின் ஆராதனை” என்ற பெயரில் நீங்கள் நடத்தும் பாட்டுக் கச்சேரி கர்த்தரை மகிமைப்படுத்தவா? இதில் ஆவியானவர் பங்கு கொள்வாரா? நிச்சயம் இல்லை.

இதில் நடைபெறும் அவலங்களை வரிசைப்படுத்துகிறேன்:

1. இது பாடகர் குழுவும், ஆராதனை தலைவரும் தங்கள் திறமையை காட்டி ஜனங்களை கவரும் மேடை.

2, ஆவியானவர் பிரசன்னம் வந்துவிட்டது போன்ற தோற்றம் இசையில் மூலம் உருவாக்கப்படுகிறது.

3. ஆராதனையின் முதல்கட்டமாக நடைபெறும் பாடல்வேளை ஜனங்கள் அனைவரும் வந்துசேரும் வரை நேரப்போக்குக்காக செய்யப்படுகிறது. வர வேண்டியவர்கள் இன்னும் வரவில்லை ஆகவே இன்னும் 2 பாடல்கள் பாடுவோம் என்று எத்தனை முறை கேள்விப்பட்டிருக்கிறோம்? இது ஆண்டவரை மகிமைப்படுத்தவா அல்லது நேரப்போக்குக்காகவா?

4. ஒரு செமினாரோ, ஜெபக்கூட்டமோ மதிய உணவு முடிந்தவுடன் தொடங்கப்படும் ஆராதனையில் பாடப்படும் “ஆக்‌ஷன் பாடல்” ஜனங்களின் தூக்க மயக்கத்தை போக்க பாடப்படுகிறது. ஆண்டவரை மகிமைப்படுத்த அல்ல. உங்கள் தேவபயம் எங்கே?

5. ஜனங்கள் பாடல்களை அழகாகவும், உரத்தசத்தத்தோடும், கைத்தாளத்தோடும், நடனத்தோடும் பாடும்படி வற்புறுத்தப்படுகிறார்களேயன்றி, அர்த்தத்தை உணர்ந்து பாடும்படியும், ஜெபத்தோடும் நடுக்கதோடும் களிகூறும்படியும் அறிவுறுத்தப்படுவதில்லை. ஆராதனை நடத்துவோருக்கு Performance மாத்திரமே முக்கியம்.

6. ஒருவேளை அந்தப் பாடல்களைப் பாடும்போது அதன் அர்த்தத்தால் உணர்வடைந்து மனந்திரும்புவார்களானால் அது அருமையான விஷயம், அப்படிப்பட்டவர்கள் சிலர் எல்லா ஆராதனைக்கூட்டங்களிலும் இருக்கவே செய்கிறார்கள்

ஆனால் முழு இருதயத்தோடு பாடாமல், அருவெறுப்பாக இஷ்டத்துக்கு  வாழ்ந்துகொண்டு “என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்” என்று பாடுவதும். முழுக்க முழுக்க உலகத்துக்காகவும் பணத்துக்காகவும் வாழ்ந்து கொண்டு “நீரே மாத்திரம் என் ஆத்ம நேசர்” என்று பாடுவதும், சொந்த வீட்டாரிடம் கூட குடுமிபிடிச்சண்டை போட்டுக்கொண்டு “அன்பே பிரதானம்” என்று பாடுவதும் ஆண்டவரை பகடி செய்வதில்லையா? 

முழுக்க முழுக்க தேவபயமேயின்றி நடைபெறும் கூத்துக்கு ஆராதனை என்ற பெயரா? அதில் ஆவியானவர் அசைவாடுவாரா?

இப்படிப்பட்ட ஆராதனைகளுக்காக ஆண்டவரிடம் நாளை கணக்கொப்புவிக்க வேண்டும் என்று அறிவீர்களா?

இன்று பெரும்பாலான சபைகளில் அசைவாடுவதாகச் சொல்லப்படும் அந்த so called ஆவியானவரை “அந்நிய அக்கினி” என்று நாங்கள் அழைப்பதால் பலர் எங்கள் மீது எரிச்சலடைகிறார்கள், மேற்கண்ட நியாயமான கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.

நாங்கள் ஆவியானவர் இன்றும் சபைகளில் அசைவாடுகிறார் என்றும், பிரசங்க பீடங்களில் பேசுகிறார் என்றும், அற்புத அடையாளங்கள் செய்கிறார் என்றும் விசுவாசிக்கிறோம். அந்நியபாஷை, வியாக்கியானம் தீர்க்கதரிசனம் போன்ற எல்லா வரங்களையும் நம்புகிறோம்.

ஆனால்…

எல்லாவற்றையும் சோதித்து அறியச்சொல்லி வேதம் சொல்லியிருக்கிறது. நல்ல கனிகொடாத எந்த மரத்தையும் நல்ல மரமென்று ஏற்றுக்கொள்ள இயலாது.

பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள் (I யோவான் 4:1 )

4 thoughts on “திருச்சபைகளுக்கு ஆவியானவர் பற்றிய 7 கேள்விகள்:”

  1. ஆவியானவரை (கர்த்தரை) தொழுதுக்கொள்கிரவர்கள் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும். இது தேவனின் நியதி. இதை பெரும்பாலான சபைகளில் பின்பர்ற்றப்பட வில்லை. கர்த்தருடைய ஆவியானவர் எங்கே உண்டோ அங்கே விடுதலை உண்டு! அடிமை அனுபவித்து இருக்கிறேன். இந்த செய்தி மிகவும் நன்று.தேவன் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

  2. இந்த செய்தி மிகவும் நன்று.தேவன் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

Leave a Reply