திசை திருப்பல்

தொலைக்காட்சி விவாதங்களில் பார்த்தால் ஒரு தரப்பினரிடம் உண்மை இருக்கும் அவர் நிதானமாகப் பேசுவார். இன்னொருவரிடம் அவரது கேள்விக்கு பதில் இருக்காது. எனவே கத்தி கூப்பாடு போட்டு குழப்பத்தை ஏற்படுத்தி பஞ்சாயத்தைக் கலைக்க வேண்டும் என்று மட்டுமே குறியாக அவரது செயல்பாடுகள் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் “திசை திருப்பல்” மட்டுமே குறிக்கோள். ஆனால் சரியாக நிதானிக்கும் ஒருவரால் யார் பக்கம் சரி, யார் பக்கம் தவறு என்பதை எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

சத்தியம் என்பது நிதானமானது, அமைதியானது. அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார் (ஏசாயா 42:2). ஆனால் அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை (வச 4). தேவ ராஜ்ஜியமானது நிதானமாக, சமாதானமாக வளரும். ஆனால் கடுகுவிதை பெரிய மரமாவதுபோல, புளித்த மாவுபோல விரவிப் பரவி உலகை ஆக்கிரமித்தே தீரும்.

ஆனால் சத்தியத்துக்கு எதிரானதாகிய பிசாசின் ராஜ்ஜியமோ “பாபிலோன்” என்றழைக்கப்படுகிறது. பாபிலோன் என்பதன் அர்த்தம் “குழப்பம் அல்லது தாறுமாறு” ஆகும். இந்தக் குழப்பம் அல்லது தாறுமாறின் நோக்கம் சத்திய மார்க்கத்தை விட்டு மக்களை திசைதிருப்புவது மட்டுமே. ஏனெனில் பிசாசிடம் சத்தியத்துக்கு பதில் இல்லை. ஆவியானவரின் துணையோடு நிதானிக்கும் ஒரு மனிதனால் இந்த உண்மையை எளிதாக விளங்கிக்கொள்ள முடியும்.

உங்களைச் சுற்றியுள்ள அல்லது உங்களுக்குள் உள்ள குழப்பம் மற்றும் தாறுமாறின் மீது உங்கள் கவனத்தை வைக்காதிருங்கள். ஏனெனில் அது பிசாசின் திசைதிருப்பும் முயற்சி. உங்கள் நோக்கம் உங்களைக் குறித்த தேவதிட்டத்தின் மீது மட்டும் இருக்கட்டும். விவாதங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிற ஆட்கள் மைக்கைக் கழற்றி வைத்துவிட்டு பாதியில் எஸ்கேப் ஆவது போல பாபிலோனும் விரைவில் வீழும் (வெளி 14:8), ஏனெனில் குழப்பத்தையும் தாறுமாறையும் வெகுநேரம் வரைக்கும் நீட்டித்து வைத்திருக்க முடியாது. ஆனால் பரலோக ராஜ்ஜியமோ என்றென்றும் நிலைநிற்கும். எனவே நமது மனம் “நம்மைக் குறித்த தேவதிட்டம்” எனும் பொக்கிஷத்தின் மேலேயே இருக்கட்டும்.

Leave a Reply