ஜாக்கிரதை! ஊழியர்களை வேட்டையாடும் கும்பல்

தமிழகம் மிகப்பெரிய கிறிஸ்தவ நுகர்வோரைக் கொண்ட சந்தை ஆகும்.  நுகர்வோர் எங்கே அதிகமோ அங்கே வியாபாரிகளும் பெருகுவார்கள். எனவேதான் தமிழகத்தில் ஏராளமான கிறிஸ்தவ சேனல்களும், FMகளும், புத்தக நிலையங்களும் பெருகியிருக்கின்றன. அனுதினமும் ஒரு தமிழ் கிறிஸ்தவ பாடல் ஆல்பமாவது வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.  சென்னையில் இன்று கிறிஸ்தவப் போஸ்டர் இல்லாத சுவரைக் காண்பது அரிது,

ஆனால் விசுவாசிகளின் இரத்தத்தை காவு கேட்கும் சீனா போன்ற தேசங்களில் தேவபக்தியை மூலதனமாக்கி, இயேசுவின் நாமத்தை சந்தையில் விற்கும் ஆவிக்குரிய  வியாபாரிகளை காண்பது இயலாத காரியம். அங்கே சாத்தானுக்கு சபைகளை துன்புறுத்தும் நீரோக்கள்தான் ஆயுதம். ஆனால் கிறிஸ்தவம் ஓங்கி வளர்ந்து நிற்கும் தமிழகம் போன்ற இடங்களில் மக்கள் சக்தியை எதிர்த்து நீரோக்களால் ஒன்றும் சாதிக்க முடியாது. அப்படி நீரோக்கள் எழும்பினாலும் 72 மணிநேர உபவாசம்(!) போட்டு அவர்களை அடக்கி விடுவார்கள். நுகர்வோர் பெருத்த தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நமக்கு எதிரிகள் நீரோக்கள் அல்ல, ஊழியத்தை வியாபாரமாக்கும் பிலேயாம்களும் கேயாசிகளுமே!

பெரிய பெரிய மீடியாக்களை கையில் வைத்துக் கொண்டு, பல கோடி செலவில் கூட்டங்களை நடத்தி, பல ஆயிரம் மக்களை திரட்டி ஊழியம் என்ற பெயரில் ஆவிக்குரிய வியாபாரம் செய்யும் ஒரு சில பிரபலங்கள் தமிழகத்தில் உண்டு, தேசத்துக்காக உபவாசித்து ஜெபிப்பது, திறப்பின் வாசல் ஜெபம், அக்கினி அபிஷேகம், அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள், விடுதலை பெருவிழா, துதி ஆராதனை, தீர்க்கதரிசன முகாம் இப்படி பற்பல பெயர்களில் இந்தக் பிரபலங்கள் விசுவாசிகளைக் கவர்ந்திழுப்பார்கள். இவர்கள் தனித்தனியாகவும் கூட்டணியாகவும் செயல்படுவது வழக்கம். இந்தப் பிலேயாம்களையும் கேயாசிகளையும் ஒருங்கிணைக்கும் ஒரே சக்தி “பணம்”.

நாங்கள் இந்த எச்சரிக்கை கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்ள ஒரு காரணம் உண்டு, எப்போதோ பூக்கும் குறிஞ்சிப்பூ போல சில அரிதான சாட்சிகளை தேவன் நம்மிடையே எழுப்புவது உண்டு. கடினமான பிராமண பின்னனியில் இருந்து இரட்சிக்கப்பட்டவர்கள், கடினமான இஸ்லாமியப் பிண்ணணியில் இருந்து இரட்சிக்கப்பட்டவர்கள், பயங்கரப் பாவப்பிடியில் இருந்து மனந்திரும்பியவர்கள், மரணத்துக்கு ஏதுவாக வியாதிப்பட்டு மீண்டு வந்தவர்கள், சினிமா உலகிலிருந்து இரட்சிக்கப்பட்டவர்கள்,  பில்லிசூனியப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் இப்படி கேட்பவர்கள் மனதை உடைத்து கிறிஸ்துவின்பால் ஈர்க்கச் செய்யும் சாட்சிகள் அவ்வப்போது நம்மிடையே தோன்றுவதுண்டு.

அல்லது தனது தாலந்துகள் அனைத்தையும் தேவனுக்காகவே தத்தம் செய்து வாழவேண்டும் என்ற துடிப்புள்ள (மிகுந்த திறமையுள்ள) பாடகர்கள், கைதேர்ந்த இசையமைப்பாளர்கள், இளைஞர்களை சுண்டியிழுக்கும் பேச்சாற்றல் உடைய இளம் போதகர்கள் போன்றோர்  தேவன்மீது கொண்ட பற்றினாலும், ஜனங்கள் மீது கொண்ட பாரத்தினாலும் எங்கே தனக்கு ஊழியத்தில் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்குவதுண்டு.

நீங்கள் இப்படிப்பட்ட ஆத்துமாக்களில் ஒருவராயிருந்தால் இந்த அன்பான எச்சரிப்பின் கடிதம் உங்களுக்குத்தான். நீங்கள் ஒருசில சுவிசேஷக் கூட்டங்களிலும் சபைகளிலும் உங்கள் சாட்சியை சொல்லி, அல்லது உங்கள் தாலந்துகள் வழியாக அநேகரை கர்த்தர் வசம் இழுக்கிறீர்கள் என்று தெரிந்தால் மேற்சொன்ன பிரபலங்களின் கூட்டணி உங்களுக்கு வலை விரிக்கும். முதலில் தங்களது பெருங்கூட்டங்களில் உங்களுக்கு சாட்சிபகர/ பங்குகொள்ள வாய்ப்பளிப்பார்கள், பின்னர் தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களை அறிமுகப்படுத்துவார்கள். ஆ! இவ்வளவு பெரிய ஊழியக்காரர் நம்மை பயன்படுத்துகிறாரே! இது தேவன் திறந்துகொடுத்த வழியல்லவா என்று கண்ணை மூடிக்கொண்டு நம்பினீர்களானால் மாபெரும் கண்ணியில் சிக்கினீர்கள்!

உங்களுக்கு விசுவாசிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்ப்பைத் தெரிந்து கொண்டு உங்கள் கதையை தங்கள் சொந்த செலவில் குறும்படமாகத் தயாரிக்கப் போவதாக ஆசை காட்டுவார்கள். இதன் மூலம் அநேகர் கிறிஸ்துவை அறிந்து கொள்வார்கள் என்று சொல்லி உங்களை இணங்க வைப்பார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் உங்களையும், இயேசுவையும் மூலதனமாக்கி ஒரு லாபகரமான சரக்கை சந்தையில் இறக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. டிவிடி விற்கும் பனத்தில் உங்களுக்கும் ஒரு பங்கு தருவதாக உறுதியளிப்பார்கள்.

இதில் என்ன தவறு இருக்கிறது? நல்ல விஷயந்தானே! அவர்களிடம் பணமும், தொழில்நுட்பமும்,மார்கெட்டிங்கும் இருக்கிறது. சம்பாதித்துவிட்டுப் போகட்டும். அதையும் அவர்கள் ஊழியத்தில் தானே செலவிடப்போகிறார்கள்! ஆனால் அவர்கள் மூலம் எனது சாட்சியோ/ஆல்பமோ இலட்சகணக்கானோரை சென்றடைந்தால் அது தேவராஜ்ஜியத்துக்கு லாபம்தானே என்று நீங்கள் நினைத்திருக்கலாம். நிச்சயமாக! உங்கள் டிவிடி பிரபலமடையலாம், அநேகர் தொடப்படலாம். ஆனால் கள்ளத் தீர்க்கதரிசிகளோடு/ஆன்மீக வியாபாரிகளோடு கைகோர்த்த உங்கள் ஆத்துமாவின் நிலை என்ன? ஒருநாளில் அவர்களின் உண்மை முகம் தெரிந்து நீங்கள் வெளியேறவேண்டும் என்று தீர்மானிக்கும்போது நீங்கள் வெளியேறக்கூடாதபடிக்கு உங்கள் கழுத்து நீங்கள் அறியாமலேயே பாபிலோனிய நுகத்தில் இணைக்கப்பட்டிருப்பதை அறிந்து புலம்புவீர்கள், பரிதவிப்பீர்கள்.

உங்களுக்கு தெரியுமா? இந்தப் பிலெயாம் கூட்டணியில் பலரும் ஆரம்பகாலத்தில் மிகுந்த வல்லமையுள்ள சாட்சியுடையவர்கள்தான், இருதய நோயிலிருந்து மீண்டவர், தற்கொலைக்கு முயன்று பின்னர் இயேசுவைக் கண்டுகொண்டவர், கட்டுக்கோப்பான இந்து பூஜாரிக் குடும்பத்தில் இருந்து வந்தவர் இப்படி எல்லோருமே வலிமையான சாட்சிகளோடு உள்ளே வந்தவர்கள்தான். ஆனால் இயேசுவை மாதிரியாகக் கொள்ளாமல் அப்போதிருந்த சமகால பிரபலம் ஒருவரை மாதிரியாகக் கொண்டு ஓடிய படியால் இன்று அந்தி கிறிஸ்துவின் ஏஜண்டுகளாகிப் போனார்கள். நாளை உங்களுக்கும் அதே நிலை தேவையா?

 எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்குமென்று அவர்கள் சொல்வார்களாகில்;என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக (நீதி 1:15,16)

கிறிஸ்தவன் என்று பெயர் வைத்துக்கொண்டு ஒருவன் பொருளாசைக்காரனாக இருந்தால் அப்படிப்பட்டவனோடு ஐக்கியம் கொள்ளக்கூடாது என்று I கொரி 5:1-ம், சுத்த சுவிசேஷத்தை போதியாமல் தங்கள் சுயலாபத்துக்காக கலப்பட சுவிசேஷத்தை போதிப்போரை வீட்டில் ஏற்றுக்கொள்ளாமலும் அவர்களுக்கு வாழ்த்து சொல்லாமலும் இருங்கள் என்று 2 யோவா 1:10-ம் தீர்க்கமாக எச்சரிக்கின்றன. அப்படியிருக்க அப்படிப்பட்டவர்களோடு இணைந்து தேவராஜ்ஜியத்தைக் கட்டல்லாம் என்று திட்டமிடுவது எத்தனை மதியீனம்! எத்தனை துணிகரம்!

இந்த ஆவிக்குரிய வியாபாரிகளுக்கு உங்கள் மூலமாக வரும் வியாபாரம் தேவை, ஆனால் பிசாசுக்கு உங்களை தடை பண்ணுவதும், உங்கள் ஆத்துமாக்களை பிடிப்பதுமே பிரதான நோக்கம். நீங்களோ பெரிய அளவில் ஊழியம் செய்வதாக நினைத்துக்கொண்டிருப்பீர்கள். எப்படிவேண்டுமானாலும் ஊழியம் செய்யலாம் என்பதல்ல, இப்படித்தான் ஊழியம் செய்யவேண்டும் என்பதற்கு இயேசு முன்மாதிரியை விட்டுச் சென்றிருக்கிறார்.

ஒருவேளை உங்கள் வல்லமையான சாட்சியின் மூலம் உங்களுக்கு உடனடியாகத் திறக்கும் கதவுகளும், so called பெரிய ஊழியக்காரர்களின் அழைப்புகளும் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் கட்டுவதற்க்கு மற்றவர்களைவிட நீங்கள் மிக முக்கிய பாத்திரம் என்ற மாயத்தோற்றத்தை உங்களுக்கு ஏற்படுத்திவிடக்கூடும். கிறிஸ்தவ உலகம் உங்களுக்குத் தரும் மதிப்பும் முக்கியத்துவமும் உங்களை ஆவிக்குரிய பெருமையில் தள்ளிவிடக்கூடும். நாளடைவில் தேவன் தனது இராஜ்ஜியத்தின் வளர்ச்சிக்காக உங்களை சார்ந்திருப்பதாக தப்பெண்ணம் கொள்ளத் துவங்கிவிடுவீர்கள்.

உங்களைக் கொண்டு ஒரு பெரிய மார்கெட்டை பிடிக்க அந்த ஆவிக்குரிய வியாபாரிகள் வேண்டுமானால் திட்டமிட்டிருக்கலாம். ஆனால் தேவன் அப்படிப்பட்டவரல்ல. அவர் வெறும் கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உருவாக்க வல்லவராய் இருக்கிறார் (மத் 3:9). அவர் உங்களை கடும் பாவச் சேற்றிலிருந்து மீட்டு கிருபையாக இரட்சிக்கக் காரணம் உங்கள் மீதிருந்த அநாதி சிநேகமே தவிர வேறில்லை. நீங்கள் உண்மையும் உத்தமமுமாய் அவருடைய சித்தத்தின்படி ஊழியம் செய்யும் பட்சத்தில் அவர் நிச்சயம் உங்களை பயன்படுத்துவார். ஆனால் நீங்கள் தேவனுக்காக ஆயிரமாயிரம் ஆத்துமாக்களை கொள்ளைப்பொருளாக கொண்டுவரவேண்டும் என்பதை விட நீங்கள் உங்கள் சொந்த ஆத்துமாவை கறைபடாமல் காத்து உங்கள் ஓட்டத்தை நீங்கள் ஜெயமாக ஓடிமுடிக்க வேண்டும் என்பதிலேயே அவர் பெரிதும் கரிசனையுள்ளவராயிருக்கிறார்.

இன்று தமிழகத்தில் பல வல்லமையுள்ள சாட்சிகளும், திறமையும் வாஞ்சையுமுள்ள இளைஞர்கள் ஆவிக்குரிய வியாபாரிகளின் கையில் மாட்டிக்கொண்டு அவர்களும், அவர்களது ஊழியமும் திசைமாறி பயணிப்பது கண்டு எங்கள் உள்ளம் பரிதவிக்கிறது. நீங்கள் ஆன்மீகக் கள்வர்களோடு இணைந்து இந்த உலகம் முழுவதையும் ஆதாயபடுத்தினாலும் உங்கள் சொந்த ஜீவனை நஷ்டப்படுத்தினால் உங்களுக்கு லாபம் என்ன? ஒரு படுகுழியிலிருந்து விடுவிக்கப்பட்டு இன்னொரு படுபடுகுழியில் விழுந்துவிடாதிருங்கள். ஆரம்ப நாட்களில் கிறிஸ்துவுக்காக நீங்கள் பட்ட உபத்திரவமும், காயங்களும், ரணங்களும் ஒருநாளும் வீணாய் போகாதபடி ஜாக்கிரதையாய் உங்கள் இரட்சிப்பைக் காத்துக்கொள்ளுங்கள்.

ஒருவேளை நீங்கள் அந்த ஆவிக்குரிய வியாபாரிகளோடு இணைந்து ஊழியம் செய்யாமல் இருக்கலாம். ஆனால் அவர்களை முன்மாதிரிகளாக வைத்து அவர்களைப்போலவே நீங்களும் உங்கள் ஊழியத்தை செய்வீர்களானால் அதுவும் பேராபத்து! அப்படிபட்டவர்களுக்கு என்றைக்குமுள்ள காரிருளே வைக்கபட்டிருக்கிறது என்று யூதா:11-13 எச்சரிக்கிறது, அவர்களைப் பின்பற்றினால் உங்கள் ஆரம்பம் எவ்வளவு மகிமையுள்ளதாக இருந்தாலும் உங்கள் முடிவு சந்தேகமின்றி காரிருளே! அவர்களைப்போல உங்கள் ஊழியத்தோடு வியாபாரத்தை கலக்காதிருங்கள். தற்புகழ்ச்சியை நாடாதிருங்கள். பிரபலமடைய ஆசைப்படாதிருங்கள், பெரிய கூட்டத்தில்தான் பிரசங்கிப்பேன், சின்னக்கூட்டத்தில் பிரசங்கிக்க மாட்டேன் என்று சொல்லாதிருங்கள், வெளிநாட்டுப் பயணங்கள்உக்காக ஏங்காதிருங்கள், ஏழைகளைத் தேடிச் செல்லுங்கள்,

உங்கள் படைப்புகளான சிடியோ, புத்தகமோ எதையும் விலைக்கு விற்காதிருங்கள். எதிலும் உங்கள் புகைப்படங்களைப் போடாதிருங்கள். உங்கள் கூட்டங்களுக்கு டிக்கெட் வசூல் செய்யாதிருங்கள்! இவையெல்லாம் பாபிலோனின் சாயல்கள்.  இலவசமாகக் கொடுத்தால் மதிப்பிருக்காது என்று சொல்லாதிருங்கள் தேவனுடைய வார்த்தையால் ஒரு பொருளுக்கு வராத மதிப்பு பணத்தால் வரும் என்று சொல்லுவது மாபெரும் தேவதூஷணம்!  ஒரு சக விசுவாசியை சகோதரனே என்று வாய் நிறைய அழைத்துவிட்டு தனது சொந்த (ஆவிக்குரிய) குடும்பத்துக்குள் வியாபாரம் எப்படி செய்ய இயலும்? போட்ட காசை எடுக்க வேண்டும் என்று சாக்கு போக்கு சொல்லாதிருங்கள்! நஷ்டமே நேரிட்டாலும் தன் தாயிடமும், சகோதரனிடமும் எவனும் எதையும் விற்கமாட்டான். உங்கள் பிதாவின் வீட்டை கள்ளர் குகையாக்காதிருங்கள்!

ஆவிக்குரிய வியாபாரிகளை விட்டு விலகி ஓடுங்கள். அப்படிப்பட்டவர்களோடு இருக்கும் ஊழியத் தொடர்புகளை உடனே முறித்துக்கொள்ளுங்கள். அவர்களது வழிகளையும் ஆலோசனைகளையும் பின்பற்றாதிருங்கள்! சரியான ஊழியத்துக்கான மாதிரி வேதத்தில் கொடுக்கப்படுள்ளது. என்ன விலை கொடுத்தேனும் அதைப் பின்பற்றுங்கள். அதுவே நித்திய ஜீவனுக்கான இடுக்கமான வழி!

 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு (வெளி 3:11 )

3 thoughts on “ஜாக்கிரதை! ஊழியர்களை வேட்டையாடும் கும்பல்”

  1. ஆனால் நீங்கள் தேவனுக்காக ஆயிரமாயிரம் ஆத்துமாக்களை கொள்ளைப்பொருளாக கொண்டுவரவேண்டும் என்பதை விட நீங்கள் உங்கள் சொந்த ஆத்துமாவை கறைபடாமல் காத்து உங்கள் ஓட்டத்தை நீங்கள் ஜெயமாக ஓடிமுடிக்க வேண்டும் என்பதிலேயே அவர் பெரிதும் கரிசனையுள்ளவராயிருக்கிறார்.

    I like this Brother !

Leave a Reply