செழிப்பு உபதேசம் 2.0 – இலவச மின்புத்தகம்

ஃபேஸ்புக்கில் வெறும் மூன்று அத்தியாயங்களாக வெளியிடலாம் என்று நினைத்து ஆரம்பித்த கட்டுரைத்தொடர் இன்று ஒரு புத்தகமாய் வளர்ந்து நிற்கிறது. இந்த தொடரை எழுதிக்கொண்டிருந்தபோது ஒவ்வொரு கட்டுரைகளையும் வெறும் 20 முதல் 25 பேர்தான் தொடர்ந்து வாசித்திருப்பார்கள். ஆனாலும் இதில் சொல்லப்படும் கருத்துக்கள் கடைசிகால கிறிஸ்தவத்துக்கு மிக மிக மிக மிக அவசியமான செய்தியாக இருப்பதை ஆவியில் உணர்ந்ததால், ஆவியானவரது ஒத்தாசையோடு முழு தொடரையும் எழுதி முடித்தேன். அதுதான் இப்பொழுது ஒரு மின்புத்தகமாக உங்கள் கைகளில் தவழுகிறது.

உண்மையைச் சொல்லப்போனால் இந்தப் புத்தகத்தை கட்டுரைத் தொடராக ஃபேஸ்புக்கில் எழுத ஆரம்பித்த பொழுது இந்நூலில் உள்ள மொத்த விஷயங்களில் 40% மட்டுமே எனக்குத் தெரியும். மீதமுள்ள 60% இந்தத் தொடரை எழுதிக்கொண்டிருக்கும்பொழுதே கற்றுக்கொண்டது. ஆவியானவர் எவ்வளவு அற்புதமான ஆசிரியர் என்பதை ருசித்து அறிந்துகொள்ள இந்த புத்தகம் எழுதிய அனுபவம் எனக்கு உதவியது. ஒட்டுமொத்த துதியும், கனமும், மகிமையும் அவருக்கே உரித்தாவதாக!

இந்த நூலில் எந்தவிதமான செழிப்பைப் பற்றிப் பேசப்போகிறோம்? நீங்கள் மல்ட்டி பில்லினியர் ஆகப்போகிறீர்கள், நியூயார்க் நகரில் ஒரு பெரிய பங்களாவை விலைக்கு வாங்கபோகிறீர்கள், ரோல்ஸ் ராய்ஸ் காரில் வலம் வரப்போகிறீர்கள் என்பது போன்ற தனிமனித செழிப்பைப் பற்றி இங்கு பேசப்போவதில்லை. ஆனால் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமான பொருளாதாரச் செழிப்பைப் பற்றியும், ஆளுமை, அதிகாரத்தைப் பற்றியும் பேசப்போகிறோம்.

கர்த்தருடைய ஜனங்களின் மூன்று பிரதான எதிரிகள் உலகம், மாம்சம், பிசாசு என்பதை நாம் அறிவோம். இதில் “உலகம்” என்று வேதம் எதைச் சொல்லுகிறது என்கிற தெளிவான புரிதலை இந்த நூல் உங்களுக்கு கொடுக்கும்.

பணத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பொருளாதாரக் கட்டமைப்பு எந்த அஸ்திபாரத்தின் மீது நிற்கிறது. இதற்குப் பின்னால் உள்ள ஆவிகள் எவை? அவற்றின் தன்மைகள், செயல்பாடுகள் என்ன? இந்த உலகக் கட்டமைப்புக்கு வேதம் முன்வைக்கும் மாற்று பரலோக ராஜ்ஜியம். அது எப்படிப்பட்டது? இந்த உலகக் கட்டமைப்பு எப்படி உடைக்கப்பட்டு பரலோக ராஜ்ஜியம் இந்த உலகத்தில் நிறுவப்படும் என்பது போன்ற விஷயங்களை இந்த நூல் விவரமாக அலசுகிறது. இதன் மூலம் உங்கள் ஆவிக்குரிய புரிதலும், விசுவாசமும், தைரியமும் வளரும் என்பதில் துளியும் ஐயமில்லை.

இப்புத்தகத்தை PDF வடிவில் இலவசமாக டவுன்லோட் செய்ய:
http://www.brovijay.com/download/prosperity_gospel_2/

அமேசான் கிண்டில் வாசகர்களுக்காக இப்புத்தகம் அமேசான் தளத்தில் கிண்டில் format-இலும் கிடைக்கிறது. அமேசான் இலவசமாகத் தர அனுமதிக்காது என்பதால் குறைந்தபட்ச விலையாக ரூ.49 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் இணைப்பு கீழே:
https://www.amazon.in/dp/B0BHZYRX83/ref=cm_sw_em_r_mt_dp_5TGFNFJQNXV6WAZ3Z7HY

தங்கள் அனைவரின் அன்புக்கும், ஜெபங்களுக்கும், ஆதரவுக்கும் நன்றி!

விஜய்குமார் ஜெயராஜ்
www.brovijay.com

Leave a Reply