சூரியனுக்குக் கீழ் சர்வமும் மாயை- பாகம் 3

கட்டுரையின் முந்தின பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்
கட்டுரையின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்

ஒருநாள் நிச்சயமாக மரிக்கப் போகிறான் என்று தெரிந்தும் கூட தன் பிள்ளைக்கு “வாழவந்தான்” என்று பெயர்சூட்டி மகிழும் பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இவரோ நித்திய நித்தியமாக வாழ்வாங்கு வாழ்பவராக இருந்தாலும் மரிக்க வேண்டுமென்றே குழந்தையாகப் பிறந்தவர். தேவனுடைய தீர்ப்பை நினைவுபடுத்தும் பெயர்களைத் தனது குழந்தைகளுக்கு இட்டதை நாம் பழைய ஏற்பாட்டில் வாசித்திருக்கிறோம். மெத்தூசேலா, இக்கபோத், லோ-ருகாமா, லோ-அம்மீ போன்ற பெயர்கள் அப்படிப்பட்டவை. ஆனால் இவரோ தேவனுடைய தீர்ப்பை ஞாபகப்படுத்தும் தொழிலையே தனக்காகத் தெரிந்துகொண்டார். ஏழையாகப் பிறக்க முடிவுசெய்த இயேசு ஏன் ஒரு இடையன் வீட்டிலோ, உழவன் வீட்டிலோ பிறந்திருக்கக்கூடாது?

மரத்தில் தூக்கப்பட்டு சபிக்கப்பட்டவராக மரிக்கவேண்டும் (கலா 3:13) என்பதை அனுதினமும் உணர்வதற்காக மரங்களோடு தன் வாழ்வை இணைத்துக் கொண்டார். தச்சு வேலைக்கெனெ வெட்டப்பட்ட மரத்தை தோளில் வைத்து வீதிகளில் சுமந்து வரும் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் ஒரு பாரச்சிலுவையை சுமந்து ஒருநாள் கொல்கொதா நோக்கிச் செல்லவேண்டும் என்ற கடமையை தனக்குத்தானே நினைவுபடுத்திக் கொண்டிருந்திருப்பார். ஆணியை சுத்தியால் மரத்தில் ஓங்கி அடித்து இறக்கும்போதெல்லாம் மரத்தில் இறங்கும் இதே ஆணி விரைவிலேயே தன் கைகால்களில் இறங்கப்போகிறது என்கிற உணர்வு அவருக்கு இருந்திருக்கும். அவர் உடலால் பாடுபட்டது சிலுவையில் வெறும் ஆறு மணி நேரங்கள் மட்டுமே! ஆனால் உணர்வுகளால் கசக்கிப் பிழியப்பட்டதோ ஒவ்வொரு நாளும். இவ்வளவுக்குப் பிறகும் மரணபயம் அவரை இம்மியளவு கூட அசைக்கவில்லை. அந்த நாளுக்காக அவர் ஆவலுடனேயே காத்திருந்தார். நேசம் மரணத்தைக் காட்டிலும் வலியது என்று வேதம் சும்மாவா சொல்லுகிறது?

பிசாசு மனிதனோடு உள்ள தனது நாலாயிர வருட அனுபவத்தில் முதல் முறையாக ஒரு பூரணமான மனிதனைச் சந்தித்து இருந்தான். தன்னுடைய நியாயத்தீர்ப்பு நாசரேத் வீதிகளில் உலாவுவதைக் கண்ட அவனால் சும்மா இருக்கமுடியவில்லை. ஆம், ஊத்ஸ் தேசத்து உத்தமனே(யோபு) அவனுடைய கண்களை அவ்வளவு உறுத்தி இருந்திருப்பானேயானால் இந்த நாசரேத்தூர் நசரேயனைப்பற்றி சொல்லவா வேண்டும். அவர் சிங்காசனத்தில் வீற்றிருந்தபோது அவரை ஏறெடுத்துப் பார்க்கக்கூட துணியாமல் முகத்தை மூடிக்கொண்டு அவரைத் தொழுத கேரூப் இன்று அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கி மனித உடலோடு, உணர்வுகளோடு, உறவுகளோடு உலாவுவதை கண்டபோது அவரையும் வலை வீசிப் பிடித்துவிடலாம் என்று மனப்பால் குடித்தான். எவ்வகைப்பட்சியானாலும் அதன் கண்களுக்கு முன்பாக வலைவிரிப்பது விருதா என்று நீதி 1:17 சொல்லுகிறது. ஆனால் கண்களையே படைத்தவரின் கண்களுக்கு மறைவாக எங்கே வலைவிரிப்பது? வார்த்தையானவரையே வார்த்தையால் பிடிக்கலாம் என்று துணிவுகொண்டதால் அவனை முட்டாள்களின் தலைவன் என்று தயங்காமல் அழைக்கலாம். அவனது நப்பாசையைக்கண்டு மனதுக்குள் நகைத்த பிதா “சரி முயன்றுபார்!” என்று அனுமதித்திருப்பார்.

சாத்தானுக்கு அப்படி என்னவொரு அசட்டு நம்பிக்கையோ தெரியவில்லை எப்படியும் மோதிப்பார்த்துவிடுவது என்று முடிவுசெய்தான். இயேசு உணர்வுகளில் பெலவீனமடைந்து அவன் பார்த்ததேயில்லை ஆனால் அவர் உடலில் பெலவீனமடைந்ததாக அவனுக்குத் தோன்றிய ஒருநாள் வந்தது. 40 நாட்கள் உணவின்றி தண்ணீரின்றி அவர் பிதாவின் சமூகத்தில் அமர்ந்திருந்தார். 40 நாட்களின் முடிவில் அவருக்கு பசியுண்டாயிற்று என்று வேதம் சொல்லுகிறது(மத் 4:2). இதுவே தனக்கு சரியான நேரம் என்று உணர்ந்தவனாக ஒரு தந்திரவலையைப் பின்னி அதில் அவரை சிறைப்பிடிக்கும்படி வந்தான். 40 நாட்கள் சாப்பிடாதவரைக் கொண்டுபோய் ஒரு கட்டிடத்தின் உப்பரிகையின் உச்சியில் நிறுத்தினால் எப்படியிருந்திருக்கும்? ஆனால் அவர் கம்பீரமாக நின்று பதில் சொன்னார். அவர் பதிலைக் கேட்ட சாத்தானுக்கோ தலை சுற்றியது, கட்டிடத்தின் உச்சியில் நின்றதனால் அல்ல. சிலரை ஒரு பெண்ணால் பிடிக்கலாம், சிலரை பணத்தால் பிடிக்கலாம், சிலரை புகழால் பிடிக்கலாம் இவரையோ இப்படி எந்த கூட்டுக்குள்ளும் அடைக்கமுடியாது. சரி! மொத்த உலகத்தையும் பட்டாப் போட்டுக்கூடத் தருகிறேன் என்று சொல்லியும் கூட மசியவில்லை. மூன்று சோதனைகளின் மூலம் உலகம், மாம்சம் இவற்றில் ஏதேனும் ஒன்றாகிலும் அணுவளவாகிலும் அவருக்குள் இருக்கிறதா என்று சல்லடை போட்டு சலித்துப்பார்த்து வெறுங்கையனாகத் திரும்பினான். இயேசு இந்த உலகத்தின் அதிபதிக்கு என்னிடத்தில் ஒன்றும் இல்லை என்றார்(யோவா 14:30). அதோ! அவனும் அவருக்கு முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுந்து உமக்கும் எனக்கும் என்ன? என்றான் (மாற்கு 5:7)

கடந்த இரண்டு அத்தியாயங்களில் நாம் சிந்தித்தது போல உலகத்தார் சிக்கிய எந்த மாயையிலும் அவர் சிக்கவில்லை. ஏனென்றால் உலகத்தார் சிந்தித்தது போல அவர் சிந்திக்கவில்லை, பொருளைப் பயன்படுத்தினார் ஆனால் “பொருளை ஆதாரமாகச்” சார்ந்து கொள்ளவில்லை எனவே பொருளாதாரம் அவரைப் பாதிக்கவில்லை. மனிதரின் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் அலையலையாக மோதியும் அசையாத மலையாக நின்றார். பொருளாதாரத்தில் சாமானியராக இருந்தாலும் ஆத்துமத்தில் ஒரு சக்கரவர்த்தியாகவே வாழ்ந்தார். இப்படிப்பட்ட ஒரு வெற்றி வாழ்க்கை வாழ அவர் எந்த ஒரு வல்லமையையும் பரலோகத்திலிருந்து பொட்டலம் கட்டிக் கொண்டுவரவில்லை. தம்மைத்தாமே வெறுமையாக்கியன்றோ இந்த பூமிக்கு வந்தார். பின்னே எங்கிருந்து வந்தது ஆத்துமத்தில் இந்த யானைபலம்? ஆம், அவர் முற்றிலும் பிதாவைச் சார்ந்திருந்தார்.

அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்..(எபி 5:7-10)

நாமும் நமது பிள்ளைகளும் ஈவு இரக்கமின்றி நரகத்தில் தூக்கி வீசப்பட வேண்டியவர்களாயிருக்க, பிதாவாகிய தேவனோ அதைத் தடுத்து நிறுத்தும்படி நமக்காக தன் சொந்தக் குமாரனை பலியாக்க சித்தமானார். ஒருவேளை நீங்கள் குழந்தை பெற்றவராக இருந்தால் அதுவும் அந்த மகவு பாவமே அறியாததாக இருந்தால் ஊராரின் ஒட்டுமொத்த பாவத்தையும் அதன் தலையில் சுமத்தி கொடூர பலியாய் சாகும்படி கொடுக்க சம்மதிப்பீர்களா? அப்படிக் கொடுக்கும்போது கூட “ஏ அக்கிரமக்கார உலகமே! இதோ உங்களுக்காக என் ஒரே சொந்தப்பிள்ளையை காவுகொடுக்கிறேனே!!!” என்று முறுமுறுப்போடு கொடுக்காமல் தூதர்களை அனுப்பி நமக்கெல்லாம் வாழ்த்துக்களோடு அல்லவா கொடுத்தார்! (லூக்கா 2: 9-14). எத்தகைய மகோன்னத அன்பு!! ஆனால் அந்த விலைமதிப்பற்ற பரிசைக் கையில் வாங்கும் நாம் எப்பேற்பட்ட மனநிலையுள்ளவர்களாக இருக்க வேண்டும்? அவர் பூமிக்கு பாலகனாக பரிசளிக்கப்பட்ட நாளை நினைவுகூறும் அந்த நாளில் கூனிக் குறுகி “ஐயோ! ஆண்டவரே! பாதகன் என்னாலன்றோ இந்த நிலை!!” என்று நெஞ்சம்நிறைய நன்றியுடனும் வாய்நிறைய புலம்பலுடனுமல்லவா நினைவுகூற வேண்டும்! ஆனால் நாம் கேக்கும் பிரியாணியும் சாப்பிட்டு, புத்தாடை உடுத்தி டிவியில் புதுப்படம் பார்த்து அல்லவா கொண்டாடுகிறோம்? நமக்கு துக்கமுமில்லை, வெட்கமுமில்லை!

தேவன் முன்குறித்த ஒரு நாளில் இந்த உலகம் உருவாகக் கருவாயிருந்தவர் ஒரு கன்னியின் கர்ப்பத்தில் கருவாக உருவாக சம்மதித்தார். தம் அனுதின வாழ்க்கையில் எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டார். அவரிடத்தில் ஒரு மாசுமரு கண்டுபிடிக்கப்பட்டிருந்தால்கூட அவர் நமக்காக பலியாகும் தகுதியை இழந்திருப்பார். காரணம் பிதாவானவர் பழுதும், நசல்கொண்டதுமான பலியை ஏற்றுக்கொள்வதில்லையே. அவர் மரிக்கவே மனிதனானார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன், இப்பொழுதோ அந்த கொடூர மரணத்துக்குத் தகுதியான பழுதற்ற ஆட்டுக்குட்டியாய் இருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்மைப் மகாப்பரிசுத்தமாகக் காத்துக்கொண்டார். நம்மையோ “என்னுடன் உன்னை சிங்காசனத்தில் அமர வைக்கிறேன், என்னோடு அரசாளுவாய்! ஆகவே பரிசுத்தமாக உன்னைக் காத்துக்கொள்!” என்று வாக்குப்பண்ணியும் கூட நமக்கு சிற்றின்பங்களை விட்டொழிக்க மனமில்லை.

தனது திருமுழுக்கின்போது பிதாவானவர் வானத்தைத்திறந்து “இவர் என் நேசகுமாரன், இவரின் நான் பிரியமாய் இருக்கிறேன்!” என்று அவரை பலிக்குத் தகுதியுள்ள பழுதற்ற ஆட்டுக்குட்டிதான் என்று அங்கீகரித்த வேளையில் அவர் ஆசாரியனாகக்கூட இல்லை, வெறும் ஆசாரியாகத்தான் இருந்தார். அதற்கு முன்பும் கூட ஒரு அற்புதமும் நிகழ்த்தியிருந்ததாக வேதத்தில் இல்லை. ஆனால் பழுதற்ற ஆட்டுக்குட்டியாகத் தன்னைக் காத்துக்கொள்வதில் இமாலய வெற்றிபெற்றிருந்தார். அப்படிப்பட்டவரிடம்தான் சிலர் வாதாடினார்கள் “நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று (மத் 21:23). இதுவே இந்நேரம் நானாக இருந்திருந்தால் கேட்டவன் கன்னம் பழுத்திருக்கும் “செத்துத் தொலையுங்கள் என்று கைவிடாமல் எல்லாவற்றையும் துறந்து இம்மட்டும் உங்களுக்காக இறங்கி வந்தேனே! இதுவும் கேட்பாய் இன்னமும் கேட்பாய்!” என்று சீறியிருந்திருப்பேன். அவரோ அவர்களிடம் அவ்வளவு நிதானமாக பதில் சொன்னார். பேதுரு அவரை சிலுவைப் பாடுகளுக்குள் போகவிடாமல் அன்பாகத் கடிந்துகொண்டபோது நானாக இருந்திருந்திருந்தால் அந்த சீஷனின் அன்பு மழையில் நனைந்து அவனை உச்சிமுகர்ந்து “என் சமர்த்துக்குட்டி” என்று பாராட்டியிருந்திருப்பேன். ஆனால் அவரோ சற்றும் முகதாட்சிணியமின்றி “பின்னாகப்போ சாத்தானே!” என்று வார்த்தையால் விளாசினார்.

அவர் உடலாலும் உணர்வுகளாலும் நம்மைபோலத்தான் இருந்தார் ஆனால் அவர் வாழ்ந்த வாழ்க்கையோ நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. இயேசுவைப் பார்த்துவிட்டு என்னையும் என்னைச்சுற்றியுள்ள உலகத்தையும் பார்த்தால் நாம் எல்லோருமே படத்திலுள்ள மனிதனைப்போல தலைகீழாக நடப்பதுபோலத்தான் தெரிகிறது.

தலைகீழாய்ப் பிறந்தோம் தலைகீழாகவே நடக்கிறோம்., அவர் ஏன் குழந்தையாகப் பிறந்தார் என்று எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது, இயேசு இந்த பூமிக்கு வந்தது பாவப்பரிகாரம் மாத்திரமே செய்வதாக இருந்திருந்தால் அவர் ஆதாமைப் போல இளைஞனாகவே வந்து ஒரே நாளில் சிலுவைக்குச் சென்று தனது பரிகாரத்தை முடித்துச் சென்றிருக்கலாமே!. அவர் குழந்தையாகப் பிறந்து 33.6 ஆண்டு காலம் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து ”நேராக நடப்பதென்றால் என்ன?” என்று உலகுக்குக் காட்டவேண்டியது அவசியமாயிருந்திருக்கிறது. நேராக நடந்த அவரைப் பார்க்கையில்தான் நாம் தலைகீழாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே நமக்கு உறைக்கிறது. ஆனால் ஒன்றுமட்டும் உறுதி, இனி ஒருவனுக்கும் போக்குச் சொல்ல இடமில்லை.

இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது. ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால், தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று; (1பேதுரு 2:6,7). ஆம் இன்று தன்னை சாதுவென்றும், சன்மார்க்கனென்றும், மகானென்றும் சொல்லுகிறவன் இயேசுவின் வாழ்க்கையோடு ஒப்பிடப்படும்போது இடறி தலைகுப்புற விழுகிறான். தாகோன் தனியாக கருவறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் வரைதான் அதன் மகிமைக்கு மரியாதை. அதற்கு எதிரே உடன்படிக்கைப்பெட்டி வைக்கப்படும் நாளிலோ தாகோனின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுவது உறுதி!! (1 சாமு 5)

ஆனாலும் இன்னும் தாங்கள் நேராகத்தான் நடந்துகொண்டிருப்பதாக நம்பும் சிலர் தங்களது தலைகீழ் நிலையிலிருந்து நேராய் நிற்கும் அவரைப் பார்க்கிறார்கள் ஆகவே அவர்களது  கொழுப்பெடுத்த அகங்காரக் கண்களுக்கு இயேசு தலைகீழாய்த் தெரிகிறார். அவரைப்போலவே மாற்றப்படும் அவரது பிள்ளைகளும் அவர்களுக்கு தலைகீழாய்த் தெரிகிறார்கள். உலகத்தார் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்? நீங்கள் அவர்கள் கண்களுக்கு வித்தியாசமாய்ப் படுகிறீர்களா? உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. (யோவான் 15:18,19).

பாவப்பரிகாரம் செய்வது மாத்திரமல்ல சுயத்தையும், பணத்தையும் மையமாகக் கொண்ட தலைகீழான வாழ்க்கையை தேவனை மையமாகக் கொண்ட நேரான வாழ்க்கையாக மாற்றவே இயேசு இந்த பூமிக்கு மனிதனாக வந்தார். கீழ்க்கண்ட இரு வசனங்களையும் வாசியுங்கள்:

அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (கலா 1:4)

பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம். (2கொரி 5:15)

நாம் அப்படிப்பட்ட மகிமையான வாழ்க்கை வாழும்போது நம் நோக்கம் சாலமோன் சொன்னதுப்போல ”இதோ உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே இவன் பங்கு. (பிர 5:18,19)” என்பதுபோல நம் வாழ்க்கை அற்பமாக நிறைவடையாது என்பது திண்ணம்.

இனி மாயை நம்மை ஆளுகை செய்ய முடியாது நாம் உன்னதமான தேவனுடைய மகன்/மகள் என்ற ஸ்தானத்துக்கு அழைக்கப் பட்டிருக்கிறோம். நமக்கு கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகள் வாக்குப்பண்ணப்பட்டிருக்கின்றன (கொலோ 3:1). அவரோடேகூட ஆளுகையும் செய்யும் பாக்கியம் அருளப்பட்டிருக்கிறது (2 தீமோ 2:12 ). தேவதூதர்கள் பெற ஏங்கும் மிகமிக உன்னத ஸ்தானங்களைப் ஆசீர்வாதமாகப் பெற்றுக்கொள்வதற்கான மாபெரும் பந்தயக்களம் திறந்துவிடப்பட்டிருக்கிறது. நாம் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். (1 கொரி 9:24). அவருக்கு ஒப்பாக மாறும் மனுக்குலம் கனவில் கூட நினைத்துப்பார்க்கமுடியாத மேன்மை நமக்குக் காத்திருக்கிறது. நம் இலட்சியம் அதுதான்! இனி நாம் சுவாசிப்பதும், உண்பதும், ஓடுவதும் அதற்காகத்தான்! அதற்காக மாத்திரம்தான்!

ஒரு வாழ்க்கை!… ஒரே ஒரு வாழ்க்கை!!!

”ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ…(வெளி 3:5)” என்ற சவாலின் தொனி உங்கள் காதுகளில் தொனிக்கிறதா?

(முற்றும்)

Leave a Reply