சுவிசேஷத்தின் மையம் தேவனா, மனிதனா?

இக்காலத்தில் அறிவிக்கப்படும் சுவிசேஷம் தேவனை மையமாகக் கொண்டதாக இல்லாமல், மனிதனை மையமாகக் கொண்டதாக இருக்கிறது என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. நிச்சயமாக சுவிசேஷமானது தேவனை மையமாகக் கொண்டதாகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால் அந்த தேவன் எப்படிப்பட்டவர்?

தேவன் மிகுந்த பேரன்போடு மனிதனை சிருஷ்டித்தார், அவன் அவரைவிட்டு விலகியபோதும் அவனை நேசித்து ஒரு மீட்பின் திட்டத்தை உண்டு பண்ணினார். திரித்துவத்தில் இரண்டாமானவராகிய குமாரன் தனது சகல மகிமைகளையும் துறந்து தம்மைத் தாமே வெறுமையாக்கி மனிதனுக்காக இந்த பூமியில் வந்து, அவனுக்காக கோரமாக பலியாகி, அந்த தழும்புகளை சுமந்த மனித சரீரத்துடனேயே உயிர்தெழுந்து, இன்றும் பிதாவின் வலது பாரிசத்தில் மனிதனுக்காக மன்றாடிக் கொண்டிருக்கிறார்.

திரித்துவத்தின் மூன்றாமானவராகிய பரிசுத்த ஆவியானவர் அந்த மனிதனின் சரீரத்தையே ஆலயமாக்கி அதில் வாசமாய் இருக்கிறார். திரித்துவ தேவன் மனிதனை அளவில்லாமல் நேசிக்கிறார். அவர் எந்த சூழ்நிலையிலும் மனிதனின் பட்சத்திலேயேதான் நிற்கிறார். அவர் பூமியில் செய்யும் அத்தனை செயல்களும் அவர் மனிதன் மீது வைத்த அளப்பறிய பேரன்பையே வெளிப்படுத்துகிறது. அவர் மனிதனுடைய பலவீனங்களுக்காக பரிதபிக்கிறவர், அவனை கரிசனையாய் விசாரிக்கிறவர். அவனது வாழ்வுக்காக தாமே மரணத்தை ருசித்தவர்.

“இப்படிப்பட்ட தேவனை” மையமாகக் கொண்ட சுவிசேஷத்தைத்தான் நாம் அறிவிக்க வேண்டும். ஏனெனில் இப்படிப்பட்ட தேவனைத்தான் வேதம் நமக்குக் காட்டுகிறது.

சுவிசேஷத்துக்கு தேவன் முக்கியம், தேவனுக்கு மனிதன் முக்கியம்!

ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com

Leave a Reply