சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்…

பகுதி-1

 

முள்ளும் புதரும் காடும் மலையும்
உள்ளம் உடைந்தே இயேசு தேடுகின்றார்
சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்
சாத்தான் வலையில் நீ சிறையாகினாய்…

இந்த அருமையான பழைய தமிழ்ப்பாடல் சிற்றின்ப சேற்றினில் சிக்கி சிறையாகிப்போன ஆத்துமாக்களை கண்ணீரோடு கர்த்தரண்டை அழைக்கிறது. இன்று திருச்சபைக்குள்ளேயே கண்களின் இச்சையாலும் மாம்சத்தின் இச்சையாலும் அடிமைப்படுத்தப்பட்டு யாரிடமும் வெளிப்படையாகச் சொல்லி உதவி கேட்க முடியாமலும் எதிர் நின்று போராட வழியறியாமலும் உள்ளுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் எத்தனை பேர்! தொடர்தோல்விகள் பலருக்கு துணிகரத்தைத் தந்துவிட்டது, பாலுணர்ச்சிப் பாவத்தை ஜெயிக்க முடியவில்லை தப்பி ஓடவும் வழியில்லை எனவே அந்தரங்கத்தில் பாவ தோஷத்தோடும் வெளிப்புறத்தில் பரிசுத்த வேஷத்தோடும் பல விசுவாசிகள், சில ஊழியக்காரர்களுங்கூட வாழப் பழகி விட்டனர்.

சமீபத்தில் சென்னையிலிருந்து சேகரித்த சில விஷயங்கள் என்னை வேதனையின் உச்சிக்குக் கொண்டு சென்றது. பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்யும் ஈனச்செயலில் சில சகோதரர்களும் (வயதான விசுவாசிகள் உட்பட) ஈடுபடுவதைக் கண்ணால் கண்ட சாட்சிகள் கூறக் கேள்விப்பட்டு கூனிக் குறுகிப்போனேன். எங்கே போகிறது கிறிஸ்தவம்? ஏன் இந்த அவலம்? தேவனுக்கும் பயப்படவில்லை சரி, ஆனால் சகவிசுவாசி யாராவது பார்த்துவிட்டால் எப்படி வரும் ஞாயிறன்று அவர் முகத்தில் விழிப்பது என்ற பயமும் கூட இல்லாமல் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடும் துணிகரம் எப்படி வந்தது?

பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லை என்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகல(பேருந்துகளுக்குள்ளும்) மரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய். நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன? (எரே 2:20,21) என்ற ஆண்டவரின் கதறல் இவர்கள் காதுகளில் விழவில்லையா? இப்படிப்பட்டவர்களை என்ன செய்யலாம்?

சவுக்கை எடுத்து விளாசலாமா?… ஆனால் சவுக்கை உருவும் முன்னரே கண்ணீரோடு தங்கள் முதுகைக் காட்டி “நான் பாவிதான்! என்னை அடியுங்கள். கோபம் தீர அடித்துவிட்டாவது இந்தப் பாழும் பாவத்திலிருந்து விடுபட்டு ஆண்டவருக்காக வாழ வழி சொல்லுங்கள் என்று கண்ணீரோடு வரிசையில் நிற்கும் சகோதர சகோதரிகளுக்கு பதில் தரத்தக்க ஜெயங்கொண்ட யோசேப்புக்கள் எங்கே?? அன்று மாம்சஇச்சைப் பரீட்சையில் போத்திபாரின் மனைவியை வென்றான் அந்தப் பழைய ஏற்பாட்டுக்காரன். இன்று போத்திபாரின் மனைவிகளிடமல்ல போஸ்டர்களிடம் கூடத் தோற்றுக்கொண்டிருக்கும் புதிய ஏற்பாட்டுப் பிள்ளைகளின் பரிதாபத்தை என்ன சொல்லுவது? இவர்கள் நியாயம் தீர்க்கப்பட வேண்டியவர்களா? தண்டிக்கப்பட வேண்டியவர்களா? இல்லை… இல்லவே இல்லை எச்சரிக்கப்பட்டு வழிநடத்தப்பட வேண்டியவர்கள்.

சபைகளின் பரிசுத்தம் சந்தி சிரிக்கும் முன் நாம் ஒன்றிணைந்து போராடி இந்தப் பாவக் கன்மலையை மோதி உடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தியாவில் சுவிஷேசத்துக்கு விரோதமாகப் போர்தொடுத்து வந்த சில இயக்கங்கள் தற்பொழுது ஒரு புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறிந்தேன். சபைகளைக் கொளுத்திப் பார்த்தார்கள், வேதத்தைக் கிழித்துப் போட்டார்கள், கன்னியாஸ்திரிகளைக் கெடுத்துக் கொன்றார்கள், மிஷினரிகளை அவர்கள் பிள்ளைகளோடு சேர்த்துக் கொளுத்தியும் மகிழ்ந்தார்கள் ஆனாலும் சுவிசேஷத்திடம் அவர்கள் பப்பு வேகவில்லை. ஆகவே இஸ்ரவேலை சபிக்க பிலேயாம்களைக் கூலிக்கு அழைத்திருக்கிறார்கள்.

அழகான பெண்களையும், ஆண்களையும் ஊடுறுவச் செய்திருக்கிறார்கள் சபை விசுவாசிகளை முடிந்தால் சபைத்தலைவர்களையும் விபச்சாரப் பாவத்தில் தள்ள…

போதகர்களே! மேய்ப்பர்களே! மூப்பர்களே!

ஜாக்கிரதை! ஜாக்கிரதை! ஜாக்கிரதை! எண்ணாகமம் 25 திரும்புகிறது! சத்துரு தனக்கு பயன் தரும் வழிமுறையை கையாளத் தொடங்கிவிட்டான். நீங்கள் எழுப்பப் போகும் இந்த முழக்கம் உங்கள் விசுவாசிகளின் செவிப்பறையைக் கிழிக்கட்டும்…

”வேசித்தனத்துக்கு விலகி ஓடு (1கொரி 6:18)….”

இதோ! மகிமையின் கூடாரங்களுக்குள் மோவாபிய அழகிகள் அணிவகுத்து வருகிறார்கள். அவர்களிடம் சிம்ரிக்கள் சிறைப்பட்டு மகாப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வாதை கிளம்பும் முன் சகோதரனே! சகோதரியே! வார்த்தை எனும் குத்தீட்டி ஓங்கி பினெகாஸின் வைராக்கியம் காட்ட எழுந்து வா! தூய ஆவியானவரின் மனக்காயம் ஆற்ற விரைந்து வா! (எண்ணாகமம் 25)

நான் மிகவும் மதிக்கும் ஒரு ஊழியர் தனது செய்தியில் சொன்ன ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் தனது விமானப் பயணம் ஒன்றின் போது தனக்கு அருகில் அமர்ந்து இருந்தவரிடம் பேசிக்கொண்டு வந்திருக்கிறார். அவரோடு சில உணவுப் பொருட்களை இவர் பகிர்ந்துகொள்ள விரும்பியபோது அந்த நபர் தான் உபவாசம் இருப்பதாகக் கூறி மறுத்திருக்கிறார்.

உடனே ஊழியக்காரர் இவரும் கிறிஸ்தவர்தான் என்று நினைத்து நீங்கள் எந்த சபைக்குச் செல்லுகிறீர்கள் என்று கேட்க அந்த நபர் சொன்ன பதில் “சாத்தான் சபை” என்பதாகும். இவர் அதிர்ச்சி அடைந்தவராய் என்ன காரணத்துக்காக உபவாசம் இருக்கிறீர்கள்? என்று கேட்ட போது இவர் தேவமனிதர் என்பதை அறியாத அந்த மனிதன் சொன்ன பதில்:

”நாங்கள் இரண்டு ஜெபக் குறிப்புகளுக்காக சாத்தானிடம் தொடர்ந்து உபவாசமிருந்து ஜெபிக்கிறோம். முதலாவது கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் விபச்சாரப் பாவத்தில் விழ வேண்டும் அடுத்தது கிறிஸ்தவக் குடும்பங்கள் உடைய வேண்டும்” சாத்தான் எவ்வளவு தந்திரமாக தனது ஆட்களை வைத்துக் காய் நகர்த்தி வருகிறான். நாமோ தூங்காத தேவனின் (சங் 121:4) தூங்குமூஞ்சிப் பிள்ளைகளாய் இருக்கிறோம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் சாத்தான் சபையின் ஆராதனையின் போது எடுக்கப்பட்டு ஒரு விசுவாசியால் வெளி உலகத்துக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு வீடியோவைக் காண நேரிட்டது. அந்த ஆராதனையை நடத்தியவனும் சாத்தான் சபையை நிறுவியவனுமான ஆண்டன் லீவி என்பவன் அந்த ஆராதனையின் முடிவில் தனது இரு கைகளையும் உயர்த்திச் சொன்ன ஆசீர்வாதம்(!?) என்ன தெரியுமா?

May Lust Rule over the World (உலகத்தை இச்சை ஆண்டு கொள்ளட்டும்) என்பதாகும். இதைச் சபையார் யாவரும் திருப்பிச் சொன்னார்கள். தலைவலி சுகமாக வேண்டும், இடுப்புவலி சுகமாக வேண்டும், சொந்தக் கார் வேண்டும், முதலாளி மனமிரங்கி போனஸ் கொடுக்க வேண்டும், மகளுக்கு அமெரிக்க சாஃப்ட்வேர் மாப்பிள்ளை வேண்டும் என்று முட்டி முட்டி ஜெபித்துக் கொண்டிருக்கிறவர்களே!! உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள். சத்துரு உங்கள் அப்பா வீட்டின் அஸ்திபாரத்தை ஆட்டிக் கொண்டிருக்கிறான். அவர் திறப்பில் நின்று சுவரை அடைக்கும் உத்திரவாதமுள்ள மனிதனை சபை சபையாக, வீடு வீடாகத் தேடிக்கொண்டிருக்கிறார். நீங்களோ தலையில் கைவைத்து ஆறுதலாய்த் தீர்க்கதரிசனம் சொல்லும் குறிகாரர் ஒருவர் கிடைக்கமாட்டாரா என்று சபை சபையாய், கன்வென்ஷன் கன்வென்ஷனாய் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.

ஒருகாலத்தில் தீயாய் தீரராய் இருந்த தேவப்பிள்ளைகள் இன்று தியத்தீரராய் (வெளி 2: 18-23) யெசபேலின் முந்தானைக்குள் அடங்கிப் போன மாயம் என்ன?

காரணம் #1:

நவீன சுவிசேஷத்தால் தேவபயம் அற்றுப் போயிற்று:

இன்றைய சபைகளுக்குள் விபச்சாரப்பாவம் நுழைந்து ஆத்துமாக்களைக் கொள்ளை கொள்ளையாக அள்ளக் காரணம் பிரசங்க பீடத்தில் அக்கினி பற்றி எரியாததே! அன்று ஜான் வெஸ்லிகளும் சார்லஸ் பின்னிகளும் நின்ற பிரசங்கப் பீடங்களில் கனன்ற நெருப்பு பாவிகளைக் கவ்விப் பிடித்துப் பட்சித்துப் போட்டது. ஐயோ, நான் பாவி! தேவனே எனக்கு இரங்கும்! என அழுது உருண்டார்கள். அவர்களது மனந்திரும்புதல் எவ்வளவு ஆழமாய் இருந்ததோ அவ்வளவாய் அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையும் பிரகாசித்தது. இன்றோ சுவிசேஷத்துக்கும் ஆம்வே விளம்பரங்களுக்கும் வித்தியாசமே தெரியவில்லை. ஏதோ இன்சூரன்சில் பாலிசி எடுப்பது போல கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுகிறார்கள். இவர்கள் மனந்திரும்புதலில் ஆழம் இல்லை ஆகவேதான் இவர்கள் பரிசுத்த வாழ்க்கையும் பல் இளிக்கிறது.

இயேசுவைப் பிரசங்கிப்பவர்கள் இயேசுவைப் போன்ற நரகப் பிரசங்கிகளாய் இல்லை. பாவத்தின் கொடூரமோ, நரகத்தின் பயங்கரமோ, தேவனுடைய பட்சிக்கும் உக்கிரமோ இன்றைய Name it Claim it விசுவாசிகளுக்குத் தெரிவதில்லை. கல்வாரியின் மேன்மையைப் பிரசங்கிப்பது அற்றுப் போயிற்று. கல்வாரி என்றவுடன் அநேகப் பிரசங்கியார்களுக்கும் விசுவாசிகளுக்கும் “தழும்புகளால் வியாதி சுகமாவது” மட்டுமே நினைவில் இருக்கிறது.

காரணம் #2:

வெற்றி பெறும் வழிகள் கற்றுத் தரப்படுவதில்லை:

கடைசியாக உங்கள் சபையில் அசுத்த இச்சைகளை மேற்கொள்ளுவது எப்படி என்ற பிரசங்கத்தை எப்பொழுது கேட்டீர்கள்? ஒருவேளை இருபாலருக்கும் சேர்த்துப் போதிப்பது ஆகாததாய்ப் பட்டால் ஆண்களுக்கு போதகர் மூலமும் பெண்களுக்கு ஒரு அனுபவமிக்க மூத்த சகோதரி மூலமும் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்ட சரித்திரமுண்டா???

பாவம் செய்யாதே, இச்சிக்காதே,  என்றெல்லாம் அடிக்கடி போதகங்களைக் கேட்டிருப்பீர்கள். நான் அதைக் கேட்கவில்லை. அவைகளை ஜெயிப்பது எப்படி(HOW?) என்ற நடைமுறை ரீதியிலான பிரசங்கங்களை, செமினார்களைக் கேட்டு இருக்கிறீர்களா? இல்லையென்றால் உங்கள் சபையாரெல்லாரும் இந்தப் பாவத்தை ஏற்கனவே வென்று வெற்றிக் கொடிநாட்டி விட்டீர்களா? அல்லது இதைக் குறித்த பிரசங்கங்களே தேவைப்படாத அளவுக்கு நீங்கள் எல்லோரும் உன்னதங்களில் வாசம் செய்கிறீர்களா? பின்னை ஏன் உங்கள் சபையில் இது குறித்த பிரசங்கங்கள் இல்லை மாறாக எப்பொழுதும் உலக ஆசீர்வாதங்களைக் குறித்தே பேசக் கேட்கிறீர்கள்?

வேதத்தில் இந்தப் பாவத்தை மேற்கொள்ளுவதற்கான வழி கற்றுத் தரப்படவில்லையா? கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்? (எரே 8:22)

நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.(ரோமர் 6:14) என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் நம்மைப் பாவம் மேற்கொள்ளுகிறதே. அப்படியானால் நாம் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கவில்லை என்றே அர்த்தமாகிறது அல்லவா? அப்படியானால் கிருபைக்குக் கீழ்ப்படுவது எப்படி????? தசமபாகத்தைப் பற்றிப் பேசினால் மட்டும் ஆயிரெத்தெட்டு வியாக்கியானங்கள் கொடுக்கத் தெரிந்த விசுவாசிகளிடம் இந்தக் கேள்விக்கான பதில் இருக்கிறதா? இருக்காது ஏனென்றால் எதைக் குறித்து அதிகமான பிரசங்கங்களைக் கேட்கிறோமோ அதை குறித்தே அதிகம் அறிந்து வைத்திருப்போம். நமது பிரச்சனை என்னவென்றால் தேவையானவைகளைப் பற்றி மிகக் குறைவாகவும் தேவையற்றவற்றைப் பற்றி மிக அதிகமாகவும் பிரசங்கங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதிருக்கட்டும் நீங்களே உங்கள் வேதத்தை எடுத்து ஜெபத்தோடு உட்காந்து தியானித்து இருக்கிறீர்களா? நம் கையில் நமது சொந்தமொழி வேதாகமம் இருக்கிறது. கற்றுக்கொடுக்க பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். உங்களுக்கு ஒருவரும் போதிக்க வேண்டுவதில்லை என்று வேதம் வாக்குப் பண்ணியிருக்கிறதே! (1யோவா 2:27) பின்னே ஏன் இதுவரைக் கற்றுக் கொள்ளவில்லை? ஏனெனில் யாரோ ஒரு வரம் பெற்ற ஊழியக்காரர்  பத்தாயிரம் வாட்ஸ் பவரோடு வந்து என் தலையில் ஒருநாள் கைவைப்பார் நான் ’பொத்’ என்று விழுந்து தேவ வல்லமையைப் பெற்றுக் கொள்ளுவேன். அத்தோடு இந்தப் பாவக்கட்டு உடைக்கப்படும் என்று நான் ஒரு காலத்தில் காத்துக் கிடந்தது போலவே நீங்களும் காத்துக் கிடக்கிறீர்கள் (பாம்பின் கால் பாம்பறியும் என்று தமிழில் ஒரு நல்ல பழமொழி உண்டு). நாம் அப்படி விசுவாசிக்க இன்றைய கிறிஸ்தவத்தால் பழக்குவிக்கப் பட்டிருக்கிறோம். ஆனால் அப்படி ஒரு போதும் நடக்கப் போவதில்லை. ஏனெனில் இந்தப் பாவத்தை தோற்கடிப்பதற்காக வேதம் போதிக்கும் வழி இதுவல்ல.

வேதம் போதிக்கும் வழிகளைக் குறித்தும் நாங்கள் கண்டறிந்து அப்பியாசப்படுத்தி மேற்க்கொண்டுவரும் விதத்தைக் குறித்தும் அடுத்த அத்தியாயத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இந்தப் பாவத்தில் பரிபூரண வெற்றியடைந்து விட்டோம் என்று பிரகடனப்படுத்தவில்லை. இதில் வெற்றி என்பது ஒரு நாளில் வருவதல்ல. போராட்டமானது சாகும்வரை உண்டு. ஆனால் சத்தியம் எனும் உளி கொண்டு, சத்திய ஆவி துணை கொண்டு  மலையைப் பெயர்க்கத் தொடங்கி விட்டோம். அந்த மலை சமபூமியாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அடுத்த கட்டுரை அநேகருக்கு பயனுள்ளதாய் அமைய தயவு செய்து ஜெபித்துக் கொள்ளுங்கள். நீங்களும் உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். வேதத்துக்குட்பட்டதாய்த் தோன்றும் ஆலோசனைகளும் அனுபவங்களும் மறுமொழிகள் பகுதியில் கண்டிப்பாக பிரசுரிக்கப் படும்.

காரணம் #3:

இயேசுவில் திருப்தி அடையவில்லை:

 திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான் (நீதி 27:7)

பாவம் தேன் போன்ற தித்திப்பானதுதான். திருட்டுத் தண்ணீர் தித்திக்கும்(நீதி 9:17) என்பது யாவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய ஒன்றே. ஆனால் இயேசுவிடம் திருப்தி கண்டவனே இந்தத் தேன்கூட்டை சீ! என்று மிதித்துத் தள்ளமுடியும். கிறிஸ்துவின் அன்பில் அவரது உறவில் மூழ்கித் திளைக்கும் விசுவாசி இந்தப் பாவத்தை நரகலைப் பார்ப்பது போல அருவெறுப்பாய்ப் பார்ப்பான். அவன்/அவள் எதிர்பாலரைப் பார்க்கும் பார்வையே வித்தியாசப்படும்.

 ஆனால் இளைப்பாறுதலையும், மனமகிழ்ச்சியையும் இயேசுவிடம் தேடாமல் உலகத்தில் தேடிக் கொண்டிருக்கும் விசுவாசியோ எளிதில் பிசாசு விரித்த வலையில் விழுந்து விடுவான்.

 தேன் போல தித்திக்கும் முடிவில் விரியன் போல தீண்டும்

இந்தப் பாவத்தில் பிசாசின் மோசமான தந்திரம் என்னவென்றால் இது அவ்வளவு ஆபத்தானதல்ல என்று நம்மை நம்ப வைத்து விடுவான். ஆனால் இது நம்மை நரகத்துக்கு அனுப்பி விடக்கூடியது என்று வேதம் எச்சரிக்கிறது. நரகத்துக்குப் போவது கொடியதுதான் ஆனால் ஆவியானவரை துக்கப்படுத்துவது அதை விடக் கொடியதல்லவா?

இச்சையைப் பொறுத்தமட்டில் சரீரத்தில் செய்யப்பட்டாலும் இருதயத்தில் சிந்திக்கப் பட்டாலும் தேவன் பார்வையில் யாவும் ஒன்றே! நானும்கூட ஜெயத்துக்கான வழிகள் எங்கேனும் கற்றுத்தரப்படுகின்றனவா என்று ஆவலோடு இணையதளங்களில் தேடிய காலங்கள் உண்டு. தேவனே! என் இருதயத்தை சுத்திகரியும் என்று இராமுழுவதும் அழுது கண்ணீரால் தலையணையை நனைத்த அனுபவங்கள் உண்டு. நீங்களும் கூட இப்படிப்பட்ட அனுபவங்களுக்குள் இருக்கக்கூடும். உங்களுக்கு இந்த அடிமை சொல்லும் ஒரு ஆறுதலான விஷயம். நீங்கள் போராடி விழுந்து விடும்போது அவர் உங்கள் மீது எரிச்சல்பட்டு உங்களை நியாயந்தீர்க்கிறவர் அல்ல. மாறாக உங்களை தூக்கி நிறுத்தி உற்சாகப்படுத்தி “மகனே/மகளே! சோர்ந்து போகாதே, நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்(நீதி24:16), ஓட்டத்தைத் தொடர்ந்து ஓடு நான் உன்னுடனே கூட இருக்கிறேன். என்று உற்சாகப் படுத்துவார். போராடும் பிள்ளைகள் தேவனுக்குப் பிரியமான பிள்ளைகள்.

ஆனால் பாவத்தோடு போராடாமல் அந்தரங்கத்தில் திருட்டுத் தண்ணீரைப் பருகிக்கொண்டு அதன் ருசியில் லயித்திருக்கும் விசுவாசியே! இப்படியே வீட்டையும் சபையையும் ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து விடலாம் என்று கனவு காணாதே. கர்த்தரின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் (எபி 4:13)

உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி (பிர 11:9)

தேவன் எதையும் பார்க்காமலும் இல்லை, கண்டும் காணாமல் விடுவதுமில்லை. அவர் சிட்சையின் பிரம்பை எடுக்கும் முன் தாழ்மையாய் அவர் பாதத்தில் விழுந்து. ஆண்டவரே நிர்ப்பந்தமான மனுஷன் நான்! என் மேல் கிருபையாயிரும், என்னை மன்னியும் எனக்கு உதவி செய்யும் என கெஞ்சுவதே சாலச் சிறந்ததது.

பரஸ்திரீயின் (இங்கே பரஸ்திரீ என்பது இச்சை சம்பந்தப்பட்ட சகல பாவங்களையும் குறிக்கும்) உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும். அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும். அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.

 நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக்கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது. ஆதலால் பிள்ளைகளே, இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு நீங்காதிருங்கள்.உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச் சேராதே.சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.

 அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின்பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும். முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து: ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே! சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய் (நீதி 5:3-14)

 பிரியமானவனே! அவளின் (இச்சையின்) விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்கள் என்று அறியாமல் இருக்கிறாய்.(நீதி 9:18). உன் இருதயம் இச்சையின் வழியிலே சாயவேண்டாம்; அதன் பாதையிலே மயங்கித் திரியாதே. அது அநேக விசுவாசிகளையும் ஊழியக்காரரையும் காயப்படுத்தி, விழப்பண்ணியிருக்கிறது; அது பாதாளத்துக்குப்போம் வழி; மரண அறைகளுக்குக்குள் உன் ஆத்துமாவைக் கொண்டுபோய்விடும்.(நீதி 7:15-27)

மீண்டும் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்பொம்!

23 thoughts on “சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்…”

  1. Nice article. I would like to give you a suggestion, you can share your thoughts and messages without criticizing anyone. I had read your previous article also, i hope you will take this in right way. Dont emphasize more on negative issues rather you can be more positive.

    i too agree with you, our churches lack in teaching people about victorious life. They will teach more on sin but not how to overcome sin. If they know who they are in Christ then they can live victoriously. As Paul says nothing good dwells in our flesh. consisent in prayer and fellowship with Jesus and bible reading only will keep us away from the sin.

    you are doing a great job. i appreciate your burden. May God use you mightly for His kingdom. We assure our prayers.

    1. அன்பு சகோதரிக்கு,

      தங்கள் வருகைக்கும் கமெண்டுக்கும், மிக்க நன்றி. நாம் இருவரும் ஒன்றாய்ப் படித்த நண்பர்கள் என்பதால் உரிமையோடு ஆலோசனை கூறியிருக்கிறீர்கள். ஆம், அந்த உரிமையும் தங்களுக்கு நிச்சயமாக உண்டு. தங்கள் ஜெபத்துக்கும் மிக்க நன்றி.

      யாரையும் குற்றப்படுத்தாமல் எழுதும்படி கேட்டிருந்தீர்கள், அப்படி எழுத எனக்கும் ஆசைதான். குற்றங்களைக் காணாமல் கண்களை மூடிக்கொண்டு நேர்மறையாகப் பேசும் ஊழியர்களால்தான் இன்றைய சபைகளும் சுவிசேஷ மேடைகளும் நிறைந்திருக்கிறது ஆனால் விளைவு என்ன? இன்றைய கிறிஸ்தவமோ தேவனுக்கு நேர்மறையாக இல்லையே! நம்மைக் குறித்து பிறமதத்தினர் கூறும் சாட்சி என்ன? ”உலகத்தைக் கலக்குகிறவர்கள்” என்ற பெயர் நமக்கு இன்னும் இருக்கிறதா? உலகத்தால் கலங்கினவர்களாகவன்றோ இருக்கிறோம்? தேவனை அசட்டை செய்து உலகப்பொருளை நேசிக்கும் இந்தத் தலைமுறைத் தலைவர்களிடம் நேர்மறையாகப் பேச என்ன இருக்கிறது? சிநேகிதரைக் குற்றப்படுத்த மனமில்லைதான், ஆனால் ’ஆத்தும நேசர்’ சிநேகிதர் வீட்டிலன்றோ காயப்படுத்தப்பட்டிருக்கிறார்.

      ஒருகாலத்தில் தேவனால் அபிஷேகிக்கப்பட்டு சபைக்குத் தீர்க்கதரிசிகளாய் நியமிக்கப்பட்டவர்கள் இன்று காணாமல் போய்விட்டதால், அந்தத் தீர்க்கதரிசிகள் எங்கே என்று தேடித்தேடிப் பார்த்து அலுத்துப்போன தேவன் என்னைப் போன்ற உதவாக்கரைகளையெல்லாம் பயன்படுத்த வேண்டியதாகி விட்டது. ”கலங்காதே திகையாதே” பிரசங்கம் செய்தால் கனமும் கரன்சிகளும் வரும், ஆனால் என் எழுத்துக்களுக்கு கல்லெறிதான் விழும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் என்ன செய்ய? சமாதானமில்லாதிருந்தும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, கர்த்தரின் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்க மனதில்லை (எரே 8:11). பரிசேயர்களோடு போராடாத கிறிஸ்துவையும், கள்ளப்போதகரோடு களமாடாத பவுலையும் தங்களால் நினைத்துப் பார்க்க இயலுமா? நேர்மறையாகப் பேசுவதே பலன் தரும் என்றால் மத்தேயு 23 என்னத்திற்கு? கள்ளப்போதகரோடு குரு மூர்க்கமாக மோதியிருக்க சீஷன் மட்டும் அவர்களைக் கண்டு ஒதுங்கிப் போவதெப்படி? இந்தக் கடைசிகாலத்தில் சபைக்கு எழுப்புதல் வேண்டுமென்றால் ஒரு யுத்தம் நடத்தியே ஆகவேண்டும், வெளியில் இருப்பவர்களுடன் அல்ல, சபையைக் கெடுக்கும் ஓநாய்களுடன்! சபை சுத்திகரிக்கப்பட்டால் உலகம் தன்னால் சபையிடம் ஈர்க்கப்படும்.

      அன்புடன்
      விஜய்

  2. Nice article Brother.

    Such Sound Strong messages are required in the last days.
    God has given you a very powerful ministry.
    Holding you in my prayers

    God bless

  3. Bro. vijay quote
    ஒருகாலத்தில் தேவனால் அபிஷேகிக்கப்பட்டு சபைக்குத் தீர்க்கதரிசிகளாய் நியமிக்கப்பட்டவர்கள் இன்று காணாமல் போய்விட்டதால், அந்தத் தீர்க்கதரிசிகள் எங்கே என்று தேடித்தேடிப் பார்த்து அலுத்துப்போன தேவன் என்னைப் போன்ற உதவாக்கரைகளையெல்லாம் பயன்படுத்த வேண்டியதாகி விட்டது.
    i share the same feelings like you.

    sarav

  4. edu poontra sathiyangalai entru sabaikalil kana mudivathilai brother. anaithu visuvasikalum therinthu kolla veandiyadu edu.

  5. [அன்று ஜான் வெஸ்லிகளும் சார்லஸ் பின்னிகளும் நின்ற பிரசங்கப் பீடங்களில் கனன்ற நெருப்பு பாவிகளைக் கவ்விப் பிடித்துப் பட்சித்துப் போட்டது. ஐயோ, நான் பாவி! தேவனே எனக்கு இரங்கும்! என அழுது உருண்டார்கள்.]

    “என்ன பிரதர் இதுகூட தெரியாதா? ஜான் வெஸ்லி, சார்லஸ் பின்னி, மூடி, ஜான் பன்யன் போன்றவர்களெல்லாம் ரட்சிகபட்டர்களா என்பதே சந்தேகம் ஏனென்றால் இவர்கள் எல்லாம் ஆவியில் நிறைந்து அந்நியபாஷையில் ஜெபிக்காமல் “மாம்சத்தில்” ஜெபிப்பவர்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இல்லாதவர்கள் ஏனென்றால் அதற்கு “அடையாளமான” அந்நியபாஷை இவர்களிடத்தில் இல்லையே? எவ்வளவு சத்தமாய் அந்நியபாஷை பேசுறோமோ அவ்வளவு பரிசுத்தம் நாங்க! இத மொத புரிஞ்சுகோங்க. ரட்சிகபடதவனையே கோச்சிங் கொடுத்து உளறவப்போம் யாராவது அதை தவறு என்று சொன்னால் ஆவியில்லாதவன் என்று ஒதுக்கி விடுவோம்.”

    Sorry இங்கே வந்து புலம்புவதற்கு மன்னிக்கவும்.

  6. God has been raising and using some indiciduals here and there to call people (His chosen people) to holiness and complete devotion to Him. Thanking God for the ministry of His word through you. I think that most of the christian leaders, pastors ministers are not able challenge people for holiness, because they themselves do not have victory over sin. They keep themselves busy with activities and performances to show to otehrs as they are some one great. It is very sad to see that there is no fear of God in the body of Christ today.
    May God Keep yourself a holy and useful vessel
    – Prithvi/Bangalore

  7. Such Sound Strong messages are required in the last days.
    God has given you a very powerful ministry.
    Holding you in my prayers.

  8. Bro.Vijay,

    Hope you doing well…bro.
    My name is Franklin. I really pray for you and your ministries everyday. This is the message for every christian must need to know.Not only this.The message of SPRITUALWHIP and ‘DECEPTION’ that is realley great im realley admired..and i have taken very seriousley.I have been distributing more copies to my church youths and my church members and church secretary. Thank you bro. I have taken this is a wonderful oppurtunity to participate in God’s ministry through you. Praise Jesus.

  9. Dear Gods servant,
    Thank you for this fire message. I was saved today using these words by Gods Grace. Paviyana ennaiyum Yesuvidatthil oppukkodungal. I want to redeems completely. May God bless your Works.

  10. Great! Such a fire ful message… I feel very guilty this message making myself want become a true fallower of jesus thank you

  11. அருமையான சத்தியங்கள் சகோ.அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன். சமீபத்தில் இச்சையை மேற்க்கொள்ளுதல் சம்மந்தமான சத்தியங்களை சகோ.சகரியா பூணன் செய்தியின் மூலமாய் அறிந்து கொண்டேன்.அதின் சி ல முக்கியமான காரியத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.1. நம்முடைய சரீரம் தேவனுடைய ஆலயமாய் இருப்பது போல ஒவ்வொரு பெண்ணின் சரீரத்தையும் தன்னுடைய ஆலயமாய் இருக்கும் படியே முன்குறித்திருக்கிறார்,அப்படி தேவனுடைய ஆலயமான அந்த பெண்ணை எப்படி நாம் இச்சையாக பார்க்க முடியும்.
    2. சாத்தானை காட்டிலும் இச்சை மிகவும் வலிமையானது ஏனெனில் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்று கூறிய வேதம் வேசி தனத்துக்கு விலகி ஓடுங்கள் கூறுகிறது. கோலியாத்தாகிய சாத்தானை மேற்க்கொள்ள முடிந்த தாவீதால் இச்சை என்னும் பத்சேபாளிடம் தோற்றுவிட்டார்.சிங்கத்தின் வாய் கிழித்த சிம்சோன் தெலிலாளிடம் மண்ணை கவ்வினார்.ஆனால் யோசேப்போ வேசிதனத்து விலகி ஓடி தன்னை காத்து கொண்டான்.

Leave a Reply