ஒரு ஊழியக்காரர் மீதோ, சபையின்மீதோ உங்களுக்கு விமர்ச்சனமிருந்தால் அவர்கள் தாங்கள் செய்வதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு தனியே உட்காந்து யோசிக்க வைக்கும்படியான கேள்வி உங்களிடம் இருக்க வேண்டும். அந்தக் கேள்விக்குப் பின்னால் ஆவியானவர் இருக்க வேண்டும்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் போஜனப்பிரியன், மதுபானப்பிரியன், பாவிகளுக்கு தோழன் என்றெல்லாம் விமர்ச்சித்துக் கொண்டேதான் இருந்தார்கள். அப்படி விமர்ச்சித்தவர்களின் பெயர்கள்கூட வேதத்தில் இல்லை. வேதத்தைப் பொறுத்தவரை அது ஒரு கும்பல் அவ்வளவுதான்.
கி.பி 16-ஆம் நூற்றாண்டில் மார்ட்டின் லூத்தர் ஒரு மனிதன் “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று வேதத்தில் எழுதியிருக்க, நீங்கள் பாவமன்னிப்பு சீட்டு விற்பது நியாயமா?” என்ற கேள்வியை பல நூற்றாண்டுகளாக கோலோச்சிக்கொண்டிருந்த சபைக்கு முன்பாக வைத்தான். அந்தக் கேள்வி சரித்திரத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது.
நாம் கேள்விகள் கேட்கலாம், அந்தக் கேள்விகள் சரித்திரத்தை மாற்றுவதாக இருக்கட்டும். அந்தக் கேள்விக்குப் பின்னால் ஆவியானவர் இருக்கட்டும்!