குடும்பத் தலைவன்

ஏதேன் தோட்டத்தில் நடந்த களேபரங்களைத் தொடங்கி வைத்தது என்னவோ ஏவாள்தான். அங்கு ஆதாம் வாசித்தது வெறும் பக்க வாத்தியம் மட்டுமே. ஆனால் தேவனோ ஏவாளைக் கூப்பிடாமல் “ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்? என்று கேட்டபடிதான் ஏதேனுக்குள் நுழைகிறார் (ஆதி 3:9). அவருக்கு சகலமும் தெரிந்திருந்தாலும் முதலில் ஆதாமை விசாரித்துவிட்டு, “ஏவாள்தான் காரணம்” என்று சொன்ன அவனது வாய்மொழியைக் கேட்டு அதை வைத்துதான் பின்பு ஏவாளிடத்தில் விசாரிக்கிறார்.

இன்று நம் வீடுகளுக்குள்ளும் என்ன புயல், சூறாவளி வீசினாலும், அதற்கு யார் காரணமாக இருந்தாலும், குடும்பத் தலைவரை அழைத்தபடிதான் தேவன் வீட்டுக்குள் நுழைவார். அவருக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் “இங்கே என்ன சத்தம்?” என்று குடும்பத் தலைவனிடம்தான் கேட்பார். காரணம் அவரே அதிகாரங்களை உண்டாக்கி பொறுப்புகளைக் கொடுத்தவர்.

குடும்பத்தில் வீசும் எந்தப் புயலையும் “இயேசுவின் நாமத்தில்” அமர்த்தும் அதிகாரம் குடும்பத் தலைவன் கையில் இருக்கிறது. அதற்காக தலைவியோ, பிள்ளைகளோ ஜெபிக்கக்கூடாது என்று இல்லை. அவர்கள் ஜெபத்திற்கும் பதிலும் பலனும் நிச்சயம் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் குடும்பத் தலைவனின் அதிகாரமும், பொறுப்பும் விசேஷித்தது. அதை வேத வசனத்தின்படி, தேவ சித்தத்தின்படி நாம் சரியாகப் பயன்படுத்தும் போது. நமது குடும்பக் கப்பலை சரியான திசையில் செலுத்தும் நல்லதொரு கேப்டனாக இருப்போம்.

Leave a Reply