கீழ் கோர்ட் vs மேல் கோர்ட்

ஒரே வழக்கிற்கான விசாரணை இருவேறு நீதிமன்றங்களில் நடக்கிறது. ஒன்று கீழ் கோர்ட், மற்றொன்று மேல் கோர்ட். கீழ்கோர்ட் நமக்குள்தான் இருக்கிறது அது குற்றவாளிக்கு தண்டனையை மட்டுமே வழங்கும். இதில் குற்றவாளியும், நீதிபதியும் மட்டுமே உள்ளனர். இதில் குற்றவாளி நாம்தான், நீதிபதி நமது சுயநீதி! பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால் (ரோம 3:20) அந்த நீதிபதி பிரமாணத்தை எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறாரோ அவ்வளவு கொடுமையான தண்டனையை வழங்குகிறார்.

இங்கே ஒரு பரிதாப நிலை என்னவென்றால் குற்றவாளிக்கும், நீதிபதிக்கும் நடுவே நின்று குற்றவாளிக்காக பரிந்து பேச ஒரு வக்கீல் இல்லை.

மேல்கோர்ட் பரலோகத்தில் உள்ளது. அங்கும் நாம்தான் குற்றவாளி, நீதிபதி பிதாவாகிய தேவன். ஆனால் அங்கு பரிகாரமாக சிந்திய இரத்தத்துடன் குற்றவாளிக்காக பரிந்து பேசக்கூடிய வக்கீல் ஒருவர் இருக்கிறார் (1 யோவா 2:1). அவர்தான் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து! அந்த அருமையான வழக்கறிஞரின் பரிந்துரையால் நமக்கு நிரந்தர விடுதலை கிடைத்தாயிற்று!

இந்த இரண்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் நமது கையில் உள்ளது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? மேல் கோர்ட்டின் தீர்ப்பை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு, கீழ் கோர்ட்டின் தீர்ப்பை கிழித்து வீசிவிட்டு, நல்ல உறுதியான ஒரு பூட்டை வைத்து கீழ்கோர்ட்டை நிரந்தரமாக மூடி சாவியை கடலின் ஆழத்தில் வீசிவிட வேண்டும்.

நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம் என்று I கொரிந்தியர் 11:31 சொல்லுகிறதே சகோதரனே என்று கேட்டால், ஆம் நாம் நம்மை நாமே நிதானிக்கத்தான் வேண்டும். அந்த நிதானித்தலை கீழ் கோர்ட்டின் தீர்ப்பை கையில் வைத்துக்கொண்டு அல்ல, மேல் கோர்ட்டின் தீர்ப்பை கையில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். ஏனென்றால் தண்டனையல்ல, மன்னிப்பே மனிதனை திருத்தும்!

சகோ.ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com

Leave a Reply