இன்று கிறிஸ்தவத்தின் நிலவும் சாட்சியற்ற சூழலையும், பாவத்தில் உழலும் விசுவாசிகளையும் பார்க்கும் பெரும்பாலான பிரசங்கியார்கள் ஜனங்களின் பிரதான பிரச்சனை “கீழ்படியாமைதான்” என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். பழைய ஏற்பாட்டுச் சூழலில் அது சரிதான். பழைய ஏற்பாட்டை நியாயப்பிரமாணம் எனும் சட்டம் ஆளுகை செய்தபடியால் “கீழ்படிதல்” என்ற செயல் அங்கு பிரதான முக்கியத்துவம் பெறுகிறது.
புதிய ஏற்பாட்டுச் சூழல் முற்றிலும் வேறானது. புதிய ஏற்பாட்டை உறவு ஆளுகை செய்கிறபடியால் இங்கு “அன்பு” என்ற உணர்வே பிரதான முக்கியத்துவம் பெறுகிறது. நியாயப்பிரமாணத்தின் முதல் கட்டளை தேவனை (மட்டும்) தொழுதுகொள் (யாத் 20:2,3) என்று என்று சொல்ல, புதிய ஏற்பாட்டின் பிரதான கட்டளையோ தேவனிடம் அன்புகொள் (மத் 22:37) என்கிறது. பழைய ஏற்பாடு செயலைக் கேட்கிறது, புதிய ஏற்பாடு உணர்வைக் கேட்கிறது.
விசுவாசிகள் எல்லோரும் தேவனிடம் அன்பாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அது மதரீதியான அன்பாக இல்லாமல் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பெலத்தோடும் கூடிய அன்பாக, எல்லாவற்றையும்விட தேவனை மட்டுமே முதன்மைப்படுத்தும் அன்பாக இருக்க வேண்டும். நம்மிடமிருந்து அத்தகைய அன்பைப் பெற அவர் முற்றிலும் பாத்திரராக இருக்கிறார். ஆனால் அந்த அன்பை விசுவாசிகளின் இருதயத்தில் உருவாக்கத் தவறியதுதான் பிரச்சனையே!
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள் (யோவா 14:15). என்று சொன்ன ஆண்டவராகிய இயேசு யாரையும் குற்றப்படுத்த இதைச் சொல்லவில்லை. “உன்னிடம் கீழ்படிதல் இல்லை எனவே நீ தேவனை நேசிப்பதாகச் சொல்வது பொய், முதலில் நீ வசனத்துக்குக் கீழ்ப்படிந்து தேவன்மேல் உள்ள உனது அன்பை நிரூபி” என்று ஜனங்களை நிர்பந்திக்கவே இந்த வசனத்தை இன்று கிறிஸ்தவ வட்டாரம் பயன்படுத்துகிறது. நாம் கொடுக்கும் மருந்து நோயின் அடையாளங்களை மட்டும் அழிக்க அல்ல, நோயாளியின் உடலில் எதிர்ப்பு சக்தியை பெருகச் செய்து அவனை குணப்படுத்துவதற்காகவே இருக்க வேண்டும். ஒருவனிடம் கீழ்படிதல் இல்லாமலிருப்பது அவன் மனதில் தேவஅன்பு இல்லை என்பதன் அடையாளமாக இருக்கிறது. எனவே அவனிடம் தேவ அன்பைப் பெருகச் செய்வது எப்படி என்பதைக் குறித்துதான் நாம் சிந்திக்க வேண்டும். நமது பிரசங்கங்களும் அந்தக் கோணத்தில்தான் இருக்க வேண்டும்.
கீழ்படியாமைக்கு மட்டுமல்ல, விசுவாசக் குறைவுக்கும் காரணம் தேவனை நேசிக்கும் அன்பு ஜனங்களின் மனதில் பெருகாததே ஆகும். நமக்காக தன்னையே பலியாகத் தந்த ஒரு தேவனை, அன்பே உருவான அந்த ஆண்டவரையே ஒருவனால் நேசிக்கமுடியவில்லை என்றால் அவரை அவன் இன்னும் சரியாக அறிந்துகொள்ளவில்லை என்பதுதான் காரணம். அவனிடம் தேவனை காட்ட வேண்டிய விதத்தில் காட்டாதது யாருடைய தவறு?
தேவனுடைய அன்பில் மூழ்கித் திளைக்கும் ஒருவனுக்கு தோன்றும் உச்சபட்ச உணர்வு “இந்த நல்ல தேவனை எக்காரணம்கொண்டும் துக்கப்படுத்தி விடக்கூடாது” என்பதுதான். அந்த நிலைக்கு ஒருவனைக் கொண்டுவந்துவிட்டால் அவனிடம் கீழ்படிதலைக் குறித்து பிரசங்கிக்க வேண்டிய அவசியமே இல்லை. நரகத்தையோ, நியாயத்தீர்ப்பையோ காட்டி பயமுறுத்த வேண்டிய அவசியமும் இல்லை.
அன்பே பிரதானம்!
ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com