வானத்தையும் பூமியையும், அண்ட சராசரங்களையும் படைத்த கர்த்தர் என்னோடு இருக்கிறார். அவரே எனக்குள்ளும், எனக்கு வெளியேயும், என்னைச் சுற்றிலும் சூழ்ந்தும் இருக்கிறார். நான் அவரால் மீட்கப்பட்டிருக்கிறேன், பாதுகாக்கப்பட்டிருக்கிறேன். என்னைக் குறித்த ஒரு தெளிவான திட்டமும், உயரிய நோக்கமும் அவருக்கு இருக்கிறது. நான் அதற்கென்றே அவரால் படைக்கப்பட்டு அந்த திட்டத்துக்கு நேராகவே ஒவ்வொருநாளும் நடத்தப்படுகிறேன். நான் ஆவியானவரின் கையில் இருப்பதால் திசைகெட்டுப் போவதில்லை.
நான் அவருக்கு பொக்கிஷமானவன். நான் அவரால் நேசிக்கப்படுபவன். அவரது செல்ல மகன், அவர் எனக்கு தகப்பன். என்னுடையதெல்லாம் அவருடையது, அவருடையதெல்லாம் என்னுடையது. நான் தேவநீதியால் போர்த்தப்பட்டிருக்கிறேன். பிதா இயேசுவின் வழியாக என்னைப் பார்க்கிறார். நான் கிறிஸ்துவுக்குள் தேவநீதியாக இருக்கிறேன். என்னுடைய கிரியைகளில் தேவன் மகிழ்ச்சியாய் இருக்கிறார். நான் நன்மையான ஈவுகளையும், பூரணமான வரங்களையும் அவரிடமிருந்தே பெற்றுக் கொள்கிறேன். அவரிடமிருந்து பெற்றவைகளையே நன்றியுடன் அவருக்கு திரும்ப காணிக்கையாக செலுத்துகிறேன்.
என்னையும், என் குடும்பத்தையும், எனது வாழ்க்கையையும் பார்க்கும் பொழுதெல்லாம் பிதா மகிழுகிறார். அவரை நினைக்கும் போதெல்லாம் பேரின்பம் என் மனதை ஆட்கொள்ளுகிறது. எங்கள் உறவு மகிமையானது, இனிமையானது, நானும் பிதாவும் இயேசுவின் இரத்ததின் வழியாக நித்தியமாக இணைக்கப்பட்டிருக்கிறோம். அந்த உறவு தரும் பேரானந்தம் எப்போதும் எனக்குள் பொங்கி வழிகிறது. இதுவே அத்தனை ஆசீர்வாதங்களிலும் மேலான ஆசீர்வாதமாக இருக்கிறது!