வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த மிஷனரிகள் நமது தமிழில் வேதத்தைக் மொழிபெயர்த்துக் கொடுக்கவேண்டும் என்று வெகுபாடுகள் பட்டு நமக்கு மொழிபெயர்த்துக் கொடுத்தார்கள். காரணம் என்னவென்றால் கர்த்தருடைய வசனம் புறமதத்தவருக்கு அவர்களுக்கு புரியும் மொழியில், எளிய விதத்தில் போய்ச் சேர வேண்டுமென்பதே ஆகும்.
யூதனுக்கு யூதனைப் போலவும் கிரேக்கனுக்கு கிரேக்கனைப்போலவும் அவனுக்கு முற்றிலும் புரியும் வகையில் போதிப்பதே சிறந்த வழியாகும். நாம் பிரசங்கிக்கும் மொழியை விட பிரசங்கத்தில் இருக்கும் சத்தியமும், ஆத்துமபாரமுமே முக்கியம். நான் அதை ஒத்துக்கொள்ளுகிறேன், ஆனால் நாம் பேசுவதும் தெளிவாக சென்று சேரவேண்டுமல்லவா! கர்த்தராகிய இயேசுவும்கூட ”நான் யூதன்! எனவே எபிரேயத்தில்தான் பிரசங்கிப்பேன்!” என்று இல்லாமல் பாமரர்களின் மொழியாகிய எளிய அரமாயிக் மொழியிலேயே தனது பிரசங்கங்களைச் செய்தார், அவரே நமக்கு நல்ல முன்னுதாரணம்.
ஆனால் நாமோ பின்பற்றும் தமிழ் வேதாகமத்தின் மொழிநடையைப் பின்பற்றி தமிழில் ஒரு பிரிவையே உண்டாக்கிவிட்டோம். சென்னைத்தமிழ், நெல்லைதமிழ், கொங்குதமிழ், மதுரைத்தமிழ் மாதிரி ”கிறிஸ்தவ தமிழ்” என்று ஒரு தமிழே உருவாகிவிட்டது.
பல நாட்கள் ஜெபித்து உபவாசமிருந்து ஆத்துமபாரத்தோடு அவிசுவாசிகளுக்காக கூட்டங்களை திட்டமிட்டு இறுதியில் “விசேஷித்த சுவிசேஷக் கூட்டங்களும் அபிஷேக ஆராதனைகளும்” என்று தலைப்பிட்டால் அது எத்தனை பேருக்கு புரியும். பிரசங்கிக்கும்போது நாம் பேசும் தமிழ் காய்கறி விற்பவர்களுக்கும், கைவண்டி இழுப்பவர்களுக்கும்கூட புரியவேண்டும். நம்மால் சென்னைதமிழ் பேசமுடியாது ஆனால் குப்பத்துவாசிகளும் புரிந்துகொள்ளும் வகையில் சாதாரண தமிழில் பேசமுடியும்.
இந்த கட்டுரையை எழுதியிருக்கும் என்னாலும்கூட இன்னும் கிறிஸ்தவத் தமிழைவிட்டு முழுமையாக வெளியே வரமுடியவில்லை. கிராமத்து மக்களிடமும், புறமதத்தவரிடமும் பேசும்போது இன்னும் மிகவும் கடினமாய்த்தான் இருக்கிறது. மாற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
நம்மவர்கள் சாதாரணமாகப் பேசும்போது சாதாரண கொச்சைத்தமிழில் பேசுவார்கள் பிரசங்க பீடத்தில் ஏறியவுடனே எங்கிருந்துதான் “அந்த தமிழ்” வருமோ தெரியவில்லை. “இன்னவரைக்கும் நல்லாத்தானேப்பா பேசிக்கிட்டு இருந்தாரு இப்ப ஏன் இப்படி பேசுறாரு??” என்று நம்முடன் வந்தவர்கள் வியப்புடன் அப்பாவித்தனமாகக் கேட்பார்கள். நாம் பேசும் கிறிஸ்தவத் தமிழ் புறமதத்தவருக்கு உண்மையிலேயே அந்நியமாய் இருக்கிறது. நாம் மாற்றிக்கொள்ள முயல்வது நல்லது.
நாம் சாதாரண தமிழை எவ்வளவு நீட்டி முழக்கி சிக்கலாக்கி பேசுகிறோம் என்பதற்க்கு சில உதாரணங்களைக் கொடுத்திருக்கிறேன். இது யாரையும் குற்றப்படுத்தவோ, கேலி செய்யவோ அல்ல. நான் யாரையும் மாற்றிக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தவில்லை. இது ஒரு அன்பான வேண்டுகோள் அவ்வளோதான்!!
இதைப் படிக்கும்போது நமக்கே சிரிப்பு வருகிறதல்லவா! இதைக் கேட்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் எப்படியிருக்கும்!! கிறிஸ்தவத் தமிழ் ஒன்றும் தெய்வீகத் தமிழ் அல்ல. சிலர் புருவத்தை நெரித்து, கண்களை சிமிட்டி, முகத்தை அஷ்டகோணலாக்கி அடிவையிற்றிலிருந்து கிறிஸ்தவத் தமிழில் பேசினால்தான் ”அபிஷேகத்தில் பேசுவது” என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள். அது அப்பட்டமான நடிப்பு ஆகும். இதே ஸ்டெயிலில்தான் அவர் வீட்டில் மனைவியோடும் பிள்ளைகளோடும் பேசுவாரா? அப்படிப் பேசுவாரானால் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல காமெடி ஷோ பார்ப்பதுபோல இருக்கும்.
தேவையற்ற மாய்மாலங்களை விட்டுவிட்டு இயேசுவைப்போல சாதாரண மனிதர்களாக சாதாரண மனிதர்கள் மத்தியில் உலவுவோம். ஆனால் நமக்குள் இருக்கும் வெளிச்சம் மனிதர்கள் மத்தியில் வெளிப்படட்டும். நமக்குள் இருக்கும் ஆவியானவர் அசாதரமாண காரியங்களை நம் மூலம் செய்யட்டும். அதற்குப் பிறகும் சாதாரண மனிதர்களாகவே சாதாரண மனிதர்கள் மத்தியில் நம் வாழ்க்கையைத் தொடருவோம்.