தங்களுக்கு கிடைக்கும் வெளிப்பாடுகளில் மேன்மை பாராட்டிக்கொள்ளும் ஊழியர்களும் தேவ பிள்ளைகளும் பலர் உண்டு! வெளிப்பாடுகள் மாம்சத்திலும் இரத்ததிலும் இருந்துகூட தோன்றக்கூடும். பரலோகத்தில் இருக்கும் பிதா தரும் வெளிப்பாடே ஜீவனுள்ளது!
அப்படிப்பட்ட வெளிப்பாடொன்று பேதுருவுக்கு கிடைத்தது. உலகம் காணாத தலைசிறந்த வெளிப்பாடு ஒன்று இருக்குமென்றால் அது இதுதான், இது மட்டும்தான்!
“இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து”
அட இது என்ன பெருசா? சண்டே ஸ்கூல் போன காலத்துல இருந்து எனக்கு இது தெரியுமே பிரதர்! என்று நமக்கு ஒருவேளை நினைக்கத் தோன்றலாம்.
இந்த அறிவை நமக்கு கிறிஸ்தவ மதம் தந்திருந்தால் அது நம் வீட்டு அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களுள் ஒன்று போன்றதுதான். ஆனால் இதை பரலோகத்தில் இருக்கும் பிதாவே உங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தால் இது ஒரு ஒரு வற்றாத ஜீவ நீரூற்று. உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை வறண்ட பாலைவனமாக இருந்தால்கூட அதை சோலைவனமாக மாற்ற இந்த ஒரே ஒரு வெளிப்பாடே போதுமானது.
இது உலகில் வாழும் கோடானுகோடி கிறிஸ்தவர்களுக்கு இது வெறும் அறிவுதான். ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல், சாது சுந்தர்சிங், வில்லியம் கேரி போன்ற பலருக்கு அது வெளிப்பாடு. இப்போது புரிந்திருக்கும் வித்தியாசம்!
“இயேசுவே தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்ற சத்தியத்தை அறிவாக நாம் பெற்றுக்கொள்வதில் பிசாசுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. ஏனெனில் அது வெறும் மூளையோடு தங்கிவிடும். அந்த அறிவை நீங்கள் “ஊழியம்” என்ற பெயரில் பகிர்ந்தாலும் அவனுக்கு பிரச்சனை இல்லை. ஏனெனில் அது ஒரு மூளையில் இருந்து இன்னொரு மூளைக்குத்தான் பகிரப்படும்.
ஆனால் இதை வெளிப்பாடாக நாம் பெற்றுக்கொள்வதையும் நாம் பெற்றுக்கொண்டதைப் பகிர்வதையும் அவன் என்ன விலை கொடுத்தேனும் தடுக்கப் பார்ப்பான். ஏனெனில் இந்த வெளிப்பாடு ஜீவனுள்ளது. உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பிக்க வல்லது! இந்த வெளிப்பாட்டை நாம் விசுவாசித்தால் நாம்தான் உலகத்தை ஜெயிக்கிறவர்கள்! இந்த வெளிப்பாடு ஒரு காட்டுத்தீ இது பக்கத்திலுள்ள அத்தனை பச்சை மரங்களையும் பற்ற வைக்கும்! பவுல் கால் பதித்த இடங்களிலெல்லாம் கலவரம் வெடித்ததை நினைவுகூருங்கள். ஆசியாவே தன் கையைவிட்டுப் போவதை உணர்ந்து துடித்த சாத்தான் தனது ஜனங்களின் வாய்வழியாகவே தனது ஆதங்கத்தைக் கொட்டுவதை அப் 19:26-இல் நீங்கள் வாசிக்கலாம்.
“இயேசுவே தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்ற சத்தியம் உங்களுக்கு கிடைத்த விதம் அறிவானால் அது உங்கள் கையில் கொடுக்கப்பட்ட குழந்தைபோல தோற்றமளிக்கும் அழகான பொம்மை. அதை நீங்கள் வாங்கி உங்கள் வீட்டு ஷோ-கேசில் வைத்துக் கொள்ளலாம். தூசு படிந்தால் அவ்வப்போது துடைத்தும் வைத்துக்கொள்ளலாம். அந்த பொம்மையை நீங்கள் புனிதமாக மதித்தபடியால் அதை உங்கள் சந்ததிக்குக்கும் பரிசாகக் விட்டுச் செல்லலாம், அதைக் குறித்து பெருமையும் பட்டுக்கொள்ளலாம்.
“இயேசுவே தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்ற சத்தியம் உங்களுக்கு கிடைத்த விதம் வெளிப்பாடானால் அது உங்கள் கையில் கொடுக்கப்பட்ட ஜீவனுள்ள குழந்தை. அது பசிக்கும் தாகத்துக்கும் அழும், உணவை ரசித்து உண்ணும், சிரிக்கும், பின்னர் தவழும், நடக்கும், ஓடும், பாடும், பேசும்…நாளடைவில் நன்கு வளர்ந்த இளைஞனாகும். இந்த மாற்றங்கள் எங்கு நிகழும்? உங்களுக்குள்தான். நீங்கள் ஒருநாள் கிறிஸ்துவின் வளர்ச்சிக்குத்தக்க பூரண புருஷராக மாறி பிதாவுக்கு முன்பாக நிற்ப்பீர்கள்!
சபைக்கு அஸ்திபாரமே இந்த வெளிப்பாடுதானே!
இந்த வெளிப்பாடு யாருக்கு கிடைக்கிறது? தாகமுள்ளோருக்கு (யோவா 7:37), பலவந்தம் பண்ணுவோருக்கு (மத் 11:12), இறைஞானத்தை வெள்ளியைப் போலும் பொன்னைப்போலும் புதையலைப் போலும் தேடுவோருக்கு (நீதி 2:4), மீட்படைய வேண்டும் என்ற உள்ள தாகத்தோடு தட்டுகிறவர்களுக்கும், கேட்கிறவர்களுக்கும், தேடுகிறவர்களுக்கும் (மத் 7:7,8) இந்த வெளிப்பாடு தரப்படுகிறது.
சாது சுந்தர்சிங் வாழ்க்கையைப் பாருங்கள், மெய்யான இறைவன் தம்மை தனக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஆர்வமாக கதவை தட்டத் துவங்கியவர், பற்றியெரியும் வாஞ்சையால் கதவை முட்டவே தொடங்கிவிட்டார். உம்மை எனக்கு வெளிப்படுத்தும், இல்லையேல் சாகிறேன்! என்ற வைராக்கியமான கதறல் பரலோகத்தின் தேவனுடைய இருதயத்தை உலுக்கியே விட்டது. குமாரன் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவாக தன்னை அவருக்கு வெளிப்படுத்தினார். இந்தியாவுக்கு ஒரு மாபெரும் அப்போஸ்தலன் கிடைத்தார்.
வேத அறிவிலேயே ஊறிக்கிடந்த பிறவி கிறிஸ்தவர்கள் பலருக்கும்கூட ஒருநாள் இந்த அறிவு வெளிப்பாடாக மாறிய போது அவர்கள் வாழ்க்கையும் மாறியது. உலகத்தை புதிதாக பார்க்கத் தொடங்கினார்கள். மாம்சத்தில் வந்த கிறிஸ்துவை தேவகுமாரனென்று உணர்ந்து அறிக்கையிட்டார்கள். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையேயன்றி வேறொன்றைக் குறித்தும் மேன்மை பாராட்டுவதில்லை என்று முடிவெடுத்தார்கள். யூதர்கள் அடையாளம் கேட்கட்டும், கிரேக்கர் ஞானத்தை தேடட்டும் நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை மட்டுமே பிரசங்கிப்போம் என்று ஒப்புக்கொடுத்தார்கள். இவர்களே வரலாற்றை மாற்றியவர்கள்!
“மாம்சத்தில் வெளிப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுவை” மையபடுத்தாத சுவிசேஷமும், தீர்க்கதரிசனமும், போதகமும் ஜீவனற்றவை! பாழானவை, பாழ் படுத்துபவை!
பிரியமானவர்களே! பல்லாயிரம் பிரசங்கங்களை நாம் கேட்டாயிற்று. பலநூறு ஆவிக்குரிய புத்தகங்களை நாம் படித்தாயிற்று. நமது கிறிஸ்தவ வாழ்க்கை ஏன் இன்னும் ஆழமற்று, ஜீவனற்று இருக்கிறது?
நமக்கு தேவை மேலும் ஒரு பிரசங்கம் அல்ல, நம்மை உயிர்ப்பிக்கும் வெளிப்பாடு! அதுதான் உயிர்மீட்சியைக் கொண்டுவரும். சிறுசிறு வெளிப்பாடுகள் கூட வரலாற்றை மாற்றியிருக்கின்றன. ரோமர் 1:17 இல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே வேதத்தில் பதிவு செய்யப்பட்ட “”விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்ற வசனம் மார்ட்டின் லூத்தருக்கு வெளிப்பாடாக கிடைத்தபோது 16-ஆம் நூற்றாண்டில் ஒரு மாபெரும் யுகப்புரட்சி உண்டாகவில்லையா?
தாகமுள்ள மனதுடையவன் தூங்க வைக்கும் பிரசங்கம் ஒன்றைக் கேட்டால்கூட அதற்குள்ளிருந்து ஒரு வெளிப்பாடு துள்ளிக்குதித்து வந்து அவன் முன் நிற்கும். நம் விருப்பமும் வாஞ்சையும்தான் காரியம்!
நான் தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன் (ஏசாயா 44:3)