காரியசித்தி

தாவீது கோலியாத்தை நோக்கி வீசிய கூழாங்கல் அன்று ஒருவேளை குறி தவறியிருந்தால் தாவீதின் கதி என்னவாகியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? குறிதவறாமல் வீசியது தாவீதின் திறமை என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. தாவீதுக்கே தெரியும் அது சந்தேகமே இல்லாமல் தேவச் செயல்தான்.

தாவீது கூழாங்கல்லை வீசியபோது அது கோலியாத்தின் நெற்றிப் பொட்டைத் தாக்கலாம் அல்லது குறி தவறி கோலியாத் மீது படாமலோ அல்லது அவன் உடலில் கவசம் மூடியிருக்கும் வேறு இடங்களிலோ படலாம் என்ற சாத்தியக்கூறுகள் உள்ளன. நாம் எந்த செயலைச் செய்தாலும் அதன் முடிவு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையலாம். நீங்கள் நிகழ்தகவுக் கோட்பாடு (Theory of Probability) பற்றி சிறுவயது பள்ளிப் பாடத்தில் படித்திருப்பீர்கள். அந்த நிகழ்தகவுக் கோட்பாட்டின்படி நீங்கள் காசை சுண்டி விடும்போது தலை விழுவதற்கு 50% வாய்ப்புகளும், தாயக்கட்டை உருட்டும்போது தாயம் விழுவதற்கு 12.5% வாய்ப்புகளும் உள்ளன.

அந்த நிகழ்தகவுகளைக் கட்டுப்படுத்தி நாம் விரும்பும் விளைவுகளை வரவைக்க முடியுமா என்றால் முடியாது என்றுதான் உலகம் சொல்லும். ஆனால் நம் மனோசக்தியைப் பயன்படுத்தி காசு சுண்டி விடுதலில், சீட்டு விளையாடுதலில் அல்லது தாயம் விளையாடுதலில் தான் விரும்பும் விளைவை வரவைக்க முடியும் என்று டீன் ராடின் மற்றும் ரோஜர் நெல்சன் என்ற ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர், இதற்கு micro-psychokinesis என்று பெயர். ஆம், மனிதனின் மனோ சக்தியே நிகழ்தகவுகளை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியுமாம்.

யூதப் பாரம்பரியப்படி அந்தக் காலத்தில் தீர்க்கமுடியாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கோ, அல்லது சொத்துக்களை பிரிப்பதற்கோ சீட்டுப்போடும் வழக்கம் இருந்தது. இதில் கர்த்தருடைய வழிநடத்துதல் இருக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். இதற்கு யோசுவா 18, 19 அதிகாரங்கள், 1 சாமுவேல் 14:41,42 மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் 1:24, மேலும் பல வேதபகுதிகளை உதாரணமாகக் காட்டலாம். கர்த்தரும் இதன்மூலம் கிரியை செய்ததை நாம் மேற்கண்ட வேதபகுதிகளில் வாசித்தறியலாம்.

சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும் என்று நீதிமொழிகள் 16:33 கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் தேவசித்தப்படி விசுவாசத்துடன் ஒரு செயலைச் செய்யும்போது நிகழ்தகவில் இருக்கிற பாதகமான சாத்தியக்கூறுகளை ஸ்விட்ச் ஆஃப் செய்து சாதகமான சாத்தியகூறை மட்டும் நிகழ வைக்க கர்த்தரால் முடியும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஆதியாகமம் 39:2 சொல்லுகிறபடி யோசேப்பு காரியசித்தியுள்ளவனானது அப்படித்தான்.

நமது விசுவாசம் நிகழ்தகவின் மீது கிரியை செய்கிறது. நமது விசுவாசமும் தேவனும் சேரும்போது அற்புதம் நிகழ்கிறது. தாவீது தனது கையில் இருந்த கவணைச் சுழற்றும் முன்னே கோலியாத்தைப் பார்த்து பேசிய வார்த்தைகளைக் கேளுங்கள்:

தாவீது கோலியாத்தை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டுமிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள். கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான் (1 சாமு 17:45-47).

இவை வெறும் பஞ்ச் டயலாக் அல்ல…தன் நாடி நரம்பு இரத்தமெல்லாம் விசுவாசம் ஊறிப்போன ஒருவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகள். இந்த விசுவாச வார்த்தைகள்தான் அங்கு அத்தனை பாதகமான நிகழ்தகவுகளையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து கூழாங்கல்லை நேராகச் செலுத்தி கோலியாத்தின் நெற்றிப் பொட்டில் இறக்கியது.

2 thoughts on “காரியசித்தி”

    1. “ஆமென்” – கர்த்தர் நல்லவர், சங்கீதம் 100:5-LOGOS ✟

Leave a Reply