கவரிங் கிறிஸ்தவம்


ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே(புலம்பல் 4:2). 

சீயோன் குமாரர்களைத் தங்கத்துக்கு ஒப்பானவர்கள் என்று எரேமியா தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார். பழைய உடன்படிக்கைகாரர்களே தங்கத்துக்கு ஒப்பானவர்களாயிருந்தால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் திருஇரத்தத்தினால் மீட்கப்பட்ட புதிய உடன்படிக்கையின் பிள்ளைகள் எத்தனை மடங்கு அதிகம். தங்கம் பொக்கிஷமாக மதிக்கப்பட காரணம் என்ன தெரியுமா? அது தெருவிலோ, பெட்டிக்கடைகளிலோ கிடைப்பதில்லை, மிகுந்த பொருட்செலவில் பல வேலையாட்களின் கடின உழைப்பினால் பூமியின் சுரங்கங்களிலிருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. நெருப்பில் புடமிடப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் கைதேர்ந்த தட்டானால் அழகான நகையாகச் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு விற்கப்படுகிறது.

எந்தப் பொக்கிஷமும் மலிவாய்க் கிடைப்பதில்லை மலிவாய் சந்தையில் கிடைத்தால் அதற்குப் பெயர் பொக்கிஷமில்லை. ஆத்துமாக்களும் ஊழியக்காரரின் கண்ணீரின்றி, தியாகமின்றி அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. ஹட்சன் டேலர், டேவிட் பிரேனார்ட், ஜான் வெஸ்லி, சாது சுந்தர்சிங் போன்றோர் கடந்துசென்ற கண்ணீரின் பள்ளத்தாக்குகளான ஊழியப்பாதைகளைக் கவனித்துப்பாருங்கள். அவர்கள் புதையலைத் தேடியலைவதுபோல ஆத்துமாக்களை கிறிஸ்த்துவுக்காகத் தேடியலைந்தார்கள். பசியிலும் தியாகத்திலும், குளிரிலும், வியாதிகளிலும் உழன்றார்கள். கிறிஸ்த்துவுக்காக ஒரு ஆத்துமாவைக் கண்டெடுத்தபோதோ உலகக்கோப்பையை வென்றவர்கள் போல குதூகலித்தார்கள். புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதுபோல தங்களைப்போலவே தியாகசீலர்களை ஆவிக்குரிய பிள்ளைகளாகப் பெற்றெடுத்தார்கள். ஆனால் இன்றைய கிறிஸ்தவத்தின் ஆத்தும ஆதாயம் எப்படியிருக்கிறது??

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல ஊழியர்களால் நல்ல சுவிசேஷம் தியாகமாகப் பிரசங்கிக்கப் படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெரும்பான்மையான இடங்களில் நடைபெறுவது இதுதான்….

ஆத்துமாக்களைத் தேடி அலைந்த காலம் போய் இன்று பெருநகரங்களில் பல லட்சம் செலவில் சுவிசேஷக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டு ஆத்துமாக்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் கூடி வருவதோ கிறிஸ்தவர்கள் மட்டுமே! நகரெங்கும் கட்டவுட்டுகள், போஸ்டர்களில் இணையற்ற தீர்க்கதரிசி என்றும், வரம் பெற்ற ஊழியரென்றும் விளம்பரப்படும் ஊழியர் கோட்டு சூட்டுடன் திரைப்பட நாயகன் போல போஸ் கொடுக்கிறார். இதில் மயங்கி மைதானத்துக்குள் நுழையும் மக்களை முதலில் வரவேற்ப்பது அந்தக் குறிப்பிட்ட ஊழியக்காரரின் ஆல்பங்கள், புத்தகங்கள் மற்றும் வசனபோர்டுகள், சாவிக்கொத்துகள் விற்க்கப்படும் கடைகள்.

கூட்டம் தொடங்கியவுடன் ஆராதனை வேளை ஒரு ஆராதனை வீரருக்கு (!) out-source செய்யப்படுகிறது. 80களில் வெளிவந்த படங்களில் இடம்பெற்ற டிஸ்கோ பாடல்களுக்கு உடையணியும் விதமாக கண்ணைக் குருடாக்கும் பளபள ஆடையணிந்த ஆராதனை வீரர் தனது ரசிகர்களின் பலத்த கரகோஷத்துக்கிடையில் வந்து  மைக்கைப் பிடிக்கிறார். அவருக்குப் பின்னால் அவரைப் போலவே பளபள உடையணிந்த பெண்கள் பாடலுக்கு ஏற்றவாறு கொடியை அசைக்கிறார்கள். ராணியைப் போல நடத்தப்படவேண்டிய கிறிஸ்த்துவின் மணவாட்டியை “கையைத் தட்டு”, “டான்ஸ் ஆடு” என்று கொஞ்ச நேரம் சுளுக்கெடுக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இசைக்கருவிகளின் உதவியுடன் “பரிசுத்த ஆவியின் அக்கினி” என்ற பெயரில் குண்டலினி களமிறக்கப்படுகிறது. தகதகவென்று பற்றியெரியும் அந்த அந்நிய அக்கினி அவிவதற்க்குள் சூட்டோடு சூடாக “கர்த்தருக்குக் கொடுக்கும்(!) வேளை” வருகிறது. ஏனனில் ஜனங்களை மூளைச் சலவை செய்ய அதுவே சரியான தருணம்.

ஊழியக்காரரின் சாதனைகள் பற்றியும், ஊழியத்தேவைகள் குறித்தும், கொடுப்பதனால் வரும் ஆசீர்வாதங்கள் பற்றியும் ஒரு சிறு பிரசங்கம் செய்யப்பட்டபின் ஜனங்களுக்குள் காணிக்கைப் பைகள் அனுப்பபடுகிறது. இதைத் தொடர்ந்து ஒரு ரெடிமேடான சுவிசேஷசச் செய்தி பிரசங்கிக்கப் படுகிறது.

அது என்ன செய்தி?

“கவலையோடு வந்திருக்கிறீர்களோ!, கண்ணீரோடு வந்திருக்கிறீர்களோ!, வியாதியா? கடனா? தொழிலில் நஷ்டமா? படிப்பில் தோல்வியா? கலங்காதீர்கள்! உங்களுக்கு இயேசு இருக்கிறார் அவர் இன்றே உங்களுக்கு அற்புதம் செய்வார்.” இதுவே எல்லா மேடைகளிலும் பரிமாறப்படும் பொதுவான சுவிசேஷச்(!!) செய்தி. ஆனால் சொல்லப்படும் கதைகள் மட்டும் வேறு. ஒரு மேடையில் பர்திமேயு, இன்னொரு மேடையில் 10 குஷ்டரோகிகள், இன்னொரு மேடையில் நூற்றுக்கு அதிபதி இப்படிக் கதைகள் மட்டும் மாறிக் கொண்டிருக்கும், செய்தி ஒன்றுதான்.

இயேசு அற்புதம் குறித்துப் பிரசங்கிக்கவில்லை, ஆனால் அற்புதம் செய்தார். தெய்வீகசுகம் பற்றி அவர் ஒரு பிரசங்கம் கூட செய்யவில்லை ஆனால் அவர் வியாதியஸ்தர்களைச் சுகமாக்கினார். ஆனால் இன்றைய சுவிசேஷகர்களோ அற்புதங்கள் குறித்தும், தெய்வீகசுகம் குறித்தும் கலர்க் கலராகப் பிரசங்கிக்கிறார்கள் காரியத்திலோ பூஜ்ஜியம்.

பாவத்தின் கொடூரம் பிரசங்கிக்கப்படாமல், பாவியின் அகோர முடிவை தெரிவித்து எச்சரிக்காமல் கல்வாரி அன்பை மட்டும் காட்டினால் அதன் அருமை யாருக்குப் புரியும்? பாவமென்றால் என்னவென்று தெரியாமல் பாவமன்னிப்பின் முக்கியத்துவத்தைப் பாவி எப்படி உணருவான்? நித்திய ஜீவன் குறித்தும் நித்திய ஆக்கினை குறித்தும் இன்று எத்தனை மேடைகளில் பிரசங்கிக்கப் படுகிறது??

இந்த சத்தற்ற சாரமற்ற செய்தியைத் தொடர்ந்து மேடை அழைப்பு தரப்பட்டு முன்னால் வருபவர்களிடம் பாவியின் ஜெபத்தைத் கிளிப்பிள்ளைபோல திரும்பச் சொல்லும்படி செய்துவிட்டு அவர்களிடம் ஒரு விண்ணப்பப் படிவம் தரப்படுகிறது. இதையடுத்து “சுகமளிக்கும் ஜெபவேளை” ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் “டேவிட்டுகள், ஜான்கள், ஜோசப்புகள், மேரிகள், சாந்திகள்” பெயர் சொல்லி அழைக்கப் படுகிறார்கள். இவர்களோடு சேர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்குள் இதே நகரத்திலிருந்துலிருந்து ஜெபவிண்ணப்பக் கடிதம் அனுப்பியவர்களின் பெயர்கள் மாத்திரம் அவர்களது பிரச்சனைகளோடு சேர்த்து கர்த்தரால் (!) வெளிப்படுத்தப்படுகிறது.

ஆல்டர் காலுக்கு இணங்கி விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்த மொத்தத் தலைகளைக் கணக்கெடுத்துவிட்டு ஊழியர் விமானத்தில் தனது குழுவினரோடு பறந்து சென்றுவிடுகிறார். அவரது அடுத்த மாதப் பத்திரிக்கையின் நடுப்பக்கத்தில் “மதுரையில் விளங்கிய மன்னவரின் மகிமை” என்ற தலைப்பில் கூடிய பிரமாண்டமான கூட்டத்தின் புகைப்படமொன்று, சகோதரர் செய்தியளித்த புகைப்படமொன்று இவற்றுடன் தலைவலி சுகமானது, கேன்சர் கட்டி நீங்கியது, எயிட்ஸ் சுகமானது என்று புகைப்படங்களுடன் அடையாளம் தெரியாதவர்களது சாட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தவர்கள் ஏதேனும் ஒரு சபைக்கு நடத்தப்படுகிறார்கள். அங்கு இவர் செய்யவேண்டியது என்ன? வாராவாரம் ஞாயிறு ஆராதனைக்குத் தவறாமல் செல்லவேண்டும், காணிக்கை, தசமபாகம் கொடுக்கவேண்டும், அடுத்து இதே போல நடைபெறும் இன்னொரு சுவிசேஷக்கூட்டத்திற்க்கு Usher ஆகச் சென்று பணியாற்ற வேண்டும். இதுவே கிறிஸ்தவ வாழ்க்கை.

இதுதான் இன்றைய கிறிஸ்தவம் செய்யும் ஆத்தும ஆதாயம்! இதுதான் இவர்கள் பிரதானக் கட்டளைக்குக் கீழ்ப்படிவதும் சீஷர்களை உருவாக்குவதும்!! இதைச் சுட்டிக்காட்டுவதால்தான் எங்களைக் கிறிஸ்தவத்தின் எதிரிகள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

சகோ.___________ அவர்கள் ஆயிரங்களைக் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தியிருக்கிறார்கள். அவர்களைக் குற்றம் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று எங்களைக் கேட்பவர்கள் சொல்லும் “ஆயிரங்களைக் கிறிஸ்துவுக்குள் நடத்திய விதம்” இதுவே!!!

பிரியமானவர்களே! இந்தக் கூட்டத்தை வைத்துக்கொண்டு மணவாளானுக்கு எதிர்ப்பட்டு நாம் செல்ல முடியுமா? இது போலி என்று உங்களுக்கு விளங்கவில்லையா? மின்னுவதால் மாத்திரம் கவரிங் தங்கமாகிவிட முடியாது.  பலர் பக்கத்து சபையைப் பார்த்து தங்கள் சபை சிறந்தது என்று திருப்திப்பட்டுக் கொள்ளுகிறார்கள். ஒரு கவரிங் நகையைவிட இன்னொரு கவரிங் நகை சிறந்ததாக இருக்கலாம் அதற்காக அது பொன்னாகிவிட முடியாது. தங்கள் சபையை இயேசுவின் போதனைகளோடும், ஆதித்திருச்சபையோடும் ஒப்பிட்டுப் பார்க்கட்டும். அப்போது பொன்னுக்கும் போலிக்கும் உள்ள வித்தியாசம் விளங்கும்.

பிரதானக் கட்டளையைத் தூக்கி ஊழியர்களிடம் கொடுத்துவிட்டு ஈசிச்சேரில் உட்கார்ந்துகொண்டு காலாட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் உரிமையை யார் நமக்குக் கொடுத்தது??? புதிய ஏற்பாட்டில் விசுவாசிகள், ஊழியர்கள் என்ற பிரிவு இல்லை. ஊழியர்களெல்லாம் விசுவாசிகள், விசுவாசிகளெல்லாம் ஊழியர்கள். எல்லோரும் அப்போஸ்தலரில்லை, எல்லோரும் தீர்க்கதரிசிகளில்லை, எல்லோரும் போதகரில்லை. ஆனால் எல்லோரும் சீஷர்கள்!! சீஷர்கள் சீஷர்களை உருவாக்கவேண்டும். இதுவே பிரதானக் கட்டளை. நாம் எரியும் அக்கினிபோன்ற சாட்சியைச் சுமந்துகொண்டு உலகத்துக்குள் செல்லவேண்டும், நமக்குள்ளிருக்கும் இயேசுவை உலகுக்குக் காட்டவேண்டும். அவர்களை ஆதாயம் செய்து அவர்களையும் சீஷராக்கவேண்டும். பலவீனரும், அறிவீனருமான நம்மை அப்படிப்பட்ட உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும்படி கர்த்தரே நமக்கு மனம் இரங்குவாராக!

இன்றைய கவரிங் கிறிஸ்தவத்தைக் கண்டு ஏமாறாதீர்கள்! இது ஒரு வேளை மின்னலாம் ஆனாலும் இது போலி!!  தங்கத்தை நெருப்பிலிட்டால் அது இன்னும் மின்னும், ஆனால் கவரிங்கை நெருப்பிலிட்டால் அது பல்லைக்காட்டிவிடும். ஒரு உபத்திரவம் வந்தால் தெரியும், பணவரவு தடைப்பட்டால் தெரியும் இந்த மேடை வித்தகர்களில் எத்தனை பேருக்கு ஆத்துமபாரம் உள்ளதென்று! இந்த போலிமதத்தை, போலிமரத்தை வேரோடு வெட்டிச்சாய்க்க அதன் வேரருகே யோவான் ஸ்நானகனின் தீர்க்கதரிசனக் கோடரி வைக்கப்படுவது அவசியம். மெய்க் கிறிஸ்தவம் மறுபடி தழைக்கட்டும்!! கிறிஸ்துவின் தியாக சேனை எழும்பட்டும்!! வாருங்கள் வருகைக்கு ஆயத்தமாவோம்!!!

8 thoughts on “கவரிங் கிறிஸ்தவம்”

 1. சகோதரர் விஜய் அவர்களே,

  இது போன்ற கூட்டங்களுக்கு அதிகம் பேர் வருவது கிருஸ்துவர்களே என சொல்லியிருக்கிறீர்கள். அது சரிதான். இவர்கள் ஏன் அதிக அளவில் வருகிறார்கள் என தெரியவில்லை. இதற்கு காரணம் அவர்கள் செல்லும் சபையில் அவர்களை மேய்ப்பவர்கள் சரியாக மேய்க்காததும் காரணமாக இருக்கும் அல்லவா? அவர்கள் சரியாக மேய்த்தால் ஏன் போலி ஊழியர்களை தேடி மக்கள் வரப் போகிறார்கள்?

 2. Vijay,
  I completely agree what you say. but what you and your team has done to show the world the exact model ministry??? you are referring John Wesley, Sadhu SundarSingh. why cant you the real gospel meetings in hunger, thirsty, with simple clothing, and gain souls, direct them to the right church or open a new gathering place with good disciples etc., you are sitting in a luxuries place with your friends, posing for photos, posting in FB. you and your friends have skills of writing, journalism, good orators, media guys… just talkers… vaai sollil veerargal… you set the model ministry in action…

  1. கிறிஸ்துவுக்குள் அன்பு சகோதரர் தாஸ்துரை அவர்களுக்கு, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி! இப்படி எங்களைக் கேள்வி கேட்பவர்கள் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. கிறிஸ்துவின் நாமத்தை வியாபாரமாக்கும் யாரிடமாவது தாங்கள் இதே போல நேரமெடுத்து கேள்வி கேட்டதுண்டா?

   எந்தவிதமான மனோநிலையிலிருந்து தாங்கள் இதை எழுதியிருக்கிறீர்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். தாங்கள் எழுதியிருக்கும் விதம் அதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறது. தாங்கள் யார் என்பதையும் தங்களது ஊழியம் என்ன என்பதையும் சொல்லி தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் வெறுமனே தாக்குதலை மாத்திரம் தொடுத்திருப்பது சரியல்ல, நாகரீகமுமல்ல.

   //but what you and your team has done to show the world the exact model ministry???//
   நாங்கள் இப்போதுதான் களத்தில் இறங்கியிருக்கிறோம். எங்கள் பேச்சும் ஆலோசனைகளும் எப்படி ஒரு மாதிரியான ஊழியத்தை ஆவியானவருடைய நடத்துதலின்படி நிறுவுவது என்பதே! பொறுத்திருந்து பாருங்கள்!!

   //you are referring John Wesley, Sadhu Sundar Singh. why cant you the real gospel meetings in hunger, thirsty, with simple clothing, and gain souls, direct them to the right church or open a new gathering place with good disciples etc., //
   ஒரு காரியத்தைத் தாங்கள் புரிந்து கொள்ளவேண்டும். தேவன் சபையின் பக்திவிருத்திக்கென்று அப்போஸ்தலரையும், தீர்க்கதரிசிகளையும், மேய்ப்பரையும், சுவிசேஷகரையும், போதகரையும் நியமித்திருக்கிறார். எல்லோரும் போதகரா? எல்லோரும் அப்போஸ்தலரா என்று வேதம் கேள்வி கேட்கிறது. (1 கொரி 12:29) ஒரு சுவிசேஷகன் தவறு செய்யும்போது அதைத் தட்டிக்கேட்கும் உரிமை மேய்ப்பனுக்கு இருக்கிறது. அவனைப்பார்த்து அந்த சுவிசேஷகன் “முதலாவது நீ ஒரு முன்மாதிரியான சுவிசேஷ ஊழியத்தைச் செய்துவிட்டு பின்பு வந்து என்னைச் சுட்டிக்காட்டு” என்று சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் அந்த சுவிசேஷகனுக்கு “கிறிஸ்துவின் சரீரம்” என்றால் என்னவென்றே தெரியவில்லை என்று பொருள். சுவிசேஷகனை இன்னொரு சுவிசேஷகன்தான் சரிசெய்ய வேண்டும் என்று வேதம் சொல்லுகிறதா? காலை தோறும் பல்லைத் துலக்க சரீரத்தின் இன்னொரு அவையவமான கையைப் பயன்படுத்துகிறீர்களே! பல்லைக் கை சுத்தமாக துலக்கியிருக்கிறதா என்று இன்னொரு அவையவமாகிய கண்ணைக் கொண்டு கண்ணாடியில் சரிபார்க்கிறீர்களே? என்னுடைய வேலையை நான் சரியாகச் செய்திருக்கிறேனா என்று சரிபார்க்க நீ யார் என்று உங்கள் கை கண்ணைப் பார்த்து கேள்வி கேட்கிறதா?

   சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களை உடையதாயிருக்கிறது. காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயமாயிராதோ? காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே? தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார். (1 கொரி 12:14-18)

   நீங்கள் நடத்தும் அல்லது கலந்துகொள்ளும் சபையில் இவ்விதமான ஐவகை ஊழியம் இருக்கிறதா? இதை சபை இழந்தும் மறந்தும் பல நூற்றாண்டுகளாகிவிட்டது. எல்லாம் தனிமனித உடைமையாகிவிட்டது. எனவேதான் உங்களைப் போன்றவர்கள் இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்கள்.

   //you are sitting in a luxuries place with your friends, posing for photos, posting in FB//
   ஒருவரைப் பக்கத்தில் வந்து பார்க்காமல் அவரது சொந்த வாழ்க்கையைக் குறித்து தூரத்தில் நின்றுகொண்டு நியாயம் தீர்ப்பது ஒரு விசுவாசிக்கு அழகல்ல. சாது சுந்தர்சிங்கையும், ஜான் வெஸ்லியையும் விட நாங்கள் வசதியான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை ஒத்துக்கொள்ளுகிறேன். ஆனால் நாங்கள் அணியும் ஆடையும், செல்லும் வாகனமும் ஏழைகளின் காணிக்கைப் பணத்தில் வாங்கியதல்ல. நாங்கள் உழைத்து சம்பாதித்து வாங்கியவை. சம்பாதிப்பதையெல்லாம் ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று கேட்பீர்கள். நாங்கள் ஏழைகளுக்கு என்ன செய்கிறோம், எவ்வளவு செய்கிறோம் என்பதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது, வசனத்தின்படி வலதுகரம் செய்வது இடது கைக்குத் தெரியக்கூடாது. தாங்கள் விரும்பினால் எங்களுடன் நெருங்கிப் பழகிப் பாருங்கள். எங்களைப் பக்கத்தில் வந்து பாருங்கள் என்றழைக்கிறேன். தயவு செய்து தூரத்தில் இருந்துகொண்டு சேற்றை வாரி இறைக்காதீர்கள்.

   இங்கு தங்களுக்கு இன்னொரு கேள்வி! சொந்த சம்பாத்தியத்தை செலவு செய்கிறவர்களின் வாழ்க்கைத்தரம், உடைகள் இவற்றைக் குறித்து கேள்வி எழுப்புகிறீர்களே! காணிக்கைப் பணத்தில் செலவு செய்யும் எத்தனை பேருக்கு இதே மாதிரி கேள்விகளை அனுப்பியிருக்கிறீர்கள்? ஏழைமக்களின் காணிக்கைப் பணத்தில் ஏன் இவ்வளவு விலையுயர்ந்த காரை வாங்கினீர்கள் என்று யாரிடமாவது கேட்டு இருக்கிறீர்களா? கேட்டு இருந்தீர்களானால் தாங்கள் தேவ ராஜ்ஜியத்தின் மீது கரிசனையுள்ளவர் என்று பொருள். எங்களிடம் மாத்திரம் இந்தக் கேள்வி கேட்டிருந்தீர்களானால் தியானாளின் பூசாரிகள் போல தங்கள் பிழைப்பு பாதிக்கப்பட்டதால் வெகுண்டெழுந்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

   //you and your friends have skills of writing, journalism, good orators, media guys… just talkers… vaai sollil veerargal… you set the model ministry in action…//
   நாங்கள் திறமையுள்ளவர்கள் என்பதால் ஊழியம் செய்யவில்லை. தேவனுடைய ஊழியத்துக்கு அவர் கொடுத்த தாலந்துகளைப் பயன்படுத்துகிறோம். அவ்வளவே!!

  2. I stumbled on this response. Sounds a bit more harsh! After all even well intended people are scared these days about new faces in the ministry – wondering whether history repeats. Almost all servants of God were sincere at their debut but strayed in course of time. So, I would prefer a soft response to even contending views.

   PS: As you may know, revealing identity in these pages is not as safe as in person – especially by those who air criticism.
   For my part I am a retired Dy.Commissioner of Customs having diligently served God, Government and the people at large. உத்தியோகத்தை வூளியமாக செய்தேன். நாடும் மக்களும் அதிக நன்மை பெற்றார்கள். உங்கள் நல்ல வூளியத்துக்கு வாழ்த்துக்கள். God Bless. RightInformer@gmail.com

 3. praise ta lord bro, vijay,

  greetings in he name of our sweet savior lord Jesus Christ,

  being a reader sorry learner i,m very much inspired by writings,
  your thirst for Christ, is boundless, or immeasurable,i sincerely hope in Christ, that this refinery sustains till his coming( rapture).prayerfully awaitingfor this fire keeps blazing.

  regards&prayers
  in his glorious services,
  pastor vijay.
  bangalore

  1. மிக்க நன்றி சகோ.விஜய் அவர்களே! கர்த்தர் தங்களையும் தங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக!

 4. Dear Vijay, This message needs to go to the churches, continue your good work. As we read the scriptures, “2. Timothy chapter 3 in the last days…… “. So we cannot see a perfect Christendom, but with the Power of God and with great sacrifice without personal benefit we can prepare a ‘small number of disciples’ for the the Lord.
  Nelson

 5. I refer to the comments of சகோதரர் தாஸ்துரை who has mentioned as follows:

  நீங்கள் நடத்தும் அல்லது கலந்துகொள்ளும் சபையில் இவ்விதமான ஐவகை ஊழியம் இருக்கிறதா? இதை சபை இழந்தும் மறந்தும் பல நூற்றாண்டுகளாகிவிட்டது. எல்லாம் தனிமனித உடைமையாகிவிட்டது. எனவேதான் உங்களைப் போன்றவர்கள் இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்கள்.

  My comments:

  We cannot find the five types of New Testament ministers in a single local church because these five types of ministers are appointed by God in the universal Body of Christ. But the tragedy is that the local pastors do not invite the apostolic and prophetic ministers to their churches. They do not want any prophetic minister to come to their churches and point their fingers at them. Vijay has simply written a message of warning. You are questioning him on his wisdom in writing this message.

  You have also stated as follows:

  ஆனால் நாங்கள் அணியும் ஆடையும், செல்லும் வாகனமும் ஏழைகளின் காணிக்கைப் பணத்தில் வாங்கியதல்ல. நாங்கள் உழைத்து சம்பாதித்து வாங்கியவை. சம்பாதிப்பதையெல்லாம் ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று கேட்பீர்கள். நாங்கள் ஏழைகளுக்கு என்ன செய்கிறோம், எவ்வளவு செய்கிறோம் என்பதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது, வசனத்தின்படி வலதுகரம் செய்வது இடது கைக்குத் தெரியக்கூடாது. தாங்கள் விரும்பினால் எங்களுடன் நெருங்கிப் பழகிப் பாருங்கள். எங்களைப் பக்கத்தில் வந்து பாருங்கள் என்றழைக்கிறேன். தயவு செய்து தூரத்தில் இருந்துகொண்டு சேற்றை வாரி இறைக்காதீர்கள்.

  This message is not directed against any individual pastor but in general against the pastors who live luxurious lives with the sacrificial offerings of the poor saints. If you or any pastor helps the poor saints, you need not make a publicity of the same. We are not blaming you or those pastors who help the poor saints. We are not judging from a distance on some pastors who are really serving the Lord faithfully. It is a general message of warning and exhortation. Truly, those who preach the gospel should live of the gospel. We cannot muzzle the oxen which treads on the corns. Please understand our messages.

Leave a Reply