ஏதேனில் ஒருநாள்…

ஏதேனில் ஒருநாள்…

சர்ப்பமும் ஏவாளும் பேசிக்கொண்டிருந்தனர்;அப்போது கர்த்தர் இடைபடவில்லை. சர்ப்பத்துக்கு செவிகொடுத்து ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தனர்; அப்போதும் கர்த்தர் பேசவில்லை. பாவம் செய்தபின் ஆதாமும் ஏவாளும் குற்ற மனசாட்சியால் ஓடி மரங்களுக்குள் ஒளிந்துகொண்டார்கள்.

அப்போதுதான் கர்த்தர் கேட்டார்…”ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்?”

இறுதியில் ஆதாமும் ஏவாளும் ஏமாற்றத்துடன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

ஸ்திரீயின் வித்தாகிய இயேசு வெளிப்பட்டார். சிலுவைக்குச் சென்றார்…புதிய ஏதேனாகிய பரலோக ராஜ்ஜியத்தை உருவாக்கினார். ஆவிக்குரிய ஆதாம் ஏவாள்களாக நம்மை அதில் வைத்தார்.

புதிய ஏதேனில் ஒருநாள்…

சர்ப்பமும் ஏவாளும் பேசிக்கொண்டிருந்தனர்;அப்போது கர்த்தர் இடைபடவில்லை. சர்ப்பத்துக்கு செவிகொடுத்து ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தனர்; அப்போதும் கர்த்தர் பேசவில்லை. பாவம் செய்தபின் ஆதாமும் ஏவாளும் ஓடி ஒளிந்துகொண்டார்கள்.

ஆதாமைக் காணாமல் குழம்பிப்போன சர்ப்பம் கேட்டது…”ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்?”

ஆதாம் பதில் சொன்னான், “நான் உன்னதமானவரின் மறைவுக்குள் இருக்கிறேன், சர்வ வல்லவருடைய நிழலில் தங்கியிருக்கிறேன் (சங் 91:1). கன்மலையாகிய கிறிஸ்துவுக்குள் ஒளிந்திருக்கிறேன். கல்வாரி சிலுவையண்டையில் இருக்கிறேன். என் மீட்பராகிய கர்த்தர் மன்னிக்கிறதில் தயை பெருத்தவர், அவரிடத்தில் திரளான கிருபையும், மீட்பும் உண்டு (சங் 130:7) அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர்(எபேசியர் 2:4).

இந்தமுறை சர்ப்பம் மட்டும் ஏமாற்றத்துடன் தோட்டத்தை விட்டு வெளியேறியது.

பிரியமானவர்களே! இதுதான் சிலுவையின் மேன்மை, நமது வாழ்க்கையில் சர்ப்பம் தோற்க்கடிக்கப்பட்டது இப்படித்தான்.

விசுவாசிகள் தாராளமாக பாவம் செய்து மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற அசட்டு தைரியத்தைக் கொடுப்பதற்காக இந்தக் கட்டுரையை நான் எழுதவில்லை. “நீ போ, இனி பாவம் செய்யாதே (யோவா 8:11)” என்பதே கர்த்தராகிய இயேசுவின் கட்டளையாக இருக்கிறது. எந்த ஒரு தேவபிள்ளையும் விரும்பிப் பாவம் செய்வதில்லை என்பதை தேவன் அறிந்திருக்கிறார். அதே நேரத்தில் ஒரு விசுவாசி மாம்ச பெலவீனத்தின் நிமித்தமோ, அல்லது வேறு காரணங்களாலோ பாவம் செய்யக்கூடிய சூழல் இருக்கிறது என்பது நிதரிசனம்.

நீங்கள் ஒருவேளை பாவத்தில் விழுந்தால் பழைய ஆதாமைப்போல கர்த்தரை விட்டு ஓடி ஒளிய ஒருநாளும் நினைக்காதீர்கள். கர்த்தரிடம் ஓடிவந்து ஒளிந்துகொள்ளுங்கள், உங்கள் பாவத்தை அவரிடம் அறிக்கையிடுங்கள். மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பாவம் செய்தவுடன் நீங்கள் கிருபையை இழந்தவிட்டதாக தோன்றும் உணர்வு பொய், உங்களை தூக்கியெடுக்கும்படி கிருபை உங்களிடம் பெருகி சூழ்ந்திருக்கிறது என்பதே உண்மை. நீங்கள் முன்பைவிட இன்னும் அதிகமாக கிருபையைச் சார்ந்து கொள்ளுங்கள். அப்போது குற்ற உணர்விலிருந்து மட்டுமல்ல, விரைவில் அந்தப் பாவத்திலிருந்தும் விடுதலையாவீர்கள்.

2 thoughts on “ஏதேனில் ஒருநாள்…”

  1. ஆவிக்குரிய வாழ்க்கையில்,தேவன் நம்மோடு இருந்தால் என்றும் ஜெயமே…

Leave a Reply