என்னதாண்டா வேணும் உனக்கு?

KGF திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். சிறுவனாயிருக்கும் ஹீரோவிடம் ஒருவன் கேட்பான். என்னதாண்டா வேணும் உனக்கு?..

ஹீரோ சொல்லும் பதில், “இந்த உலகம்…”

இரட்சிக்கபட்ட உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு, பதில் சொல்வது “நீங்களாக” இருந்தால் என்ன சொல்வீர்கள். “நீங்கள் இழந்து போனவைகள்” ஒவ்வொன்றாகச் சொல்லி, எனக்கு நிம்மதி வேண்டும், வாழ்வாதாரம் வேண்டும், இழந்துபோன வசதி வேண்டும், உறவுகள் வேண்டுமென கேட்பீர்கள்.

ஆனால் வேதம் சொல்லுகிறது, கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டோம். இனி நாமல்ல கிறிஸ்துவே பிழைத்திருக்கிறார். ஆனால் இரட்சிக்கப்பட்ட பின்பும் நம்மில் கிறிஸ்துவை வாழ்விடாமல் நாம்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

ஒருவேளை இரட்சிக்கபட்ட உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு, பதில் சொல்வது “கிறிஸ்துவாக” இருந்தால் அவர் எதைக் கேட்பார்?

“இந்த உலகம்…”.

ஆம், அவரை இரண்டாம் ஆதாம் என்று 1 கொரி 15:45 அழைக்கிறது. முதல் ஆதாம் சாத்தானிடம் இழந்தது தேவன் அவனிடம் தந்த இந்த உலகத்தைத்தான். அதையும் சேர்த்து நம்மை மீட்கத்தான் அவர் இந்த பூமிக்கு வந்தார்.

KGF திரைப்படத்தில் அந்த ஹீரோ ஒரே அடியில் 50 பேரை வீழ்த்தக்கூடியவனாக வளருவான். அவனுக்குள் எரிந்துகொண்டிருக்கும் அந்த வேட்கை அவனுக்குள் அத்தகைய பலத்தை உருவாக்கித் தந்திருக்கும். அது வெறும் மனித பெலம்தான். ஆனால் நாமோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்பட்ட பிறகும் நமது ஆசைகளும் நோக்கங்களும் சுயத்தைச் சுற்றியே சின்ன வட்டத்துக்குள் இருப்பதால் நமது பெலனும் குறுகியதாக இருக்கிறது. அதனால் நமது சாட்சியும், சாதனைகளும் சின்னதாக இருக்கிறது.

ஆதித்திருச்சபை விசுவாசிகள் “எனக்கு இந்த உலகம் வேண்டும்” என்று மிகுந்த உபத்திரவங்களின் மத்தியிலும் பிடிவாதமாக நின்றார்கள், எனவேதான் ஆசியாவையே குலுங்க வைத்தார்கள்.

இனிவரும் நாட்களில் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்ட ஒரு பெரிய கூட்டம் எழும்பும். இந்த உலகத்தால் அவர்களை சமாளிக்க முடியாது. அவர்களில் ஒவ்வொருவனையும் அழைத்து, “என்னதாண்டா வேணும் உனக்கு?” என்று கேட்டால் அவர்கள் ஒவ்வொருவனுக்குள்ளும் இருந்து இரண்டாம் ஆதாம் பதில் சொல்லுவார்,

“இந்த உலகம்…”

அதுதான் ஆயிர வருட அரசாட்சியின் ஆரம்பம்!

2 thoughts on “என்னதாண்டா வேணும் உனக்கு?”

  1. ஏன் சினிமா வசனங்களை பயன்படுத்துகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா

    1. சின்ன தம்பி என்பது ஒரு திரைப்படத்தை பெயர். எனவே நீங்கள் உங்கள் இலை வயதான இரண்டாம் தம்பியை சின்ன தம்பி என்றழைக்க மறுப்பீர்களா?

      உங்கள் கருத்தியல்படி, வேதத்திற்கு வெளியே எவ்வித சொரிகளையும் பயன்படுத்த கூடாதென்றால், சபையில் பிரசங்கம் கூடாது தான். அப்படியே வேதத்தை வாசித்து விட்டு போகலாமே!

Leave a Reply